நம்ம முத்திரைய பதிக்கனும்… | இயக்குனர் மணிபாரதி

 நம்ம முத்திரைய பதிக்கனும்… | இயக்குனர் மணிபாரதி

அன்பே அன்பே கவித்துவமான தலைப்பு. குடும்ப கதை. பேட்டரி தலைப்பே கிரைம் சப்ஜக்ட் என உறுதி செய்கிறது. ஏனிந்த மாற்றம்?

ஒரு டைரக்டர்ன்னா எல்லா விதமான சப்ஜக்ட்டையும் ஹேண்டில் பண்ணனும்.. மணிரத்னம் சார் மௌனராகம், நாயகன், அஞ்சலின்னு வேற வேற சப்ஜக்ட்டுகள தொட்டாரு.. இப்ப பொன்னியின் செல்வன்னு சரித்திர கதைய தொட்டுருக்காரு.. எதை தொடுறமோ அதுல முழுமையா செயல் படனும், அவ்வளவுதான்.. அன்னிக்கு காலக் கட்டத்துல அன்பே அன்பே தேவைப்பட்டுது.. ஆனா, இன்னிக்கு சீரியல்கள் குடும்ப கதைகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. இன்னிக்கும் குடும்ப கதைகள் எடுக்கலாம்.. ஆனா அது வித்தியாசமான கதையா இருக்கனும்.. பேட்டரிலயும் குடும்பம் இல்லன்னு சொல்ல முடியாது.. இருக்கு.. இன்னிக்கு ஆர்டியன்ஸூம் ரொம்ப மாறிட்டாங்க.. படம் அவங்க ரசனைக்குதான் எடுக்க வேண்டி இருக்குது..

அதுதான் பேட்டரி..

சினிமாவின் வலி மிகுந்த பக்கம்?

இங்க ஜெயிச்சாலும் வலிதான்.. தோத்தாலும் வலிதான்.. ஜெயிச்சா, அடுத்தப் படம் இதை விட பெருசா ஜெயிக்கனுமேங்குற வலி வந்துடும்.. அந்த வலி நம்பள நிம்மதியா இருக்க விடாது.. சாப்பிட விடாது.. தூங்க விடாது.. யாரு கூடவும் சந்தோஷமா பேச விடாது.. சதா அதைப்பத்தியே யோசிச்சுகிட்டு இருக்குற மாதிரி ஆயிடும்.. தோத்தா ஒரு பய உங்கள மதிக்க மாட்டான்.. வாழ்க்கை பெரிய போராட்டமாவும், சுமையாவும் மாறிப் போயிடும்.. முக்கியமா, பொருளாதார சரிவு.. நாம சினிமாவ விட்டுட்டு வேற தொழிலுக்கும் போக முடியாது.. இதுலயேதான் இருந்தாகனும்.. இதுலயேதான் மீண்டு வரனும்.. இதுலயேதான் விட்ட இடத்தை புடிக்கனும்.. பணம் இல்லன்னா என்ன பண்ண முடியும்.. நம்ம கனவுகள ஓரங்கட்டி வச்சுட்டு, சினிமாக்குள்ளாறயே கிடைக்குற வேலைய செஞ்சு சமாளிக்கனும்.. புடிக்காத வேலைய எப்படி செய்ய முடியும்.. அது எவ்வளவு பெரிய வலி..

யோசிச்சு பாருங்க..

ஒரு வெற்றி படம் தந்ததும் அதே பாணியை பின்பற்றி அடுத்தடுத்த படங்களையும் அந்த இயக்குனர் தருகிறார். இதில் உங்கள் அனுபவம்?

முதல் கேள்விக்கு என்ன பதில் சொன்னேனோ அதே பதில்தான் இதுக்கும்.. ஒரே மாதிரி ரெண்டு மூனு படங்கள் பண்ணலாம்.. ஆனா அதையே தொடர்ந்து பண்ணா, பாக்குறவங்களுக்கு போரடிச்சுடும்.. ஆர்டியன்ஸ்ம் நம்பள அடையாளம் கண்டு புடிச்சுடுவாங்க, 100 படங்கள தாண்டின பாலசந்தர், எஸ் பி முத்துராமன், இராமநாராயணன் இவங்கல்லாம் வெரைட்டியான படங்கள குடுத்தவங்க.. அதனாலதான் இவ்வளவு படங்கள குடுக்க முடிஞ்சுருக்கு.. நீண்ட காலம் சினிமாவுலயும் நீடிச்சு இருக்க முடிஞ்சுருக்கு.. நானும் அப்படிதான்.. என்னால் எந்த கதைகளையும் ஹேண்டில் பண்ண முடியும்.. அதுல நம்ம முத்திரைய பதிக்கனும்.. பதாலசந்தர் வறுமையின் நிறம் சிவப்பு எடுத்தாலும் சரி, சிந்து பைரவி எடுத்தாலும் சரி, அதுல கேபிடச் இருக்கும்..

