தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 11 | ஜி.ஏ.பிரபா

திருநனிபள்ளி ஸ்ரீ நற்றுணையப்பர்

சனே பரம்பொருள் எனும்போது எதற்காக இத்தனை மூர்த்திகள்?

சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என்று அனைத்தையும் செய்கிற பரம்பொருள் ஒன்றுதான்.அதுதான் அத்தனை மூர்த்திகளின் ஆதாரமாய் இருக்கிறது.

மனிதன் ஆசைகளின் கூடாரம். ஒன்றை அடைந்தபின் மற்றொன்றின் மேல் அவனது ஆசை பாயும். அப்படி அடைந்தால் அதை அருளிய தெய்வத்தின் மீது நம்பிக்கையும், சரணாகதி அடையும் குணமும் வந்து விடும். அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ற விதத்தில் அந்தந்த மூர்த்திகளை அவன் படைக்கிறான். அதற்காகவே பரமாத்மா பல்வேறு ஸ்வரூபங்களை எடுத்துக் கொள்கிறது.

இதுதான் பரமாத்மா, இதுதான் பரப்பிரும்மம் என்று அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்த ஒன்றுதான் அந்த ஒன்று. இதுவும் அதுவும் வேறில்லை. இதுவே அது என்ற பரம பக்தி ஏற்பட வேண்டும். நீர்த் திவலைகளில் நூற்றுக்கணக்கான சூரியன் தெரிந்தாலும், உண்மையில் ஒரு சூரியன்தான்.

“அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்

பிரம்மாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி”

– என்கிறது கந்த புராணம்.

ஒரு தெய்வத்தை உறுதியாகப் பற்றி அதுவே சகலமும் என்று இருந்தால் அதன் வடிவமான அனைத்து மூர்த்திகளும் நமக்கு சுற்றி வந்து அருள் செய்யும். அப்படி பரம்பொருளாய்த் திகழ்பவர் சிவபெருமான். சிவமே நமக்குச் சகலம் என்கிறது வேதங்கள். அவனை நினைத்து அவனாக இரு என்கிறது. அவன் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். என்றாலும் தன் அடியார்களின் நலன் பொருட்டு ஈசன் வெவ்வேறு தலங்களில் சிறப்பான அருளுடன் ஆட்சி செய்கிறார்.

நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க

வினை கெடுதல் ஆணை நமதே.

என்கிறார் திருஞான சம்பந்தர்.

அவரால் போற்றப்படும் திருத்தலம் திருநனிபள்ளி. வாழ்வில் முன்னேறவும், இழந்த நஷ்டங்களை ஈடு கட்டவும், உதவும் இறைவன் நற்றுணையப்பர்.

பெயருக்கு ஏற்றாற்போல் நமக்கு நற்றுணையாக விளங்குபவர் திருநனி பள்ளி ஈஸ்வரன். காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்று. இப்போது புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவனை நோக்கி அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பதிகங்கள் பாடியுள்ளனர்.

மயிலாடுதுறை – திருவாரூர் இடையில் பூம்புகார் அருகில் உள்ள திருநனிபள்ளி திருஞான சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த ஊர். சம்பந்தர் சீர்காழியில் அம்மையிடம் ஞானப்பால் அருந்தியதையும், திருகோலக்காவில் பொற்றாளம் பெற்றதையும் அறிந்த இவ்வூர் மக்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைக் கேட்ட குழந்தை சம்பந்தர் தன் திருவடி நோக இத்தலம் நோக்கி நடந்தார். அதைக் கண்டு அவரின் தந்தை குழந்தையைத் தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். கோவிலை நெருங்கும்போது இதுதான் நனிபள்ளி என்று தந்தை சொல்வதைக் கேட்டு,

“காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை

படர் தொடரி கள்ளி கவினிச் சூறைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த

சிவன்மேய சோலை நகர்தான் தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள

வாளை குதி கொள்ள வள்ளை துவள நாரைகள் ஆரல்வாரி வயல்

மேதிவைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

என்னும் பதிகத்தைப் பாடிச் சென்று இறைவனை வழிபட்டார்.

இப்பதிகம் வறண்டு, பாலையாகக் கிடந்த நனிபள்ளியை செழிக்கும் நெய்தல் நிலமாக மாற்றியது. எனவே இங்கு இறைவனை வழிபட்டால் விவசாயம் செய்பவர்கள் நல்ல விளைச்சல் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

விநாயகர், அகத்தியர் இருவருக்குமே தன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் நனிபள்ளி. கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி கோவிலின் உள்ளே தனியாக உள்ளது.

இங்கு பர்வத புத்ரி, மலையான்மடந்தை என்ற பெயருடன் இரண்டு அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமியின் வலது பக்கம் ஒரு அம்மன். மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் கல்யாண சுந்தரேஸ்வரர் அம்பிகையுடன் காட்சி அளிக்கிறார்.

மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. இவற்றுடன் நனிபள்ளி கோடி வட்டம் என்ற மண்டபம் அற்புதமான வடிவமைப்புடன் கோவிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 7 முதல் 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், கல்யாண சுந்தரேஸ்வரரையும், நற்றுணையப்பரையும் வணங்கினால் குழந்தைகளின் வாழ்வும், செல்வமும் செழிக்கும் என்கிறார்கள். சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றிப் பாடியுள்ளார்.

ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கரிய சோதியன்

சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும் ஓதியன்

உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன்

நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே.

என்று பாடுகிறார்.

சண்பகம், புன்னை தல விருட்சமாக இருக்கிறது. சொர்ண தீர்த்தம் தல தீர்த்தம். நம் மனதில் தோன்றி கவலை அடையச் செய்யும் பயத்திலிருந்து நம்மை நீக்கி, நல்வழிக்குத் துணையாக இருப்பதால் இறைவன் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார்.

