தலம்தோறும் தலைவன் | 6 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 6 | ஜி.ஏ.பிரபா

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்

சாதியையும் வேதியன் தாதை தனித் தாள் இரண்டும்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்

பாதகனே சோறு பற்றினவா தோள் நோக்கம்

-திருவாசகம்

இறை எனும் சக்தி எல்லையற்ற கனிவுடன் நம்மைச் சுற்றிப் பரவியுள்ளது. சரியான நேரம் பார்த்து, தேவையான கருணையை அது மழையாகப் பொழிகிறது. எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும், அந்த மழையில் நம் உள்ளம் குளிரும் என்பது நிச்சயம். நெருப்பாய்ச் சுடும் தருணங்களில் மழையாய்க் கருணையைப் பொழிகிறது.

நமச்சிவாய என்றாலே நம் பாவங்கள் அனைத்தும் அழிகிறது.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே” என்கிறார் திருநாவுக்கரசர்.

இம்மை மறுமை பாபங்கள் அகலும், மரண பயம் அகலும், எமனும் நம்மை நெருங்கான். ஈசனின் பாதத்தைச் சரணடைந்தவர்களை எந்தக் கெடுதலும் நெருங்காது என்பது அப்பர் பெருமானின் வாக்கு.

தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு

அண்டம் அளிப்பன் அஞ்செழுத்துமே – என்பது சம்பந்தர் வாக்கு.

சிவாய நம என்றிருப்போர்க்கு அபாயம் என்றும் இல்லை என்கிறார்கள். ஈசனே என்று கதறிய மார்க்கண்டேயருக்கு உயிர்ப்பிச்சை அளித்த அய்யன், எமனைச் சம்ஹாரம் செய்கிறார். தன் அடியவர்களின் ஆனந்தமான வாழ்விற்காக எமனையே சம்ஹாரம் செய்த இடம் திருக்கடையூர்.

கால சம்ஹார மூர்த்தியாய், அமிர்ந்த கடேஸ்வரராய் காட்சி அளிக்கிறார் ஈசன்.

ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மனிடம் வில்வ விதைகளைத் தந்து, “எந்த இடத்தில் ஒரு முகூர்த்த காலத்துக்குள் முளைக்கிறதோ, அந்த இடத்தில் எம்மை வழிபடு” என்று கூறுகிறார் ஈசன். ஒவ்வொரு இடமாக முயற்சித்து இறுதியில் திருக்கடையூர் வந்து விதைகளை இட குறித்த காலத்தில் அது முளைத்தது. எனவே இத்தலம் வில்வவனம் என்றும், வில்வவனேஸ்வரர் என்றும் ஈசன் அழைக்கப்படுகிறார்.

அமிழ்தம் கடைந்த போது தன்னை வணங்காமல் அமிர்தத்தை பகிர்ந்தளிக்க திருமால் முற்பட்டதால் சினம் கொண்டு விநாயகர் அமிர்தக் குடத்தை மறைத்து வைத்து விட்டார். இங்கு மறைத்த வைத்த குடமே பிற்காலத்தில் லிங்கமாக உருவாகியதால் அமிர்தகடேஸ்வரர் என்பது இறைவனின் திருநாமம்.

மார்க்கண்டேயர் ஈசனின் அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வரும்போது அதனுடன் ஜாதி மல்லிகைக் கொடியும் சேர்ந்து வந்ததால் இது பிஞ்சிலவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிருகண்டு முனிவருக்குப் பல வருடங்களாகக் குழந்தைகள் இல்லை. எனவே அவரும், அவரது மனைவி மித்ராதேவியும் காசி சென்று இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களின் பூஜையில் மகிழ்ந்த ஈசன் அவர்கள் முன் தோன்றி புத்திரப் பேறு அருளுகிறார்.

நோய், ஊமை, செவிடு, முடம், தீய குணங்கள் உள்ள நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? இல்லை என்மீது மட்டற்ற பக்தி கொண்டு, சகல கலைகளில் வல்லவனாய் பதினாறு வருடங்கள் வாழும் மகன் வேண்டுமா என்று ஈசன் கேட்க, பதினாறு வருடங்கள் வாழும் மகனைக் கேட்கிறார் மிருகண்டு.