காதல் பற்றி கவித்துவமான பதில்?

உண்மையான அன்பு கடைசி வரை நிலைச்சு நிக்கும்..

இயக்குனர் மணிபாரதி, எழுத்தாளர் மணிபாரதி என்ன வித்தியாசம்?

எழுத்தளர் மணிபாரதிதான் இயக்குனர் மணிபாரதிக்கு அஸ்திவாரம். முதலில் தொட்டது பேணா.. பிறகுதான் கேமராவை தொடும் வாய்ப்பு. எழுத்தாளர் மணிபாரதிக்கு தேவை ஒரு கம்ப்யூட்டர்.. அது இருந்தால் மனதில் பட்டதை மளமளவென்று எழுதி விடலாம்.. அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஒரு கப்பலில் கதை நடக்கிறதா.. எழுதலாம்.. அமெரிக்காவில் கதை நடக்கிறதா எழுதலாம்.. ஆனால் இயக்குனர் மணிபாரதிக்கு அப்படி அல்ல.. யார் ஹீரோ என்பதை பொருத்துதான் கதையை எழுத முடியும்.. கப்பலும், அமெரிக்காவும் தேவையா என்பதை பட்ஜட்தான் தீர்மானிக்கும். அத்துடன் எழுத்தாளர் மணிபாரதிக்கு அவர் மட்டுமே எஜமானர்.. இயக்குனர் மணிபாரதிக்கு தயாரிப்பாளர் என்கிற வேறொரு எஜமானர்.. அவர் சொல்வதையும் கேட்டுதான் படம் எடுக்க முடியும்.. அதே சமயம் நம்முடைய சுயத்தையும் இழந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..

ரீ மேக் படங்கள் பற்றி.. நீங்கள் ரீ மேக் செய்ய நினைத்தால் என்ன படம் தேர்வு செய்வீர்கள்?

கலைக்கு மொழி எப்போதும் தடையில்லை.. நல்ல விஷயமாக இருந்தால், மகக்களுக்கு தேவையான விஷயமாக இருந்தால் கட்டாயம் ரீ மேக் செய்யலாம்.. அப்போதுதான் ஒரு உலகத்தில் உள்ளவர்கள் இன்னொரு உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.. சங்கராபரணமும், சலங்கை ஒலியும், சிப்பிக்குள் முத்துவும் வேற்று மொழி படங்கள் என நினைத்திருந்தால் அந்த அனுபவத்தை நாம் உணர்ந்திருக்க முடியுமா.. ஆனால் இப்போது ரீமேக் படங்களுக்கான சூழ்நிலை குறைந்து வருகிறது. காரணம் பேன் இன்டியா படங்கள் வர ஆரம்பித்து விட்டது. ஒரு மொழியில் தயாரிக்கப் படும் ஒரு படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகிறது. சமீபத்திய உதாரணம் பாகுபலி, கே ஜி எஃப்.. நான் ரீ மேக் செய்ய நினைக்கும் படம் – அவர்கள். நாற்பது வருஷத்துக்கு முந்தைய சினிமா அது.. ஆனால் இப்போது பார்க்கும் போதும் புதுசாக இருக்கும்.. அது போல் ரோமன் ஹாலிடே.. அந்தப் படத்தின் கதையை நிறைய பேர் சுட்டு விட்டார்கள்.. ஆனாலும் அது இன்னும் ஒளி மங்காமலேதான் இருக்கிறது..

உங்கள் பலம் மற்றும் பலவீனம் என நீங்கள் கருதுவது பற்றி?

பலம் பலவீனம் ரெண்டுமே இடையுறாத உழைப்புதான்.. ஒரு நிமிடம் என்னால் சும்மா இருக்க முடியாது.. எதையாவது செய்து கொண்டே இருப்பேன்.. தொழில் சினிமா.. ஆனால் எதற்காக சிறுகதைகள் எழுத வேண்டும்.. எழுத சொல்லி யார் கேட்டார்கள்.. ஆனாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியாது.. படிக்காமல் இருக்க முடியாது.. படைப்பது இன்பம்தான்.. ஆனால் அதனால் மற்ற சந்தோஷங்களை இழக்கிறோமே அத பெரும் துண்பம். திட்டமிட்டு வாழ்க்கையை வகுத்துக் கொள்வது நல்லது.. அதாவது தொழிலுக்கான முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும்.. நினைப்போம்.. ஆனால் செய்ய முடியாது..

