மீன் கடையில் வேலை பார்த்த பெண் தன் மகளை டாக்டராக்கினார்

 மீன் கடையில் வேலை பார்த்த பெண் தன் மகளை டாக்டராக்கினார்

கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதைத் துண்டாக வெட்டிச் சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும்.
இதற்காக 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். காலச்சக்கரம் சுழன்ற நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரி செய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

டாக்டர் மகள், மகனுடன் ரமணி அம்மாள்

இதனால் 10-வதுக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு மருந்து, மாத்திரைகளுக்கு மாதத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜெயலட்சுமி 12-ம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார்.
தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டிய அங்கீகாரத் தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காகப் பயின்று வருகிறார். இன்னமும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களைச் சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார்.


இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு தன் கணவர் இறந்ததால் இளமைப் பருவத்தில் பல போராட்டங்களை கடந்து தன் மகளை மருத்துவ படிப்புக்காக மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி சுத்தம் செய்து தரும் கூலித்தொழில் இன்னமும் செய்து வருகிறார். அவர் பல கட்டப் போராட்டங்களை சந்திக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கு ஆதரவாக தனது வீட்டில் வளர்க்கும் வாயிலாக ஜீவனாக மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அவர்கள்தான் அவர் குடும்பத்திற்கு பாது காவலன் என்று சொல்லி, அந்த நாய்களை தெய்வமாக மதித்து தினமும் காலை வேலைக்கு செல்லும்போது தனது நாய்களை தொட்டு வணங்கிய பின்பு வேலைக்குச் செல்கிறார்.


தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல்வத்தை முழுமையாக கொடுத்த திருப்தி தாய் ரமணியின் கண்களில் தெரிகிறது. ரத்தநாள புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அரசு சார்பில் மருத்துவ உதவி வழங்கினால் அதுவே தனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கண்களில் ஈரம் கசிய ரமணி தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (31.5.2022) இன்று ரமணி அம்மா ளையும் அவரது மகள் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோரை அழைத்து வாழ்த்தினார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...