முற்றுணையாயினானை மூவர்க்கும் முதல்வன் தன்னைச்

சொற்றுணை யாயினானைச் சோதியை ஆதரித்து உற்றுணர்ந்து உருகி

யூறி உள்கசிவுடைய வர்க்கு நற்றுணையாவார் போலு நனிபள்ளியடிகளாரே

என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். சோழர் கல்வெட்டில் ஜெயங் கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப் பிரமதேயமாகிய நனிபள்ளி என்று குறிப்பிடப் படுகிறது.

சில வரலாற்றுக் குறிப்புகள் ராஜேந்திர சோழன் கங்கை கொண்டான் என்று அழைக்கப்படுவது போல், கடாரம் வென்றதின் அடையாளமாக கடாரம் கொண்டான் என்று அழைக்கப் பட்டான். கங்கை கொண்ட சோழீச்சரம் கம்பீரமாக எழுந்து நிற்பதைப் போல் கடாரம் வெற்றி கொண்டதன் நினைவாக நனிபள்ளி எழுந்தது என்று சிலர் கூறுகிறார்கள். புஞ்சை என்ற நனிபள்ளி,அந்த வட்டாரத்தில் கிடாரம் கொண்டான் என்றுதான் ஆதி காலத்தில் அழைக்கப் பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இங்குள்ள சிலைகள் அற்புதமான கலையழகுடன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும் சமணராய் இருந்து சைவ சமயத்துக்கு மாறிய திருநாவுக்கரசரை, பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் நஞ்சு கொடுத்துக் கொல்ல ஏற்பாடு செய்கிறான். அதுவும் நற்றுணையப்பர் அருளால் அமுதமாக மாறியது.

இதையே “நஞ்சு அமுதாக்கும் நனிபள்ளி அடிகளாரே”- என்கிறார். இங்குள்ள கல்வெட்டுகளும் இராஜேந்திரன் வீர வெற்றியைக் குறிக்கிறது. அவன் காலத்தில் ஈசனுக்கு திருவிழா நடத்த இறையிலி ஒப்பந்தங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன.

கோயில் முன்பகுதி, கோபுரங்கள் எல்லாம் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்றும் சில கல்வெட்டுகள் கூறுகிறது. இங்கு ஈசனுக்கு உரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. பராந்தக சோழனால் இக்கோயில் உருவாக்கப் பட்டது.

மூலஸ்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட சிறப்புடையது இக்கோயில். எனவே யானை நுழையும் அளவுக்கு கருவறை அகலமாக உள்ளது. காவிரி நதி இங்கு கிழக்கு நோக்கிப், பாய்ந்து, பின் மேற்கு முகமாகத் திரும்பிச் செல்கிறது. இது பஸ்வமாங்கனி என்று கூறப்படுகிறது.

அகத்தியரின் கமண்டலத்திலிருந்த காவிரி நீரை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்குத் தோஷம் ஏற்பட்டது. எனவே அவர் இங்கு வந்து புனித தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே பொன்செய் என்றபெயர் வழங்கப்பட்டு மருவி புஞ்சை என மருவியது.

பெரும்பாலும் சிவன் கோவில்களில் துர்க்கை, மகிஷனின் மீது நின்ற கோலத்தில்தான் காட்சி அருளுவாள். ஆனால் இங்கு நின்ற கோலத்தில் சும்பன், நிசும்பனை வதம் செய்த கோலத்தில் மான், மற்றும் சிங்கத்துடன் காட்சி அருளுகிறாள். இதன் சிற்ப வேலைப்பாடு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. விளைச்சல் சரியில்லாத விவசாயிகள் இங்கு வந்து இறைவனை வேண்டி கோரிக்கை வைத்துச் செல்கிறார்கள். அடுத்த வருஷம் அவர்களின் நிலம் நன்றாக விளைச்சல் தந்ததும், மீண்டும் இங்கு வந்து ஈசனுக்கும், அம்பிகைக்கும், அபிஷேக ஆராதனைகள் செய்து, வஸ்திரம் சாற்றி வணங்குகிறார்கள்.

நனிபள்ளி ஆலயத்துக்கு ராஜ கோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே. கருவறை மட்டும் நல்ல வேலைப்பாடுகள் அமைந்து காணப்படுகிறது. கல்யாண சுந்தரரை வணங்கினால் திருமணம் நடைபெறும். விவசாயிகள் வாழ்வில் மட்டுமல்லாமல் தன்னை நம்பும் அடியவர்கள் அனைவரின் வாழ்வில் வெளிச்சம் அளிக்கிறார் ஈசன்.

திருஞான சம்பந்தர் தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து பாடிய காரிகள், கூகைகள் என்ற பதிகத்தைப் பாடினால் வினைகள் அகலும் என்று ஆணையிட்டு உரைக்கிறார். பாலையாகக் கிடந்த நனிபள்ளி தலத்தை பசுமை தழைக்கும் இடமாக மாற்றிய ஈசன், அவரை வணங்குவோரின் வாழ்வில் உள்ள இடர்களையும் மாற்றி, வளமும், நலமும் தருவார்.

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். எனவே இவரின் சக்தி அளவற்றதாக உள்ளது. இங்கு வந்து பக்தர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்கிறார் நற்றுணையப்பர்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

1 Comment

  • திருநனிப்பள்ளி தலத்தின் சிறப்புகளை அறிந்து கொண்டேன்! தலத்திற்கு சென்று வழிபடும் ஆவலைத் தூண்டியது கட்டுரை! வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...