சமீபத்திய வெப் சீரீஸில் உங்களை கவர்ந்தது?

சுழல். புஷ்கர் – காயத்ரி ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணி இருந்தாங்க.. எட்டு நாள் எட்டு விதமான திருவிழா நடக்குது.. அதுக்கு நடுவே, ஒரு கிரைம் கதை தொடருது.. திருவிழாக்களை ரொம்ப நல்லா கிரியேட் பண்ணியிருக்காங்க.. நிஜ திருவிழா போலவே இருந்தது. நடிச்ச கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி என அனைவரும் சிறப்பா நடிச்சுருக்காங்க.. முடிவுதான் கொஞ்சம் யூஷ்வலாக இருந்தது. ஒரு விஷயம் நடக்குது.. அது எதுக்காக நடக்குதுங்குறதுக்கான காரணம் புதுசா இல்லை.. அதையும் புதுசா சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. அந்த வகையில பேட்டரி படம், வித்தியாசமான ஒரு படமாதான் இருக்கும்..

உதவி இயக்குனர்கள் பணி என்பது நெருப்பில் நிற்பது போன்றது என்று ஒரு பிரபல இயக்குனர் சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்து?

உண்மைதான். கொஞ்சம் அஜாக்ரதையாக இருந்தாலும், எடுக்கப்படுற காட்சில, பெரிய பாதிப்பை ஏற்படுத்திடும்.. பாதிப்பு என்பது நஷ்டத்தை ஏற்படுத்திடும்.. மீண்டும் அந்த காட்சியை எடுக்க நேர அவகாசம் இருக்காது.. கிளைமேட் ஒத்துழைக்காது.. நடிகர் நடிகைகளை மறுபடியும் ஒன்று சேர்ப்பது கஷ்டம்.. இப்படி ஆயிரத்தெட்டு சிக்கலை ஏற்படுத்தி விடும்.. அதனால் ரொம்ப விழிப்பா செயல் படனும்.. இது கொஞ்சம் விரிவா பேச வேண்டிய விஷயம்.. அதனால தனியா ஒரு பேட்டி வச்சுக்கலாம்..

பேட்டரி உருவான விதம்?

இருநூறு கதைகளை கேட்டு அலுத்துப் போன புரடியூஸருக்கு இருநூற்றி ஒண்ணாவது ஆளா நா போய் கதை சொல்றேன்.. கேட்டதுமே அவருக்கு கதை புடிச்சுப் போவுது.. உடனே ஆரம்பிக்கலாம்ன்னு சொல்லிட்டாரு.. மெடிக்கல் ஃபீல்டுல எவ்வளவோ குற்றங்கள் நடக்குது.. அதுல இதுவரைக்கும் தொடாத ஒரு பிரச்சனைய தொட்டு இருக்கோம்.. மக்களுக்கு விழிப்புணர்வ ஏற்படுத்துற ஒரு படமா பேட்டரி இருக்கும்.. திரைக்கதையும் சுவராஸ்யமா வந்துருக்கு.. எந்த காம்ப்ரமைஸூம் இல்லாம எடுத்துருக்கோம்.. படத்துல நடிச்சுருக்குற செங்குட்டுவன், அம்மு அபிராமி, பேபி மோனிகா, ராஜ் தீபக் ஷெட்டி, யோக் ஜப்பி, நாகேந்திர பிரசாத், எம் எஸ் பாஸ்கர்ன்னு எல்லாரும் நல்லா நடிச்சுருக்காங்க.. அந்தந்த கேரக்டராவே வாழ்ந்துருக்காங்க.. படத்த பார்த்த சில பிரபலங்கள், படம் ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க.. இந்த மாசம் 29ம் தேதி தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது.. நீங்களும் போய் பாருங்க..

பாத்துட்டு சொல்லுங்க..

கமலகண்ணன்

1 Comment

  • இயக்குனர் மணிபாரதியின் பேட்டியை படித்ததும் பேட்டரி படத்தினை காணும் ஆவல் அதிகமாகி இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...