சிவகங்கையின் வீரமங்கை | 16 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 16 | ஜெயஸ்ரீ அனந்த்


சிவக்கொழுந்து தலைமையில் சசிவர்ணத் தேவர் அனுப்பிய நால்வர் தூதுவர் படை ராமநாதபுர அரண்மனையை வந்தடைந்தது. சிவக்கொழுந்து, தான் கொண்டு வந்த ஓலைச் சுருளை அரசர் செல்லமுத்துவிடம் ஒப்படைத்தான். ஓலைச் சுருளில் எழுதப்பட்ட செய்தியைப் பார்த்த செல்லமுத்துவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

“ஆஹா…. வேலுநாச்சியார் இன்னும் என் குழந்தை என்றல்லவா எண்ணியிருந்தேன்..! அவள் விவாகத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை எப்படி நான் மறந்தேன்..? நல்லவேளையாக பிராட்டி அதை எனக்கு நினைவுபடுத்தி விட்டார். உடனடியாக அவரது ஆணையை நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது, இப்பொழுதே முத்தாத்தாளுக்கும் செய்தி அனுப்பி அவளையும் ப்ராமன் மலை வருவதற்காக ஆயத்தம் செய்ய வேண்டும் “என்றவர்… சிவக்கொழுந்திடம் வேறொரு ஓலை மூலமாக இச்செய்தியை அரசி முத்தாத்தாளுக்கு தந்தனுப்பினார். பின் முதன் மந்திரி பசுபதியிடம் இம்மகிழ்ச்சியைத் தெரிவிக்கவும் அடுத்த சில மணி நேரத்தில் அரண்மனையில் பரபரப்பு ஒட்டிக் கொண்டு அது ஊரெங்கும் பரவியது.

த்திரகோசமங்கை திருக்கோயிலில் அன்றைய உஷத் கால பூஜைக்கு ஆயத்தமாக வந்த குருக்கள் தெக்ஷிணாமூர்த்தி, பைரவர் சன்னதியின் திறவுகோலை வாங்குவதற்காக ஓதுவார் நீலகண்டனைத் தேடி கோவிலின் பிராகாரத்திற்கு வந்தார்.

“நீலகண்டா….” குரல் வந்ததும் எடுத்து வைத்திருந்த திறவுகோலுடன் வெளியே வந்தார் நீலகண்டன்.

“அண்ணா… பூஜைக்குப் பூக்கள் பறித்து வைத்து விட்டேன். அபிஷேக ஹாரத்தி பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நைவேத்தியங்கள் எல்லாம் தயாராக உள்ளது. நீங்கள் அபிஷேகத்தைத் தொடங்குங்கள் நான் இன்னும் அரை நாழியில் வந்து விடுகிறேன்.”

“எதற்கு அவசரம்..? ஏதேனும் முக்கியச் செய்தியா..?”

“நீங்கள் இன்னும் கேள்விப்படவில்லையா..? ஊரே மகிழ்ச்சியில் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு உண்மையில் செய்தி என்னவென்று தெரியாதா..?” என்றான்.

“சொன்னால் தெரிந்துக் கொள்கிறேன்.”

“நம் இளவரசியாருக்கு வருகின்ற முகூர்த்தத்தில் கல்யாண வைபவம் அரங்கேற இருக்கிறது. நேற்றிலிருந்து இந்தச் செய்தி காற்றில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறதே.”

“இளவரசியாருக்குத் திருமணமா..? நல்ல செய்தியாக அல்லவா சொல்லி இருக்கிறாய். இன்று கூடுதல் பிரசாதமாக அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் வைவேத்தியத்திற்கு ஏற்பாடு பண்ணி விடு நீலகண்டா.”

“நீங்கள் சொல்வதற்கு முன்னதாகவே செய்து விட்டேன். எல்லா நைவேத்தியமும் மடப்பள்ளியில் தயாராக இருக்கிறது. ஒரு அவசர வேலை. அரை நாழிக்குள் வந்து விடுகிறேன். நீங்கள் மற்ற வேலைகளைத் தொடங்குங்கள்” என்ற நீலகண்டன் ஒட்டமும் நடையுமாக கோவிலைத் தாண்டி மறைந்தான். தக்ஷணாமூர்த்தி அவன் சென்று மறைவது வரை பார்த்துக் கொண்டு இருந்தவர், ஒரு நீண்ட பெருமூச்சை உதிர்த்து விட்டு ஆலயத்திற்குள் சென்றார்.

நீலகண்டன் கோவிலின் பின்பகுதியில் மதில் சுவரை ஒட்டியிருந்த ஒரு மரத்தடிக்கு வந்தான். இப்பொழுது அவன் கையில் ஒரு பெரிய துணி மூட்டை இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்தவனாய் மரத்தைத் தாண்டி கோவிலின் பின் பக்கம் வந்தவன் அங்கிருந்த இரண்டு உடைந்த யாழ் சிற்பத்தை நகர்த்தினான்.

