வி.சி.8 – நகம் | ஆர்னிகா நாசர்
விஞ்ஞான சிறுகதை தொடர் – 8
என் பெயர் கமலகண்ணன். இலக்கண சுத்தத்தின் படி பார்த்தால் என் பெயரை கமலக்கண்ணன் என்றுதான் எழுதவேண்டும் ‘க்’ வேண்டாம் என்று நான் கழற்றி விட்டேன்.
எனக்கு வயது 25 உயரம் 170செமீ தலைகேசத்தை வகிடு இல்லாமல் தூக்கி சீவியிருப்பேன். சடுகுடு ஆட போதுமான அகலநெற்றி. கம்பிளிபூச்சி புருவங்கள். உலகத்தின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வேடிக்கை பார்க்க ஆசைப்படும் கண்கள். கோல்டன் பிரேம் மூக்குக்கண்ணாடி நுனி பளபளக்கும் சதைத்த மூக்கு. ப்ராடுகேஜ் அகலமீசை. நாவல்நிற உதடுகள். கழுத்தில் புலிநக மைனர் செயின். நான் ஒரு கட்டடக்கலை வல்லுநர்.
நான் காதல் செய்யவும் திருமணம் புரியவும் தகுதியான பிரம்மச்சாரி.
பொதுவாக இளைஞர்கள் பருவவயது பெண்களை பார்த்தால் அவர்களின் எந்த அங்கத்தை முதலில் பார்ப்பார்கள்?
மார்பகங்களைத்தானே?
தழைந்து இறங்கிய-ஏரோபிக்கிய-பலூன் போல் வீங்கிய-சிறுத்த –வற்றிய-சூரிய காந்தி மலர்களை போல மலர்ந்த –இப்படி ஆயிரம் வகைகளாய்!
நான் பெண்களின் மார்பகங்களை பார்த்து பேச மாட்டேன். பெண்களுக்கு அழகு அவர்களின் நகங்கள் தான்.
இஸ்லாமில் ஒரு நம்பிக்கை உண்டு.
சுவனத்தில் இருந்த ஆதம் தம்பதியினருக்கு இறைவன் வெளிறிய ரோஸ் நிற ஆடை உடுத்தக் கொடுத்திருந்தானாம். இறைகட்டளையை மீறி தம்பதியினர் கோதுமை கனியை தின்று விடுகிறார்கள். இறைவன் கோபம் கொள்கிறான். இதனால் இருவரின் மறைவான உறுப்புகள் உடலிருந்து வெளிப்பட ஆரம்பித்தன. ரோஸ்நிற ஆடையும் உருவப்பட்டது. ஆதம் தம்பதியினர் ஆடையை இறுக பற்ற விரல்நுனியில் மட்டும் ஒட்டிக் கொண்டு மீதி ஆடை கிழிந்தது. ஒட்டிக்கொண்ட சுவன ஆடை துண்டுதான் மனிதருக்கு நகங்கள் ஆகின.
பிறமதநம்பிக்கையாய் இருந்தாலும் இக்கதையினை நான் நம்புகிறேன்.
நகங்கள் பெண்களுக்கு இறைவன் பரிசளித்த முத்து ஆபரணங்கள்.
உன் கைகளின்
கிளைகளில்
சத்தமின்றி
அமர்ந்திருக்கும்
பத்து இருவாட்சிப்
பறவைகள்…
வேட்டைக்கு காத்திருக்கும்
நகங்கள்
– என்கிறார் கவிஞர் ரமீஸ் பிலாலி.
என் இனியவளின்
உணர்ச்சி
இல்லாத
விரல் நகம்
கூட வெட்டி எறிந்தபின்
பிரிவுத்துயர் தாளாது
அழுது
புலம்பிக் கொண்டே
இருக்கிறது
– என்கிறார் கவிஞர் வேலூர் சங்கர்.
உன் விரல் நகங்களை முத்தமிட அனுமதி கொடு
பகலின் பௌர்ணமி பத்து நிலாக்களிலும்
அல்லவா பிரகாசிக்கிறது!
வெட்கத்தால் நீ முகத்தை மூடுகிறாய்
என் இதயம் லேசர் கதிர்களால் பற்றிக் கருகுகிறது
உன் நகங்களுக்கு வண்ணப்பூச்சுகளை எப்படி பூசுவேன்?
