“அவ(ள்)தாரம்” – அத்தியாயம்..12.

 “அவ(ள்)தாரம்” – அத்தியாயம்..12.

“ பாரதியை, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறாரா? அப்பா வாயால இதை சொல்றார்! இது நிஜமா?”

தன்னை ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொண்டான் அருள்! வலித்தது! அப்பா பேசுவது நிஜம் தான்!

அவர் முகத்தை கூர்ந்து கவனித்தான்!

“ என்னடா பாக்கற? நீ என் வார்த்தைகளை நம்பலை! இதப்பாரு! இப்பவும் உன் கிட்ட எனக்கு நிறைய வருத்தமும், கோபமும் இருக்கு! அப்பானு கூட யோசிக்காம எனக்கு எதிரா செயல்பட்டு பல இடங்கள்ள என்னை அவமானப்படுத்தறே! இந்தக்குடும்பத்துலேருந்து விலகி வாழறே! இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களுக்கும் நீ தான் ஒரே வாரிசு! ஆனா ஒரு பட்டறைல, காருக்கு அடில படுத்து மெக்கானிக்கா வேலை பாக்கற? மனசு வலிக்குதுடா! சரி விடு! அதுல நான் தலையிடலை!”

“ இதப்பாருங்க! உங்களை எதிர்க்கணும்னு எனக்கு ஆசையில்லை! நீங்க செய்யற தப்பான தொழில், எத்தனை பேரை பாதிக்குது? சிதம்பரம் மகள் மேகலாவை, யாருக்கோ விற்க பார்த்தீங்க! இது மாதிரி பல பெண்கள்! பாரதி மேல திருட்டு பழி போட்டு உள்ளே தூக்கி வைக்க முயற்சி! நீங்க போட்ட திட்டம் ரெண்டும் பலிச்சிருந்தா, சிதம்பரம் கதி என்ன?”

“ அது பிசினஸ்!”

“ எது பிசினஸ்? அப்பாவி பெண்கள் வாழ்க்கையை நாசம் பண்றது வர்த்தகமா? அவங்க விடற கண்ணீர், நம்ம குடும்பத்தை வாழ வைக்குமா? இது வரைக்கும் செஞ்ச பாவங்களை எங்கே போய் கழுவப்போறீங்க?”

“ இதப்பாரு! இந்த பேச்சு வேண்டாம்! என் வர்த்தகம், புலி வாலை புடிச்ச மாதிரி! அதை நான் விட்டாலும், அது என்னை விடாது! நீ விரும்பற பாரதியை, உனக்கு கட்டி வைக்கறேன்! அவளை மருமகளா ஏத்துக்க நான் தயார்! இது போதாதா உனக்கு? சொல்லுடா!”

“ நீங்க முடிவெடுத்துட்டா, அதை உடனே நடத்திட முடியுமா?”

“ ஏன்? நீ கேட்டா, சிதம்பரம் ஒப்புக்க மாட்டாரா?”

“ தெரியலை! பாரதி சம்மதிப்பாளானு தெரியலை!”

“ ஏன் மாட்டா? பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரன் நீ! கசக்குதா அந்த பொண்ணுக்கு?”

“ நீங்க நினைக்கற மாதிரி இல்லை பாரதி! அவளை, எதையும் விலை கொடுத்து வாங்க முடியாது! எனக்கே சில சந்தேகங்கள் இருக்கு!”

“ என்ன சந்தேகம்?”

“ அதை இப்ப நான் சொல்லலை! இப்ப உங்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலைல நான் இருக்கேன்! அப்புறமா பேசலாம்!”

சிதம்பரம் வெளியில் வந்தார்! தான் விரித்த வலையில் தன் மகன் உடனே விழவில்லை என்பது அவருக்கு எரிச்சலை மூட்டியது!

“அடுத்த வலையை சிதம்பரத்துக்கு விரிக்க வேண்டும்!”

வாசுகி கணவன் க்ருஷ்ணா, அலுவலகம் வந்து விட்டான்! வந்ததும் பரபரவென தன் வேலைகளை தொடங்க, அவனது செக்ரட்டரி வர்ஷா வந்து வணக்கம் சொன்னாள்!

