கோமேதகக் கோட்டை | 14 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
”நீர் வந்த காரியம் என்ன தூதுவரே?” என்று மன்னர் கேட்டதும் ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார்.
“மன்னர் மன்னா! எங்கள் நாட்டின் கீழ் எல்லை கடல்பரப்பாகும். கடல் வழி வாணிபத்தில்தான் எங்கள் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. எங்கள் வணிகர்கள் கடல் வழியே அண்டை நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டி வருகின்றனர். அப்படி பொருள் ஈட்டி வரும் நாடுகளில் ஒன்று ஸ்வேதபுரி. ஸ்வேதபுரியில் விளையும் முத்துகள் அற்புதமானவை. அங்கு சென்று முத்துகளை வாங்கி பிற நாடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வந்தார்கள் எங்கள் வணிகர்கள்”
”ஆம்! நான் கூட ஸ்வேதபுரியின் முத்துக்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த விலைமதிப்பில்லா முத்துகளை ஏற்றுமதி செய்ய ஸ்வேதபுரி மறுக்கிறதா?”
”ஸ்வேதபுரி மறுக்கவில்லை! நாங்களும் அங்கே சென்று முத்துகளை வாங்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வணிகர்களால் இப்போது முன்பு போல ஸ்வேதபுரிக்குச் செல்ல முடிவது இல்லை. ”
“ஏன்?”
”ஸ்வேதபுரிக்கு செல்ல வேண்டுமானால் கீழைக் கடலில் உள்ள கோமேதகக் கோட்டையை கடந்துதான் செல்ல வேண்டும் அங்கே ஒரு ராட்சதர் கூட்டம் வசித்து வருகிறது. அந்த கூட்டத்தினர் அவ்வழியே ஒருவரையும் செல்ல விடுவதில்லை! அப்படி மீறிச் செல்வோர் எல்லோரையும் கொன்று தின்றுவிடுகின்றனர்.
அதனால் ஸ்வேதபுரிக்கு எங்களால் செல்ல முடியவில்லை! இதை ஸ்வேதபுரி அரசுக்குத் தெரிவித்தோம். அவர்கள் தங்கள் படைவீரர்கள் சிலரை கோமேதகக்கோட்டை ராட்சதர்களை அழிக்க அனுப்பி வைத்தார்கள். பாவம் அவர்களும் அந்த ராட்சதர்களுக்கு இரையாகிவிட்டார்கள்”
”சரி இப்போது நீ வந்த காரியம் என்ன? அதைக்கூறு.”
”ஸ்வேதபுரி வீரர்களால் ராட்சதர்களை கொல்ல முடியவில்லை! அதனால் எங்கள் படை வீரர்களை கொண்டு ராட்சதனை கொல்லச் சொன்னார்கள். அது எங்களாலும் முடியாத காரியம் என்று சொல்லிவிட்டோம். அப்போது அவர்கள் ஒரு உதவி கேட்டார்கள்.”
ஸ்வேதபுரியின் குலகுருவிடம் அந்த ராட்சதனை கொல்ல வழிகேட்டு இருக்கிறார் அந்தநாட்டு ராஜா. அந்த குல குரு வில்லவபுரத்தில் இருக்கும் வித்யாதரனால் மட்டுமே அந்த அரக்கனை கொல்ல முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் தங்கள் நாட்டு இளவரசியை ராட்சதன் தூக்கிச் சென்றதையும் அறிந்தோம். இளவரசியை காப்பாற்றி மீட்டுவர தாங்கள் முயல்வீர்கள் என்றும் அப்போது வித்யாதரனை அனுப்பி ராட்சதனை வென்று வரச்சொல்லலாம் என்றும் எங்கள் மன்னர் நினைத்தார். எனவே என்னை வில்லவபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
ராட்சதனை கொல்ல வித்யாதரனால் முடியும் என்று ஸ்வேதபுரியின் குலகுரு கூறியிருக்கிறார். நானும் வித்யாதரனின் வீரத்தைப்பற்றி நன்கு அறிவேன். எனவே வித்யாதரரை எங்களுடன் கோமேதகக் கோட்டையை தாக்க அனுப்பி வைக்க வேண்டும் என்று பணிவாக கேட்டான் ரண தீரன்.
