அறிந்திடாத ராகங்கள் | ராஜகம்பீரன்
என் கருத்துக்கு
நிகரான
மாற்றுக் கருத்தை
ஒருவன் உரைத்தால்
மனம்
உடைந்து போகிறேன்
என் கடவுளை
நம்பாத ஒருவன்
எதிர்க்கருத்தால்
மறுத்து விட்டால்
தாங்கிக்கொள்ள இயலாமல்
நிலைகுலைந்து போகிறேன்
இந்திரனை
வழிபட்ட
பக்தர்களைப் போலவே
இந்திரனும்
காலத்தால்
இல்லாமல்
போய் விட்டான்
என்னைப் போலவே
என் கடவுளும்
ஒரு நாள்
இல்லாமல்
போய் விடுவான்
மந்திர ஓசைகளும்
மனிதர்களைப் போலவே
ஒரு நாள்
மரணிக்கக் கூடும் என்பதை
ஏற்க இயலவில்லை
கனவுகளால்
கைவிடப் படுவதைப் போல
நம்மால்
கனவுகளை
கைவிட இயலவில்லை
எனக்கு முன்னால்
என் நம்பிக்கைகள்
இறந்து கிடப்பது
தனக்கு முன்னால்
தன் குழந்தைகள் மரணிப்பதைப் பார்க்கும்
ஒரு தாயின்
தீராத துயரம்
போல் உள்ளது
பொய்யின் தூரிகையால்
தீட்டப்பட்ட மாயச்சித்திரத்தில்
நானும்
ஒரு வண்ணமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன்
உண்மையைப் போல்
நிறமற்ற ஓவியமாக
நிலைத்திருக்க விருப்பமில்லை
யாரும்
அறிந்திடாத ராகம் ஒன்று
இசைக்கருவிக்குள்
துயில்
கொள்வதைப் போல்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
விடியலின் பெயரால்
என்னை எழுப்பி விடாதீர்கள்
உண்மையின்
கோர முகத்தை
என்னால் நெடுநேரம்
காண இயலாது
- ராஜகம்பீரன்