உன் இதழ் சிவப்பை பூசி அவை
என்னையல்லவா வண்ணம் மயக்குகின்றன
நகங்களை வெட்டி என்னிடம் கொடுத்து விடு சகியே
உன்னை வாசிக்கும் அறையில் அவற்றை
விளக்குகளாக பதிந்து வைக்கிறேன்
உன் நகங்களால் என் மார்பில் கவிதை எழுதும் நாளில்
பத்து விரலுக்கும் முத்தமிட்டு பூசனை செய்கிறேன்
அதுவரை அவற்றை கையுறைகளால் மூடி வை..
காத்திருக்கிறேன்
– என்கிறார் கவிஞர் முகமது பாட்சா.
விஞ்ஞானம் என்ன சொல்கிறது தெரியுமா?
நகங்கள் கெரட்டின் என்கிற கடினமான புரோட்டீனால் ஆனவை. கைவிரல் நகங்கள் கால்விரல் நகங்களை விட வேகமாய் வளரக் கூடியவை. கைவிரல் நகங்கள் மாதத்திற்கு 3.47 மிமீ வளரும். கால்விரல் நகங்கள் 1,62மிமீ மாதத்திற்கு வளரும். கால்விரல் நகங்கள் ஒரு மனிதன் கடினமாக வேலைகள் செய்யும் போது காயத்திலிருந்து காப்பாற்றுகின்றன. ஒரு பொருளை பற்றி எடுக்க கைவிரல் நகங்கள் பயன்படுகின்றன. மிருகங்களின் நகங்கள் ஏற குழி தோண்ட சண்டையிட உதவுகின்றன.
என் பெற்றோர் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். பெண் பார்க்கும் படலம் என்பதை விட நகம் பார்க்கும் படலம் என்றே கூறலாம். முழு அலங்காரத்தில் பெண் வந்து நிற்பாள். நான் பெண்ணின் இருகைகளையும் இருகால்களையும நீட்டச் சொல்வேன்.
“நகம் அரை சந்திரவடிவத்தில் இருக்கிறதா? பெண்ணுக்கு தைராய்டு பிரச்சனை! எனக்கு இந்த பெண் வேண்டாம்!”
“நகம் வளைந்திருக்கிறதா? நாள்பட்ட நுரையீரல் இருதயநோய். எனக்கு இந்தபெண் வேண்டாம்!”
“நகம் வெண்மையாக இருக்கிறதா? ஈரல் பாதிப்பு!”
“நகம் மஞ்சளாக இருக்கிறதா? மஞ்சள் காமாலை!”
“நகம் நீலநிறமாய் இருக்கிறதா? இதயத்தில ஓட்டை!”
“நகம் வெளுத்து குழிவாய் இருக்கிறதா? இரத்த சோகை!”
“நகத்தில் வெண் திட்டுகளா? சர்க்கரைநோய்!”
தவிர பெண்கள் நெயில் பாலிஷ் போட்டிருந்தால் “இது கள்ளாட்டம். நெயில் பாலிஷை சுரண்டி விட்டு வர சொல்லுங்கள்!” என்பேன்.
பெண்களின் கால்நகங்களை எனதுமடியில் வைத்தும் கைநகங்களை எனது உள்ளங்கையில் வைத்தும் பரிசோதிப்பேன்.
விளக்கு வெளிச்சம் கண்களை ஏமாற்றும் என்பதால் சூரியவெளிச்சத்தில் வைத்து நகங்களை ஆராய்வேன்.
நான் நகங்களை ஆராய்வது வைரமதிப்பீட்டாளர் செய்கை போலிருக்கும்.
ஆராயும்வரை மௌனமாய் இருக்கும் பெண் வீட்டார் நான் பெண்ணின் நகங்களை பற்றி குறை சொன்னதும் கொதித்தெழுவர்.
“இதென்ன பெண் பார்க்கும் படலமா, மெடிக்கல் செக்அப்பா? மாப்பிள்ளையை எழுந்து போகச் சொல்லுங்கள்!”
