சினிமா மினி மீல்ஸ்
நான்கு நாயகிகள் நடிக்கும் ‘வார்டு 126’
செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக், இன்வெஸ்டி கேடிவ், திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உரு வாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித் துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் கூறும்போது, “ஒவ் வொரு துறையிலும் இருண்டப் பக்கங்கள் இருக்கும். அதே போல் நான் ஐ.டி. துறையில் பணியாற்றியபோது என் கண் முன் நடந்த இருண்டப் பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். வார்டு-126 என்ற தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும். இந்தக் கதையில் நடித்துள்ள நாயகிகள் அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளது” என்றார்.
காமராஜர் படத்துக்கு உதவ முன்வந்த சீனு ராமசாமி
காமராஜரின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டுவந்த திரைப்படம்தான் ‘பெருந்தலைவர் காமராஜ்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘பெருந்தலைவர் காமராஜ்-2’ தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தினை ரமணா கம்யூனி கேஷன் சார்பில் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.
இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது “நான் ஆரம்ப காலத்தில் பள்ளிகள் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது ஒரு பொட்டல்காட்டு பள்ளிக்கூடம் பற்றியும் அதைக் கட்டச் சொன்னது யார் என்பது பற்றியும் எடுக்க ஆசைப்பட்டேன். எத்தனை முயன்றும் முடியவில்லை. அந்தப் பொட்டல்காட்டில் பள்ளிக்கூடம் கட்டியவர் கர்மவீரர் காமராஜ். ஒரு படம் எடுத்தால் அதன் ஊழல் வெளிவந்துவிடும் என எடுக்க விடவில்லை. ஆனால் இந்த நாட்டில் ஒரு ஆவணப்படமே எடுக்க முடியாதபோது உண்மையாய் வாழ்ந்து இத்தனை சாதனை படைக்க காமராஜரால் எப்படி முடிந்திருக்கும், எப்படி இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என ஆச்சர்யமாக இருக்கிறது..
உங்களுக்கு இந்தப் படம் நன்றாக எடுக்கத் தொழில்நுட்பரீதியில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்கள். கேமரா முதல் எல்லாம் நான் செய்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது காமராஜ் போல் இந்தப் படத்தையும் சிறப்பாக எடுக்க வேண்டும்” என்றார்.
சூர்யாவுக்கு ஜோடியாகும் பஞ்சாப் நடிகை மஹிரா ஷர்மா
நடிகர் சூர்யா – இயக்குநர் பாலா இருவரும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ‘வணக்கான்’ படத்தின் பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை மஹிரா ஷர்மா நடிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-13ல் போட்டியாளராகக் கலந்து கொண்டு அதன் மூலமாகப் பிரபலமானவர்.
‘ஜோதி’ பட விழாவில் சங்கர் கணேஷ் நெகிழ்ச்சி
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜோதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோரம் மாலில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசும்போது, “ஜோதி படத்திற்குச் சில மேஜிக் நடந்திருக்குன்னுதான் சொல்லணும். ஆசியாவி லேயே பெரியது வாகினி ஸ்டூடியோ. அந்த ஸ்டூடியோ உள்ளே நாகிரெட்டி வீடு இருந்த இடத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது ஜோதி படத்தோட வெற்றியை அடையாளப்படுத்துது. இதுவரை இந்த மாதிரி விழா வேறு எங்கும் நடந்திருக்க முடியாது. இதில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர் கள் பல நடிகர்களை உருவாகிய ஜாம்பவான்கள். அவர்கள் ஆசிர்வாதமும் கிடைத்திருக்கு. அடுத்து ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், பொதுவாக ஜேசு தாஸ் பைட்ஸ் வீடியோ கொடுக்க மாட்டார். ஆனால் இந்தப் படத்திற்கு அவர் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது வியப்பா இருக்கு. இதனாலேயே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று கூறினார்.
பெண் புரூஸ்லீயாக நடித்திருக்கும் பூஜா பலேகர்
இந்திய மொழிகளில் தற்காப்புக் கலை பற்றிய திரைப்படங்கள் வருவது குறைவு. அதுவும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வருவதேயில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘லடுக்கி’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ‘பொண்ணு’ என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இது பற்றி ராம் கோபால் வர்மா பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான, மனதிற்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லீ என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநரான பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது.
இறுதியாக இந்தப் படத்தை எடுக்க நினைத்தபோது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்குத் தோன்றியது. பலரைத் தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டு சந்தித்தேன். அவரின் திறமைகளைப் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.
கோவிட் காரணங்களால் தாமதமாகிவிட்டது. ஒரே நேரத்தில் அனைத்து மொழி களிலும் வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டோம். கடந்த காலங்களில் ஹைதராபாத்தில் புரூஸ் லீயின் ‘என்டர் தி டிராகன்’ திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் ‘லடுக்கி’ அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது” என்று கூறினார் ராம் கோபால் வர்மா.
திரைக்கதைதான் படத்திற்கு முக்கியம்
மணிபாரதி இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையில் செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்த ‘பேட்டரி’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வசந்தபாலன், “தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதுதான் சினிமாவின் விதி. மீண்டும் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்ததில் இருந்தே அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. அவருக்குத் தன்னைப் பற்றிய சரியான புரிதல்தான் இதற்குக் காரணம். ஒரு படத்திற்குத் திரைக்கதைதான் முக்கியம். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘அருமை, வேற லெவல்’ என்ற வார்தைகள் 2 கே கிட்ஸ்களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தப் படம் அவர்களின் பிடித்தமான படமாக இருக்கும்” என்றார்.
ரேவதி இயக்கத்தில் நடிக்கும் கஜோல்
இந்தி நடிகை கஜோல் மற்றும் மனிஷா கொய்ராலா, பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘குப்ட்’ என்ற படத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜீவ் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். கஜோல் நடிகை ரேவதி இயக்கி இருக்கும் ‘சலாம் வெங்கி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகை கஜோல் ஓ.டி.டி. தளங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். “முன்பு தியேட்டர்கள் மட்டும்தான் மக்களின் பொழுதுபோக்கிற்கான ஒரே இடமாக இருந்தது. இதனால் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றன. ஆனால் இப்போது ஓ.டி.டி. தளங்கள் நிறைய வந்துவிட்டன. இதனால் ஒரு படம் வெற்றி பெற நிறைய உழைப்பைக் கொட்ட வேண்டியிருக் கிறது. இதில் நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது என்பது உண்மை” என்றார் கஜோல்.
மனம் திறந்த நடிகை
நடிகை நீது சந்திரா தமிழில் ‘ஆதி பகவன்’ உள்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவருக்குத் தற்போது படங்கள் இல்லாத சூழல். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், “எனக்குத் தற்போது கைவசம் படங்கள் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்கு மாதம் ரூ.25 லட்சம் தருவதாகவும், தான் சம்பளம் வாங்கும் மனைவியாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இன்னும் சிலர் ஆடிஷன் செய்யும்போது வேண்டுமென்றே தன்னை நிராகரித்ததாகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
பூனை வளர்க்கும் ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் ‘கரண் ஜோகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு பூனையை தத்தெடுத்திருக்கிறார். ஸ்னோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் பூனையைத் தன் இணையப் பக்கத்தில்அறிமுகப்படுத்தியிருக்கிறார். ராஷ்மிகாவிடம் ஏற்கெனவே ஆரா என்ற நாய் இருக்கிறது. இந்த ஆராவுடன் ஸ்னோ எப்படி நட்பாகப் போகிறது என்பதுதான் ராஷ்மிகாவின் தற்போதைய கவலை.