ஓவியர்களை ஒன்றிணைத்த மலர்வனம்
மலர்வனம் மின்னிதழின் விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னை ராஜன் கண் மருத்துவமனை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந் தினர்களாக ஓவியர் மணியம் செல்வன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், ஓவியர் ஜெயராஜ் கலந்துகொண்டார்கள். உமா பிரேம் மற்றும் ஐஸ்வர்யா ஸ்ரீராமும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
மலர்வனம் மின்னிதழ் ஆசிரியர் ராம்கி வரவேற்புரையாற்ற, ஓவியர் தேவா மலர்வனத்தின் சிறப்பைப் பாடல் மூலம் எடுத்துரைத்தார். கவிஞர் வைரமணி வாழ்த்து கவிதை வாசித்து பலத்த கைதட்டலை பெற்றார். ‘மலர்வனத்தில் நான்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரபு சங்கர் பேசி முடித்ததும் முதல் பகுதி யாக வாழ்நாள் சாதனையாளர் விருது ஓவியர் ராமு (துக்ளக்) மற்றும் கார்டூனிஸ்ட் (தெலுங்கு) ஜெயதேவ் பாபுக்கும் வழங்கப்பட்டது.
தூரிகை மன்னர் ‘அம்புலிமாமா சங்கர் ஓவிய விருது’ ஓவியர் ஸ்யாம், ‘சிறந்த ஆன்மிக எழுத்தாளர்’ விருது பிரபு சங்கர், ‘சிறந்த பன்முக வித்தகர்’ விருது எஸ். தேவநாதன், ‘சிறந்த கதை ஓவியர்’ விருது ஓவியர் எல்.என். சேகரன், ‘சிறந்த இதழ் வடிவமைப்பு’ விருது கிருஷ்ணகுமார், ‘சிறந்த டிஜிட்டல் ஓவியர்’ விருது ஓவியர் திரு.செந்தில் குமார், ‘சிறந்த கலா போஷகர்’ விருது அ. ராமன், ‘சிறந்த கதை எழுத்தாளர்’ விருது சுஸ்ரீ, ‘சிறந்த அறிமுக எழுத்தாளர்’ விருது வெ. தயாளன், ‘சிறந்த சமூகக் கதை எழுத்தாளர்’ கீதா இளங்கோ, ‘சிறந்த அந்தாதிப் புலவர்’ விருது இளநகர் காஞ்சிநாதன், ‘சிறந்த கார்ட்டூன் ஓவியர்’ விருது ஓவியர் பிள்ளை, ‘சிறந்த காஞ்சி பெரியவா ஓவியர் சுதன், சிறந்த ஓவியர் விருதுகள் எஸ். சங்கரநாராயணன் மற்றும் ஓவியர் ஆர். ராமனுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீதரன் எழுதிய ‘காஞ்சிய பெரியவா சரணம்’ என்ற புத்தகமும், சுபஸ்ரீ எழுதிய புத்தகங்களும் ரவி தமிழ்வாணன் மற்றும் என்.சி.மோகன்தாஸ் அவர்களும் வெளியிட ஓவியர்கள் மணியம் செல்வன் மற்றும் ஓவியர் ஜெயராஜ் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜவஹர் மலர்வனத்தின் சிறப்பை எடுத்துரைத்து வாழ்த்தினார்,
இரண்டாம் பகுதியாக சிறந்த சமையல் கலைஞர் விருது குமரவேல் ராம சாமி, சிறந்த சிரிப்பு சிறப்பிதழ் ஆசிரியர் விருது ஆர். ரவீந்திரன், சிறந்த வளரும் நாடக கலைஞர் விருது ஆர். ரவிகுமார், சிறந்த நாட்டிய ஆசிரியை விருது சங்கீதா கங்காதரன், சிறந்த கோல அரசி விருது அன்னபூரணி ரவி, சிறந்த கோலத் திலகம் விருது பாலா சந்திரசேகரன், சிறந்த ஓவிய ஆசிரியர் விருது த.கோ. தாயுமானவன் மற்றும் சக்திவேல், சிறந்த வளரும் ஓவியர் விருதுகள் செல்வி ர. பிரியதர்ஷிணி, என்.வி. ஹர்ஷிதா மற்றும் செல்வி சக்தி மிருனாளிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். என்.சி. மோகன்தாஸ், ஓவியர் ஜெயராஜ் விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்கள்.
ரவி தமிழ்வாணன் பேசும் பொழுது “இந்நிகழ்ச்சியை ஓவியர்களின் குடும்ப விழாவாகப் பார்க்கிறேன். அத்தனை பெரிய ஓவியர்களை இங்கே சந்திப்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பெரிய பத்திரிகை நடத்த வேண்டிய விழாவை மலர்வனம் ஓவியர்களையும் எழுத்தாளர்களை மற்ற சாதனையாளர்களையும் தேடிக் கண்டுபிடித்து விருது வழங்கியதை ஒரு சாதனையாகவே எனக்குத் தெரிகிறது” என்று சிறப்புரை ஆற்றி அனைவரது கைதட்டல்களையும் பெற்றார்.
ஓவியர் மணியம் செல்வன் பேசும்போது “நான் மலர்வனத்தைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன், எத்தனையோ மூத்த ஓவியர்களை இது போலப் பாராட்டி கௌரவிக்க நாம் தவறிவிட்டோம். இதை அவர்களுக்குக் கொடுத்த கௌரவமாக நான் கருதுகிறேன். அதை ‘மலர்வனம்’ செய்தது பாராட்டப்பட வேண்டியது. மூத்த ஓவியர்ளையும் இளம் ஓவியர்களையும் கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. அது மட்டுமின்றி கோலக் கலைஞர்கள், நாடக நடிகர், நாட்டிய ஆசிரியை மற்றும் சிறந்த வாசகரையும் கௌரவிக்கபட்டதற்கு என் மனமார்ந்து பாராட்டுக்கள்” என்றார்.
மலர்வனம் ஆசிரியர் ராம்கி சார்பாக ஸ்ரீதர் நன்றியரையாற்றினார். ஓவியர் ஜெயராஜ் மவுத்தார்கன் மூலம் வாழ்த்துப் பாடி இசைக்க, பாராட்டு மழை இனிதே நிறைவுற்றது.
ஆர்.சீதா