பொற்கயல் | 12 | வில்லரசன்
12. விடைபெற்றனர்
முடிந்தளவு முத்தக் கடலில் நீந்தி நனைந்து காதல் தீவில் கரை ஒதுங்கி படுத்துக் கிடந்தார்கள் மின்னவனும் பொற்கயலும். இரவு முழுவதும் துணையாக இருந்த இருள் மெல்ல மெல்ல விலகி இவர்கள் இருப்பைக் காட்டிக் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அதற்கு ஏற்ப பனிப்பகையனும் வீறுகொண்டு எழுந்தவண்ணம் இருந்தான்.
அதை உணர்ந்த மின்னவன் தன் வலக்கையைத் தலையணையாகக் கொண்டு படுத்துக்கிடக்கும் பொற்கயலிடம், “பொழுது விடிந்துவிட்டது முத்தே!” எனச் சொல்லிவிட்டு பொற்கயலின் தலையை வருடிக் கொண்டிருந்தவன் தன் விரல்களை வெளியெடுத்து அவள் முகத்தை மறைத்திருந்த கூந்தலை ஓவியம் தீட்டுவது போல் மென்மையாக விலக்கிக் காதோரம் கிடத்தினான்.
அவன் தீட்டும் ஓவியத்தை இரசித்தபடி இமைகள் மூடிப் படுத்துக் கிடந்த பொற்கயல் கண் விழித்துத் தலை தூக்கி வெறுப்புடன் வானைப் பார்த்தாள். அந்தப் பார்வை சுட்டெரிக்கும் வெய்யோனையே சுட்டெரிப்பது போல் இருந்தது. பிறகு “நேரம் இருக்கிறது!” எனச் சொல்லிவிட்டு அவன் கரத்தில் மீண்டும் சாய்ந்தாள் அவள்.
“இது போல் எத்தனை நேரம் என்னைப் பிடித்து வைத்திருப்பாய் முத்தே! இன்று நான் கோடியக்கரை நோக்கி என் பயணத்தைத் தொடங்க வேண்டும்! மறந்துவிட்டாயா?” என மின்னவன் கேட்டதும் ஏதும் பேசாமல் எழுந்து அமர்ந்தாள் பொற்கயல்.
மின்னவனும் எழுந்தமர்ந்து அவள் தோள் மீது கரம் வைத்து, “விடை கொடுக்க மாட்டாயா?” என்றான்.
“நானே வினாவாக இருக்கும் நேரம் என்னிடத்தில் எப்படி விடை கிடைக்கும்? அவனின்றி அணுவும் அசையாது என்பார்கள்! அதுபோன்று தாங்களின்றி என் மன யாழ் ஒரு நொடி கூட இன்பம் இசைக்காது! விடை கொடுக்க எனக்கு மனமில்லை மின்னவரே! அத்தனை பெரிய மனதுடையவள் அன்று உங்கள் காதலி! அதனால் தயவுகூர்ந்து அப்படியே புறப்படுங்கள்! உங்கள் முகத்தைக் கண்டுவிட்டால் எனக்கு அழுகை வந்துவிடும்! பயணம் செய்யப் போகும் உங்களை அழுது வழியனுப்ப எனக்கு விருப்பமில்லை!” சொல்லும் போதே சற்றுக் கண் கலங்கினாள் பொற்கயல்.
மின்னவன் பதில் கூறும் நிலையில் இல்லை. அவனுக்கும் அவள் முகத்தை ஏறிட்டால் அங்கிருந்து அகன்று செல்ல மனம் இணங்காது என்பதால் பொற்கயலின் கரத்தைப் பற்றி முத்தமிட்டுவிட்டு மனமில்லாமல் எழுத்து சென்றான்.
அண்டமே பிளந்தாலும் அதைத் தாங்கும் சக்தியுடைய பெண்மனம் ஏனோ ஆடவனின் பிரிவைத் தாங்க முடியாமல் ஆட்டம் கண்டு போவதைக் காணுகையில் பெண் என்பவள் எப்பேர்ப்பட்ட காதல் கொடையை இயற்கையாகவே பெற்றுள்ளாள் என்பதை வெளிக்காட்டுகிறது. பொருள் தேடிப் பிரிபவனோ, தன் பொருள் கொண்டு மறைந்தவனோ அவன் பிரிவைச் சிந்தையில் ஏந்தி தலைவி, தலைவனுக்காக எத்தனை ஏங்குகிறாள்?
