கால், அரை, முக்கால், முழுசு | 19 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 19 | காலச்சக்கரம் நரசிம்மா

19. வெள்ளை ரோஜா ! சிவப்பு ரோஜா !

திருவான்மியூர் தெற்கு குளக்கரையில் இருந்த மாமி மெஸ்ஸிற்குள் – நண்பர்கள் ரேயான் மற்றும் தினேஷ் பின்தொடர நுழைந்தான், கார்த்திக். நல்ல வேளையாக ஆதர்ஷ் ஹேர் கட்டிங் செய்வதற்காக சலூன் சென்றிருந்தான். அந்தத் தருணத்தில் மாமி மெஸ்ஸிற்கு சென்று அவனுடைய மானசீகக் காதலைத் திறந்து காட்டி அவளை வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்துடன்தான் வந்திருந்தான் கார்த்திக்.

குளித்தலையில் ஏராளமான நிலங்கள், மிராசுதார் குடும்பம், தான் டிரினிட்டி டிவியில் பெரிய இலக்கத்தில் சம்பாதிக்கிறோம் என்கிற உணர்வெல்லாம் அற்று போய், பேரழகி இந்துவை எப்படியாவது கைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவனுள் நிலவிக் கொண்டிருந்தது.

இவர்கள் உள்ளே நுழைந்தபோது, மாமியின் உதவியாளர் அல்லுடுதான் வாடிக்கையாளர்களுக்கு, இட்லி, வடை. சட்னியை விநியோகித்து கொண்டிருந்தான்.

”இலை போடவா..?” -அல்லுடு கேட்க, கார்த்திக் தலையசைத்தான். ‘இப்போது இட்லியா முக்கியம்..? இந்துவின் இதய குக்கரில் காதல் என்கிற இட்லி மாவை ஊற்றிவிட்டால், அது பாட்டுக்கு, வெந்து கொண்டிருக்கும் அல்லவா..?’

”மாமி இல்லை..?” –ரேயான் கேட்டான்.

”கோவிலுக்குப் போயிருக்காங்க..!” –அல்லுடு சொல்ல, தினேஷ், கார்த்திக்கின் காதைக் கடித்தான்.

”நல்ல தருணம்டா..! மாமியும் இல்லே..! இந்துகிட்டே உன்னோட காதலைச் சொல்லிடு. இந்த அல்லுடு பின்பக்கம் வராம நாங்க பார்த்துக்கறோம். நீ போய் இந்துகிட்டே பேசிட்டு வா..!” –தினேஷ் யோசனை கூற, கார்த்திக், மெஸ்ஸின் பின்புறம் நோக்கி நடந்தான்.

டிவியில் ‘எதிர்நீச்சல்’ படம் ஓடிக் கொண்டிருந்தது.

”அடிப்போடி பைத்தியக்காரி..!” –என்று வாலிபர்கள் கேலி செய்ய, ஜெயந்தி, பாத்திரங்களை அவர்கள் மீது வீசிக்கொண்டிருந்தார்.

கார்த்திக் சட்டென்று அறையினுள் நுழைந்து, ”இந்து..!” –என்று அழைத்தான். அவனது குரல் அவனுக்கே கேட்கவில்லை!

சடாரென்று திரும்பி பார்த்தாள். இந்து. அவள் கண்களில் திகைப்பு.

தனது தைரியத்தையெல்லாம் திரட்டிக்கொண்டான் கார்த்திக்.

