தலம்தோறும் தலைவன் | 18 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 18 | ஜி.ஏ.பிரபா

18. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்

கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா

விதி அடியேனை விடுதி கண்டாய் வெள் தலை முழையில்

பதி உடைவாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி

மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே.

திருவாசகம்

சென்றது மீளுமோ?

வாழ்வில் கடந்து சென்ற எதுவும் மீளாது. இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆட்டம். இதில் கடந்து சென்றவைகளை மீண்டும் அடைய முடியாது. ஆனால் அவற்றின் தாக்கம் நம் வாழ்வில் எடுக்கும் பிறவிகள் தோறும் தொடரும். அப்போது நம் செயல்களே அடுத்தடுத்த பிறவிகளில் நடக்கும் நன்மை, தீமைகளுக்குக் காரணம் ஆகிறது. இதையே கர்ம வினை என்கிறோம்.

செய்த செயல்களின் விளைவுகளை நீக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதையே பிரஹதாரண்ய உபநிஷத் ஒருவன் எப்படி நடக்கிறானோ, அதன்படியே ஆகிறான் என்கிறது. நம் கர்மாவை நாம்தான் தீர்மானிக்கிறோம்.

நல்ல செயல்களைச் செய்தால் நன்மை. தீய செயல்களைச் செய்தால் தீமை. இதுதான் கர்மாவின் கணக்கு. நம் முற்பிறவிகளின் செயல்பாடுகளை ஒட்டித்தான் கர்மவினை அமைகிறது.

மனிதன் மூன்றுவிதக் கர்ம வினைகளைஅனுபவிக்கிறான். சஞ்சித கர்மா, பிராப்த கர்மா, ஆகாமிய கர்மா என்பது. சஞ்சித கர்மா என்பது பல ஜென்மங்களில் ஆத்மா செய்த பாவ புண்ணியங்கள் இந்தப் பிறவியில் பற்றிக் கொள்வது. பிராப்த கர்மா என்பது பல பிறவிகளில் செய்த நல்வினை, தீவினையின் பலன்கள். ஆகாமிய கர்மா என்பது இப்பிறவியில் நாம் பிறருக்குச் செய்யும் நன்மை, தீமைகளால் வருவது.

இந்த மூன்று கர்ம வினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் பரிகாரங்கள், பூஜைகள் மூலம் அவற்றின் வீர்யத்தைக் குறைக்க முடியும். ஆனால் இது சிலருக்குப் பலிதமாகும். சிலருக்குப் பலிதமாவதில்லை. ஆனால் வழிபாடு என்பது முழுப் பயனைத் தரமுடிந்த ஒரு விஷயம்.

நம் கர்மவினையே காரணம் என்பதை உணர்ந்து, அதை ஏற்றுக் கொண்டு, இறை நம்பிக்கையுடன், தான தர்மங்கள் செய்து, இறைவனின் கருணை தன் மேல் விழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதே வழிபாடு.

அத்தகைய வழிபாடு ஈசனை நோக்கி இருந்தால் அது உடனடியாகப் பலன் தரும். நம் தலைமுறைச் சாபங்களைப் போக்கக் கூடிய கருணாமூர்த்தியாக விளங்கும் ஈசனை திருவிடைமருதூரில் சென்று வழிபட்டால், பல தலைமுறை சாபங்கள் நீங்கும் என்பது சத்தியம்.

காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்குச் சமமாகக் கருதப்படுகிறது. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்று. இங்கு சென்று இறைவனைப் பூஜித்தால் பல தலைமுறைச் சாபங்கள் நீங்கும். இத்தலம் வரகுண பாண்டியனுடன் தொடர்புடையது.

ஒருமுறை வரகுண பாண்டியன் காட்டில் வேட்டையாடிவிட்டுத் திரும்பும்போது இரவாகி விட்டது. அவரின் குதிரையின் காலில் அந்தணன் ஒருவன் மிதிபட்டு இறந்து விட்டான். அரசனுக்குத் தெரியாமல் நடந்த விஷயம் என்றாலும், அந்தணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் அரசனைப் பற்றிக் கொண்டது.

சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை ஈசனை வேண்டி, இந்தப் பாவத்திலிருந்து தன்னை மீட்கும்படி வேண்டிக் கொண்டான். ஈசனும் பாண்டியன் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாட்டுக்குச் செல்வது எப்படி என்று கவலைப்படும் நேரம் சோழன் தன்மீது படையெடுத்து வந்திருப்பது தெரிகிறது. ஈசனின் அருளால் போரில் வென்று, திருவிடைமருதூர் சென்றான்.

ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் வழியாக அரசன் உள்ளே நுழைய, அவனைப் பற்றியிருந்த அந்தணனின் ஆவி, வாயிலில் நின்று விட்டது. அவன் திரும்பி வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தது. ஆனால் ஈசன் அசரீரியாக அரசனை மேற்கு வாயில் வழியாக திரும்பிச் செல்லக் கூறினார். அதன்படி அரசன் செல்ல அவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இப்போதும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியேறுகிறார்கள்.

இங்குள்ள சிவாலயம் கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானது. மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளது. இத்தலத்தில் உள்ள ஈசன் சுயம்புவாக தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு சப்த்ரிஷிகளுக்குப் பூஜா விதிகளைப் போதித்து அருளிய தலம் இது.

