‘புலியைத் தொடுக  மொழியைத் தொடாது விடுக’ வைரமுத்து காட்டம்

 ‘புலியைத் தொடுக  மொழியைத் தொடாது விடுக’ வைரமுத்து காட்டம்

கவியரசர் வைரமுத்து மத்திய அரசை நோக்கி தன் விரல்களை நீட்டி “அதிகாரமிக்கவர்களே, அன்போடு சொல்கிறேன்.  புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக” என்று காட்டமான கவிதை ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

வைரமுத்து எழுதும் கவிதைகள். கதைகள் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுவதைப் போலவே அவரது அறிக்கைகளும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவருவது சகஜமாகி விட்டது. அது பற்றிய ஒரு பார்வை இதோ.

வைரமுத்து தற்காலக் கவிதைகளின் ஆளுமை. தன் வசீகரிக்கும் எழுத்தாற்றலால் பேச்சாற்றலால் தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அதன் காரணமாக மீடியா வெளிச்சத்தால் பளிச்சிட்டுக் கொண்டே இருப்பவர். தன்னை தி.மு.க.வின் அனுதாபி என்றில்லாமல் கலைஞரின் அனுதாபி, சிநேகிதராகக் காட்சிப்படுத்தி வலம் வந்தவர். அவ்வப்போது இலக்கிய சர்ச்சைகள் எழுந்தது. முன்பு ஒருமுறை ‘தமிழால் நான் வாழ்ந்தேன், தற்போது என்னால் தமிழ் வாழ்கிறது’ என்றார். அது தமிழறிஞர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பின் ஒரு வார இதழுக்கு எழுதிய கவிதையில் ஒரு நடிகை தன்னிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னதாக ஒரு கவிதை எழுதினார். அது திரைத்துரையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை சுகாசினி தலைமையில் நடிகைகள் பலர் அந்தக் கவிதைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டனர்.

வைரமுத்துவுக்கு ‘கவியரசர்’ பட்டம் வழங்கப்பட்டபோது கவிஞர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையாகியது கவியரசர் கண்ணதாசன் மட்டும்தான் என்று வலம்புரி ஜான் பத்திரிகைகளில் வைரமுத்துவுக்கு எதிராக அறிக்கைவிட்ட சம்பவங்கள் நடந்தது. அதற்கு கலைஞர் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். கவியரசர் பட்டம்தானே தரக்கூடாது என்கிறீர்கள், வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு என்கிற பட்டத்தை வழங்குகிறேன் என்று வழங்கி விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வைரமுத்துவின் அனைத்து நூல்களையும் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கலைஞர்தான் வெளியிடுவார்.

கலைஞர் இருந்தவரை அவருடன் கலந்துரையாடி வந்தார். சர்ச்சைகள் பெரிய அளவில் தலைதூக்கும்போது அமுங்கிவிடும். கலைஞர் இறப்பிற்குப் பிறகும் வைரமுத்து அரசியல் கருத்துக்களை பொதுவெளியில் சொல்லத் தொடங்கினார். அப்படித்தான் ஒரு நிகழ்ச்சியில் நீதிபதிகளைப் பற்றிப் பேசிவிட்டு மன்னிப்புக் கேட்கும் நிலைக்கும் போனார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால்தலை வெளியீடு நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நடிகர் ரஜினிகாந்த், உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘இறைவன், ராமர் போன்ற நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் நெருப்பு போன்றவர்கள். நெருப்பாக வாழ்ந்தனர். அவர்களைப் பற்றி ஏதாவது பேசினால் நாக்கு எரிந்துவிடும். அவர்கள், ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புவரை அப்படிதான் இருந்தனர். அந்த நேர்மையை கடைசி ஆறு மாதங்களில் விற்றுவிட்டால் நாட்டின் நிலை என்னவாகும்? எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கான நம்பிக்கையை உருவாக்கிவிட்டு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தவறுகளைச் செய் தால் என்ன செய்வது?” என்றார். இந்தப் பேச்சையடுத்து. பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா என்பவர் “இதுபோன்ற பேச்சுகளால் அவர்கள் மீதான நல்லெண்ணம் சிதைந்து விடுகிறது. இப்படி எல்லாருமே பேசுவதற்கு அனுமதித்தால் நீதிபதிகளின் மாண்பு சிதைக்கப்பட்டு விடும். எனவே வைரமுத்து மீது நீதிமன்றம் தானாக முன்வந்து குற்ற அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு வைரமுத்து சார்பில் புதிய தாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதற்குப் பிறகு தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நடத்தினார். இது பரபரப்பாக நிகழ்ச்சியாகத் தமிழகத்தில் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிகழ்ச்சியில் வைணவர்களின் தெய்வம் ஆண்டாள் பற்றித் தவறாகப் பேசியதாக பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் செய்யப்பட்டு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பிறகு அந்த நிகழ்ச்சியை நடத்திய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் விக்கிரகம் முன்னால் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ‘மீடூ’ சர்ச்சை வந்தது. பாடகி சின்மயியை அவர் பாலியல் சீண்டல் செய்ததாக சர்சசை எழுந்து இன்று வரை அது தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மணிரத்னத்தின் ஆஸ்தான பாடலாசிரியரான வைரமுத்து இல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் வேறு கவிஞர்களை வைத்து பாடல் எழுதினார் மணிரத்னம். அதோடு பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்குக் கூட வைரமுத்துவை அழைக்கவில்லை என்பது ஒரு சர்ச்சையானது.

அதற்கு உண்மையான காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால், பாடகி சின்மயி மணிரத்னத்திடம் வைரமுத்துவுக்குப் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தால் தான் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்தால் இந்த முடிவு என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே சுகாசினி வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் இந்தக் கவிதையை டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“எங்களை ஆண்ட

இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ

வெள்ளையரோ

தங்கள் தாய் மொழியை

எங்கள் தலையில் திணித்ததில்லை

தமிழ்நாட்டைத்

தமிழர்கள் ஆளும்பொழுதே

இந்தியைத் திணிப்பது

என்ன நியாயம்?

அதிகாரமிக்கவர்களே

அன்போடு சொல்கிறேன்

புலியைத் தொட்டாலும் தொடுக

மொழியைத் தொடாது விடுக.”

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...