”அட கால நேரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகிறது போல! அதனால்தான் நீ இங்கே வந்து இருக்கிறாய் ரணதீரா.!”
”ஆம் மஹராஜா! வித்யாதரனிடம் நேற்றிரவே இந்த விஷயத்தைப் பற்றி சொல்லிவிட்டேன். அவரும் கோமேதகக்கோட்டை செல்ல இருக்கும் தகவலை சொல்லிவிட்டார். ஆனாலும் தங்களின் அனுமதி கேட்டு இன்று தங்களிடம் பிரார்த்தித்தேன்.”
”ரணதீரா! உன் கோரிக்கையை ஏற்கிறேன்! உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காக வித்யாதரன் கோமேதக கோட்டை செல்லத்தான் போகிறான். அவனுக்கு உதவியாக நீயும் செல்வாய்தானே!”
”தங்கள் கட்டளைக்குத்தான் காத்திருக்கிறேன் மன்னா!”
”நல்லது. வித்யாதரன் இன்னும் இரண்டு தினங்களில் கோமேதகக்கோட்டைக்குப் புறப்படப் போகிறான். அவனுடன் நீயும் புறப்பட்டு ராட்சதனை வென்று வா! ஆனால் ராட்சதனை வெல்வதற்கு உங்கள் தரப்பு உதவியும் தேவைப்படுகிறது. அந்த கடல் பரப்பில் நமது வீரர்களும் வித்யாதரனும் தங்கிப் போரிட நல்லதொரு போர்க்கப்பல் தேவைப்படுகிறது”
”அதை நாங்கள் கொடுத்து உதவுகிறோம்! எங்கள் மன்னரிடம் நான் பேசுகிறேன்! சில படை வீரர்களுடன் போர்க்கப்பலில் நானே பயணிக்கிறேன். எனக்கு நாவாய் ஓட்டவும் தெரியும்.”
”அப்புறம் என்ன? வித்யாதரா! உனக்கு கப்பலும் கிடைத்துவிட்டது. உன் நண்பன் ரணதீரனும் உதவிக்கு வருகிறான். இனி புறப்பட வேண்டியதுதானே!”
”ஆம் புறப்பட வேண்டியதுதான் மன்னா! அமாவாசை இரவில் எனக்கு ஒர் உபதேசம் குருமூலம் கிடைக்கவிருக்கிறது. அந்த உபதேசம் பெற்றதும் பிரதமை கழித்த மறுதினம் இங்கிருந்து புறப்பட்டுவிடலாம். என்று திட்டமிட்டிருக்கிறேன்!”
”அது என்ன உபதேசம்? யார் அந்த புதிய குரு வித்யாதரா?”
“மன்னா! நான் சித்திரக் குள்ளர்களுக்கு உதவி செய்துவிட்டு திரும்புகையில் எனக்கு மந்திரப்பாய் பரிசாக கிடைத்தது. அந்த மந்திரப் பாயை அடையும் பொருட்டு சூனியக்காரி சூர்ப்பனகா என்பவள் ஒரு சிறுவன் வேடம் புனைந்து என்னிடம் வந்து மந்திரப்பாயை அபகரிக்க முயன்றாள். நல்லவேளை அதை நான் உணர்ந்து கொண்டு சித்திரக்குள்ளனின் உதவியோடு அவளது மந்திரக் கோலை அவளிடமிருந்து அபகரித்துக் கொண்டேன். ஆனால் அந்த மந்திரக் கோலை இயக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது. அதை அந்த சூர்ப்பனகாதான் உபதேசிக்க வேண்டும். அதை அவள் அமாவாசை அன்று உபதேசம் செய்வதாக கூறியுள்ளாள். அவள்தான் எனது புதிய குரு” என்றான் வித்யாதரன்.