இறைவனே அப்போது வந்து முன் நின்றாலும் கையில் ஓலை ஒன்றைக் கொடுத்து தூது அனுப்பி வைக்கத் தான் கருதுவாள்.
பொற்கயல் திரும்பிப் பார்க்கவில்லை.
மின்னவனும் திரும்பிப் பார்க்கவில்லை.
மின்னவன் சுவர் ஏறிக் குதித்து மறைந்துவிட்டான் என உள்ளுணர்வு சொன்ன பிறகே அவள் திரும்பிப் பார்த்தாள். அப்போது அன்று போல் இன்றும் அங்கிருந்து விர்றென்று வளரிகள் பறந்து வந்துவிடாதா? மீண்டும் மலர்களை கொய்யாதா? தன் மேனியை முத்தமிடாதா என ஏங்கினாள் அந்தப் பேதை.
அந்த ஏக்கத்துடனே அக்கை வந்து அழைத்துச் செல்லும் வரை நந்தவனத்திலேயே மின்னவனின் வாசத்தைத் துணையாக ஏற்று அமர்ந்திருந்தாள் பொற்கயல்.
பொற்கயலைப் பிரிந்த மின்னவன் உணர்சிகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்திருந்தான். நந்தவனத்தில் இருந்து அவன் குடிலை அடைவதற்குள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான்.
குடிலின் வாயிலில் வந்து நின்றவன் குடிலின் உள் இராவுத்தன் இருப்பதையும் அவன் ஏதோ பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்து, “என்ன செய்கிறாய் இராவுத்தா?” என்று கேட்டான்.
மின்னவனை பார்த்த இராவுத்தன், “தலைவரே! எப்போது வந்தீர்கள்? சற்று இருங்கள். இதை கட்ட முடியவில்லை!’ எனச் சிரமப்பட்டு மூட்டையைக் கட்டிய பிறகு எழுந்தான்.
“என்ன இது?”
“நானும் உங்களுடன் கோடியக்கரை வரப்போகிறேன்! அதற்காகச் சில பொருட்களை அல்லங்காடியில் இருந்து வாங்கி வந்துள்ளேன்!” என்றான் மகிழ்ச்சியுடன்.
“இராவுத்தா! தெரிந்து தான் பேசுகிறாயா? இது மன்னர் எனக்கு மாத்திரம் தனித்து வழங்கிய தண்டனை. நான் செல்வது சிவ பணி மேற்கொள்ள!”‘
“அறிவேன் தலைவரே! இருப்பினும் இதில் எனக்கும் பங்கு வேண்டுமென்று முதன்மை அமைச்சர் தகியுதீனையும், காலிங்கராயரையும் நேற்று இரவு சந்தித்து மன்றாடினேன்! அவர்கள் மன்னரிடம் கேட்க வேண்டுமென்றார்கள். நேராக சென்று கேட்டேன்! ‘உன் விருப்பம் அதுவென்றால் நான் தடுக்கவில்லை!’ என அனுமதி வழங்கிவிட்டார்.”
“மாமன்னர் உன்னிடம் பேசினாரா?”
“ஆம் தலைவரே!”
மின்னவனுக்கு அது சற்று மனவருத்தத்தைத் தந்தது. ‘தான் பேச வேண்டும் என்று அணுகியபோது அவர் பேசவில்லையே!’ என நினைத்தான்.
“தலைவரே! எனக்கு போர் வித்தைகளைக் கற்றுத் தந்து துணைப் படைத்தலைவனாக்கிய தங்களை அத்தனை தூரம் தனியே அனுப்பினால் என்னை விட நன்றியுணர்வு அற்ற கல் நெஞ்சம் படைத்தவன் இந்தப் பாண்டிய நாட்டில் வேறு யாரும் இருக்க முடியாது. வில் உள்ள இடம் தான் கணைக்கு ஏற்றது! அதுபோல் தலைவர் தாங்கள் இருக்கும் இடம் தான் இந்த இராவுத்தனுக்கு எல்லாம். அது வெற்றியாக இருப்பினும் சரி, தோல்வியாக இருப்பினும் சரி! உங்களைப் பிரிய எனக்கு மனமில்லை தலைவரே!”