அதிலிருந்து ஒரு பாதை உள்ளே இறங்கியது. அதில் உள்ளே சென்றவன் தன் கண்களை இருளில் பழக்கப்படுத்திக் கொண்டான். சிறிது நேரத்தில் இருளில் நிழலாக அங்கு பல பல பெரிய கலன்களில் தங்க, வைர, வைடூரிய, முத்து, பவள ஆபரணங்கள் மற்றும் பஞ்சலோக விக்ரஹங்களும் ஸ்படிக மற்றும் மரகத லிங்கங்களும் மின்னுவது தெரிந்தது. அதை ஒருமுறை சரி பார்த்தவன் தான் சுமந்து வந்த இரண்டு மூட்டைகளையும் பிரித்தான் அதில் இருந்த பல ஆபரணங்களை அங்கு வைத்தவன் மறுபடியும் வழக்கம் போல ஏதும் அறியாதவாறு வெளியே வந்தான்.

ராட்டிய மன்னர் ஏகோஜியின் படைகள் ராமநாதபுரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயத்தமாயின. சில போர் வீரர்கள் புதுக்கோட்டை வழியாக ஊருக்குள் பிரவேசிக்கத் தொடங்கினர்.

இதற்கு முன்னதாக புழுதிபறக்க விரைந்து வந்த குதிரை ஒன்று ராமநாதபுரம் அரண்மனையை நோக்கி வந்தது. குதிரையின் வேகத்தைக் கண்ட மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அழுத குழந்தை ஒன்று டக் என்று அழுகையை நிறுத்திவிட்டு குதிரையைப் பார்த்தபடி இருந்தது.

“யார் இவன்? ஏன் இந்த அவசரம்?” என்று சிலரும், “இளவரசிக்கு விவாகம் என்று குதிரையும் அறிந்துள்ளது போலும். அது தான் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஓடுகிறது” என்று வேறு சிலரும் தனக்குத் தெரிந்தவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் குதிரையில் வந்த வீரன் இராமநாதபுர ஒற்றன், அவசரமாக அரசரைச் சந்தித்து விவரத்தை தெரிவிக்க அரண்மனையை நோக்கி விரைந்து வந்தான்.

ஒற்றனை வாயிலில் சந்தித்த முதன் மந்திரி பசுபதி அவன் சேகரித்து வந்த விவரத்தை தெரிந்து கொண்டார்.

“முதன் மந்திரிக்கு வணக்கம். நம்மைச் சுற்றி ஆபத்து சூழ்ந்துள்ளது. பவானியின் ஆலோசனைப்படி இளவரசி இல்லாத இத்தருணத்தில் மராட்டியப் படைகள் நம் நாட்டைக் கைப்பற்ற ஆயத்தமாவதுடன் சில வீரர்கள் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவே நான் தெரிந்து வந்த விவரம்..” என்றவனைக் கவலையுடன் நிமிர்ந்து பார்த்த பசுபதி, “ஒற்றனே, இந்த செய்தி குறித்து நீர் அரசனிடம் ஏதுவும் கூற வேண்டாம். தற்பொழுது நாட்டு மக்களும் அரசரும் இளவரசியின் திருமண வைபவ மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இச்செய்தி அரசருக்குத் தெரிய வந்தால் திருமணம் நடைபெறுவது கேள்விக்குறியாகி விடும். ஆகவே, இப்போரை நான் ஏற்று நடத்த இருக்கிறேன். முதலில் அரசரும், அரசியாரும் விரைவாக ப்ரான்மலை செல்லட்டும். பிறகு இது குறித்து விவாதிக்கலாம்.” என்றவர், அவசர அவசரமாக அரசர் செல்லமுத்து ப்ரான்மலை நோக்கி செல்ல ஏற்பாடு செய்தார். மேள தாளங்கள் முழங்க, பல வீரர்கள் உடன் செல்ல, நாலு குதிரை பூட்டிய தேரில் செல்லமுத்து ப்ரான்மலை நோக்கி சென்றார்.

முன்னதாக வீரர்களில் சில பேரை அழைத்த பசுபதி, அரசர் ப்ரான் மலைக்கு எவ்வழியாக செல்ல வேண்டும் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் நடுவில் அரசரை யாரும் சந்திக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்றும், எத்தனை விரைவாக ப்ரான்மலை செல்ல முடியுமோ அத்தனை விரைவாகச் செல்ல வேண்டும் என்றும் சில பல கட்டளைகள் இட்டதுடன் ஓலை ஒன்றையும் எழுதி, “இதைப் பத்திரமாக இளவரசியாரிடம் சேர்த்து விடவும் ” என்று வீரன் ஒருவனிடம் தந்தார். முதன் மந்திரியின் யோசனைப்படி வீரர்கள் அரசரைப் பாதுகாப்பாக வழிநடத்தி சென்றனர்.

அரசர் செல்லமுத்து இராமநாதபுரத்தை பாதுகாப்பாக கடந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும், பசுபதி மராட்டிய படைகளை எதிர்கொள்ள ஆயத்தமானார்.

ராஜசிம்ம மங்கலம்-பெரிய கண்மாய்

சில செய்திகள்:

இராமநாதபுரம்-நயினார்கோவில் சாலையில் பாண்டியூருக்கு அருகே, வைகை ஆற்றில் இருந்து செல்லும் கீழநாட்டார் கால்வாய் மூலம் பெரிய கண்மாய்க்குத் தண்ணீர் செல்கிறது.