“ஸாரி சார்! நான் இருபது நிமிஷம் லேட்!”

“ காரணத்தை மட்டும் நீ சொன்னா போதும் வர்ஷா!”

“ அம்மாவுக்கு காலைல வீசிங் தொடங்கி, ரொம்ப அதிகமாயிடுச்சு! அப்புறம் நெபிலைசர் வச்சும், கன்ட்ரோல் ஆகலை! உடனே ஆட்டோ புடிச்சு, அடுத்த தெருவுல உள்ள 24 மணி நேர க்ளினிக் போய் அட்மிட் பண்ணினேன்! அங்கே ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு சார்!”

“ தனியா விட்டுட்டா வந்தே?”

“ தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தி இருக்கா! அவ கிட்ட அம்மாவை ஒப்படைச்சிட்டுத்தான் வந்தேன் சார்!”

“ எதுக்கு நீ வந்தே? ஒரு ஃபோன்ல சொன்னா போதாதா?”

“ சார்! அவசரமா முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு! அதை முடிக்காம நான் லீவு போடறது நியாயமில்லை!”

“ அதையெல்லாம் நான் பாத்துக்கறேன்! நீ புறப்படு! அம்மாவை வீட்ல சேர்த்து அவங்களா, செயல்படற வரைக்கும் நீ வராதே! கைல பணம் இருக்கா?”

“ ஆங், சமாளிச்சுக்கலாம் சார்!”

கேஷியரை அழைத்தான்! பத்தாயிரம் ரூபாய் தரச்சொன்னான்!

“ நான் அதை என் கணக்குலேருந்து குடுத்துர்றேன்”

வாங்கி வர்ஷாவிடம் தந்தான்!

“ சார்! இதை என் சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா புடிச்சுக்க சொல்லுங்க!”

“ அதையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் வர்ஷா! நீ உடனே புறப்படு! மற்ற வேலைகளை நான் பாத்துக்கறேன்!”

அவள் நன்றி சொல்லி புறப்பட்டாள்!

வர்ஷா அவனிடம் ஆறு வருஷங்களாக செக்ரட்டரியாக இருக்கிறாள்! அழகான, புத்திசாலி பெண்! மிடில் க்ளாசுக்கும் கீழே! ஒரு நோயாளி விதவை தாய்! நிறைய உழைத்ததால் வந்த உடல் நலக்கேடு! அம்மாவை தாங்கி பிடிக்கும் நிலை வர்ஷாவுக்கு! க்ருஷ்ணா பல உதவிகள் வர்ஷாவுக்கு செய்கிறான்! ஆரம்பத்தில் யதார்த்தமாக, வர்ஷா பற்றி பெருமையாக சொல்லி, வாசுகிக்கு அவளை அறிமுகப்படுத்த, அது ஏடாகூடமாக பற்றி கொண்டது! அதன் பிறகு ஆயிரம் கேள்விகள்! வர்ஷா வீட்டுக்கு சில சமயம் டின்னருக்கு போவான் க்ருஷ்ணா! அதை வாசுகியிடம் சொல்லி, வர்ஷா சமையலை புகழ, பிரச்னை பூதாகாரமாக வெடித்து சிதறியது! நேராக வர்ஷா வீட்டுக்கே வாசுகி வந்து விட்டாள்!

“ உனக்கும் அவருக்கும் என்னடீ உறவு? அவரை மயக்கி உன் கைக்குள்ள போட்டு வச்சிருக்கியா? உன் சமையல் அத்தனை ருசியா? இன்னும் என்னல்லாம் ருசியை அவருக்கு காட்டியிருக்கே?”

கண்டபடி பேச, அம்மா சுப்புலஷ்மி கடுப்பாகி,

“ தப்பா பேசாதீங்க! என் பொண்ணு நீங்க நினைக்கற மாதிரி இல்லை! க்ருஷ்ணாவும் தப்பானவர் இல்லை! ஒரு மனைவியே இப்படி சந்தேகப்படறது நியாயமா? உங்க புருஷனை பற்றி பேச உங்களுக்கு உரிமை உண்டு! என் மகளை பேச நீங்க யாரு?”

