காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாகத் தங்கம் வென்றார் பி.வி.சிந்து
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களு டன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
காமன்வெல்த் இறுதிப் போட்டியில், பி.வி. சிந்து ஆட்டம் முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கனடா வீராங்கனை மிச்செல் லியால் ஒருபோதும் சிந்துவுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டி யின் தொடக்க ஆட்டத்தை 21-15 என்ற புள்ளிக்கணக்கில் முடித்து பி.வி. சிந்து தனது வெற்றியை உறுதி செய்தார்.
பி.வி.சிந்துவின் பூர்வீகம்
ஐதராபாத்தைச்சேர்ந்து புசார்லா வெங்கட சிந்து ஒரு இந்திய தொழில்முறை பூப்பந்து வீரர். பேட்மிண்டன் உலக சாம்பியனான முதல் இந்தியர் மற்றும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.
தெலுங்கானாவைச்சேர்ந்த பி. வி. ரமணா மற்றும் பி. விஜயா தம்பதிக்கு 1995 ஜூலை 5ஆம் தேதி பிறந்தார் புசார்லா வெங்கட சிந்து. அவரது பெற்றோர் இரு வரும் தேசிய அளவிலான கைப்பந்து வீரர்கள். சிந்துவின் தந்தை ரமணா 1986ல் சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியின் உறுப்பினராக இருந்தவர். 2000ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதைப் பெற்றார்.
சிந்து, ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளிலும் வென்றிருக்கிறார். 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் உட்பட BWF சுற்றிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.
செப்டம்பர் 2012இல் 17 வயதில் சிந்து BWF உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களைப் பிடித்தார். 2013ஆம் ஆண்டு தொடங்கி, சிந்து ஒவ்வொரு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், 2015ஐ தவிர்த்து, ஒரு பதக்கத்தை வென்றார்.
ஜாங் நிங்கிற்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்து அல்லது அதற்கு மேற் பட்ட பதக்கங்களை வென்ற இரண்டாவது பெண்மணி.
சிந்து 2016 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி னார். இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய பூப்பந்து வீரர் என்ற பெருமை யைப் பெற்றார்.
சிந்து தனது முதல் சூப்பர்சீரிஸ் பட்டத்தை 2016ல் சீனா ஓபனில் வென்றார். 2017இல் மேலும் நான்கு இறுதிப் போட்டிகளுடன் தென் கொரியா மற்றும் இந்தியாவில் பட்டங்களை வென்றார்.
அதோடு, 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், உபேர் கோப்பையில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
8.5 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 5.5 மில்லியன் டாலர் வருமானத்துடன், சிந்து ஃபோர்ப்ஸின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
விளையாட்டுக்கு கௌரவமான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ மற்றும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருது ‘பத்மஸ்ரீ’ பெற்றவர். 2020 ஜனவரியில் இந்தியா வின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான ‘பத்ம பூஷண்’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சிந்து பாரத் பெட்ரோலியத்துடன் ஜூலை 2013 முதல், ஹைதராபாத் அலுவலகத் தில் உதவி விளையாட்டு மேலாளராகப் பணியாற்றி வருகிறார். ரியோ ஒலிம்பிக் கில் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அவர் துணை விளையாட்டு மேலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
அவர் பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் முதல் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார். அவர் ஆந்திர மாநிலத்தால் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார். 2018 காமன் வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியக் குழுவினருக்கான கொடி ஏந்தியவர்.
உலகளவில் உள்ள தடகள வீராங்கனைகளில் ஒரு வருடத்தில் மட்டும் பரிசுத் தொகைகள் மற்றும் விளம்பரங்கள் என அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் 23 வயதான இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து 8.5 மில்லியன் டாலர் களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். இது மட்டுமல்லாமல் பிரிட்ஜ்ஸ்டோன் (Bridgestone) கேடொரேட், (Gatorade) நோக்கியா, பனசோனிக் (Panosonic) ஆகிய நிறுவனங்கள் சிந்துவுக்கு ஸ்பான்சர் செய்வதாகவும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரி வித்துள்ளது.
காமன்வெல்த் இறுதிப் போட்டிக்குப் பிறகு பேசிய பி.வி.சிந்து, “நான் நீண்ட கால மாக இந்தத் தங்கத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியாக எனக்குத் தங்கம் கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி, அவர்கள் என்னை இன்று வெற்றிபெறச் செய்தனர்” என்று கூறினார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ள பி.வி. சிந்து வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“பி.வி.சிந்து அற்புதமான சாம்பியன்களின் சாம்பியன்! அவருடைய திறமையை மீண்டும் மீண்டும் காட்டுகிறார். அவருடைய அர்ப்பணிப்பும் திறமையும் பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.