கோமேதகக் கோட்டை | 13 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 13 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

‘மந்திரப் பாயைக் குருதட்சணையாகத் தரச் சம்மதமா..?’ என்று சூர்ப்பனகா கேட்டதும் வித்யாதரன் “ஹாஹா’ வென பெரிதாய் சிரித்தான்.

“கொக்கிற்கு மீனொன்றே மதி என்றொரு பழமொழி ஒன்று உண்டு..! ஆற்றில் ஒற்றைக் காலில் தவமிருந்து மீன் வருகிறதா என்று வேறு எதையும் சிந்திக்காமல் மீன் மீதே கவனம் வைத்திருக்குமாம் கொக்கு..! அதே போல் நீயும் விடாமல் மந்திரப் பாயின் மீதே கவனம் செலுத்திவருகிறாய்..! அதை நினைத்து சிரித்தேன்.”

”நீ மட்டும் என்னவாம்..? ராட்சதனைக் கொன்று இளவரசியை மீட்பது என்ற ஒன்றிலேயே நீ கவனமாக இருக்கிறாய் அல்லவா?”

”அது சரிதான்…! ”

“சரி போகட்டும், விடு..! உன் மந்திரப்பாயை குருதட்சணையாகத் தருவாயா?”

”மந்திரப்பாயை குருதட்சணையாக கொடுத்துவிடலாம்..! ஆனால் இந்த ராட்சதனை வென்றபிறகுதான் தருவேன்.”

”கொஞ்சம் கூட சுயநலம் இல்லாதவனாக இருக்கிறாய் வித்யாதரா..!”

”அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! என் தந்தையை அரசனின் கோபத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற சுயநலம்தான் இளவரசியைக் காப்பாற்ற நான் ஒத்துக் கொண்ட காரணம். சுயநலம் கலந்த பொதுநலவாதிதான் நான்”

”சரி, போகட்டும் விடு! சுயநலம் இல்லாத மனிதர்கள் இப்போது ஏது..? தன் வீடு, தன்மனைவி, தன் மக்கள் என்று தம்மைப்பற்றியே சதா சிந்திப்பவர்கள் தான் இப்போது அதிகம் வாழ்கின்றார்கள். ஆனால் நீயோ அரசனின் மகளை அரக்கனிடமிருந்து காப்பாற்றி ஓர் அரசாங்கத்தையே காப்பாற்ற நினைக்கிறாய்! உன் பொதுநலம் தழைக்கட்டும்..!”

”பாராட்டுரைகள் போதும் சூர்ப்பனகா..! எப்போது மந்திரக் கோலை இயக்கும் மந்திரத்தைக் கற்றுத்தரப் போகிறாய்..?”

”அவசரப்படாதே வித்யாதரா..! இந்த மந்திரக்கோலை இயக்கும் வித்தையை அமாவாசை அல்லது பவுர்ணமியில் தான் உனக்குக் கற்பிக்க முடியும். அமாவாசைக்கு இன்னும் மூன்று தினங்கள் உள்ளன. அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நதிக்கரைக்கு வா..! மார்பளவு நீரில் நின்று கொண்டு நான் கூறும் மந்திரத்தை 1008 முறை நீ ஜெபிக்க வேண்டும். அதன் பின்னர் உன் குல தெய்வத்தை நினைத்து அந்த மந்திரத்தை நீ பிரயோகிக்கும் போது மந்திரக் கோல் செயல்பட ஆரம்பித்துவிடும்.”

”நன்றி சூர்ப்பனகா..! நான் அமாவாசை வரை காத்திருக்கிறேன்! இப்போது அரசவைக்குச் சென்று வருகிறேன்.”

வித்யாதரன் அரசவைக்குச் சென்ற போது அரசர் விஜயேந்திரன் மிகவும் சோர்வுற்று கவலையாகத் தென்பட்டார். அவரை வணங்கிய வித்யாதரன் “அரசே தாங்கள் கவலைப்படுவதற்கு என்ன காரணம்..?” என்று கேட்டான்.

”வித்யாதரா..! அரக்கன் என் மகளை கடத்திச் சென்று ஒரு வாரம் கடந்துவிட்டது. இதுவரை மூன்று முறை அந்த ராட்சதனுக்கு அவன் கேட்ட உணவுகளை வழங்கியாகிவிட்டது. இந்த மூன்று முறை உணவு வழங்கவே பத்து கிராமங்களில் இருந்த கால்நடைகள் உணவுப்பயிர்கள் தீர்ந்துவிட்டன. நம்மிடம் இருக்கும் கடல்பரப்பும் குறைவு. படகு நிறைய மீன்களை இன்னும் எத்தனை நாட்கள் தர முடியும். பரதவர்கள் மிகவும் பரிதவிப்போடு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்போது நிலைகுலைந்துள்ள பத்து கிராமங்களை சீர்படுத்தவே பல மாதங்கள் ஆகும். அதுவரை அவர்களிடம் வரி வசூலிக்க இயலாது. இப்படி ஒவ்வொரு கிராமங்களாக சீர் குலையும்போது அரசாங்கம் எப்படிச் செயல்படும்? பகை நாட்டு மன்னர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் படையெடுத்துவந்தால் நாட்டை எப்படி காப்பாற்றுவேன்! இப்படி பல சிந்தனைகள் என் மனதை பிடித்து அரித்துவருகின்றன..!” என்று மன்னர் சொல்லவும்…

