தலம்தோறும் தலைவன் | 4 | ஜி.ஏ.பிரபா
தில்லையில் நின்றாடும் நடராஜர்!!
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்பு உற்ற சீர் அடி வாய்க் கலசம் ஊன் அமுதம்
விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு
அருள் பெற்று நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ.
–திருவாசகம்.
இந்தப் பிரபஞ்சமே பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற அந்த ஐம்பூதங்களே இயக்கு சக்திகள். அந்தச் சக்தி வடிவாய் விளங்குவது ஈசன். சிலர் பிரபஞ்சம் வேறு, அதை சிருஷ்டி செய்த கர்த்தா வேறு என்று நினைக்கிறார்கள். இது மாயை.
சிவம் வேறு அல்ல. பிரபஞ்சம் வேறு அல்ல. எங்கும் நிறைந்த அந்த பிரபஞ்ச சக்திதான் நமக்குள்ளும் பூரணமாய் வியாபித்திருக்கிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் வள்ளாற் பிரானார்க்கு
வாய்க் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
என்கிறார் திருமூலர்.
இறைவன் நம் மனதில் குடியேறி விட்டால் அதைவிட இன்பம் எது? பஞ்ச பூத வடிவாய் விளங்கும் ஈசன் நம் மனதில் குடி புகுந்து விட்டால், கோவிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே, என்ற சிவவாக்கியரின் கூற்றுப்படி நாமே நடமாடும் கோவிலாகி விடுவோம்.
எங்கும் நிறைந்த ஈசனுக்கு நித்ய ஆராதனைகள் செய்யவே ஆலயங்கள். அவனின் ஒவ்வொரு சக்திக்கும், அதை விளக்கும் தத்துவமாய் ஆலயங்கள் அமைகின்றன. அதில் ஆகாயத் தத்துவத்தை விளக்கும் இடம் சிதம்பரம். கோவில் என்றாலே அது சிதம்பரம்தான். கனகசபை, திருமூலநாதர், தில்லை நாதன், நடராஜர் என்று ஆசையுடன் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலை உருவாக்கியது பதஞ்சலி முனிவர். சாதாரணமாக உருவாக்கிய கோயில் நம்ப முடியாத சக்தி பெற்றதாக மாறி விட்டது. வெளிப்புறம் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்றாலும், உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்று கூற முடியாது. இங்கு நடனக் கலையின் நாதனாக ஈசன் விளங்குகிறார்.
அசைவற்ற நிலையில் இருந்து தன்னைத்தானே நடன வடிவில் படைத்துக் கொண்ட ஈசனின் பேரானந்த நிலையே இந்த வடிவம். ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் வகையில் வெற்றிடமே மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யோக சாஸ்திரங்களை முறைப்படுத்திய பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கோயில் சிதம்பரம்.
தேவாரப்பாடல் பெற்ற முதல் தலம் சிதம்பரம். சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில் சிதம்பரம்.
ஒருமுறை சிவனுக்கும், சக்திக்கும் இடையில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. இருவரும் வாதாடும்போது சக்தியும், சிவனும் ஒரே வடிவம் என்று உணராமல், கோபத்துடன் ஈசன் தில்லையில் சக்தியை காளியாகப் பிறக்கும்படி சாபம் கொடுத்தார். வருந்திய அன்னையிடம் பூலோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் போர் நடக்க இருக்கிறது. அசுரர்களை அழிக்க நீ காளியாக அவதாரம் எடுக்க வேண்டும்.
பின்னர் நீ தில்லைவனத்தில் என்னை நோக்கித் தவம் இரு. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக நான் நடனம் ஆடுவேன். அப்போது நீ என்னிடம் போட்டி நடனம் ஆடி, சிவகாம சுந்தரியாக என்னை வந்து சேர் என்றார்.