அதன்படி மார்க்கண்டேயர் பிறக்கிறார். சகல கலைகளில் வல்லவராய் ஈசனின் மீது பக்தி கொண்ட அவருக்கு தன் ஆயுள் பதினாறு வருடங்கள்தான் என்று தெரிய வருகிறது. எனவே ஒவ்வொரு தலமாக ஈசனை பூஜை செய்து கொண்டு வருகிறார்.

இங்கு வரும்போது அவரின் ஆயுள் முடியும் நேரம் வருகிறது. அவரின் உயிரை எடுத்துச் செல்ல எமராஜனே நேரில் வர நமச்சிவாய என்று லிங்கத்தை இறுக அனைத்துக் கொள்கிறார். எமனின் பாசக்கயிறு லிங்கத்தின் மீது படுகிறது. அதிலிருந்து வெடித்துக் கிளம்பிய ஈசன் எமனைச் சம்ஹாரம் செய்து என்றும் மார்க்கண்டேயராக வாழும் சிரஞ்சீவி நிலையை சிறுவனுக்கு அளிக்கிறார்.

“பாலனுக்காய் அன்று பாற்கடலீந்து பணைத்தெழுந்த

ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்

சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடி வந்த

காலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே”– என்று திருநாவுக்கரசர் பதிகம் பாடுகிறது.

தம் அடியவர்களுக்காய்க் காலனைக் காலால் உதைத்தவர் ஈசன். எனவே இங்கு திருமணங்கள், சதாபிஷேகம், சஷ்டியப்தி பூர்த்தி விழாக்கள் விமர்சிகையாகக் கொண்டாடப் படுகிறது.

காவிரி தென்கரைத் தலங்களில் நாற்பத்தி ஏழாவது தலமாக இருக்கும் திருக்கடையூர் சைவக் குரவர்கள் மூவராலும் பாடப் பெற்ற பிரசித்தி பெற்றது. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகவும், சக்தி பீடங்களில் கால சக்தி பீடமாகவும் திகழ்கிறது.

நாராயணனின் ஆபரணத்திலிருந்து தோன்றிய அபிராமி அன்னை பிரசித்தி பெற்ற வரப்பிரசாதி.

அமிர்தம் கடையும்போது தன்வந்தரி அமிர்த கலசத்துடன் தோன்றுகிறார். அனைவருக்கும் அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுக்கும் முன் சிவபூஜை செய்ய விரும்பிய மகாவிஷ்ணு தன் ஆபரணங்களை எல்லாம் ஓரிடத்தில் கழற்றி வைத்து விட்டு சிவா பூஜையில் ஈடுபட்டார்.அதிலிருந்து கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் அம்பிகை தோன்றுகிறாள். அன்னையைத் தொழுது அமிர்தத்தினை பங்கிட்டு அளிக்கிறார் மகாவிஷ்ணு.

சிதம்பர ரகசியம் போல், இங்கும் திருக்கடையூரில் ஒரு ரகசியம் உள்ளது. காலசம்ஹார மூர்த்தி சன்னதிக்குள் வலப்புறம் மதிலின் மேல் ஒரு யந்திரத் தகடு உள்ளது. இதை தரிசித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

ஒரு பிரம்ம கல்பத்தின் முடிவில் ஈசன், பிரம்மாவை எரித்துச் சாம்பலாக்கி விட்டார். அந்த இடம் தற்போது திருக்கடவூர் மயானம் என்று அழைக்கப்படுகிறது. பின் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பிரம்மாவை உயிர்ப்பித்து, ஞானோபதேசம் அளித்து மீண்டும் படைப்புத் தொழிலைச செய்யும் ஆற்றலை வழங்கினார்.

இங்குள்ள தீர்த்தம் கிணறு வடிவில் உள்ளது. பங்குனி மாதம் அஸ்வினி நடசத்திரத்தன்று மார்க்கண்டேயருக்காக கங்கை இக்கிணற்றில் உற்பத்தி ஆனதால் இது அஸ்வினி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

குங்கிலியக் கலைய நாயனார், காரி நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய இடம் திருக்கடையூர். அபிராமி பட்டர் நூறு பாடல்கள் பாடி, அம்மாவாசை திதியை, பௌர்ணமி திதியாக மாற்றிய அற்புதம் நிகழ்ந்த தலம்.