இராவுத்தன் சொன்னதைக் கேட்டதும் மின்னவனுக்கு இதயம் உருகவே செய்தது. இராவுத்தன் தன் மீது வைத்திருக்கும் அப்பழுக்கற்ற நேசத்தை எண்ணிப் பூரித்து போனவன் அவனை முறுவலுடன் நெருங்கி, கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான்.
இராவுத்தனும் சிரிப்புடன் அவனை இரண்டு மூன்று முறை நெஞ்சோடு தழுவி அவன் சமயத்தின் மூலம் “இன்ஷாஅல்லாஹ்” எனத் தோழமை பாராட்டினான். பிறகு இருவரும் பிரிந்தனர்.
“சரி தலைவரே! ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டு வாருங்கள்! புறப்படுவோம். நமக்காக காலிங்கராயர் அவர் மாளிகையில் காத்துக் கொண்டிருப்பார்”.
மின்னவன் தனது காலைப் பணிகளை முடித்துவிட்டு நேற்றே தயார் செய்து வைத்திருந்த பயணத்திற்குத் தேவையான பொருட்களை புரவியில் ஏற்றினான். இராவுத்தனும் அவனது புரவியைத் தயார் செய்தான். பிறகு இருவரும் காலிங்கராயரைச் சந்திக்க சென்றார்கள்.
மின்னவன் எங்கிருந்து புறப்பட்டானோ அங்கேயே மீண்டும் வர வேண்டியதாக இருந்தது. அரண்மனையை ஒட்டி அமைந்திருக்கும் காலிங்கராயரின் மாளிகை தான் அது. எதிரே அதே நந்தவனம்.
மாளிகைக்கும் நந்தவனத்திற்கும் நடுவில் உள்ள பாதையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பலத்த சிந்தனையில் இருந்தார் காலிங்கராயர்.
தன்னை நோக்கி புரவிகளுடன் நடந்து வரும் மின்னவனையும் இராவுத்தனையும் கண்டதும் ஓரிடத்தில் நின்றவர் இருவரையும் வரவேற்க சிறிதாக முறுவலித்து, “வாருங்கள்!” என்றார்.
“வணக்கம் அமைச்சரே!” என்றார்கள் இருவரும்.
“கிளம்பியாகிவிட்டதா? ம்ம்ம்..” என்றவர் மின்னவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவன் முகத்தை ஆராய்ந்தார். பிறகு, “என்ன மின்னவா! முகத்தில் சோர்வுக் குறி மிகுதியாக தெரிகிறது இரவெல்லாம் துயில் நாடவில்லையா?”
அவரது இளைய பெண்ணுடன் இரவெல்லாம் சிரித்து பேசி மகிழ்ந்ததை அறியாமல் அவர் கேட்ட கேள்விக்கு, “ஒன்றுமில்லை” என்று பதிலளித்தான் மின்னவன்.
“ம்ம்.. பயணத்திற்கு தேவையானவை எல்லாம் உள்ளனவா? ஏதேனும் தேவைப்படுகிறதா?”
“அனைத்தும் உள்ளன!”
“ம்ம்ம்… பாதையையும் வழியையும் அறிவீர்களா?”
மின்னவன் கடக்க வேண்டிய தூரத்தையும் அதன் நடுவே உள்ள ஊர்களையும் தெளிவாகத் தெரிவித்ததும், “நன்று!” என்ற காலிங்கராயர்
“இதோ உங்களுக்கான இலச்சினை மற்றும் ஓலை. இவற்றை குழவர் கோவில் தலைமை நிர்வாகியிடம் சேர்த்த பிறகு உங்களுக்கான பணி தொடங்கும். பணி என்னவென்று முன்னமே முடிவாகிவிட்டது! அங்கு சென்ற பிறகு உங்களுக்கு அறிவிக்கப்படும். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்” என இலச்சினையையும் ஓலையையும் மின்னவனிடத்தில் நீட்டினார் காலிங்கராயர்.