தாரகாசுரனை அழித்த உக்ர காளி, ஈசனைத் தன்னுடன் போட்டி நடனம் ஆட அழைத்தார். அப்போது ஈசன் ஒரு காலைத் தலைக்கு மேல் தூக்கி ஊர்த்துவ நடனம் ஆட, தோற்ற சக்தி உக்கிர காளியாக தில்லையின் எல்லையில் அமர்ந்தார். மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், தேவர்களும் அன்னையை வேண்ட, மகிழ்ந்த காளி சிவகாம சுந்தரியாக ஈசனுடன் இணைந்தார்.
ஈசன் திரு உருவத்தை பஞ்ச லோகத்தில் அமைத்து, கோவிலை நிர்மானித்தவர் தேவதச்சன் மயன். திரேதாயுகத்தில் கட்டப்பட்டதாக மாயா நூலில் செய்தி கிடைக்கிறது. சோழ மன்னர் முதலாம் ஆதித்தனார், பராந்தக சோழர் காலத்தில் சிதம்பர ஆலய கோபுரத்திற்குப் பொன் கூரை வேயப்பட்டது. இதில் 21600 தங்கத் தகடுகள், 72000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டு மொத்த நாடிகளையும், ஒரு நாளைக்கு மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிறான் என்பதையும் குறிக்கிறது.
பல்வேறு கால கட்டத்தில் பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது இக்கோயில். அன்னம் பாலிக்கும் ஈசன் என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார் தன் பதிகத்தில்.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. என்று பாடுகிறார்.
தில்லை மரங்கள் அடர்ந்து இருந்த இடமாகையால் தில்லைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது அதிகம் காணப்படுவதில்லை என்றாலும், அருகிலுள்ள பிச்சாவரத்தில் உப்பங் கழிக்கு அருகில் அதிகம் காணப்படுகின்றது.
இங்குள்ள திருமூலட்டானம் என்னும் கோயிலில் அர்த்தஜாமப் பூஜை முடிந்த பின்னர் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் இந்த மூலத்தானத்தில் அடங்குவதாக ஐதீகம். சிற்றம்பலம் உள்ளே செல்ல ஐந்து படிகள் உள்ளன. இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்கள் உள்ள நூலை இப்படியில் வைத்தபோது, இங்குள்ள யானைகளில் ஒன்று அதை எடுத்து நடராசர் திருவடியில் வைத்ததால் அந்நூல் திருக்களிற்றுப் படியார் என்ற பெயர் பெற்றது.
சிற்றம்பலம், பொன்னம்பலம், கனகசபை, பேரம்பலம், நிருத்தசபை என்று பஞ்சசபைகள் உள்ளன.சிற்றம்பலத்தில் ஈசன் திருநடனம் புரிகின்றார். ஊர்த்துவ தாண்டவம் புரிந்த இடம் நிறுத்த சபை. மாணிக்கவாசகர் புத்த வாதில் வெற்றி பெற்று, ஊமைப்பெண்ணை பேச வைத்த இடம் சிதம்பரம்.
தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இங்குதான்.
திருநீலகண்ட நாயனர்ர் அவதரித்த தலம். சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி தடைபட்ட தேரை ஓடச் செய்த தலமும் இதுவே. நால்வர் பாடிய திருமுறைகளை இராசராசன் வேண்டுதலின் பேரில், நம்பியாண்டார் நம்பி, பொல்லாப் பிள்ளையார் துணை கொண்டு வெளிப்படுத்திய இடம் சிதம்பரம்.
திருத்தொண்டர் புராணம் பாட சேக்கிழார் பெருமானுக்கு முதல் அடி “உலகெலாம்” என்று எடுத்துக் கொடுத்து, அரங்கேற்றம் செய்யப்பட இடம் இது. எல்லா அறிவும், முதன்மையும், எல்லா அனுக்கிரஹமும் உடைய முழுமுதற் பொருள் தானே. எல்லா ஆன்மாக்களும் முடிவில் தனக்குள்ளேயே அடங்குகிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் உண்மைப்பொருள் தானே என்று இங்கு உணர்த்துகிறார்.