“ உன் பொண்ணை, ஊர் மேய விட்டா, நான் பேசத்தான் செய்வேன்!”

வாசுகி கூச்சல் போட, தெருவே கூடி விட்டது! வர்ஷா, அம்மா இருவருக்கும் அவமானமாகி விட்டது!

இந்த விவரம் வர்ஷா மூலம் தெரிந்து, க்ருஷ்ணா வாசுகியிடம் ஆத்திரப்பட, வாசுகி ரகளை செய்ய, மனைவி ரூபத்தில் ஒரு பத்ரகாளியை க்ருஷ்ணா பார்த்தது அப்போது தான்! அதன் பிறகு கொடியில் சேலை ஆடி, அதை க்ருஷ்ணா பார்த்தால் கூட, வாசுகி அதற்கும் ஒரு விமர்சனம் வைத்திருப்பாள்!

நாகரீகம் கருதி, க்ருஷ்ணா எதையும் வெளியில் சொல்வதில்லை! பாரதி மட்டும் அக்காவின் பிடாரித்தனத்தை ஒரு முறை பார்த்து விட, க்ருஷ்ணா அவளிடம் எல்லாம் சொல்லி விட்டான்!

“ நான் அவளை கேக்கறேன்! இதை சும்மா விடக்கூடாது! எதுக்கு இத்தனை குறுகின மனசு அக்காவுக்கு? உங்களை மாதிரி ஒரு புருஷன் கிடைக்க, அவ குடுத்து வச்சிருக்கணும்!”

“ வேண்டாம் பாரதி! கேக்காதே! அவ புரிஞ்சுக மாட்டா! என் பக்கம் நீ பேசினா, உன்னை தங்கைனு கூட பாக்காம, என் கூட சேர்த்து வச்சுப்பேசுவா! எதுக்கெடுத்தாலும் அப்பா வளர்ப்பு…ஒழுக்கம்னு பேசுவா, மத்தவங்க ஒழுக்கமில்லாம வளர்ந்த மாதிரி! சில பேரை திருத்தவே முடியாது பாரதி! அவங்கள்ளாம் பட்டுத்தான் திருந்தணும்!”

இது தான் க்ருஷ்ணாவின் நிலை!

பாரதி ஆஃபீசுக்கு வந்து ஒரு மணி நேரத்தில், அருள் ஃபோன் செய்தான்!

“ மத்யானம் லன்ச் ப்ரேக்ல நான் உன் ஆஃபீஸ் வர்றேன்! கொஞ்சம் அவசரமா பேசணும்! வரலாமா?”

“ வாங்க! சம்பத் உங்களை எதுவும் கேக்க மாட்டார்! நானே நிறைய சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்! சேர்ந்தே சாப்பிடலாம்!”

சொன்னபடி வந்து விட்டான்! பாரதிக்கு தனியறை! அவனை உட்கார வைத்து பரிமாறினாள்!

“ ருசியா இருக்கே! உங்கம்மா சமையலா?

“ அம்மாவுக்கு முடியலை! பல நாட்கள் நான் தான் சமைக்கறேன்! ஒரு நாள் வீட்டுக்கே சாப்பிட வாங்க! அப்பாவுக்கும் நீங்க நண்பராச்சே!”

அவன் சிரித்தான்!

“ இப்ப நான் சொல்லப்போற விஷயம் கேட்டு நீ சந்தோஷப்படுவியா? இல்லை, சந்தேகப்படுவியா?”

“ சொன்னாத்தானே தெரியும்?”

“ எங்கப்பா உன்னை, மருமகளா ஏத்துக்க தயாரா இருக்கார்!”

“ என்னையா? உங்கப்பாவா? காமடி பண்ண வேற ஆள் கிடைக்கலியா உங்களுக்கு?”

“ இல்லை பாரதி! நான் சீரியசா பேசறேன்!”

