கோமேதகக் கோட்டை | 20 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 20 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

”ஆ! என்னை வெல்பவன்! யார் அவன்? அவனை மிதித்தே கொன்று விடுகிறேன்!” கத்தினான் ராட்சதன்.

”போ! போய் முடிந்தால் மிதித்து கொன்றுவிடு! அவன் இந்நேரம் உன் கோட்டைக்குள் இருப்பான்!” என்றார் மன்னர்,

போய் அவனை அழித்துவிட்டு வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்! எவனோ ஒரு பொடியனை அனுப்பி என்னைக் கொன்றுவிடுவீர்களா? அதையும் பார்த்துவிடுகின்றேன்! என்று ஆவேசத்துடன் உணவுப் பொருட்களைக் கூட எடுக்காமல் திரும்பிச்சென்றான் ராட்சதன்.

ந்த விடிந்தும் விடியாத பொழுதில் கோமேதக கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது ரணதீரனின் நாவாய். அதில் இருந்த வீரர்கள் பரதவர்கள் போல வேடமிட்டு வலைகளைக் கடலில் வீசி மீன்களைப் பிடிப்பது போல நடித்துக் கொண்டனர்.

கோமேதகக் கோட்டை பார்வைக்கு அருகில் தென்பட்டதும் ரணதீரன் உத்தரவிட்டான்.

”ஆழ்கடல் நீச்சல் வீரர்களே! புறப்படுங்கள்! உங்களுக்கான பணி ஆரம்பமாகி விட்டது.” உடனே வீரர்கள் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தனர்.

அவர்கள் மூச்சு விடுவதற்கான ஒரு குழல் மட்டும் வெளியே தெரிந்தது. ரணதீரன் தன்னிடம் இருந்த ஒரு தொலைநோக்கியை எடுத்து கோட்டையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.

அப்போது கடலில் இருந்து சில ராட்சதர்கள் கோட்டைக்குள் செல்வது தெரிந்தது. ‘ஓஹோ! ராட்சதர்கள் இரவில் கடலில் காவலுக்கு இருந்துவிட்டு பகலில் கோட்டைக்குள் செல்கின்றனர் போலும்!’ என்று நினைத்துக் கொண்டான். ரண தீரன்.

அப்போது மந்திரப் பாயில் பறந்துவந்து நாவாயில் இறங்கினர் வித்யாதரனும் சூர்ப்பனகாவும் சித்திரக் குள்ளனும்.

”வாருங்கள் வித்யாதரரே! ”என்று வரவேற்றான் ரணதீரன்.

”ரணதீரா! நிலவரம் நமக்குச் சாதகமாக இருக்கிறதா?”

”அதை அறிந்துவரத்தான் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியுள்ளேன்.”

”தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருந்தீர்களே… என்ன தெரிந்தது?”

”கடலில் இருந்து சிலநூறு ராட்சதர்கள் கோட்டைக்குள் நுழையும் காட்சியை காண முடிந்தது.”

”அப்படியானால் இரவுக் காவலுக்கு ராட்சதர்கள் கடலுக்குள்ளும் இருக்கிறார்கள் போலிருக்கிறது அப்படித்தானே!”

”அப்படித்தான் நினைக்கிறேன்!”

”ரணதீரரே! நான் சொல்லியவாறு ஆயுதங்களை தயார் செய்துவிட்டீரா?”

”எல்லாம் தயாராக உள்ளது வித்யாதரரே!”

”எங்கே ஒரு முறை காட்டும், நான் சரிபார்த்துக் கொள்கின்றேன்!”

ரணதீரன் அந்த நாவாயின் மேல் தளத்திற்கு சென்று பார்த்தான். சில பீரங்கிகள் தயார் நிலையில் இருந்தன. அருகில் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பு குண்டுகள் நெருப்பாய் ஜொலித்துக் கொண்டிருந்தன.

”பொதுவாக கத்தி, வேல் வாள், கதாயுதம் போன்றவற்றால்தானே நாம் எதிரிகளோடு போரிடுவோம்! இது என்ன புதுவிதமான ஆயுதங்களைத் தயார் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தினீர்கள்.?” ரணதீரன் கேட்க.

”எதிரியின் பலத்தைப் பொறுத்து நமது போர் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிரி நம்மைவிட உடல் வலுவில் அதிகமானவன். அவனிடம் கத்தி, வேல், வாள் போன்றவற்றால் போரிட்டால் நமக்குத்தான் சேதாரமாகும். எனவேதான் இந்த ஆயுதங்களை எடுத்துவரச் சொல்லியிருந்தேன். இந்த ஆயுதங்களை வீசக்கூடிய வீரர்கள் உன்னிடம் இருக்கிறார்கள் அல்லவா?”

