கோமேதகக் கோட்டை | 8 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

கரிச்சான் குருவிகளை ஏமாற்றி மலைப்பாம்பு வசிக்கும் குகையை அடைய வழி இருக்கிறதா சொல்லுங்கள்? என்று மாயக்குள்ளன் கேட்டதும் அதற்கு ஓர் வழி இருக்கிறது என்று சொன்ன வித்யாதரனைக் கூர்ந்து நோக்கினான் குள்ளன்.

”மாயக் குள்ளரே! நான் விளையாட்டுக்குச்சொல்லவில்லை! கரிச்சான்களை ஏமாற்றி நாம் மலைப்பாம்பின் குகைக்குக் கண்டிப்பாகச் செல்லத்தான் போகிறோம். ஆனால் அது பகல் பொழுதில் அல்ல! இராப்பொழுதில்!” வித்யாதரன் சொல்லி முடிக்கவும் குள்ளன் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.

”அருமையான யோசனை! பொழுது சாய்ந்து இரண்டாம் ஜாமத்தில் நாம் புறப்பட்டோம் எனில் கரிச்சான்களால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக கரிச்சான்கள் வசிக்கும் பகுதியை கடந்து விடலாம். நல்ல யோசனைதான்!” என்றான் மாயக்குள்ளன்.

”இப்பொழுதே பொழுது சாயும் தருணம் ஆகிவிட்டது. இன்று இரவு இரண்டாம் ஜாமத்தில் நாம் மலைப்பாம்பின் குகைக்கு செல்லப் போகிறோம். நன்றாக கவனியுங்கள். சித்திரக் குள்ளர்களான நீங்கள் ஆளுக்கு ஒரு தீப்பந்தம் செய்து கையில் எடுத்துவர வேண்டும். அதே சமயம் அதில் தீப்பற்ற வைக்க வேண்டாம். குகையின் அருகில் வந்ததும் பற்ற வைத்துக் கொள்ளலாம்.”
”சரி அப்புறம் என்ன செய்ய வேண்டும்? தீப்பந்தங்கள் எதற்கு?”

”சொல்கிறேன். இரவுப் பொழுதிற்கு இன்னும் ஒரு ஜாமம் இருக்கிறது. இரவு நெருங்கும்முன் உங்கள் வீரர்களை அனுப்பி அந்த குகையின் அருகே உலர்ந்த சருகுகளையும் விறகு குச்சிகளையும் சேகரித்து வையுங்கள்! ”

”இது எதற்கு?”

”இன்று இரவு எதற்கென்று புரியும்!” என்று சொன்னான் வித்யாதரன்.

தலையசைத்த மாயக்குள்ளன், தன் கூட்டத்தினரை அழைத்து வித்யாதரன் சொன்ன ஏற்பாடுகளை செய்து முடிக்கும்படி ஏவினான்.

இரவு மலரத் தொடங்கி அப்படியே காரிருள் சூழ ஆரம்பித்தது. அன்றைய தினம் அமாவாசை என்பதால் வானம் ஓர் கருத்த போர்வையைப் போர்த்திருப்பது போல தோன்றியது. விந்திய மலைச்சாரல் காட்டில் வசிக்கும் இராப்பறவைகளும் பூச்சியினங்களும் வித்தியாசமான ஒலிகளை எழுப்ப ஆரம்பித்தன.

பருந்து வடிவில் இருந்த வித்யாதரன் மாயக்குள்ளனுக்கு ஜாடை காட்டியதும் மாயக்குள்ளன் தன் கூட்டத்தினரை நோக்கி கை தட்டவும் சுமார் நூறு குள்ளர்கள் கையில் பந்தம் ஏந்தியபடி அணிவகுத்து நின்றனர்.

”அந்த பெரிய மலைப்பாம்பை சாய்க்கப் போகும் நம் படை இதுதான். நான் சொன்னபடி தீப்பந்தத்தில் பொருத்த கற்பூரங்களையும் ஆமணக்கெண்ணெய்களையும் எடுத்துக் கொண்டீர்களா?” என்று வினவினான் வித்யாதரன்.