என ஆரம்பித்து, அவன் நேற்று நடந்ததை முழுமையாக சொல்லி முடிக்க,

“ இதுக்கு நீங்க எந்த பதிலும் சொல்லலியா?”

“ அதான் இங்கே வந்திருக்கேன்!”

“ அவரோட இந்த திடீர் ஞானோதயத்துக்கு என்ன காரணம்?”

“ எனக்கு அவரை பற்றின அபிப்ராயம் வேற! நீ என்ன நினைக்கற பாரதி?”

“ இதுல ஆழமான சதி இருக்கு அருள்! வேலை தந்து என்னை மடக்கி போட்டு, வேற விதமா, என்னை அழிக்க நினைச்சார்! அதை நீங்க உடைச்சிட்டீங்க! அப்புறமா கோயில்ல எங்கப்பா உங்களை அவமானப்படுத்த லாக் வச்சார்! உங்க தங்கச்சியை வச்சு உடைச்சீங்க! இப்ப பெரிய பூட்டா  போட்டு என்னை பர்மனென்டா லாக் பண்ண பாக்கறார்!”

“ இதைத்தான் நானும் நெனச்சேன்!”

“ அவருக்கு நான் எதிரி! மீடியா அதை பெரிசு பண்ணி, அவங்க பகையை தீர்த்துக்கறாங்க! இது ஒரு மாதிரி வர்த்தக யுத்தம்! அதுல என்னை பகடைக்காயா உருட்ட தொடங்கியிருக்கார் உங்கப்பா!”

“ அதுக்கு நான் விட மாட்டேன் பாரதி!”

“  உங்களை முடக்கி போடத்தான் இந்த ஆலோசனை!”

“ எப்படி பாரதி? நீ என் மனைவி ஆயிட்டா, அவருக்கு இன்னும் அது பாதகம் தானே? ஒரு வெளிப்பொண்ணுக்கு கெடுதல் செஞ்சா, வர்ற பிரச்னையை விட, மருமகளுக்கு செய்யற கெடுதல் இன்னும் நெருப்பா சமூகத்துல பற்றி எரியாதா?”

“ நல்ல கேள்வி அருள்! உங்கப்பா சாதாரண ஆள் இல்லை! பெரிய சாணக்யன்! எப்படி வேணும்னாலும் சதுரங்கத்துல காய்களை நகர்த்தற மாதிரி, இங்கே நகர்த்த திட்டம் போடுவார்! அவரோட அடுத்த மூவ் எங்கப்பா

தான்!

இதை பாரதி சொல்லும் போது, பூதம் எதிரே சிதம்பரம் நின்றார்!

“ ஒக்காருங்க சிதம்பரம்!”

“ பரவால்லை! சொல்ல வந்ததை சொல்லுங்க!”

“ ஸ்டாஃபை நிக்க வச்சு பேசலாம்! சம்பந்தியை நிக்க வைக்கலாமா?”

“ என்ன உளர்றீங்க?”

“ நடிக்காதீங்க சிதம்பரம்! உங்க மகள் பாரதியும், என் மகன் அருளும் காதலிக்கறது உங்க ஆசிகளோடன்னு எனக்கு தெரியாதா? அப்படியிருக்க, நான் தடுத்தா, அவங்க கேப்பாங்களா? நாளைக்கு நீங்களே அவங்க கல்யாணத்தை செஞ்சு வைப்பீங்க! மீடியாவும் உங்க மகளுக்கு சாதகமா இருக்கு! என்னை அவங்க வச்சு செய்யறாங்க! அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், உங்க பொண்ணு பாரதியை, எங்க வீட்டு மருமகளா கொண்டு வர்றது தான் அது!”

சிதம்பரம் பேசவில்லை!

“ என்ன? இன்ப அதிர்ச்சியா இருக்கா? பல ஆயிரம் கோடிகளுக்கு, உங்க மகள் சொந்தக்காரியாவானு நீங்களே எதிர்பாக்கலை இல்லையா?”

“ எனக்கோ, என் மகளுக்கோ எந்த ஒரு பேராசையும் என்னிக்குமே கிடையாது! பூமில கால் பதிச்சு  நடக்கத்தான் நாங்க ஆசைப்படுவோம்! ஆகாயத்துல பறக்கறதுல எங்களுக்கு உடன் பாடு இல்லை!”