அவற்றை பெற்று கச்சையில் பத்திரப் படுத்தினான் மின்னவன். அப்போது, “நன்றி மின்னவா!” என்றார் காலிங்கராயர்
மின்னவன் நிமிர்ந்து காலிங்கராயரைப் பார்த்தான். அவன் முகத்திலேயே ‘ஏன்?’ என்கிற கேள்வி தொனித்தது. அதைப் புரிந்து கொண்டவராக
“அத்தனை பெரும் கூட்டத்தில் என் புதல்விகளுக்கு குரல் கொடுத்தாயே அதற்கு தான்!” என்றார் அவர்.
“அது என் கடமை! நன்றி ஏதும் தேவையில்லை!”
“ம்ம்ம்!”
“அமைச்சரே, தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்…”
“தாராளமாக..!”
“நான் மாமன்னரைச் சந்திக்க இயலுமா?”
“அவரை தற்சமயம் யாரும் பார்க்க முடியாதே மின்னவா! நீ புறப்படு. நான் சொல்லிக் கொள்கிறேன்!”
‘சந்திக்கக்கூட விரும்பாத அளவு என் மீது கோபமா?’ என எண்ணிக் கொண்டான் மின்னவன்.
“புறப்படுகிறோம்!” எனக் கரம் கூப்பி வணங்கிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
அவர்கள் அங்கிருந்து செல்வதைச் சாளரத்தின் வழி மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த பொற்கயலுக்கு ஏதோ தன்னுயிரே உடலைவிட்டு பிரிவது போல் தோன்றவே அருகில் இருக்கும் அக்கை கயில்விழியின் தோளில் வாட்டத்துடன் சாய்ந்துகொண்டாள்.
காலிங்கராயரை சந்தித்த பிறகு முதன்மை அமைச்சர் தகியுதீனை பார்த்து ஆசி பெற்று பிறகு தங்கள் கீழிருக்கும் படை வீரர்கள் சிலரைச் சந்தித்தார்கள் இருவரும். நேற்றே அவர்களையும் அச்சடா கிழவர் மற்றும் மங்கம்மாள் ஆகியோரைச் சந்தித்து நிலைமையைக் கூறிய பிறகே பொற்கயலை சந்திக்கப் புறப்பட்டிருந்தான் மின்னவன்.
இன்றும் அவர்களைப் பார்த்துவிட்டு செல்ல மனம் சொல்லவே முதலில் வீரர்களிடம் பேசிமுடித்து விடைபெற்றுக்கொண்டு அவர்களைத் தொடர்ந்து அச்சடாக் கிழவரையும் மங்கம்மாளையும் சந்திக்க புறப்பட்டார்கள் மின்னவனும் இராவுத்தனும்.
இதற்கிடையில் மின்னவனைப் போல் தண்டனை பெற்ற இளைய பாண்டியனும் மனம் நிறைய கோபத்தையும் முகம் நிறைய வெறுப்பையும் சுமந்தபடியே காலிங்கராயரை சந்தித்து அவனுக்குறிய இலச்சினை மற்றும் ஓலையை பெற்றுக் கொண்டான்.
தண்டனை அடைந்ததிலிருந்து அவன் பெற்ற தாயிடம் கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. இரவு முழுவதும் மதுபானம் தான் அவனுக்கு துணையாக இருந்தது. காலை தாய் வந்து பேசியும் ஏதும் பேசாதவன் காலிங்கராயரை சந்திக்க புறப்பட்டான்.
அவரிடமும் ஏதும் பேசிக்கொள்ளாத இளையபாண்டியன் வெறுப்புடனே தன் பயணத்தை தொடங்கினான்.
அவனைத் தொடர்ந்து மாவலிவாணராயனும் தன் கோணாடு நோக்கி புறப்பட்டான். அன்று வணிக வீதிக் கூடலில் நிகழ்ந்த அச்சம்பவம் மூவரையும் மதுரையை விட்டே துரத்தி அடித்திருந்தது.