”எல்லாம் தயாராக எடுத்து வைத்துள்ளோம்!” என்று குள்ளர்கள் கூற, ”சரி புறப்படத்தயார் ஆகுங்கள்!” என்றான் வித்யாதரன்.

படைகள் அணிவகுத்து நிற்க தன் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு காத்திருந்தான் வித்யாதரன்.

அந்த இரவுப்பொழுதில் ஜாமக்கோழியின் சத்தம் கேட்கவும் ”இரண்டாம் ஜாமம் துவங்கிவிட்டது பஞ்ச பட்சி சாஸ்திரப்படி நமக்கு வெற்றியே! புறப்படுங்கள்!” என்று உத்தரவிட்டான் வித்யாதரன்.

குள்ளர்கள் அணிவகுத்துச் செல்ல அவர்களுக்கு நேர் மேலே பறந்து சென்றான் வித்யாதரன். ஏறக்குறைய ஓர் ஜாமப் பொழுது கடந்திருக்கும் வேலையில் அந்த மலைப்பாம்பு வசிக்கும் குகையை வந்து அடைந்தனர்.

அங்கே உலர்ந்த சருகுகளும் குச்சிகளும் குவிக்கப்பட்டு இருந்தது.
வித்யாதரன் குரல் கொடுத்தான்.

”குள்ளர்களே இந்த விறகு குச்சிகளையும் சருகுகளையும் ஒரு வட்ட வடிவில் குமியுங்கள்! குறிப்பாக குகையின் வாயிற்புறம் அதிக சத்தைகளை குவியுங்கள்! வேகமாக ஆகட்டும்!” என்றான்.

குள்ளர்கள் அவன் சொன்னபடியே விறகுகளையும் சருகுகளையும் வட்ட வடிவமாக குவித்தனர்.” நான் சொல்வதை கேளுங்கள்! இந்த சருகு குவியலுக்கு நாலாபுறமும் உள்ள மரங்களில் ஏறி கையில் பந்தங்களோடு பதுங்கி இருங்கள்! உங்கள் பந்தங்களை ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து கற்பூரத்தை பூசி வைத்துக் கொள்ளுங்கள்! கீழே வட்டவடிவில் இருக்கும் சருகுகளிலும் கற்பூரத்தைக் கலந்து விடுங்கள்! ”என்றான் வித்யாதரன்.

மளமளவென்று வித்யாதரன் சொல்லியபடி கற்பூரத்தைக் குவியலில் கலந்த குள்ளர்கள் கையில் தீப்பந்தங்களோடு மரத்தில் ஏறிக் கொண்டனர்.

”குள்ளர்களே நான் தற்போது குகையினுள் செல்கிறேன். உள்ளே இருக்கும் மலைப்பாம்பை குத்தி வெளியே விரட்டி வருகிறேன். மலைப்பாம்பு வெளியே வந்து நாம் குவித்திருக்கும் சத்தைகளின் மீது வந்ததும் நீங்கள் நாலாபுறம் இருந்தும் தீப்பந்தங்களை வீச வேண்டும். தீப்பந்தங்கள் சருகுக் குவியலில் விழுந்ததும் தீப்பிடிக்க ஆரம்பிக்கும் மலைப்பாம்பு மீண்டும் உள்ளே செல்ல முயலும் அப்போது நாம் வாயில் பக்கம் குவித்த சருகுகள் தீப்பற்றி உள்ளே செல்ல முடியாமல் தடுக்கும். அதையும் மீறி அந்த பாம்பு வாயில்புறம் வந்தால்… அங்கே சில நூறு குள்ளர்கள் குகையின் வாயில்புறத்திற்கு மேல் மலையின் மீது நிற்கின்றனர். அவர்கள் அங்கேயிருக்கும் ஒரு பெரிய பாறாங்கல்லை நகர்த்தி வந்து பாம்பு வரும்போது அதன் தலையில் போட வேண்டும்.”

”அந்த பாம்பு அங்கேயே மரித்துவிடும். நாம் வெற்றி பெற்றுவிடுவோம்.”

