பாத்திரங்கழுவி இயந்திரம் தெரியுமா?

 பாத்திரங்கழுவி இயந்திரம் தெரியுமா?

சமையல் செய்த பாத்திரத்திலுள்ள அழுக்குகளை கைகளால் நீக்காமல் வேறு வழிகளில் நீக்குவது எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோசபின் கோக்ரான் என்கிற பெண்மணி பாத்திரங்கழுவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது எப்படி பாத்திரங்களைக் கழுவ உதவி செய்கிறது என்கிற விவரங்களை இங்கே பார்ப்போம்.

பாத்திரங்கழுவி (Dishwasher) என்பது ஸ்பூன்கள், கத்திகள் போன்ற சமையல் கருவிகள் மற்றும் சாதாரண பாத்திரங்களைத் தானாகச் சுத்தம் செய்யப் பயன்படும் ஓர் இயந்திரம். இதில் சமையல் செய்த அழுக்குப் பாத்திரங்களை வைத்தால் இயந்திரத்தில் உள்ள கருவி மூலம் நீர் ஸ்ப்ரே அடித்து, சோப்பு மற்றும் பிற பொருள்களின் உதவியுடன் பாத்திரங்களைச் சிறப்பாகச் சுத்தம்  செய்கின்றது. தற்போது இன்னும் எல்லா வீடுகளிலும் பாத்திரங்கழுவி இயந்திரம் என்பது இல்லை.

1886ஆம் ஆண்டு ஜோசபின் கோக்ரான் (Josephine Cochran) எனும் பெண்தான் முதன்முதலில் பாத்திரங்களைக்கழுவும் கருவியைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது படைப்புக்கான காப்புரிமையைப் பெற்றார்.

கோக்ரானின் பாத்திரங்கழுவி இயந்திரத்தை இயக்க  மின்சாரம் தேவை யில்லை. அதற்குப் பதிலாக, சாதனத்தின் முன்புறத்தில் ஒரு கைப்பிடியால் ஆன  கட்டுப்படுத்தும் பம்பைப் பயன்படுத்தி  இயக்கலாம்.

இது ஆரம்ப கால வடிவத்தின் அடிப்படையில் இருந்து கொண்டுவரப்பட்ட  நவீனகாலப் பாத்திரங்கழுவி இயந்திரம். இந்த இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

 டிஷ்வாஷரில், கழுவும் பாத்திரங்களை ஏற்றிய பிறகு முதலில் கழுவும் சுழற்சியையே ஆரம்பிக்கும். முதலில் இவ்வியந்திரம் தண்ணீரை நிரப்பும் என எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் வடிகட்டுதல் செயலே முதலில் தொடங்குகிறது. ஏன் என்றால், இது கடைசி சுழற்சியில் மீதி இருக்கும் தண்ணீரை முதலில் வெளியேற்றும்.

பாத்திரங்கழுவி அந்தத் தண்ணீரை முழுவதுமாக வடிக்கட்டியவுடன், இயந்திரத்தில் உள்ள  வால்வு வழியாகப் புதிய தண்ணீர் பாய்கிறது. அந்தத் தண்ணீர் பாத்திரங்கழுவியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பேஸினுள் (Basin)  தேங்கி நிற்கும். 

பெரும்பாலான மாடல்களில், பேஸனில் ஒரு வெப்பமூட்டும் உறுப்பு இருக்கும். இது தண்ணீரை 140°F முதல் 160°F வரை வெப்பப்படுத்துகிறது.

அடுத்து, பம்ப் மூலம் தண்ணீரை இரண்டு ஸ்ப்ரே கரங்களைப் பயன்படுத்தி, அவற்றைச் சுழற்றச் செய்கிறது. 

பின் சோப்புத்தூள் போடும் பெட்டி திறக்கும், அதில் பாத்திரத்திற்குத் தேவையான தூளை எடுத்துக்கொள்ளும். சுழலும்போது இயந்திரத்தில் உள்ள பாத்திரங்கள்மீது ஸ்ப்ரே கரங்கள் கொண்டு தண்ணீரைத் தெளித்து,  சோப்புத்தூள் உதவியுடன் அவற்றைக் கழுவுகின்றன. கழுவி முடித்ததும் டிஷ்வாஷர்களில் ஒரு டைமரும் உள்ளது. இது சலவை செயல்பாட்டிற்குப் பிறகு அடுத்த கட்டத்திற்கு எப்போது செல்ல வேண்டும் என்பதை அது இயந்திரத்திற்குச் சொல்லும். 

அலசும் நேரம் வந்துவிட்டது என்று டைமர் கூறும்போது, ​​சோப்பு நீர் பேஸனில் வடிகிறது. பின்பு அந்த நீர், பம்ப்பைக் கொண்டு இயந்திரத்திலிருந்து முழுமையாக வெளியே தள்ளுகிறது.

மீண்டும் அதிகளவு புதிய தண்ணீர், வால்வு வழியாகப் பாய்ந்து
பாத்திரங்களை அலசி, தண்ணீரை வெளியே ஏற்றும். பிறகு அலசிய நீர் வடிந்தவுடன், பாத்திரங்கள் உலர வைக்கப்படும். சிலர் பாத்திரங்களை விரைவாக உலர வைக்க வெப்பமூட்டும் உறுப்பைப் பயன்படுத்துகின்றனர்.  மற்றவர்கள் தாங்களாகவே உலர அனுமதிக்கிறார்கள். இறுதியாக, சுத்தமான பாத்திரங்கள் உணவுகளை வைக்கத் தயாராக உள்ளன.  பின்னர்,  இச்சுழற்சி மீண்டும் தொடங்கும். 

நீங்கள் எப்போதாவது பாத்திரங்கழுவியை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகித்துப் பாருங்கள், அப்போது,  இந்த இயந்திரங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எவ்வளவு வசதியானவை என்பதை அறிவீர்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...