”ஆயுதங்களைத் தயாரிக்கும் போதே வீரர்களுக்கும் பயிற்சி கொடுத்து கூட்டி வந்துவிட்டேன். இந்த ஆயுதங்களை மிகத்திறமையாக அவர்கள் கையாள்வார்கள்!” என்றான் ரணதீரன்.

“பாராட்டுக்கள்! இப்படி ஒரு வீரன் எனக்குத்துணையிருக்கும் போது அந்த ராட்சதனை நான் எளிதில் வென்றுவிடுவேன்.” என்றான் வித்யாதரன்.

அப்போது ஆழ்கடலில் நீந்திச்சென்றவர்கள் திரும்பி வந்தனர். நாவாயில் ஏறிய அவர்கள் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் வித்யாதரன் கேட்டான்.

“வீரர்களே! கோட்டைக்குள் சென்றீர்களா? அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? நிலவரத்தைச் சொல்லுங்கள்!”

வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் மெதுவாக ஓர் வீரன் ஆரம்பித்தான். ”பிரபோ! நாங்கள் கடலின் ஆழத்தில் நீந்திச்சென்று கோட்டைச்சுவரை அடைந்தோம். அது இயற்கையாக அமைந்த ஓர் பாறைக் குகை! அதன் சுவர்கள் முழுவதும் பாசி படர்ந்து ஏற முடியாத அளவிற்கு வழுக்குகிறது. கோட்டைக்கு வடக்கே ஓர் கதவு இருக்கிறது! அந்தவழியாக ராட்சதர்கள் போகிறார்கள், வருகிறார்கள். ஆனால் அந்தக் கதவு அவர்கள் வந்தால்தான் திறக்கிறது. ”

“அப்படியானால் உங்களால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை! அதனால் கோட்டைக்குள் இளவரசி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க வில்லை தானே!” ரணதீரன் கோபப்பட்டான்.

“ரணதீரா! ஆத்திரப்படாதே! ராட்சதர்கள் மாய மந்திரம் தெரிந்தவர்கள்! அவர்கள் கோட்டைக்குள் சாமானியர்கள் நுழைந்துவிட முடியாது! எனினும் ஏதாவது ஓர் உபாயத்தை அறிந்துவருவார்கள் என்றுதான் இவர்களை அங்கே அனுப்பியது! பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?” என்றான் வித்யாதரன்.

”பிரபோ! ஆனால் நாங்கள் ஒன்றைக் கண்டோம்! கோட்டையின் கிழக்கு முகமாக ஓர் சாளரம் தெரிந்தது. அதில் ஒரு பெண்ணின் உருவம் சில நொடிகள் வந்து மறைந்தது. நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் அந்த சுவர்கள் வழுக்கியமையால் அந்த சாளரத்தின் அருகே செல்ல முடியவில்லை!” என்றனர்.

”நல்ல விஷயம் சொன்னாய்! அது கண்டிப்பாக இளவரசியாகத்தான் இருக்க வேண்டும்! நான் இப்போதே புறப்பட்டுச் சென்று பார்த்து வருகிறேன்!”

“எப்படி வித்யாதரா?” என்று ரணதீரன் கேட்க. இப்படித்தான் என்று ஒரு கிளியின் வடிவில் பறந்தான் வித்யாதரன்.

றந்து கடலைக் கடந்து சாளரத்தின் வாசல் அருகே வந்து அமர்ந்தான் கிளியான வித்யாதரன்.

உள்ளே கவனித்தான். இளவரசி ஓர் மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

”இளவரசி! ராஜகுமாரி!” என்று குரல் கொடுத்தது கிளி

புதிதாகக் கிளியின் குரல் கேட்டு எழுந்து அமர்ந்தாள் ராஜகுமாரி. “இளவரசி, நான் தான்… பயப்படாதீர்கள்! என்றது கிளி.

‘கலகல’வெனச் சிரித்தாள் ராஜகுமாரி. “ராட்சதனைக் கண்டே பயப்படாதவள் நான். கிளி உன்னைப்பார்த்து எதற்கு பயப்படப் போகிறேன்..?” என்றாள்.

”உங்கள் வீரம் நாடறிந்தது இளவரசி! தோழர்களுக்காக உங்கள் உயிரையே துச்சமாக்கி ராட்சதனிடம் சிறைபட்டு அவர்களைக் காத்த செயல் உலகம் இருக்கும் வரை நிலைபெற்றிருக்கும்!” என்றது கிளி.

”கிளியே! இவ்வளவு விஷயம் உனக்குத் தெரிந்திருக்கிறது. உண்மையைச் சொல்! நீ யார்?”