”இந்து..! உன்னோட அழகைப் பார்த்து நான் மலைச்சு போயிட்டேன். ஐஸ்வர்யா ராய் கணக்கா அழகா இருக்கிற பெண்ணைத்தான் நான் திருமணம் செஞ்சுக்கணும்னு இருந்தேன். உன்னைப் பார்த்ததும், அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டேன். ஐஸ்வர்யா ராய்ல்லாம் ஒண்ணுமே இல்லை. உன் மேல கண்டதும் காதல் கொண்டுட்டேன்..! நீ எனக்கு மனைவியா வாய்ச்சா நான் ரொம்பச் சந்தோஷமா இருப்பேன். மாமிகிட்டே உன்னைப் பெண் கேட்டேன். ஆனால் என்னை வேற இடத்துல பெண்ணைப் பார்க்க சொல்லிட்டா. ஆனா என்னால உன்னை மறக்க முடியாது. நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். உன்னை நல்லபடியா வச்சுக் காப்பாத்துவேன். உன்னோட விருப்பத்தை மட்டும் நீ சொன்னால் போதும்.” –என்று அவளை ஆவலுடன் பார்த்தான்.

இந்து ஒருமுறை டிவியை நோக்கித் திரும்பி காத்துக்கொண்டிருந்த நடிகை ஜெயந்தியைப் பார்த்தாள். டிவியை நோக்கிக் கைநீட்டினாள்.

”ஓ… புரிஞ்சுடுத்து..! நாம பேசறதுக்கு டிவி இடைஞ்சலா இருக்கா..? இரு சுவிட்ச் ஆஃப் பண்ணிடறேன்..!” — என்று பாய்ந்து சென்று டிவியை அணைத்தான். இந்து வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள்.

”நான் கேட்டதுக்கு என்ன பதில்..?” கார்த்திக் கேட்டதும், முகம் சிவக்க சுவற்றை பார்த்து நின்றுகொண்டாள், இந்து.

”புரியுது..! ட்ரெடிஷனலா வளர்ந்த பொண்ணு..! சட்டுனு கேட்டால் பதில் சொல்ல வெக்கமாத்தான் இருக்கும். நீ ஒண்ணும் கவலைப்படாதே..! நாளைக் காலை நான் டிபன் சாப்பிட வருவேன். அப்ப இதோ இந்த ஜன்னல் சுவத்துல, நீ ஒரு பூவை வை. அதை வச்சு உன்னோட பதிலை நான் தெரிஞ்சுக்கறேன். ஜன்னல் சுவத்துல, வெள்ளை ரோஜாப் பூவை வச்சா, என் காதலை நீ ஏத்துக்கிட்டேன்னு அர்த்தம். சிவப்பு ரோஜாவை வச்சிருந்தால், நீ என் காதலை ஏத்துக்கலைன்னு அர்த்தம். உன் பதிலுக்காக நான் ஆவலோடு காத்திருப்பேன். நாளைக்கு ஜன்னல் சுவத்துல வெள்ளை ரோஜா இருந்தால், நான் உடனடியா கல்யாணத்துக்கு ஏறிப்பாடு செய்யறேன். சிவப்பு ரோஜா இருந்தால், இனிமேல் இந்த மாமி மெஸ்ஸுக்கு வரவே மாட்டேன்..! புரிஞ்சுதா..?”

தனது இதயத்தில் உள்ள தகவல்களைக் கொட்டி விட்ட திருப்தியில், இந்துவின் அறையிலிருந்து வெளியேறினான், கார்த்திக்.

நண்பர்களைப் பார்த்து தலையசைத்து, தனது கட்டை விரலைக் காட்டினான். சரியாக மாமி உள்ளே வந்தாள்..!

”டிபன் சாப்பிட்டீங்களா..?” –என்று வினவியபோது மூவரையும் பார்த்தாள்.

தினேஷ் சும்மா இருக்காமல், மாமியை வம்புக்கு இழுத்தான்.

”டிபன் இருக்கட்டும் மாமி..! நல்ல ஸ்ரீரங்கத்து பையன், கார்த்திக். கைநிறைய சம்பாதிக்கிறான். நிலபுலன்கள் இருக்கு..! மிராசுதார் குடும்பம்,..! அவனுக்கு உங்க பெண்ணைக் கொடுத்தால் என்ன..?” –சம்மதம் கேட்க, மாமி சற்றே எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.