“ என் பையன் காதலிக்கறானே?”

“ மெக்கானிக் அருளை மாப்பிள்ளையா ஏத்துக்க எனக்கு எந்த தடையும் இல்லை! கோடீஸ்வர அருள் வேண்டாம்! என் மகளும் அதை விரும்ப மாட்டா!”

“ அது தானா வந்து சேரும்!”

“ பாரதி, அருள் கிட்ட பேசின பிறகு இதை முடிவு செய்யலாம்!”

“ இல்லை, நான் முடிவு செஞ்சாச்சு! நான் நினைச்சதை உடனே நடத்தி பழக்கப்பட்டவன்! இதுவும் நடக்கும்!”

“ மன்னிக்கணும்! இது வர்த்தகம் இல்லை, வாழ்க்கை! நீங்க மட்டுமே முடிவெடுக்க முடியாது!”

“ என்னை பொறுத்த வரை வாழ்க்கையும், வியாபாரம் தான்! அதை நான் தான் தீர்மானிப்பேன்!”

சிதம்பரம் திரும்பி நடக்க,

“ இருங்க சிதம்பரம்! நான் இன்னும் முடிக்கலை! இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்! சாங்காலம் அஞ்சு மணிக்கு உங்க வீட்டுக்கு முறைப்படி நான் சம்பந்தம் பேச வர்றேன்! உங்க பெண்ணை என் பிள்ளைக்கு தர முடியுமானு கேக்க வரப்போறேன்! உங்க மனைவி வேண்டாம்னு சொல்லுவாங்களா?”

சிதம்பரம் முகம் மாறியது!

“ இது என் மகள் பாரதியோட வாழ்க்கை! அதுக்கு அவசரமான ஒரு முடிவை எடுக்கற உரிமை, எனக்கே இல்லாதப்ப, நீங்க பெண் கேக்க இத்தனை அவசரப்பட வேண்டியது இல்லை!”

“ நான் ஒரு முடிவை எடுத்துட்டா, என் பேச்சை நானே கேக்க மாட்டேன்! சினிமா டயலாக்கு தான்! எப்பவும் எனக்கும் பொருந்தும்! தயாரா இருங்க!”

“ இல்லை, அதை நான் விரும்பலை!”

“ அப்படியா? நீங்க சந்தோஷமா வரவேற்றா, சம்பந்தம் பேசிட்டு போவேன்! இல்லைனா, நீங்க முப்பது வருஷமா எங்கிட்ட என்னவா இருக்கீங்கனு உங்க குடும்பத்துல ஆதாரத்தோட உடைப்பேன்! எப்படியும் நான் உங்க வீட்டுக்கு வர்றது உறுதி! எப்படி வரணும்னு நீங்க முடிவெடுங்க!”

சிதம்பரம் செயலிழந்தார்!

ஆட்டத்தில் மறுபடியும் பெரிய செக்காக வைத்து விட்டார்!

பூதம் எழுந்து வந்தார்!

“ சிதம்பரம்! என் மகன் அருளுக்கே, என்னை மடக்கற அளவுக்கு புத்தி இருந்தா, எனக்கு எத்தனை இருக்கும்? பூதம் விழுந்துட்டா, எழுந்து நிக்க மாட்டான்னு யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம்! அருளை கையில வச்சிட்டு உன் மகள் எங்கிட்ட ஆடறாளா? இனி மேல் தான் என் ஆட்டத்தை அவ பாக்கப்போறா! எல்லாரும் தயாரா இருங்க!”

சிதம்பரம் வெளியே வந்து அரை மணி நேரம் உறைந்து கிடந்தார்!

அருளுக்கு ஃபோன் செய்தார்!

“ நான் உங்களை உடனே பாக்கணும்! உங்க ஒர்க் ஷாப்புக்கு வரட்டுமா?”

“ அப்பா, தன் ஆட்டத்தை தொடங்கிட்டாரா?”

(தொடரும்).

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...