• • •
மதுரைக் கோட்டையின் மேல்தள அறையில் நின்றிருந்தான் பாண்டிய பேரரசன் மாறவர்மன் குலசேகரன். அவன் நின்றிருந்த அறையிலிருந்து சாளரத்தின் வழியே ஒட்டுமொத்தக் கோட்டையையும் காண முடியும். அப்படி அவன் நின்றுகொண்டு மூன்று வீதிகளில் தனித்தனியே செல்லும் மின்னவன், இராவுத்தன் மற்றும் இளைய பாண்டியன் ஆகிய மூவரையும் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் அப்போது…
“நீ வழங்கிய தீர்ப்பில் எனக்கு துளியளவும் மனநிறைவு இல்லை குலசேகரா!” என்றார் அவன் அருகில் வந்து நின்ற அவனது தாய் பாண்டிமாதேவி.
அவரைப் பார்த்துவிட்டு மீண்டும் பார்வையை திருப்பிய குலசேகரன் ஏதும் பேசாமல் சிறு முறுவல் காட்டினான்.
“மின்னவன் மீது பெரிதாக தவறு இருப்பதாகத் தெரியவில்லை! இருப்பினும் அவனுக்கும் இந்த தண்டனை அவசியமா? வீரபாண்டியன் மகத நாட்டில்* (தென் ஆர்க்காடு மற்றும் வட ஆர்க்காடு) ஒழுக்கமாக இருப்பானா? அங்கு அவனை பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? மின்னவன் உன் ஆருயிர் நண்பன் ஆயிற்றே! தண்டனை வழங்கிவிட்டு அவன் முகத்தைக் கூட காணாமல் இருந்து விட்டாயே குலசேகரா! உன் மனம் ஏன் கல்லாகி கொண்டே வருகிறது? சற்று முன் மின்னவனுக்காக அச்சடாக் கிழவர் வந்து உன்னிடத்தில் பேசியபோது வேண்டும் என்றால் நீங்களும் மின்னவனுடன் புறப்பட்டு விடுங்கள் என்று கடுஞ்சொற்களை வீசி விட்டாயே! நீ இதுபோல் செய்து நான் பார்த்ததில்லை குலசேகரா! உன் மனதில் என்ன இருக்கிறதோ அது அந்த பரமசிவனுக்குத் தான் தெரியும்” எனப் பெருமூச்சு விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் பாண்டிமாதேவி.
‘இங்கு காரணமின்றி எதுவும் நடக்கவில்லை தாயே ஒவ்வொரு செயலையும் ஆயிரம் முறை யோசித்து விட்டுதான் மேற்கொள்கிறேன். மெய்தான்! என் மனதை நான் வணங்கும் பரமசிவன் மட்டுமே அறிவார். எல்லாம் நல்லபடியாக நடக்கும்! நான் வழங்கிய தீர்ப்புக்கான காரணம் என்னவென்பதை கூடிய விரைவில் அறிவீர்கள்!’ என அகக்குரலில் பேசலானான் குலசேகரன்.
• • •
அச்சடாக் கிழவரது குடிலை அடைந்த மின்னவனையும் இராவுத்தனையும் வரவேற்று தழுவிக் கொண்டார் மங்கம்மாள்.
“மின்னவா! இராவுத்தா! கிளம்பிவிட்டீர்களா?” என அவர்கள் இருவரையும் உச்சி நுகர்ந்து பாசம் பொழிந்தார் மங்கம்மாள்.
மின்னவனுக்கு அவரிடத்தில் என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. இவரிடமும் இவர் கணவர் அச்சடாக் கிழவரிடமும் தாயும் பிள்ளையாக பழகி வந்ததனால் இவர்களைப் பிரிவதை எண்ணி மின்னவனும் பெரிதாக கலங்கினான். அதுவும் பெற்ற மகனிடத்தில் காட்டும் பேரன்பை தங்கள் மீது அவர்கள் காட்டுவதனால் மெழுகு போல் உருகிப் போனார்கள் மின்னவனும் இராவுத்தனும்.
“தாயே! கலங்க வேண்டாம்! நாங்கள் விரைவில் திரும்பி விடுவோம்!” என்றான் இராவுத்தன்
“விரைவில் திரும்பி விடுங்கள்! தயவுகூர்ந்து திரும்பி விடுங்கள்! உங்கள் இருவரிடமும் பேசாமல் முகம் காணாமல் நாங்கள் தவித்துக் கிடப்போம்!” என்றார் மங்கம்மாள்.