“தீபம் நா. பார்த்தசாரதி தெரியுமா உங்களுக்கு? பிரபல தமிழ் எழுத்தாளர்! அவர் கைகளையும் கால்களையும் ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை சுத்தம் செய்வாராம். நக பராமரிப்பு ஒருகலை. வாழ்க்கையில் அழகுணர்ச்சி மிகமிக முக்கியம். உண்பதும் தூங்குவதும் குழந்தை பெற்றுக் கொள்வது மட்டுமா வாழ்க்கை? திருந்துங்கள் மக்களே!” என்பேன்.
“அப்டின்னா நீ தீபம் நா.பார்த்தசாரதியை போய் கல்யாணம் பண்ணிக்க. எங்க பொண்ணை விட்ரு!”
ஏறக்குறைய ஐம்பது பெண்களை பார்த்து என் பெற்றோர் சலித்து விட்டனர்.
“ஒரு பொண்ணு ஒல்லியா கச்சிதமா இருக்கிறாளா? நல்லா கலரா இருக்கிறாளா? படிச்சிருக்காளா? வேலைக்கு போறாளா? சமைப்பாளா? இப்படிதான் பார்க்கலாம், பிங்க்நிற நகங்கள் உள்ள பெண்ணை தேடினா லட்சம் பெண்கள்ல ஒருத்தியும் கிடைக்கமாட்டா.. எங்களை விட்ருடா கமலகண்ணா! நீயே ஒரு பெண்ணை பாத்து காதலிச்சு கூட்டிட்டுவா. கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!”
நான் சிரித்தேன்.
“ரொம்ப அலுத்துக்காதிங்க பேரன்ட்ஸ்… பிங்க் நிற நகஅழகியை வலைவீசி தேடி கண்டுபிடிப்பேன் அவளை ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராய் இருங்கள்!”
களத்தில் முனைப்பாக இறங்கினேன். பரிட்சயமான பெண்களுக்கு கை நீட்டி கை குலுக்கினேன்… குலுக்கின மறு நொடியே கைகளை உளவறிந்தேன்.
“என்ன மிஸ்டர் கமலகண்ணன்… பரமபத கட்டைகளை உருட்றமாதிரி என் கைகளை உருட்றீங்க? என் கைல என்ன இருக்கு!”
“சும்மா ரேகை பார்த்தேன்!”
“ரேகை உள்ளங்கைல பாப்பங்க… நீங்க புறங்கைல பார்க்கிறீங்க!”
“ஹிஹி… கைகளா இவை.. முயல்குட்டியின் காதுகள் போலவே இருக்கின்றன…”
“மிகவும் வர்ணிக்கிறீர்கள்… வாருங்கள் காதலிப்போம்!”
“நோ தாங்க்ஸ் சிஸ்!”
“சிஸ்ஸா? உதைப்பேன் கண்ணா!”
பகுதி நேர பணியாய் மாலை நேரங்களில் வளையல் கடைகளிலும் பேட்டா ஷோரூமிலும் வேலை பார்த்தேன்.
வளையல்கள் அணிவிக்கும் சாக்கில் பெண்களின் கைகளின் நகங்களை நோட்டமிட்டேன். செருப்புகள் அணிவிக்கும் சாக்கில் பெண்களின் கால்நகங்களை மோப்பம் பிடித்தேன். ஒன்றும் தேறவில்லை. பெடிக்யூர் மெனிக்யூர் பண்ணும் அழகுநிலையங்களில் போய் அமர்ந்தேன். அங்கும் நான் தேடும் பெண் கிடைக்கவில்லை.
ஒரு வைரம் பதித்த பிளாட்டின நாளில் ஒரு ஆர்க்கிடெக்ட் பெண் அறிமுகமானாள். ரோஜா பால் சந்தன குமிழாய் மார்பகங்கள். கோல்ப் குழியாய் தொப்புள். சொர்க்கத்தில் மிக உயர்ந்த சொர்க்கத்தின் வாசல் கதவாய் உதடுகள். மின்னல் மெழுகிய முத்துகளாய் பற்கள்.
“கிளாட் டூ மீட் யூ!” கை நீட்டினேன்.
“கிளாட் டூ மீட் யூ!” பதிலுக்கு கை நீட்டினாள்.
பற்றி குலுக்கினேன். உள்ளங்கையில் ஈஸ்ட்ரோஜென் குளிர்மை ஜிலிங்ஜிட்டாரியது.
“உங்கள் பெயர்?”