“கவலை வேண்டாம் மன்னா! அமாவாசை கழிந்த பின்னர் இரண்டாவது நாளில் நான் கோமேதகக் கோட்டைக்கு பயணிக்கப் போகிறேன்! அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் போதும் ராட்சதனை கொன்று உங்கள் மகளை மீட்டுவிடுவேன். அப்புறம் எந்த அபாயமும் தங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எப்போதும் இருக்காது! கலங்காதீர்கள் மன்னா!” என்றான் வித்யாதரன்.

“கோமேதகக் கோட்டைக்குச் செல்வதற்கான பயணதிட்டத்தை வகுத்துவிட்டாயா வித்யாதரா..?”

“நம்முடைய கோட்டையில் இருந்து முன்னூறு காத தூரம் நிலப்பரப்பில் பயணித்தோமானால் அங்கே ஓர் சமுத்திரம் இருக்கின்றது. அந்தச் சமுத்திரத்தின் நடு மையத்தில் இருக்கும் தீவில் அமைந்திருக்கிறது கோமேதகக் கோட்டை. நானும் என்னுடன் என் நண்பர்களும் மந்திரப்பாயில் அமர்ந்து பயணித்து சமுத்திரத்தைக் கடந்து கோமேதக்கோட்டையை நெருங்கிவிடுவோம். மந்திரப் பாயில் கடப்பதால் இன்று புறப்பட்டால் கூட இரண்டே தினங்களில் நாங்கள் கோமேதகக் கோட்டையை அடைந்துவிடுவோம். ஆனால் கோமேதகக் கோட்டைக்குள் நாங்கள் நுழையும் முன் அதை நோட்டம் விட ஓர் பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது.”

“அதற்கு என்ன செய்ய போகிறாய் வித்யாதரா..?”

“அதைத்தான் யோசித்துக் கொண்டுள்ளேன் மன்னா! கடல்பரப்பில் அந்த கோமேதகக் கோட்டையை கண்காணிக்கும் வகையில் ஓர் கப்பல் இருக்குமானால் நம் திட்டம் எளிதாக நிறைவேறும். கீழைக் கடற்பரப்பு மிகவும் பெரியது. ஆழமானது எனவே மிதவைகளில் பயணிப்பது ஆபத்தானது. ஒரு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல் நமக்குத்தேவை.”

“வித்யாதரா நமக்கு கடற்பரப்பு எல்லை என்பதே இல்லை..! நம் நாட்டின் எல்லைகள் நிலப்பரப்பிலேயே முடிந்துவிடுகின்றன. இப்போது அரக்கனுக்குத் தரும் மீன் உணவுகள் கூட பரதவ மக்களிடம் இருந்து வாங்கித்தான் தந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் கப்பற்படை கிடையாது என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே..!”

“ஆம் மன்னா! இவை அனைத்தும் எனக்கும் தெரிந்த விஷயங்கள் தான்! ஆனால் கடல்நடுவே கோட்டையில் வசிக்கும் ராட்சதனைக் கொல்ல வேண்டுமானால் நமக்கு கட்டாயம் ஒரு போர்க்கப்பல் தேவை.”

“அதற்கு என்ன செய்யலாம்? உடனே போர்கப்பல் தயாரிப்பது ஆகக் கூடிய காரியமா..? அதற்குப் பலமாதங்கள் கால அவகாசம் தேவைப்படும். கப்பல் இல்லாமல் இந்த ராட்சதனைக் கொல்ல ஏதாவது வழி கண்டுபிடி..!”

“கடல் நடுவே இருக்கும் கோட்டைக்கு என்னிடம் இருக்கும் மந்திரப்பாய் மூலம் பறந்து சென்றுவிடுவேன். ஆனால்….”

“என்ன ஆனால்..?”

“மந்திரப்பாயில் என்னோடு சில நண்பர்களும் வர இருக்கிறார்கள். அனைவரும் ஒட்டுமொத்தமாக கோட்டைக்குள் நுழைய முடியாது. சந்தர்ப்பம் பார்த்து ஒவ்வொருவராக நுழைய வேண்டும். மற்றவர்கள் கடல்பரப்பில் தங்க வேண்டும். அதற்குக் கட்டாயம் ஒரு கப்பல் தேவை.”