இக்கால்வாய் பாண்டியூர்,சித்தனேந்தல், பத்தப்பனேந்தல், தவளைக்குளம், நகரம், அரியாங்கோட்டை ஆகிய ஊர்களின் வழியாக சென்று வாதவனேரி என்ற ஊரின் கண்மாய் அடைகிறது. இக்கால்வாயின் நீளம் 20கி.மீ.

சருகணி ஆற்றில் இருந்து வரும் ஒரு கால்வாய், கல்லடிதிடல் என்ற இடத்தில் இரண்டாகப் பிரிந்து, ஒரு கால்வாய் பெரிய கண்மாய்க்கும், மற்றொன்று கோட்டக்கரை ஆறு(சனவெளி) வழியாக கடலுக்கும் செல்கிறது.

சேதுபதிகளின் ஆட்சிக் காலத்தில் 48-மடை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. இக்கண்மாய் தற்போது 20 மடைகளையும்,20கி.மீ நீளக்கரையையும் கொண்டு விளங்குகிறது.

நீர்ப்பிடிப்பு பரப்பு-147 சதுர மைல்.

கண்மாய் நிரம்பும் போது,இக்கண்மாயிலிருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லும்.உபரி நீர் கடலுக்குச் செல்லும்.

இக்கண்மாய் 1205 மில்லியன் கன அடி நீரைத் தேக்க கூடியதும்,சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டதாகும்.

சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை வந்தடைகையில் நண்பகலைக் கடந்திருந்தது. ஓடி வரும் ஆறுகளின் கரையோரங்களில் செழித்து வளர்ந்த நெற்பயிரும், ஆங்காங்கே அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்ட தானியங்களும், வயல்களுக்கு நடுவில் ஆங்காங்கே நடவு செய்யப்பட்ட காய்கனிகளும் கண்களுக்கு விருந்தாயிருந்தன. அவற்றைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டே வந்தவன், 48 மடைகளைக் கொண்ட நீர்த் தேக்கத்தில் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்ட மடைகளின் வழியே பிரமாதமாக ஆர்ப்பரித்து பொங்கி பிரவாகமாக ஓடி வந்த நதியினை கண்டு பிரமிப்பில் நின்று விட்டான் சுமன்.

“என்னய்யா, நதியைக் கண்டதும் நீயும் உன் குதிரையும் வாயடைத்து நின்று விட்டீர்கள்..? தண்ணீர் என்றால் உனக்கும் உன் குதிரைக்கும் பயமோ..?” என்றாள்.‘

“ஆஹா…. என்ன ஒரு ப்ரவாகம்..! இத்தனை அதிசயத்தையும் ஒருசேரப் பார்த்ததில் சற்றே பிரமித்து விட்டேன்.” என்றவன் சற்றும் தாமதிக்காமல் “தமதம…” வென்று மடையிலிருந்து கொட்டிய அருவியில் பாய்ந்தான்.

இதை எதிர்பார்க்காத குயிலி, “நன்றாக இருக்கிறது. வந்த வேலையைப் பார்க்காமல் இப்படித் தண்ணீரில் நீராடவா பல காதங்கள் தாண்டி வந்தீர்..? நீராடியது போதும். எழுந்து வாருங்கள்” என்றாள்.

ஆர்ப்பரித்த நீரால் அவள் கூறியது அவன் செவிகளில் விழவில்லை. கண்கள் சிவக்க, உடல் குளிர சில நாழிகை நீந்தியவன் திடீரென்று தண்ணீர் வரத்துக் குறையவே தலை நிமிர்ந்து பார்த்தான். குயிலி மடையின் ஒரு பக்கம் ஒரு விசையினைக் கைகளால் திருகியபடி இருந்தாள். மடை நீரிலிருந்து வெளியேறிய வெள்ளம் சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலும் நின்று விட்டிருந்தது.

இடுப்பளவில் தண்ணீரில் நின்று கொண்டிருந்த சுமன் மெதுவாகக் கரை ஏறி வந்தான். அச்சமயம் எதிர்பாராத விதமாக குயிலியை நோக்கி ஒரு வாள் பறந்து வந்தது. அதை கண்ட சுமன் மின்னல் வேகத்தில் தன் இடுப்பில் இருந்த கூரான ஆயுதத்தை வளரி போன்று எறிந்தான். அந்த ஆயுதத்தில் ஒன்று குயிலியை நோக்கி வந்த வாளைத் தடுத்து வீழ்த்தியது. இன்னொன்று வாளை வீசி எறிந்த வீரனின் தலையைக் கொய்தது. இரண்டும் ஏக நேரத்தில் கணப்பொழுதில் நிகழ்ந்ததைக் கண்டு ஸ்தம்பித்து நின்றாள் குயிலி.

–தொடரும்…

ganesh

2 Comments

  • ஒவ்வொரு அத்தியாயமும் செம விறுவிறுப்பு! அருமை! வாழ்த்துகள்!

    • Thank you very much

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...