முனைவர் இறையன்பு அவர்களின் சிறைக்கைதிகளை எழுத வைக்கும் முயற்சி.
திரு.கிள்ளிவளவன், திரு சுகுமாரன், திரு பாலச்சந்திரன், திருமதி லாவண்யா, திருமதி பூங்குழலி மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வருகிற “எழுதுக” என்கிற அமைப்பை முனைவர் இறையன்பு அவர்கள் வழிநடத்தி வருகிறார்.

“எழுதுக” அமைப்பு அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் புத்தகம் எழுத வைத்திருக்கிறது இந்த இயக்கமான “எழுதுக”. குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்து, அதிகமாகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட கண்ணகி நகரில் இருக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விருப்பத்தை அறிந்து, 6-7 மாதங்களில் 50 மாணவர்களை நூல்கள் எழுத வைத்திருக்கிறது. அந்த வெளியீட்டு விழா விரைவிலே நடக்கவிருக்கிறது.
இதன் விரிவாக்கமாக சிறைக்கைதிகளை எழுத வைக்கலாம் என்ற முன்மொழிவை வைத்த முனைவர் இறையன்பு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். முதல் முயற்சிக்கு கடலூர் சிறைச்சாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களும், சிறைக் கண்காணிப்பாளர் திரு பரசுராமன் அவர்களும் முழு ஒத்துழைப்பையும் தந்தனர். திரு கிள்ளிவளவன் தலைமையிலான குழு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தது.






தொடக்க விழா நேற்று 11.02.2026 அன்று கடலூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறைக் கண்காணிப்பாளர் திரு பரசுராமன் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி உரையாற்றினார். திரு கிள்ளிவளவன் கருத்துரையையும், திரு ஜோசப் ராஜா நோக்குரையையும் ஆற்றினர். ஆர்வமுள்ள 101 சிறைக்கைதிகள் கலந்து கொண்டனர்.




சிறைக்கைதிகளை எழுத வைக்கும் இந்த முயற்சி இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே முதல் முயற்சி என்று தன் உரையைத் தொடங்கிய முனைவர் இறையன்பு அவர்கள், கைதிகளை ஊக்குவிக்கும் வகையில் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களையும், அது ஒருவரின் மனத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதையும் விளக்கிப் பேசினார். அவர் உரையால் ஊக்கம் பெற்ற கைதி நண்பர்கள் முகத்தில் காணப்பட்ட உற்சாகம், இன்னும் 2-3 மாதங்களில் கடலூர் சிறைச்சாலையிலிருந்து 101 புத்தகங்கள் வெளிவரும் என்ற உறுதியினைக் காட்டியது.
