காங்கிரஸ் கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

 காங்கிரஸ் கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கும். ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர்தான் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் தலைவராக அல்லாமல் அதுவும் தென்னாட்டிலிருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கட்சித் தலைமைக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியது. இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களித்து புதிய தலைவரைத் தேர்வு செய்துள்ளனர்.

ராஜிவ் காந்தி இறப்புக்குப் பின் சோனியா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்கிற பலரின் கோரிக்கையை ஏற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வந்தார்.
அவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவர் பதவியை ஏற்க மறுத்து வந்தார்.

இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அசோக் கெலாட்

முதலில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக அறிவிக்க வாய்ப்பிருந்தது. அவர சோனியா காந்தியும் ஆதரித்தார். ஆனால் அவர் மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியையும் வகிக்க ஆசைப்பட்டார்.

அதோடு ராஜஸ்தானில் வேறு முதல்வரை அறிவிக்க இருந்த நேரத்தில் அசோக் கெலாட் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இவரே தூண்டிவிட்டதாக எழுந்த சச்சரவை அடுத்து அசோக் கெலாட் பெயரை காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து சோனியா காந்தி நீக்கினார்.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இருவரும் சில நாட்களாகப் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்த நிலையில், நேற்று (16/10/2022) வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று (17-10-2022) காலை வெற்றி பெற்ற தலைவர் பெயர் அறிவிக்கப்பட்டது. அதில் அதிக வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே தலைவரானார்.

கரைபடாத கைகளுக்குச் சொந்தக்காரர் மூத்த காங்கிரஸ் தலைவர்

மபன்னா மல்லிகார்ச்சுன் கர்கெ (Mapanna Mallikarjun Kharge, 1942 ஜூலை 21ஆம் தேதி பிறந்தவர். தூய்மையான அரசியல்வாதி. அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த ஞானம் மிக்கவர். கார்கே, தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 40 வருடம் எம்.எல்.ஏ.வாகவும், 5 வருடம் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
கர்நாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கர்கெ கர்நாடக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.  2009ஆம்  ஆண்டிலிருந்து கர்நாடகத்தின் குல்பர்காவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக  உள்ளார். தொடர்ந்து குல்பர்காவிலிருந்து பத்து முறை சட்டப்பேரவைக்கான தேர்தல்களிலும் மக்களவைக்கான பொதுத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

ராஜ்யசபாவில் இந்திய தேசியக் காங்கிரசின் களத்தலைவராக உள்ளார். முன்னதாக ரயில்வே துறை அமைச்சராகப்  பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில் கர்நாடக மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்துள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...