“எங்கள் பொருட்டு என்னவள் உங்களைக் காண வருவாள் தாயே! பொற்கயல் நாங்கள் இல்லாக் குறையை போக்குவாள்”
மங்கம்மாள் ஏதும் பேசாமல் மின்னவன் கன்னத்திலும் இராவுத்தன் கன்னத்திலும் முத்தம் கொடுத்து, தலை மீது கைவைத்து ஆசி வழங்கினார். பிறகு “தாயையும் காதலியையும் தனியே விட்டுவிட்டு செல்கிறீர்கள்! கவனமாக இருக்கவும்!” என்றவர் இராவுத்தனைப் பார்த்து “உனக்கும் தான்! நன்றாகச் சாப்பிட வேண்டும்!” என்றார்.
“நிச்சயமாக!” என்று சிரித்தான் இராவுத்தன்.
அப்போது குடிலுக்குள் நுழைந்த அச்சடாக் கிழவரை நோக்கி மூவரும் திரும்பினார்கள்.
சற்று முன்பு குலசேகர பாண்டியனை சந்தித்து மின்னவனுக்காகப் பரிந்து பேசிவிட்டு வந்திருந்தார் அச்சடாக் கிழவர்.
ஆனால் குலசேகரன் அவர் பேசும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் “வேண்டும் என்றால் நீங்களும் மின்னவன் உடன் புறப்பட்டு விடுங்கள்!” என்று சொல்லிவிட்டு கிளம்பியது அவருக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதுமட்டுமின்றி பாண்டிய மன்னர் இப்படிப் பேசுவார் என அவர் எதிர்பார்க்காததால் சற்று குன்றிய மனநிலையுடனே குடிலுக்கு திரும்பியிருந்தார் அச்சடாக் கிழவர். வந்தடைந்தவர் மின்னவனையும் இராவுத்தனனயும் பார்த்ததும் முகத்தை மாற்றிக் கொண்டு, “அச்சடா வந்துவிட்டீர்களா? எப்போது வந்தீர்கள்?” எனப் புன்னகைத்தவர்…
“சரி சரி! அமருங்கள் என் கைகளால் மாங்காய் போட்டு மீன் குழம்பு செய்துள்ளேன் சாப்பிடலாம்!” என உணவருந்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
மின்னவனும் இராவுத்தனும் அங்கு அமர்ந்து உணவருந்தி இருவரிடமும் பாசத்தை பொழிந்துவிட்டு பயணத்தைத் தொடங்க தயாராகினார்கள்.
வெளியே தத்தம் புரவிகளிடம் நிற்கும் இருவர் கைகளிலும் இரண்டு கயிறுகளை கட்டி விட்டார் மங்கம்மாள் கிழவி.
“இவை எப்போதும் உங்களுக்கு துணை இருக்கும்!” எனச் சொல்லிக் கொண்டே கட்டினார். இராவுத்தனும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டான்.
“சரி சென்று வருகிறேன்” என மங்கம்மாள் கிழவியின் கன்னத்தைத் தட்டிவிட்டு, அச்சடாக் கிழவர் தோளில் இருக்கும் துண்டை எடுத்து தலைப்பாகையாக அவருக்கு கட்டிவிட்டுவிட்டு அவர் மீசையை முறுக்கி விட்டான் மின்னவன்.
“விரைவில் திரும்பி விடுங்கள் படைத் தலைவரே!” என்றார் அச்சடாக் கிழவர்
“நிச்சயமாக! மிகுந்த நாட்கள் காக்க வைக்க மாட்டோம். வருகிறோம்”.
“சென்று வருகிறேன் தாயே! சென்று வருகிறேன் தந்தையே!’ என இராவுத்தனும் அவர்களிடத்தில் ஆசி பெற்றான்.
பிறகு இருவரும் தத்தம் புரவியில் ஏறி, அவற்றை தட்டிவிட அவை கிழக்கு நோக்கி காற்றாக புறப்பட்டன.
அவர்கள் இருவரும் புரவியில் செல்வதை பார்த்த அவ்வைகைக்கரை ஜோடிக்கு ஏதோ மீண்டும் தங்கள் மகன்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வதைப் போல் தோன்றவே இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அவர்கள் செல்வதைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினார்கள்.