“அப்படியானால் உன்னால் இளவரசியை மீட்டுவர முடியாது என்று சொல்லுகிறாயா..?”

“அப்படிச் சொல்லவில்லை மன்னா! இளவரசியை மீட்டுவர ஒரு கப்பலும் வேண்டும் என்று சொல்கிறேன். இதை இன்று சொல்லவில்லை! அன்று கிளி வடிவில் இருந்த போதும் சொன்னேன்.”

“சரி கப்பலுக்கு என்ன செய்வது..?”

“நமது அண்டை நாடான ஸ்ரீ விஜய நாட்டை அணுகினால் என்ன மன்னா..?”

“ஸ்ரீ விஜயம் நம் அண்டை நாடானாலும் நம் பகை நாடாயிற்றே வித்யாதரா..!”

“அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. இப்போது நமக்கு ஸ்ரீ விஜயத்தின் உதவித் தேவைப்படுகிறது நட்பை நாடினால் என்ன..?”

“என்ன இருந்தாலும் ஸ்ரீவிஜயம் ஒரு காலத்தில் எங்கள் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு கப்பம் செலுத்திய நாடு. என் தந்தையார் ஆட்சிக் காலத்தில் சுயராஜ்யம் கேட்டுக் கலகம் செய்து பிரிந்து போன நாடு அதனிடம் போய் உதவி கேட்டு கையேந்தி நிற்பது என் மனதிற்கு உகந்ததாக இல்லை.”

“நீங்கள் உதவி கேட்டு போக வேண்டாம். அவர்கள் உதவி கேட்டு வந்தால் உதவி செய்வீர்களா..?”

“அவர்களா..? அவர்கள் நம்மிடம் உதவி கேட்டு வருவார்களா..?”

“வருவார்களா இல்லை, வந்துவிட்டார்கள்..! ஸ்ரீவிஜயத்தின் பிரதிநிதியாக தூதுவர் ஒருவர் நேற்று என் இல்லம் வந்தார்.”

“வித்யாதரா என்ன நடக்கிறது இங்கே..? ஆட்சி செய்வது நானா இல்லை நீயா..?”

“நீங்கள்தான் மன்னா..!”

“அப்படியானால் ஸ்ரீ விஜயத்தின் தூதுவர் என்னை அல்லவா வந்து சந்திக்க வேண்டும்..? உன்னை எதற்காகச் சந்தித்தார்..?”

“அவர் ஸ்ரீ விஜயத்தின் தூதுவர்தான்..! ஆனால் என்னை சந்திக்க வந்தது நட்பு அடிப்படையில்..!”

“புரியும்படி சொல் வித்யாதரா.!”

“என்னுடைய ஆசார்யரும் தந்தையுமான துரோணாவிடம் போர்க்கலை பயின்றவர்தான் ஸ்ரீ விஜயத்தின் தூதுவரான ரண தீரன். அவரும் நானும் ஒன்றாக படித்த நண்பர்கள். நட்பு அடிப்படையில் என்னை சந்தித்தார். அவர் இங்கே வந்திருப்பது நமது நாட்டின் நட்பு வேண்டி. நான் தங்களின் ஆசாரியரின் மகன் என்பதால் நான் சிபாரிசு செய்தால் அவர் வந்த காரியம் எளிதாக முடியும் என்று என்னை சந்திக்க வந்திருந்தார்.”

“சரி, அவருக்கு என்ன உதவி தேவைப்படுகிறது..? அவரை வரச்சொல்..!”

வித்யாதரன் கண் அசைக்க, இரு வீரர்கள் ரணதீரனை அழைத்து வந்தனர்.

“மன்னர் விஜயேந்திரருக்கு ஸ்ரீ விஜயத்தின் தூதுவன் ரணதீரனின் வந்தனங்கள்.” என்று தலை வணங்கி வணக்கம் தெரிவித்தார் ரணதீரன்.

“ஆகட்டும் தூதுவரே! நீர் வந்த காரியம் என்ன..?” மன்னர் கேட்டதும். ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார்.

தே சமயம் கோமேதகக் கோட்டையில் ராட்சதன் திடுக்கிட்டு விழித்து எழுந்தான். அப்படி அவன் திடுக்கிட்டு எழுந்தமைக்கு அவன் கண்ட சொப்பனம்தான் காரணம்.

கடல்பரப்பில் நீந்திக் கொண்டிருக்கிறான் ராட்சதன். பெரிய பெரிய மீன்கள் சுறாக்களை எல்லாம் தன் நீண்ட கைகளால் அணை கட்டி தடுத்து நிறுத்தி பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கிறான். அப்போதுதான் ஒரு திமிங்கலம் அவனை நோக்கி வருகிறது. அது பார்ப்பதற்கு சிறியதாக தென்பட்டாலும் கிட்டே நெருங்க நெருங்க அது பெரிய திமிங்கலமாக வாயைத் திறந்து கொண்டே வருகிறது. ராட்சதன் தன் பெரிய கைகளால் அதைத் தடுக்க முயல்கிறான். ஆனால் அந்த கைகளை தன் துடுப்பு போன்ற வாலால் தட்டி விட்டு ராட்சதனை அப்படி விழுங்கி விடுகிறது திமிங்கலம். ராட்சதன் அதன் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வர முயற்சிக்கிறான். ஆனால் முடியவில்லை. திமிங்கலத்தின் பற்கள் அவனை மெல்லுகின்றன. அவனது உடலெல்லாம் வலி! ரத்தம் கொட்டுகிறது! ”ஆ” என கத்தியபடி விழித்தெழுந்த ராட்சதன் உடல் முழுதும் வியர்த்துக் கொட்டியது.

ராட்சதனின் அலறலைக் கேட்டு அவனது அடிப்பொடிகளான சில அரக்கர்கள் அவன் முன் ஓடிவந்து “பிரபோ..! தங்களுக்கு ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது..? ஏன் அலறினீர்கள்..?” என்று பவ்யமாகக் கேட்டார்கள்.

“அடேய் முட்டாள்களே..! துர்ச் சொப்பனமொன்று கண்டேன்..! என்னை ஒரு பெரிய திமிங்கலம் விழுங்கி விடுவது போன்ற கனவு. அதுதான் வியர்த்துக் கொட்டுகிறது.”

“இந்த உலகை மட்டுமல்ல..! மூன்று உலகங்களையும் அலறவிடக் கூடியவர் நீங்கள்..! அப்படி இருக்க ஒரு சாதாரணக் கனவிற்கு நீங்கள் பயப்படலாமா..? இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாரும் இன்னும் பிறக்கவில்லை..! இந்த கீழைக் கடலில் நீங்கள் சொல்லிய அளவிற்கு பெரிய திமிங்கலங்கள் ஏதும் இல்லை..! உங்களை யாராலும் எதுவும் செய்து விட முடியாது.” என்று சமாதானம் கூறினர் அரக்கர்கள்.

“அரக்கர்களே! நீங்கள் சொல்வது சரிதான்..! இதுவரை என்னை வெல்ல ஒருவன் பிறக்கவில்லை..! ஆனால் இன்று நான் கண்ட கனவு எனக்கு ஓர் எச்சரிக்கை என என்மனம் சொல்லுகிறது.”

“உங்களுக்கு எச்சரிக்கை விட யார் இருக்கிறார்கள் பிரபு..?” என்றான் ஓர் அரக்கன்.

அப்போது அங்கே ஓர் ஆந்தை பறந்து வந்து தூணின் மீது அமர்ந்து சொல்லியது. “ராட்சதனே, வீண் ம்மதை வேண்டாம். உன்னை வெல்லக் கூடியவன் பிறந்து வளர்ந்து காத்துக் கொண்டிருக்கிறான். அவன் கூடிய சீக்கிரம் உன்னை கொல்ல இங்கே வரப் போகிறான்” என்றது.

“கண் தெரியாப் பறவையே..! நீ உண்மையைத்தான் சொல்லுகிறாயா..?” என்று ஆத்திரம் கொப்பளிக்கக் கேட்டான் ராட்சதன்.

“எனக்கு பகல் போதில்தான் கண் தெரியாது! இராப்பொழுதில் என்னை வெல்லுவது மற்ற பறவைகளால் முடியாத காரியம். இராப்பொழுதில் பல தேசங்களுக்கும் சுற்றித் திரிந்து வருபவன் நான். பகல் முழுதும் வெளிப்படாத ரகசியங்கள் இரவில்தான் வெளிச்சத்திற்கு வருகின்றன. அப்படி ஓர் ரகசியம் தான் நான் இப்போது உனக்கு சொன்னது.”

“ஆந்தையாரே..! என்னை வெல்பவனும் இருக்கிறானா..? யார் அவன்..? எங்கே இருக்கிறான்..?”

“அவன் பெயர் வித்யாதரன்” என்றது ஆந்தை.

“என்ன சொன்னாய்..? என்ன சொன்னாய்..?”

“அவன் பெயர் வித்யாதரன்..! இன்னும் இரண்டு தினங்களில் அவன் நீ அடைத்து வைத்திருக்கும் இளவரசியைத் தேடி இங்கே வரப் போகிறான்..!”

“இளவரசியை மீட்க வருகிறானா..? வரட்டும்..! எப்படி மீட்கிறான் என்று பார்க்கிறேன்.” என்று கொக்கரித்தான் ராட்சதன்.

வித்யாதரன் வந்தானா..?

–அடுத்தவாரம் பார்ப்போம்..!

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...