வி.சி.7 – நீலக்கடல் | ஆர்னிகா நாசர்
விஞ்ஞான சிறுகதை தொடர் – 7
சென்னை துறைமுகம்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய கொள்கலன் துறைமுகம். சென்னை துறைமுகம் வருடத்திற்கு 60மில்லியன் டன் சரக்குகளை கையாள்கிறது. துறைமுக அளவு 169.97 ஹெக்டேர். துறைமுகத்தில் 8000 பணிபாதைகள் உள்ளன. துறைமுகத்தின் ஆண்டு வருமானம் 1000கோடி.
அந்தமானின் போர்ட்பிளேருக்கு செல்லும் எம்வி ஸ்வராஜ் தீப் கப்பல் பயணிகளுக்காக காத்திருந்தது.
போர்ட்பிளேருக்கும் சென்னைதுறைமுகத்துக்கும் இடையே ஆன தூரம் 1431 கிமீ. பயணநேரம் அறுபது மணி நேரம்.
பயணிகள் கொத்துகொத்தாய் கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர். ஆத்விக்கும் ஹிமாத்தியும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி காதலாய் கிசுகிசுத்தபடி கப்பலில் ஏறினர்.
ஆத்விக்குக்கு வயது 28. இளவயது சோபோல தோற்றம் அறிவுஜுவிக்கண்கள். இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிகிறான்.
ஹிமாத்தி வயது 26. ப்ரியாங்கா மோகன் சாயல். பௌதிகத்தில் டாக்டரேட் பண்ணிவிட்டு விரிவுரையாளராக பணிபுரிகிறாள்.
இருவருக்கும் திருமணமாகி ஐம்பது நாட்களே ஆகின்றன. தேனிலவு போக அந்தமானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல்வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
கப்பல் ‘பாம்’ என ஸைரன் எழுப்பியபடி புறப்பட்டது. கோடி லிட்டர் நீலதிரவத்துடன் கூடிய வங்காள விரிகுடா கண் சிமிட்டியது.
கப்பலின் மேல்தளத்தில் ஆத்விக்கும் ஹிமாத்தியும் நின்றிருந்தனர். ஆத்விக் பாடினான். “நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்.. காரணம் ஏன் கண்ணே உன் கண்ணும் நீலநிறம்..”
“ஸெவன்டீஸ் கிட்ஸ் மாதிரி பழைய பாடல்களை பாடுற ஆத்விக்?”
“பழைய பாடல்களுக்கு நான் ரசிகன்… சில பாடல்கள் காலத்தை கடந்து நிற்கும் … இந்த பாடல் ஒரு ஆல்டைம் கிரேட்!”
இப்போது கப்பலின் மேற்தளத்தில் மேற்கத்திய இசை வழிந்தது. ஜோடிஜோடியாய் ஆணும் பெண்ணும் ஆட ஆரம்பித்தனர்.
ஆத்விக்கும் ஹிமாத்தியும் கூட ஒருவர் இடுப்பில் ஒருவர் கைகோர்த்து ஆடினர்.
கப்பலின் கேப்டன் போர்ட் ஒயின் உறிஞ்சியபடி கன்ட்ரோல் பேனலில் அமர்ந்திருந்தார்.
கரையிலிருந்து ஒரு வயர்லெஸ் செய்தி பறந்து வந்தது.
ஹை பிரிக்குவன்ஸி ரேடியோ கரகரத்தது. “கேப்டன்! ஒரு கெட்ட செய்தி!”
“சொல்லுங்கள்!”
“உலகில் ஏழு சமுத்திரங்கள் உள்ளன. வடக்கு அட்லான்டிக் பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல், தெற்கு பசிபிக் பெருங்கடல், வடக்கு பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். உங்களது கப்பல் இப்போது வடகிழக்கு இந்திய பெருங்கடலில் பயணிக்கிறது. இந்திய நேரப்படி காலை 08.02மணிக்கு பசிபிக் பெருங்கடலில் இருபதுக்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்கள் வெடித்துள்ளன. அனைத்து பூகம்பங்களும் கடலுக்கு அடியில் பூத்துள்ளன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு அந்தமானுக்கு உண்டா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எனி ஹவ்… எச்சரிக்கையாக இருங்கள்!”