இங்கு அகத்தியர் தன் சீடர்கள், மற்றும் சில முனிவர்களுடன் வந்து அம்பிகையைப் பூஜித்தனர். அன்னையும் அதில் அகமகிழ்ந்து காட்சி தந்தாள். ஈசனைக் காண வேண்டும் என்ற அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவதவம் இருக்கிறார். அதில் மகிழ்ந்த ஈசன் முனிவர்களுக்கு இங்கு காட்சி அளிக்கிறார். பின்னர் ஜோதி லிங்கத்துக்குத் தானே பூஜை செய்தார்.

வியப்புடன் வினாவைக் கேட்ட அன்னையிடம் பூசிப்பவனும், பூஜையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நானே. எனவே பூஜா விதிகளை இவர்களுக்கு விளக்குகிறேன் என்றார். அன்று முதல் மூவர்கள் காமிகா விதிப்படி ஈசனை பூசித்துப் பெரும்பேறு பெற்றனர். இங்கு மார்க்கண்டேய முனிவருக்கு அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சி அளித்தார்.

இங்குள்ள மூகாம்பிகை சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மூகாசுரனைக் கொன்ற பாவம் தீர அம்பிகை இங்கு ஈசனை வழிபட்டாள். இந்தியாவில் கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகைக்குச் சன்னதி உள்ளது. அருகில் உள்ள மகாமேரு சன்னதியில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மகாமேருவுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள விநாயகர் ஈசனைப் பூஜித்து பல உயிர்கள் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்வதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்று பெயர். இங்கு ஈசனுக்குப் பூஜை நடந்த பின்னே விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்து ஈசனை இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் வழிபட்டு அருள் பெற்றதால் இது தோஷ நிவர்த்தித் தலமாகவும் விளங்குகிறது.

இங்குள்ள அஸ்வமேதச் சுற்று, கொடுமுடிச் சுற்று, பிரணவச் சுற்று ஆகியவை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ஞானமும், இகபர சுகங்களையும் தரக் கூடியது. சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் முதலியோர் இக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர்.

தேரோடும் நான்கு வீதிகளிலும் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன. திருவிடைமருதூர் பஞ்சலிங்கத் தலம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள மூகாம்பிகையை வேண்டினால் திருமணத் தடைகள் நீங்கும், குழந்தை பேறு அமையும். சிக்கலில்லாத பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மனத்துயரை நீக்கி, வேண்டும் வரம் யாவும் அருளுகிறார் மகாலிங்கஸ்வாமி.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஈசனுக்கு அபிஷேகங்கள் செய்து, வஸ்திரம் சார்த்தி தங்கள் நன்றியைச் செலுத்துகிறார்கள். சிலர் கோவிலுக்குப் பொருளுதவி செய்கிறார்கள்.

தை மாதம் பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற விசேஷ தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன் மேல் திருநாவுக்கரசர் பதிகம், சம்பந்தர் பதிகமும் உள்ளது.

பூசத் திருநாளில் இங்குள்ள இறைவனை வணங்கினால் அவரின் திருவடியை அடைய முடியும் என்கிறார் அப்பர். இங்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சூட்சும ரூபமாக இறைவனுக்குப் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. இதனையே அப்பர் பெருமான்,

மறையின் நாண்மலர் கொண்டாடி வானவர் முறையினால்

முனிகள் வழிபாடு செய் இறைவன் எம்பெருமான்

இடைமருதினில் உறையும் ஈசனை உலகும் என் உள்ளமே

என்கிறார். இடைமருதூர் உறையும் ஈசனை வணங்குவதால் நம் வினைகள் யாவும் அழியும் என்று உறுதிபடக் கூறுகிறார்.

ஓடே கலன் உண்பதும் ஊர் இடும் பிச்சை

காடே இடமாவது கல்லால நிழல் கீழ்

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ

என்று வியக்கிறார் சம்பந்தர்.

இறைவன் உண்ணும் பாத்திரம் கபால ஓடாகும். ஊர் மக்கள் பிச்சையாக இடும் உணவு அவரின் உணவு. அவர் இருக்கும் இடமோ சுடுகாடாகும். இத்தனை சிறப்புடைய சிவபெருமான், கல்லால மரத்தின் கீழ் தானும், நன்முலை நாயகியுமாய் பெருமையுடன் திருவிடைமருதூரில் காட்சியளிக்கிறார் என்று புகழ்கிறார்.

கரை புரண்டு வரும் காவிரி நதியின் கரை மீது திருவெண்ணீறு அணிந்தவராய் முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் சிவபெருமான் உறைகின்ற இடம் திருவிடைமருதூர். இங்குள்ள இறைவனை நம்பி வணங்குவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் அருள்வான் என்கிறார் சம்பந்தர்.

பக்தர்களின் எண்ணத்தில் நிறைந்துள்ள ஈசன் தன்னை நம்பும் அடியார்களின் ஜென்ம பாபங்களை நீக்கி, அவர்களின் தோஷங்களையும் போக்குகிறார். பெருமான் எழுந்தருளியுள்ள திருவிடைமருதூர் இறைவனை மனத்தால் நினைத்தால் கூட அவர்களின் பாபங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாமும் அந்த ஈசனை வணங்கி, பாபங்கள் நீங்கி நல்வாழ்வு வாழலாம்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...