”வித்யாதரா! உன் யோசனை பிரமாதம் அப்படியே செய்கிறோம்!” என்ற குள்ளர்கள் குகைவாயிலின் மேல் மலையில் ஏறி அங்கிருந்த ஒரு பெரிய பாறையை உருட்ட ஆரம்பித்தனர்.

வித்யாதரன் அங்கு இறந்து கிடந்த ஒரு பன்றியின் உடலை கால்களால் சுமந்தபடி குகையினுள் பறந்து சென்றான். குகையின் நடு மையத்தில் அந்த பிரம்மாண்டமான மலைப்பாம்பு படுத்துக் கிடந்தது.

வித்யாதரன் உள்ளே நுழைகையில் அது சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தது. இந்த குகையில் இருந்த குள்ளர்கள்தான் ஓடிவிட்டனரே… அது என்ன சத்தம்? என்று தலையை உயர்த்தி பார்த்தது.

வித்யாதரன் பன்றியைத் தூக்கி வருவதை பார்த்த அது, “இரை நம்மைத் தேடி வருகிறது! ஹாஹா” என்று சிரித்தபடி பன்றியைக் கவ்வி இழுக்க முயற்சி செய்தது

வித்யாதரன் போக்கு காட்டி அங்கும்மிங்கும் பறந்து பாம்பை அயர்ச்சியுற செய்தான். பாம்பு உணவு பிடிபடாத கோபத்தில் புத்தியை இழந்து கொண்டிருந்தது

இதுதான் சமயம் என வித்யாதரன் வாசலை நோக்கிப் பறக்க ஆரம்பித்தான். பாம்பும் தன் பெருத்த உடலை நகர்த்தியவாறு வாசலை நோக்கி வர ஆரம்பித்தது. ”வா! வா! விரைந்து வா! உன் வாழ்க்கை இன்றோடு முடிந்து போகப் போகிறது!” என்று வித்யாதரன் மனதிற்குள் முணுமுணுத்தபடி பறக்கையில் கொஞ்சம் கவனம் சிதறினான்.
அந்த நொடியில் மலைப்பாம்பு வித்யாதரன் காலில் இருந்த பன்றியை பிடித்துவிட்டது.

பாம்பு வேகமாக பன்றியை இழுக்க பன்றியோடு சேர்ந்து பருந்தும் பாம்பின் வாய் நோக்கிப் போக சட்டென்று பிடியை விட்டது பருந்து. அதோடு நில்லாமல் தன் கூரிய அலகால் அந்த மலைப்பாம்பை குத்த ஆரம்பித்தது.

இரையைத் தின்ன விடாமல் துன்புறுத்தும் பருந்தைக் கோபத்தோடு பார்த்த மலைப்பாம்பு தன் பெரிய வாயைத் திறந்து பருந்தை விழுங்க முயன்றது. ஆனால் அதன் வாயில் சிக்காமல் அதற்கு அகப்படாமல் பாம்பின் உடலெங்கும் தன் அலகால் குத்தி ரணம் ஏற்படுத்தியபடி பறந்த பருந்து வாயிலை நோக்கி வந்தது. மலைப்பாம்பும் குகையை விட்டு பருந்தைத் துரத்தியபடி வெளியே வந்தது.

பருந்து மெல்ல மெல்ல சருகுகள் குவித்திருந்த பகுதியின் மையத்திற்கு பாம்பை வரவழைத்துவிட்டு உயரே பறந்து, “தாக்குங்கள்” என்று குரல் கொடுத்தது.

அடுத்த நொடியில் அந்தக் குகையை சுற்றி வளர்ந்திருந்த உயரமான மரங்களில் இருந்து தீப்பந்தங்கள் பறந்துவந்து பாம்பின் மீதும் சருகுகள் மீதும் விழுந்து சருகுகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தான் பருந்து விரித்த வலையில் சிக்கி விட்டதை உணர்ந்த மலைப்பாம்பு அவசர அவசரமாக குகை வாயிலைக் கடந்து உள்ளே நுழைய முயன்றது. ஏற்கனவே பருந்து குத்திக் கிழித்த்தால் உடலெங்கும் காயங்கள் அவற்றில் இருந்து குருதி வழிந்து கொண்டிருக்க தீ வேறு வேகமாக பரவி அதன் உடலைச் சுட்டெரித்தது.