”வித்யாதரா! சூனியக்காரி சூர்ப்பனகா மிகவும் கொடியவள் ஆயிற்றே! அவளை நம்புவது மிகவும் ஆபத்தானது. அவள் ஒரு விஷப்பாம்பு போன்றவள் கவனமாக நடந்துகொள்.”
”அவள் இப்போது பல் பிடுங்கிய பாம்பு மன்னா! அவளது மந்திரக் கோல் இப்போது என்னிடம் இருக்கிறது அது என்னிடம் இருக்கும் வரை அவளால் என்னை மட்டுமல்ல யாரையும் எதுவும் செய்துவிட முடியாது.”
”அப்படியானால் சரி! ஆனால் அவள் மிகவும் பயங்கரமானவள். அவள் எனது நண்பரான தாளப்பூர் நாட்டு ஆதித்ய வர்மாவை மணந்து கொள்ள விரும்பி அவரை சிறைபிடித்துவிட்டாள். நல்ல வேளை அச்சமயம் அந்த நாட்டு வீரன் சுட்டிகணேஷ் அவரை விடுவித்தான். அவளிடம் நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” என்றார் மன்னர்.
”ஆகட்டும் மன்னா! நான் சூர்ப்பனகாவிடம் எச்சரிக்கையாகவே நடந்து கொள்கிறேன். அவளிடம் சில விசேஷ சக்திகள் இருக்கிறது. அவள் நம்முடன் இருந்தால் ராட்சதனை எளிதில் தோற்கடித்துவிடலாம் எனவேதான் அவளை சிறைபிடித்து வைத்துள்ளேன்.” என்ற வித்யாதரன் ரணதீரன் பக்கம் திரும்பி…
”ரணதீரா! இனி நீ தாமதிக்க வேண்டாம்! இப்போதே நீ உன் நாட்டுக்குச் சென்று போர்க்கப்பலை தயார் செய்து கோமேதகக்கோட்டை நோக்கிப் புறப்படு. நானும் தாமதிக்காமல் இயன்றவரை அமாவாசை தினமே கூட புறப்பட்டு கோமேதகக் கோட்டையை வந்தடைகிறேன்!” என்றான்.
“அரசே! எனக்கு விடை கொடுங்கள்! ” என்று விடைபெற்றான் ரணதீரன்.
வித்யாதரனும் அரசரிடம் விடை பெற்று தனது இல்லத்திற்கு வந்தான்.
அங்கே சூர்ப்பனகா அவனை ஒரு கேலிச்சிரிப்போடு வரவேற்றாள்.
”என்ன வித்யாதரா ராட்சதனை வெல்ல முஸ்தீபுகள் வேகமாக நடைபெறுகிறது போல!” என்று கேலியாக கேட்டாள்
”ஆம்! இது ஒரு பெரிய பணி! அதற்கான திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்! ”
”ஆனால் உனக்கொரு புதிய விஷயத்தை சொல்லட்டுமா தம்பி!” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் சூர்ப்பனகா
”என்ன விஷயத்தை நீ புதிதாக சொல்லிவிடப் போகிறாய்?”
”நான் சொல்லப்போவது புதிய விஷயம்தான்! இப்போதுதான் சுடச்சுட அந்த செய்தி எனக்கு கிடைத்தது!”
”அப்படியா? அது என்ன செய்தி? சொல்லேன் தெரிந்துகொள்கிறேன்!”
”ராட்சதனை கொல்ல நீ கிளம்பும் விஷயம் அந்த ராட்சதனுக்குத் தெரிந்து விட்டது. தன்னைக் கொல்ல இந்த உலகில் எவனுமே இல்லை என்று நினைத்திருந்த அவனுக்கு புதியதாய் நீ புறப்பட்ட விஷயம் தெரிந்துவிட்டது!” என்றாள் சூர்ப்பனகா
”அதிருக்கட்டும்! ராட்சதனுக்கு நான் வரப்போகும் செய்தி தெரிந்திருக்கட்டும்! ஆனால் அந்த செய்தி உனக்கு எப்படி கிடைத்தது அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றான் வித்யாதரன்.
”நான் மந்திரவித்தை கற்றவள் என்பதை நீ அடிக்கடி மறந்துவிடுகிறாய் வித்யாதரா!”
”சரிதான்! உன் மந்திர வித்தை எல்லாம் உன் மந்திரக் கோல் இருந்தால்தானே பலிக்கும் அதுதான் இப்போது என்னிடம் இருக்கிறதே!”
”அப்படியா! உன்னிடம் இருக்கும் அந்த மந்திரக் கோலை காட்டு பார்க்கலாம்.”
வித்யாதரன் அவசர அவசரமாக தன் இடுப்பில் கை வைத்து தேட. அங்கே மந்திரக் கோல் இல்லை!
”அந்த மந்திரக் கோல் உன்னை விட்டு நழுவி இரண்டு நாழிகை ஆகிவிட்டது வித்யாதரா!” என்று கோரமாக தன் கையில் மந்திரக்கோலை ஆட்டியபடி சொன்னாள் சூர்ப்பனகா.
”மன்னரை பார்க்கும் அவசரத்தில் மந்திரக் கோலை இடுப்பில் சரியாக சொருகாமல் நீ குதிரை மீதேறிச் சென்றாய்! அந்தக் கோல் நழுவிக் கீழே விழுந்ததை நீ பார்க்கவில்லை! நான் பார்த்துவிட்டேன். உடனே எடுத்தும் விட்டேன். இப்போது மந்திரக் கோல் என் வசம்! நான் உன் வசமில்லை! விடுதலை ஆகிறேன். உன்னிடம் சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் இத்தனை நேரம் காத்திருந்தேன்.”
”சூர்ப்பனகா! நீ எனக்குக் கொடுத்த வாக்கு என்னாவது? மந்திரக்கோலை இயக்கும் மந்திரம் கற்றுக்கொடுப்பதாய் சொன்னாயே!”
”அப்போதைய சூழலில் நான் உன் கட்டுப்பாட்டில் இருந்தேன். அதனால் உனக்கு கற்றுத்தருவதாக சொன்னேன். இப்போது எனக்குத்தான் மந்திரக் கோல் கிடைத்துவிட்டதே இனி எதற்கு நான் உனக்கு உதவ வேண்டும்”.
”சரி மந்திரக் கோல் கிடைத்துவிட்டது. ஆனால் மந்திரப் பாய் நீ மிகவும் விரும்பினாயே அது உனக்கு கிடைக்காதே!”
”அப்படி நீ நினைத்துக் கொண்டிருந்தால் அது உன் தப்பு வித்யாதரா!”
“நீ என்ன சொல்கிறாய்?”
“மந்திரக் கோல் என்னிடம் வந்தது போல் மந்திரப்பாயும் என்னிடம் வந்துவிட்டது!”
“கிடையாது நீ ஏமாற்றப் பார்க்கிறாய்!”
“நான் ஏன் உன்னை ஏமாற்றவேண்டும்! நீயே என்னிடம் ஏமாந்துவிட்டாய்! இனி நீ எப்படி அந்த ராட்சதனை கொல்லப் போகிறாய்? அது இனி கனவிலும் நடக்காத காரியம்!”
”சூர்பனகா! விளையாடாதே! இது இளவரசியின் உயிரை காப்பாற்றும் விஷயம் மட்டுமல்ல! இந்த நாட்டு மக்களின் நலனையும் காப்பாற்றும் விஷயம். ”
”உன்னைப் போல பொது நலமாக நான் எப்போதும் சிந்திப்பது இல்லை! எனக்கு என் சுயநலம்தான் மிகவும் முக்கியம். அந்த ராட்சதனை கொன்று நீ தரக்கூடிய பரிசான மந்திரப் பாய் இப்போது என் வசம். அதை இயக்கும் வித்தையை இந்த மந்திரக் கோல் சொல்லிக் கொடுத்துவிட்டது. நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். ” என்று கெக்கலிப்பு காட்டிய சூர்ப்பனகா பாயின் மீதேறிப் பறக்க என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சிலை போல நின்றான் வித்யாதரன்.
மந்திரப்பாயையும் மந்திரக்கோலையும் வித்யாதரன் மீட்பானா..?