கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் ஹைக்கூ விருது வழங்கவேண்டும்
திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
காலை10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது வழங்குதல், ஹைக்கூ நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன.
இம்மாநாட்டில் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, பிருந்த சாரதி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் தமிழ்நாடன், தங்கம் மூர்த்தி, சாகித் தியஅகாதமி விருதாளர் மு.முருகேஷ், நந்தவனம் சந்திரசேகரன், அமரன், சந்திரா மனோகரன், வதிலை பிரபா, பல்லவி குமார், நீலநிலா செண்பக ராஜன், கவிநிலா மோகன், முனைவர் ம.ரமேஷ், தனலெட்சுமி பாஸ்கரன், பா.தென்றல் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினார்கள்.
மாநாட்டு நிறையுரையாக கவிஞர் என்.லிங்குசாமி பேசுகையில், “ஹைக்கூ கவிதை எழுதுபவனின் மனநிலையானது உலகில் இருக்கும் எல்லா மனிதர் களின் மனநிலையிலிருந்தும் வேறுபட்டிருக்கும். அவர்கள் இந்த உலகத் தைப் பார்க்கின்ற பார்வையும் மற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பும் மகிழ்ச்சியும் வித்தியாசமாக இருக்கும்.
சென்னைக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற உந்துதலை எனக்குத் தந்தது மூன்று வரி ஹைக்கூ கவிதைதான். என்னை இந்த உயரத்திற்கு உயர்த் தியதும் எனது வெற்றி தோல்லியில் மனதைச் சமநிலையில் வைத்துக்கொள் வதும் இந்த ஹைக்கூ கவிதைகள்தான். ஹைக்கூ கவிதை எழுத மெனக்கெட கூடாது. அது இயல்பாக அமைய வேண் டும்” என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில் ‘தூண்டில்’ ஹைக்கூ சிறப்பு மலர், மு.முருகேஷ் எழுதிய ‘ஞானியின் பச்சைக்கிளி’, தங்கம் மூர்த்தியின் ‘மழையின் கையெழுத்து’ உள்ளிட்ட பல ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன.
தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் இலக்கிய விருதுகளில் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரால் ஹைக்கூ கவிஞர்களுக்கும் ஒரு விருதினை வழங்கிட வேண்டுமென்கிற தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.