அதை விளக்க அறுபத்தி எட்டு ஸ்தலங்களை உருவாக்கினார். அதில் ஆறு தலங்கள் சிறந்தவை. அதில் மூன்று மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று புகழப்படுகின்றன. காசி, திருவாரூர், சிதம்பரம் என்ற மூன்று தலங்கள் சிறப்பானவை. சிதம்பரத்தை திருவடிகளைத் தரிசித்தாலே முக்தி என்கிறார்கள்.
மனித உடலின் இதயப்பகுதியாக விளங்கும் இடம் சிதம்பரம். இங்கு பத்து தீர்த்தங்கள் உள்ளன. சிவயோகம் தரும் இந்தத் தீர்த்தங்களில் நீராடியவன் முக்தி அடைவான். அவனுக்குச் சகல விதமான புருஷார்த்தங்களும், மோக்ஷமும் கிடைக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன. இங்கு தினந்தோறும் திருவிழாதான். சிவனுக்குகந்த எல்லா திருவிழாக்களும் மிக விமரிசையாகச் செய்யப்படுகிறது.
சிவாலயங்களில் கர்ப்பகிரஹ கோஷ்டத்தைச் சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். ஆனால் இங்கு அந்த அமைப்பு இல்லை. இங்குள்ள நாலு கோபுரங்களும் கலைச் சிறப்பு மிக்கவை. இதில் கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. வேறு எந்த ஆலயங்களிலும் பார்க்க முடியாத அரிய சிவ வடிவங்கள் இங்கு உள்ளன.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறு இங்கு பாதுகாப்பாக வைக்கப் பட்டதாலேயே அவை நமக்குக் கிடைத்தது. இங்கு திருமுறைகள் உள்ளது என்று அறிவித்தவர் பொல்லாப் பிள்ளையார். இங்கு நடக்கும் திருவாதிரைத் திருவிழா மிகச் சிறப்பு.
சங்க இலக்கியத்தில் கலித்தொகையின் முதல் பாடல் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கும் முன்பே சிதம்பரம் கோயில் இருந்தது தெரிகிறது. நந்தனாருக்காக நந்தி விலகி வழி விட்ட இடம் இது.
வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தலம் சிதம்பரம். மாந்தரில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை. ஆனால் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் எண்ணம் கொண்டு மனிதரை ஏளனம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. கீழ் குலத்தவர் என்று நந்தனாரை ஒதுக்கிய காலத்தில், தன் இறை பக்தியால் அனைவரையும் விட உயர்ந்த இடத்தில் அமர்கிறார். இதை நந்தனார் சரித்திரம் உணர்த்துகிறது.
“ஆசைக்கடலில் விழுந்தோம், நல் அறிவுக்கரிவை இழந்தோம்
எமப் பாசமகல வழி தேடாமல் பரிதவிக்கும் பாவியானோம்” என்று நந்தனார் கீர்த்தி ஒன்று பாடுகிறது.
“சிதம்பரம் போகாமல் இருப்பேனோ, நான் ஜென்மத்தை வீணாக்கிக்
கெடுப்பேனோ?- பக்தியும் மனமும் பொருந்தினது அங்கு
பாசமும் பிதற்றலும் இங்கே”– என்கிறார் கோபாலகிருஷ்ண பாரதியார்.
“மனமே கணமும் மறவாதே- ஜெகதீசன் மலர்ப் பதமே,
மோக மூழ்கி பாழாகாதே. மாய வாழ்வு சதமா?”– என்று கேட்கிறது.
சதம் இல்லாத இந்த மாய வாழ்வில் இன்பத்தையும், வாழும் உற்சாகத்தையும் தருவது பறந்து விரிந்த பிரபஞ்ச சக்தியாய் விளங்கும் சிதம்ரம் நடராஜரே.
“நம்பிக் கெட்டவர் எவர்? உமை நாயகனை இறைவனை”
1 Comment
தில்லை அம்பலத்தான் பற்றிய திவ்யமான செய்திகள் எல்லை இலா மகிழ்ச்சியை அள்ளித்தந்தது. அருமையான கட்டுரை. வாழ்த்துகள்!