அவளும் நானும்
உங்களிடம் ஒரு கேள்வி
கேட்கலாமா? என
என்னிடம் கேட்டாள்.
அவள்.
அதான் கேட்டுவிட்டாயே!
கேள் என்றேன்.
அவளிடம் நான்.
நள்ளிரவில் நங்கையொருத்தி
நடக்கும் நாளே சுதந்திரம் என்றாரே! காந்தி.
வந்துவிட்டதா சுதந்திரம்? என்றாள்.
இப்பொழுது
காந்திகள் இங்கில்லை.
ஆதலால்
நண்பகலிலும் சுதந்திரம் வாய்க்கவில்லை
பெண்ணுக்கு மட்டுமல்ல,
ஆணுக்கும் என்றேன்.
உங்களுக்கென்ன?
ஆண் பிள்ளை.
எங்களுக்குத்தான்
ஆடையில் தொடங்கி
ஆளுமையில் வரை
அடக்குமுறைக்குள் அடங்கி நிற்கிறோம்
என்றாள்.
ஆடைக் குறைப்புதான்
உங்கள் சுதந்திரமா?
விளங்கவில்லை.
விளக்கமாய்க் கேட்டேன்.
பிடித்த ஆடை
உடுத்த முடியவில்லை.
ஆடவர் கண்களுக்கு
சிறையிட முடியாமல்,
நாங்களல்லவா சிறைப்படுகிறோம்
என்றாள்.
உடலை மறைக்கவே ஆடை.
உடலைக் காட்டவே ஆடையென்றால்- அது
உறுத்தலைத்தானே கொடுக்கும் என்றேன்.
உங்கள் வீட்டுப் பெண்களை
வேறு பார்வை கொண்டு பார்ப்பீர்களா?
புத்திசாலியாய் கேட்டாள்.
எங்கள் வீட்டுப் பெண் என்ற
எண்ணம் கொண்டதால்தான்,
உன்னோடும் இத்தனை தூரம் கதைக்கிறேன் என
இயல்பாக இதழ் விரித்தேன்.
ஆண்கள் தவறு செய்யலாம்.
ஆனால்
பெண்கள் செய்யக்கூடாதா?
பெருத்த குரலில் கேள்வி எழுப்பினாள்.
தவறு செய்வதுதான்
பெண் சுதந்திரமா?
மெல்லிதாகப் பதிலுரைத்தேன்.
கணவனுக்கு அடங்கி நடப்பவள்தான் மனைவியா?
வார்த்தையால் மல்லுக்கு நின்றாள்.
மனைவியிடம் அடங்கிப்போவதை
அடிமைத்தனமாக எந்த ஆணும் கருதுவதில்லை என்றேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகக் காரணம்?
அறியும் நோக்கோடு ஆவலாய் இதழ் விரித்தாள்.
பெண்மை உணரா ஆண்களும்,
தன்னை உணரா பெண்களும் என
இதயம் விரித்தேன்.
கற்பு என்பது
பெண்களுக்கு மட்டும்தானா?
அது
ஆண்களுக்கில்லையா?
வார்த்தையில் அனல் கொட்டினாள்.
கற்பு என்பது உடலில் மட்டுமில்லை – அது
உள்ளத்திலும் உள்ளது என்று உணர்ந்த
எவரும் இப்படி உரைப்பதில்லை என
அனலுக்குப் பதிலால் நீருற்றினேன்.
அடுப்பங்கரைக்கு மட்டுமா?
பெண்கள் என ஆர்ப்பரித்தாள்.
அத்தனை நட்சத்திர உணவு விடுதிகளிலும்
ஆண்களே!
அடுப்புப் பற்றவைக்கிறார்கள் என்றதும் அமைதியானாள்.
பெண்கள் முன்னேறினாள்,
அவர்களின் ஒழுக்கத்தின் மீது கல்லெறிந்து
முடக்கப் பார்க்கின்றீர்களா? இல்லையா? என்றாள்.
கல்லெறியும் கூட்டத்தில் கண்ணுக்கெட்டியவரை
காரிகைகளையே
நான் அதிகம் பார்க்கிறேன் என்றேன்.
ஆணோடு நட்பு
குற்றமா? என்றாள்..
நட்பை உணரா ஆணோடு நட்பு குற்றமே! என்றேன்.
பெண்மைக்கு
இலக்கணம் எது என்றாள்.
பெண்மைதான் என்றேன்.
அப்போ!
ஆண்மைக்கு இலக்கணம் எனக் கேட்கும்பொழுதே!
பெண்மையை மதித்தல் எனச்
சொல்லி முடித்தேன்.
நீங்கள் மதிக்கிறீர்களா?
என்றாள்.
மதிப்பவன் என்பதால்தான்
மணிக்கணக்கில் கேள்வி கேட்கிறாய் நீ! என்றேன்.
இதயம் விரிய
இதழ்களால் புன்னகைத்து
கண்களால் தழுவிக்கொண்டோம்
அவளும் நானும்…
- சிகரம் சதிஷ்குமார், புதுக்கோட்டை, [email protected]