“க்ருஷ்ணலட்சுமி!”
“வெரி நைஸ் நேம். என் பெயர் கமலகண்ணன்! என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?” கைகுலுக்கலிருந்து விடுபட்ட அவளது கையை உன்னித்தேன்.
பிங்க் நிற கைவிரல் நகங்கள் மின்னி கண்ணடித்தன.
“ஓவ்! கண்டேன் எனக்கான விரல் பேரழகியை!”
“ஒரு பெரிய மாலுக்கான வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறேன். அதில் உங்கள் ஆலோசனைகளை கேட்டு பெறலாம் என வந்தேன்!”
“மகிழ்ச்சி!”
வரைபடத்தை அவளுடன் சேர்ந்து கண்ணுற்றவாறே க்ருஷ்ணலட்சுமியின் கால்களை வெறித்தேன். கால்விரல் நகங்கள் பிங்க் நிறத்தில் டாலடித்தன.
“நெயில்பாலிஷ் போடுவீர்களா க்ருஷ்ணலட்சுமி?”
“நோ… நெவர்!”
இருவரும் கைபேசி எண்களை பரிமாறிக் கொண்டோம். தினமும் பேசி காதலை வளர்த்தோம். ஒரு கட்டத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டு “ஐ லவ் யூ க்ருஷ்ணலட்சுமி!” என்றேன்.
பதில் பேசாமல் சிரித்தாள்.
“உன் பெற்றோரிடம் நம் காதலை பேசி திருமணத்துக்கு சம்மதம் பெறவா?”
“எனக்கு பெற்றோர் இல்லை… உறவினர் யாரும் இல்லை!”
“என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதம்தானே?”
ஆமோதித்து சிரித்தாள்.
நானும் க்ருஷ்ணலட்சுமியும் திருமணம் செய்து கொண்டோம்.
முதலிரவுக்கு ஒருமணி நேரத்துக்கு முன்…
க்ருஷ்ணலட்சுமி அமர்ந்திருந்தாள். தனது விரல்களை வெகுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். பின் ஒவ்வொரு விரலாய் கழற்றி வைத்தாள்.
“நட்சத்திரா கிரகத்திலிருந்து பேசுகிறேன்… திட்டப்படி கமலகண்ணனை மணந்தாயா?”
“மணந்தேன்… அவன் மூலம் ஒருகுழந்தையை பெற்று நம் ஆராய்ச்சிக்கு பரிசளிக்கிறேன்!”
கழற்றி வைத்த விரல்களிலிருந்த நகங்கள் வானவில் நிறங்களில் ஜொலிஜொலித்தன!●
2 Comments
#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்
படைப்பு : (சிறுகதை) நகம்
கமலக்கண்ணன் :
திருமண வயதை எட்டியிருக்கும் இவர், திருமணத்திற்காக பெண் பார்க்க பெற்றோருடன் சென்று பெண்ணின் முகம், உடல்வாகை பார்க்காமல் கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகத்தை மட்டுமே பார்வையிடுகிறார். அப்படி பார்ப்பதன் மூலம், நிறைய பெண்களை வேண்டாம் என்றும் கடந்து சென்று விடுகிறார். ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
அவன் எதற்காக பெண்ணின் நகத்தை பார்வையிடுகிறான்? அப்படி நகத்தில் என்னதான் இருக்கிறது? அவனது பெற்றோர் சொல்வது என்ன? அவனது திருமணம் முடிகிறதா அல்லது தேடல் தொடர்கிறதா? என சில கேள்விகளையும் கொடுத்து அதற்கான பதிலையும் ரசனையாக கொடுத்திருக்காங்க.
செம என்டிங்😂😂 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது இதைத்தான் போலும்😂😂
நகங்கள் பற்றிய விளக்கம் அருமை சார். நிறத்திற்கு ஏற்ப அதன் நோயை குறிப்பிட்ட இடம் வியப்பையும் ஆர்வத்தையும் அதிகப் படுத்தியது.
சிறுகதையின் கவிதை வரிகள் மற்றும், விளக்கங்கள் இரண்டும் நன்றாக இருந்தன. மனமார்ந்த வாழ்த்துகள் சார்💐💐💐
வித்தியாசமான கதைக்களம்! அதில் என் கவிதையும். நன்றி நண்பர்