அதையும் மீறி நகர்ந்து வாயிலை நோக்கி நகர்ந்ததுதான் தாமதம் குகை வாயில் மீது மலைமீது இருந்த வீரர்கள் அந்த பெரும் பாறையை நகர்த்த முடியாமல் நகர்த்தி கீழே தள்ளினர்.

பெரிய பாறை ஒன்று தன் உயிர் பறிக்க வருவதை கடைசி நிமிடத்தில் உணர்ந்த பாம்பு ஒன்றும் செய்ய முடியாமல் நின்றது. பாறை உருண்டு வந்த வேகத்தில் அதன் உடல் மீது விழுந்து நசுக்கியது.

மிகுந்த வேதனையோடு உயிரை விட்டது மலைப்பாம்பு. அதன் உயிர் பிரிகையில் அதன் உடலில் இருந்து ஒரு உருவம் மேலெழுந்தது.

அது வித்யாதரனை நோக்கி பேச ஆரம்பித்தது.

”வித்யாதரா..! அரக்கனிடமிருந்து இளவரசியை மீட்க என்னுடைய வாழ்த்துகள்..! எனக்குச் சாப விமோசனம் அளித்தமைக்கு மிக்க நன்றி” என்று அந்த உருவம் பேசியதும் வித்யாதரன் வியந்து போய், ”ஐயா..! தாங்கள் யார்..? ஏன் இந்த பாம்பு உருவம் எடுத்தீர்கள்! நீங்க பெற்ற சாபம்தான் என்ன..?” என்று வினவினான்.

”வித்யாதரா! நான் தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வன்..! என் பெயர் விநோதன்..! ஒரு சமயம் நான் பூலோகத்தை சுற்றிப் பார்க்க வருகையில் இந்த விந்தியமலைச்சாரலுக்கு வந்தேன். இந்த மலையின் அழகில் மயங்கி அப்படியே நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது பெரும் முனிவர் ஒருவர் இங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக அவர் தவநிலையில் இருந்திருக்கிறார் போலும். அதை நான் உணரவில்லை! அவர் முனிவர் என்பதையும் உணராமல் விளையாட்டுத் தனமாய் அவரை பயமுறுத்தலாம் என்று மரத்தின் பின்னிருந்து அவரை பலம் கொண்ட மட்டும் கட்டிப் பிடித்தேன்.

தவம் கலைந்து கண்விழித்த அவர் என் மீது கடும் கோபம் கொண்டார். “என்னுடைய தவத்தை கலைத்து மலைப்பாம்பு போல் என் தேகத்தை கட்டிப் பிடித்த நீ மலைப்பாம்பாக ஆக்க் கடவாய்!” என்று சபித்து விட்டார்.

நான் தவறுக்கு வருந்தி சாப விமோசனம் கேட்டேன். அப்போதுதான், ‘அரக்கனால் கடத்தப்பட்ட இளவரசியை மீட்க வரும் இளைஞன் ஒருவன் பருந்து வடிவம் எடுத்து தன் சூழ்ச்சியால் உன்னை கொல்லுவான். அப்போது நீ விமோசனம் பெற்று தேவலோகம் சென்று அடைவாய்’ என்று விமோசனம் அளித்தார்.

”தாங்கள் வந்து விமோசனம் அளித்தீர்கள்! மிக்க நன்றி! நான் தேவலோகம் செல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு காணிக்கை தர விரும்புகிறேன்.”

”காணிக்கையா? என்ன அது?” என்று வித்யாதரன் முழிக்க

அந்த கந்தர்வன் தன் கையை உயர்த்தி மும்முறை ஏதோ மந்திரம் கூறினான். உடனே அவனது கையில் ஒரு பாய் வந்து சேர்ந்தது.