விழிக்கே அருளுண்டு அபிராமி வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடைக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்னைக் கூட்டினியே”

என்ற பாடலை அபிராமி பட்டர் பாடும்போது அவருடைய கட்டுகள் தளர்ந்து அன்னை காட்சி தந்து, பட்டரின் உயிரைக் காப்பாற்றுகிறாள். இங்கு வந்து அம்மை, அப்பனை வேண்டுவதன் மூலம் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அப்பரும், சம்பந்தரும் ஒன்று சேர்ந்து குங்கிலியக் கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்து இறைவனுக்குச் சேவை செய்தனர். காலசம்ஹார மூர்த்தியின் திருமேனியில் எமன் பாசக் கயிறு பட்டதன் தழும்பு உள்ளது. அஸ்வினி தீர்த்தம் மட்டுமே இறைவன் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

மிருகண்டு முனிவரின் அவதார தலம் அருகிலுள்ள மணல்மேடு என்னும் இடமாகும். பூமி தேவியின் அனுக்கிரகம் பெற்ற தலம். திருக்கடையூரில் மிருத்யுஞ்ச ஹோமம், மணிவிழா, போன்றவைகளும் செயப்படுகிறது. மற்ற இடங்களில் செய்தாலும், இத்தலத்து இறைவனை நினைத்தே மற்ற ஹோமங்கள் செய்யப்படுகிறது.

பூமாதேவி, மகாவிஷ்ணு பூஜிக்க, ஈசன் எமனை உயிர்பித்துத் தந்தார். எனவே எமதர்ம ராஜா உற்சவத் திருமேனி இங்கு காணப்படுகிறது. காலசம்ஹார மூர்த்திக்கு பதினோரு கால அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பிரகதீச மகராஜா பாவப்பிணி நீங்க ஆரம்பித்து வைத்த ஆயிரத்து எட்டு சங்காபிஷேக பூஜை இன்றுவரை சிறப்புடன் செய்யப்படுகிறது.

காவியச் சிறப்பு பெற்ற தலம். சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி இந்த ஊரைச் சேர்ந்தவள். தேரோடும் வீதியில் உள்ள அவரின் வீடு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

முதல் இராஜராஜன் கல்வெட்டு முதல் மூன்றாம் இராசராசன் வரை அனைவரின் வரலாற்றுக் குறிப்புகளும், வள்ளல் தன்மையும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு காணப்படுகின்றன. பாண்டியர்களும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள். சோழ, பாண்டிய நாயக்கர் மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சோழர்கள் கோயிலுக்கு என்று நிறைய நிலங்களை எழுதி வைத்து அதற்கு வரி தள்ளுபடி செய்திருந்தார்கள். குலோத்துங்கச் சோழன் விளக்குக்கு நிவந்தம் அளித்ததாகக் கோயில் குறிப்பொன்று தெரிவிக்கிறது. கோச்செங்கண்ணன் என்னும் அரசன் காவிரிக்கரை தோறும் ஈசனுக்கு என்று கோயில் கட்டினான்.

பிரம்மாண்டமான கோயில், கருங்கல் கட்டிடங்கள், அழகும், கலைச் சிறப்பும் மிக்க நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், புராணச் சிறப்பு என்று அமிர்தகடேஸ்வரர் தன்னை நாடி வருபவர்களுக்கு எம பயம் போக்குகிறார்.

இப்பிறவி, முற்பிறவியில் செய்த பாவனைகளைப் போக்குகிறார் சம்ஹார மூர்த்தி.

“ஓம் த்ரியம்பஹம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முகஷீய மாம்ருதாத்”

என்ற மந்திரத்தைக் கூறி ஈசனை வழிபட்டால் எப்படிப்பட்ட நோய்களையும் நீக்கி, யமபயத்தையும் போக்குகிறார் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் எனப்படும் கால சம்ஹார மூர்த்தி.

–தலைவன் தரிசனம் வளரும்…

ganesh

1 Comment

  • திருக்கடையூர் திருத்தல விவரங்கள் மிகச்சிறப்பு.நுணுக்கமான தகவல்களை சிறப்புற சொல்லியது அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *