தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 12 | ஜி.ஏ.பிரபா

12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர்

மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும்

ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப்

பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத்

திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி

மெய்யனாய் வெளி கட்டி முன் நின்றது ஓர்

அற்புதம் விளம்பேனே!

திருவாசகம்.

வாழ்வெனும் மகா நதியின் கரையாக பிறப்பும், இறப்பும் இருக்கிறது. பிறந்தால் இறப்பு நிச்சயம் என்றாலும், ஒவ்வொரு நாளும் நாம் அதை நோக்கியே நடந்து செல்கிறோம் என்று உணர்ந்தாலும், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் என்று இறைவனை நோக்கிக் கையேந்தத் தவறுவதில்லை.

பந்தங்களைப் பிணைப்பது இந்தப் பிரார்த்தனைகள்தான். வாழ்வு பிரார்த்தனைகளால் மட்டுமே நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு பிரார்த்தனைகளும் எதோ ஒரு கோரிக்கையுடன்தான் நிரம்பி இருக்கிறது. அது நல்ல எண்ணங்கள், செயலுடன் இருந்தால் நம் வெற்றிக்கு அதுவே துணையாக நிற்கும்.

நம் பிரார்த்தனைகள் ஆழமாகவும், பலமாகவும் இருந்தால், நாம் அதன் பலன்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த ஆழமான பலமான நம்பிக்கையை இறைவன் மேல் வைக்க வேண்டும்.

உன்னையே கதியென்று உறுதியாய் நம்பினேன்

உன் பதம் சாட்சியாக”

என்கிறது பதிகம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்கிறது திருவாசகம். எதுவும் ஈசன் சித்தம் எனும்போது, அது நல்லதுக்கே எனும்போது, அந்த நம்பிக்கையின் உறுதியுடன் பாதங்களைச் சரணடைந்தால் போதும். மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.

அந்த உறுதியுடன் இருந்த அடியார்களைக் காக்க ஈசன் நடத்திய அற்புதங்கள் ஏராளம். அதில் ஒரு தலம் திருச்சுழியல். தற்போது திருச்சுழி என்று அழைக்கப் படுகிறது.

வாழ்நாளில் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் கூட இத்தல இறைவனைத் தரிசிப்பதன் மூலம் நீங்குகிறது. பூமிநாத ஸ்வாமி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ திருமேனி நாதரை சென்று தரிசிக்க, இருபத்தி ஒரு பிறவியில் செய்த பாவங்கள் விலகுகிறது. மதுரை மாவட்டம் அருப்புக் கோட்டையிலிருந்து பதினைந்து கிமீ தொலைவில் உள்ளது திருச்சுழி. ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த இடம் என்று சிறப்பும் உடையது.

ஒவ்வொரு யுகத்திலும் பெரு வெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாகும். துவாபர யுகத்தில் பேரழிவு உண்டான போது, மக்கள் ஈசனை வேண்ட, சிவபெருமான் தன் சூலத்தினால் பூமியில் ஒரு துளையிட்டு, வெள்ளத்தை பூமியில் புகுமாறு செய்தார். சூலத்தைச் சுழித்துக் கொண்டு வெள்ளம் பூமியில் பாய்ந்ததால் இத்தலம் திருச்சுழி என்று அழைக்கப்பட்டது.

மிகப் பழமையான இக்கோவில் இன்னும் அதன் புராதன சிறப்பை மாற்றாமல் இருக்கிறது. இங்கு பூமாதேவி ஈசனை வழிபட்டதால் இறைவனுக்கு ஸ்ரீ பூமிநாத சுவாமி என்று பெயர். ஆண்டிற்கு இருமுறை சூரிய ஒளி மூலவரின் திருமேனி மீது விழுகிறது. இக்கோவில் கருவறை பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது என்று கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது. பிற்காலத்தில் நகரத்தார் பலவிதத் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

இங்கு இறைவன் திருமேனி நாதர், பூமிநாத ஸ்வாமி என்றும், அம்பிகை சகாயவல்லி, துணைமாலை நாயகி என்ற பெயருடனும் விளங்குகிறார். பாண்டிய நாட்டின் புகழ் மிக்க பதினான்கு சிவாலயங்களில் திருச்சுழி ஒன்று.

பழங்காலச் சிற்பக் கலைக்கும், கட்டிடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்க கருங்கல்லில் குழாய் அமைத்திருப்பது மிகச் சிறப்பு.

ஏழுநிலை கோபுரம் கொண்ட இக்கோயிலில் இறைவன் சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். கருவறை அகழி அமைப்பில் காட்சி அளிக்கிறது. இங்கு அம்பிகை தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள். அன்னையின் எதிரே உள்ள மண்டபத்தின் மேற்புறம் ஸ்ரீசக்கரம் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

இங்கு மிகச் சிறப்பான ஒரு வழக்கம் இருக்கிறது. எந்தக் கோவிலிலும் இல்லாத பெருமை அதன் மூலம் இக்கோவிலுக்குக் கிடைத்திருக்கிறது. இறந்தவர்களுக்கு இங்கு மட்டுமே அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவார்கள்.

அர்ச்சனை செய்பவர் முதலில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றி, பின் மீண்டும் ஒரு முறை சென்று தன் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் இருபத்தி ஒரு ஜென்மங்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்களின் பாபங்கள் தொலைகிறது.

இந்தத் தலத்தில் கால் பட்டால் அவர்களுக்கு வீடு, நிலம் போன்றவைகளை இறைவன் அருள்கிறார். இங்குச் செல்ல வேண்டும் என்ற வாய்ப்பு தானாகவே அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.

இத்தலத்திற்கென்று சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்

வானாய் வருமதியாய் விதி வருவானிடம் பொழிலின்

தேனாதரித் திசை வண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்

நானா விதம் நினைவார்தமை நலியார் நமன் தமரே

என்பது சுந்தரர் பதிகம்.

உடலாய், அதில் உறையும் உயிராய் இருப்பவன் இறைவன். நாம் கேட்பதைக் கொடுப்பவனும் அவனே, மறுப்பவனும் அவனே. அவன் உறைவிடம் சோலைகள் நிரம்பிய, வண்டுகள் பாடும் திருச்சுழி ஆகும். அதனை நினைப்பவர்களை எமன் தூதர்கள் துன்புறுத்த மாட்டார்கள். என்கிறார் சுந்தரர்.

நம்முடைய பாவங்கள் விலகி, இன்பமுடன் வாழ திருச்சுழி இறைவனை வணங்குங்கள் என்கிறார் சுந்தரர்.

இறைவன் சன்னதிக்கு எதிரே உள்ள கம்பத்தடி மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒரு தூணில் ஆஞ்சநேயர் சிற்பமும் உள்ளது. மூன்று பிரகாரங்களை உடைய கருவறை சுற்றுப் பிரகாரத்தில் சூரியன் தன் இரு மனைவிகளான உஷா, பிரத்யுக்ஷாவுடன் காட்சி அளிக்கிறார்.

சபா மண்டபத்தில் உள்ள நடராஜர் மூலவராகச் சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார். கருவறை சுவற்றிலும் பல அழகான சிற்பங்கள் காட்சி அளிக்கிறது. இங்கு புன்னை மரம் தல விருட்சமாக விளங்குகிறது.

இங்கு ஏற்பட்ட பிரளயத்தை அடக்கிய பிரளய விடங்கர் சன்னதி கருவறை பிரகாரத்தில் அவற்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சன்னதியும், வட கிழக்கில் தண்டபாணி சன்னதியும் உள்ளது.

இங்கு திருமால், இந்திரன், பிரம்மா, சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவ முனிவர், அர்ச்சுனன், சேரமான் முதலியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் சுயம்புலிங்க வடிவில் சதுர வடிவ ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

இங்கு பகவான் ஸ்ரீரமணர் வாழ்ந்த இல்லம், தற்போது அழகுடன், பொலிவுறக் கட்டப்பட்டிருக்கிறது. சிலிர்ப்பும், பழமையும் நிறைந்த அவரின் அறை அப்படியே உள்ளது. அவர் பிறந்து, வளர்ந்து, படித்த புனிதமான இடம் இன்று ஒரு யாத்திரைத் தலமாகவும் விளங்குகிறது.

திருச்சுழி இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் சுந்தரர் இங்குள்ள இறைவனை வழிபடும் அடியார்களின் திருவடிகளை வணங்குவோர் தாம் வாழ்கின்ற நாட்டுக்கு அரசர் போல் திருமகள் அருள் பெற்று வாழ்வார் என்று கூறுகிறார்.

இந்த இறைவனை வணங்குபவர்களுக்கு இன்பம் மட்டுமே. துன்பம் என்பதே இல்லை.

மலையான் மகள் மடமாது இடமாகத்தவள் மற்றுக்

கொலையானையின் உரி போர்த்த எம்பெருமான்

திருச்சுழியல் அலையார் சடை உடையான்

அடி தொழுவார்பழுமு உள்ளம் நிலையார் திகழ் புகழால்

நெடு வானத்து உயர்வாரே

என்று புகழ்கிறார் சுந்தரர்.

இறைவன் புகழைப் பாட முனைந்தால் வார்த்தைகள் கிடைப்பதில்லை என்றாலும், அடியார்களின் உள்ள உணர்வைப் புரிந்து கொண்டு உடனே ஓடி வருபவன் திருச்சுழி இறைவன். பக்தர்கள் அறியாமலேயே அவர்களது உள்ளத்தில் புகுந்து அருளாட்சி செய்கின்ற இறைவனை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்கிறார் சுந்தரர்.

அகண்ட, பிரபஞ்சமாக இருக்கிற ஈசனை, அவனின் அருளை அளக்க முடியாது. எவராலும் அளக்க முடியாதவன் என்கிறது திருவாசகம்.

வானம் நாடரும் அறி ஒணாத நீ

மறையில் ஈறும் முன்தொடர் ஒணாத நீ

ஏனை நாடரும் தெரி ஒணாத நீ

என்னை இனிதாய் ஆண்டு கொண்டவா

என்கிறது திருவாசகம்.

தேவர்களாலும் அறிய முடியாதவன். வேதங்களாலும் உணர முடியாதவன். ஆனால் அவனையே நம்பும் அடியார்களை இனிதாய் ஆட்கொள்வான். தன் அடியார்களுக்கு அருளவே, அவர்கள் தன்னைத் தேடி அலைந்து சிரமப்படக் கூடாது என்பதற்காகவே இறைவன் அவர்களை நாடி வந்து கோவில் கொள்கிறான்.

அதில் சிறப்பு வாய்ந்த தலமே திருச்சுழி.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published.