”வித்யாதரா! இது பறக்கும் மந்திரப் பாய்! நீ அழிக்க நினைக்கும் அரக்கன் கோமேதகக் கோட்டையில் இளவரசியை அடைத்து வைத்துள்ளான். அங்கே நுழைவதற்கு இந்த மந்திரப் பாய் மிகுந்த பலன் அளிக்கும். இதைப் பெற்றுக் கொள்! குள்ளர்களே! அரக்கனை வெல்ல காத்திருக்கும் வித்யாதரனுக்கு உதவியாக இருங்கள்! இனி உங்களுக்குப் பயமில்லை! வருகிறேன்!” என்று பறந்து சென்றான்.

சித்திரக் குள்ளர்கள் பிரமித்துப் போய் நிற்க, வித்யாதரன் தான் முதலில் வாய் திறந்து பேசினான்.

”சித்திரக் குள்ளர்களே… உங்கள் ஆபத்து நீங்கிவிட்டது. மலைப்பாம்பு அழிந்துவிட்டது. எனக்கு விடை கொடுங்கள்! நான் இளவரசியை மீட்கக் கிளம்ப வேண்டும்”. என்றான்.

குள்ளர்களின் தலைவன் மாயக்குள்ளனும், சித்திரக் குள்ளனும் கூட்டத்தில் இருந்து முன்வந்து தலை வணங்கினார்கள். ”தாங்கள் செய்த இந்த பேருதவியை மறக்க மாட்டோம். இளவரசியை மீட்கும் பணியில் எங்களால் இயன்ற உதவியை செய்யத் தயாராக உள்ளோம். அதை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!” என்று சொன்னார்கள்.

”மாயக்குள்ளரே! உங்கள் அன்புக்கு நன்றி! நீங்கள் பேராபத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு இருக்கிறீர்கள்! சில நாட்கள் நீங்கள் இங்கேயே இருந்து உங்கள் கூட்டத்தினருக்கு வேண்டியதை செய்யுங்கள்! அரக்கனை அழிக்கும் பணி மிகவும் கடினமான ஒன்று. அதற்கு தங்களின் உதவியும் தேவைப்படும்.

இன்னும் சில தினங்கள் கழித்து உங்கள் படையினர் சிலரோடு கோமேதகக் கோட்டைக்கு வந்து சேருங்கள்! நான் அங்கே உங்களை சந்திக்கின்றேன். இப்போது விடைபெறுகிறேன்!”. என்ற வித்யாதரனான பருந்து மந்திரப் பாயை விரித்து அதன் மீதமர்ந்ததும் பாய் பறக்க ஆரம்பித்தது.

கண நொடியில் அந்த பாய் வேகமெடுத்து கிளம்ப சித்திரக் குள்ளர்கள் மறைந்து போனார்கள்

விந்திய மலைகளை கடந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேல் அந்த பாய் பறந்துகொண்டிருந்தபோது ஒரு சூனியக் காரியின் கண்களில் இந்த காட்சி தென்பட்டது

”அட இதென்ன ஒரு பாய் பறந்து சென்று கொண்டிருக்கிறது!” என்று அங்கிருந்து ஒரு உருப்பெருக்கி மூலம் அந்தப் பாயை உற்று நோக்கினாள் அந்த சூனியக் காரி

”அட அந்த பாயின் மீது ஒரு பருந்து அமர்ந்து செல்கிறதே! அது யார்? மாயக் கண்ணாடி விவரம் கூறு!” என்று அங்கே இருந்த ஒரு பெரிய கண்ணாடியின் முன் சென்று அமர்ந்தாள்.

அந்த கண்ணாடியில் வித்யாதரன் அழகிய வாலிபனாக தோற்றம் தர சூனியக்காரியின் மனதில் ஏதோ திட்டம் தோன்றியது. மறு நொடியில் அவள் ஒரு பெரிய பருந்தாக மாறி வித்யாதரன்செல்லும் மந்திரப் பாயை பின் தொடர்ந்து அவனை பிடிக்க முயற்சித்தாள். ஆனால் மந்திரப்பாயின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
வித்யாதரன் சூனியக்காரியின் வலையில் வீழ்ந்தானா? தப்பித்தானா?

அடுத்த வாரம் பார்ப்போம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!