”ராஜகுமாரி! நான் தான் வித்யாதரன்! கிளி வடிவில் உருமாறி வந்துள்ளேன்! உள்ளே நுழையும் வழி இல்லை. எனவேதான் கிளி வடிவில் வந்து உங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. வெளியே ஓர் கப்பலில் வீரர்கள் ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள். இங்கே எத்தனை ராட்சதர்கள் உள்ளனர். அவர்கள் பலம், பலவீனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த்தைச் சொன்னால் உங்களை மீட்க உதவியாக இருக்கும்.”

”ஓ! குருபுத்திரர் வித்யாதரரா! வணங்குகிறேன்! இந்த கோட்டைக்கு ஒரே நுழைவாயில்தான் உள்ளது. அத ன்வழியே ராட்சதர்கள் மட்டும் வெளியே போய் வருகிறார்கள். சில நூறு ராட்சதர்கள் கோட்டைக் காவலில் உள்ளார்கள். சில நூறு பேர் கடல் காவலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் இரவில் சுறாவாக உருமாறி கடலுக்குள் செல்கிறார்கள். பொழுது விடிகையில் மீண்டும் அரக்கர்களாக மாறி கோட்டைக்குள் வந்து விடுகிறார்கள்”.

“ஓ! ஆச்சர்யமாக இருக்கிறதே!”

“இன்னொன்றும் நான் தெரிந்து கொண்டேன்! ராட்சதர்களுக்கு பகல் பொழுதில் வலிமை குறைவாக உள்ளது. ராப்பொழுதில் வலிமை அதிகம். மேலும் இவர்கள் நெருப்பைக் கண்டு அஞ்சுகின்றார்கள். நான் ஒரு சமயம் தீ மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை நெருங்கவே அவர்கள் பயந்தார்கள். நெருப்பைக் காட்டிச் சில காரியங்களை நான் சாதித்துக் கொண்டேன்.” என்றாள் இளவரசி.

”நல்லதாய்ப் போயிற்று! நானும் தீ கக்கும் பீரங்கி ஆயுதங்களை கப்பலில் கொண்டு வந்துள்ளேன். அதைக் கொண்டு இவர்களை தாக்கி அழித்து விடுகிறேன்.”

“ராட்சதன் இன்று வில்லவபுரம் சென்றிருந்தான். அவன் ஒரு புதிய திட்டமும் வைத்திருந்தான். என்னை மணந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அது. என் தந்தையிடம் அனுமதி கேட்கப்போவதாக சொல்லியிருந்தான். அவர் கண்டிப்பாக அனுமதித்து இருக்கமாட்டார். இப்போது அவன் கோபத்துடன் வந்து கொண்டிருப்பான். நீங்கள் உடனே சென்றுவிடுங்கள்!” என்றாள் இளவரசி.

“இதோ இவனை உங்கள் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களிடம் விளையாடி மகிழ்வான்.” என்று சித்திரக்குள்ளனைக் கீழே இறக்கிவிட்டான் வித்யாதரன்.

”அட, இத்தணூண்டு மனிதன்! ஆச்சர்யமாக இருக்கிறதே!”

இளவரசி பேசிக்கொண்டிருக்கும் போதே! அந்த அறையின் கதவு திறக்கப்பட சட்டென்று அங்கேயிருந்து பறந்தான் வித்யாதரன்.

உள்ளே நுழைந்தான் ராட்சதன். ”ஏய்! ராஜகுமாரி! அந்த வித்யாதரன் வந்துவிட்டானா? எங்கே அவன்..? அவனுடன் தானே பேசிக்கொண்டிருந்தாய்?”

”ராட்சதா! வித்யாதரன் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறாயே! அவ்வளவு பயமா?”

”பயமா? எனக்கா? எனக்கு பயந்து அந்த வித்யாதரன் தான் இங்கே எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான்! எங்கே அவன்? பேச்சுக்குரல் கேட்டதே!”

”இதோ இங்கே இருக்கிறேன்! பிரபோ!” என்று குரல் கொடுத்தான் சித்திரக் குள்ளன்.

”எங்கே? எங்கே?”

“இதோ இங்கேதான்! ஏன் உங்கள் குரல் இத்தனை நடுங்குகிறது?”

இளவரசியின் கையில் இருந்து சித்திரக்குள்ளன் குரல் கொடுக்கவும், “ஏய்… ஏய்? நீ யார்? உன்னை…” என்று அவனைக் கையில் எடுக்க முயற்சித்தான் ராட்சதன்.

–அடுத்த பகுதியில் நிறைவடையும்..!

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...