”கல்லைக் கல்லோட போடணும். நெல்லை நெல்லோட போடணும்..! இதையெல்லாம் சொன்னால் இளவட்டங்கள் உங்களுக்குப் புரியாது..! சட்டுபுட்டுனு டிபனைச் சாப்பிட்டு, நடையக் கட்டுங்க.” –மாமியின் முகத்தில் சற்று பதற்றம் தோன்றியது.

”மாமிக்கு பெண்ணை உனக்கு கொடுக்க இஷ்டம் இல்லை..! நம்மையெல்லாம் ரவுடிப் பசங்கனு நினைக்கிறா போல இருக்கு..!” -ரேயான் சொன்னான்.

”எப்படி இருந்தாலும், நாளைக்குக் காலை எட்டு மணி வரைக்கும் ஒரு முடிவையும் எடுக்க முடியாது. நாளைக்கு ஜன்னல் சுவத்துல இந்துவை ஒரூ ரோஜாப்பூவை வெக்கச் சொல்லிருக்கேன். வெள்ளை ரோஜான்னா சம்மதம்..! சிவப்பு ரோஜான்னா நோ காதல்..!” –கார்த்திக் சொன்னான்.

”நாமே ஒரு வெள்ளை ரோஜாவை வாங்கி ஜன்னல் சுவத்துல வச்சுட்டு அவளைக் கூட்டிட்டு போய், ஏதாவது கோவிலில் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடலாமா..?” –ரேயான் கேட்டான்.

”அவசரப்படாதே..! நாளை காலை வெள்ளை ரோஜா இருந்தால், அவளை அழைச்சுக்கிட்டு போய் திருவிடந்தைக் கோவிலில் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்..! எதுக்கும் நாளைக் காலையில நாம மூணு பேரும் வந்து பாப்போம்..!” –கார்த்திக் சொன்னான்.

”சாரி கார்த்திக்..! நான் வரல..! அர்ச்சனா என்னை அவள் அப்பாவைப் பார்க்க வர சொல்லியிருக்கா..! அவளோட போலீஸ் கமிஷனர் அப்பாகிட்டே என்னை அறிமுகப்படுத்தப் போறாளாம். அநேகமா, அவளுக்கு என் மேல அபிப்ராயம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். நல்ல கோடீஸ்வரக் குடும்பம். நான் அவங்க வீட்டோட மாப்பிள்ளையாக செட்டில் ஆகிறதுக்கு நல்ல சான்ஸ். அதனால் என்னை எதிர்பார்க்காதே..!” –தினேஷ் சொன்னான்.

ரேயான் தன் பங்குக்குச் சொன்னான். ”நீதான் மனச திறந்து காட்டிட்டே இல்ல..! இனிமே நாங்க எதுக்கு..? எல்லாம் நல்லபடியா நடக்கும். நாளைக்கு நான் ஃபானியோட டேட்டிங். ஸோ, என்னையும் எதிர்பார்க்காதே..! ஆல் தி பெஸ்ட்” –என்று கழன்று கொண்டான்.

ஜன்னலில் வெள்ளை ரோஜா வைத்திருப்பாளா, இல்லை சிவப்பு ரோஜாவை வைத்திருப்பாளா..?

ன்று இரவு முழுவதும் கார்த்திக் தூங்கவில்லை.

றுநாள் காலையில், ஆதர்ஷ்க்கு தெரியாமல், நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணடித்துக் கொள்வதும், கட்டை விரலைக் காட்டிச் சிரிப்பதுமாக இருந்தார்கள். பேப்பர் படிப்பது போல், ஆதர்ஷ், அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

-மோதல் தொடரும்…

ganesh

1 Comment

  • கடந்த ஒரு மாதமாக ” கால், அரை, முக்கால், முழுசு மற்றும் சிவகங்கையின் வீரமங்கை” ஆகிய இரு தொடர்களின் மற்ற பகுதிகள் வெளியாகவில்லையே!
    மீண்டும் தொடர்ந்து வெளிவர சாத்தியமுள்ளதா? நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...