“நன்றி!”
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பூகம்பங்களின் ஸீஸ்மோகிராப்பை நுணுக்கமாய் பார்வையிட்டார் கேப்டன். 11.8 ரிக்டர் ஸ்கேல்!
பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தார்.
“பயணிகள் அனைவரும் கப்பலின் மேற்தளத்தில் நிற்காமல் அவரவர் கேபின்களுக்கு செல்ல வலியுறுத்தப்படுகிறார்கள்!”
மீண்டும் ரேடியோ செய்தி வந்தது.
“இந்திய நேரப்படி காலை 8.32மணிக்கு அட்லான்டிக் பெருங்கடலில் இருபதுக்கும் மேற்பட்ட பூகம்பங்கள் கடலுக்கடியில் ஒரே நேரத்தில் பூத்துள்ளன. அனைத்துமே சக்திவாய்ந்த பூகம்பங்கள் 11.2 ரிக்டர் ஸ்கேல். இந்த பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தவில்லை. கடலின் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது!”
திகிலுற்றார் கேப்டன். கடலலைகளில் பெரும் மாற்றம் வந்திருப்பதை அவதானித்தார். கடலில் ஆங்காங்கே அபாயகரமான நீர்சுழிப்புகள் ஏற்பட்டன.
மீண்டும் ரேடியோ கதறியது.
“உலகின் ஏழு கடல்களிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பூகம்பங்கள் தொடர்ந்து அதிரடித்து வருகின்றன. இந்திய பெருங்கடலிலும். அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்!”
கடல் மட்டம் குறைய ஆரம்பித்தது.
கேப்டன் விக்கித்தார். “உலகின் அனைத்து கடல் பகுதிகளும் தொடர் பூகம்பங்களால் வற்றுகிறதோ? பூகம்பங்களால் பூமியின் மையப்பகுதி வரை பேய்துவாரங்கள் ஏற்பட்டு கடல்நீர் உறிஞ்சபடுகிறதோ? உலகின் கடல் நீர் அளவு 333 மில்லியன் க்யூப்மைல்ஸ். உலகம் முழுக்க இருக்கும் கடல் நீர் வற்றிவிட்டால் கடலில் இருக்கும் மூன்றரை லட்சம் கோடி மீன்கள் எங்கே போகும்? கடலையே நம்பி வாழும் 39மில்லியன் மீனவர்கள் என்னநிலை ஆவார்கள்? உலகின் பத்து லட்சம் தீவுக்கூட்டங்கள் தீவுகள் என்கிற ஸ்தானத்தை இழக்குமே? உலகின் 835 துறைமுகங்கள் கட்டாந்தரை ஆகுமே? கடலையே நம்பி இருக்கும் இலட்சக்கணக்கான கப்பல்களின் கோடிக்கணக்கான படகுகளின் கதி?”
உதவி கேப்டன் பதறிசிதறி ஓடிவந்தான். “சென்னை துறைமுகத்தை விட்டு கிளம்பும் போது 12100அடி உயர கடல்மட்டத்தில் இருந்தோம். இப்போது 4000அடி கடல் மட்ட உயரத்தில் இருக்கிறோம். நொடிக்கு நொடி கடல் வற்றிக் கொண்டே போகிறது!”
“அமைதிப்படு!”
“எப்படி அமைதிப்படுவது? நம் கப்பலைச்சுற்றி நாம் இதுவரை பார்க்காத வினோதமான கடல் உயிரினங்கள் முட்டி மோதுகின்றன!”
“முட்டி மோதும் உயிரினங்களில் நீலத் திமிங்கலங்கள் பார்த்தாயா?”
“வேடிக்கையாக பேசாதீர்கள் கேப்டன். கப்பலில் 1140 பிரயாணிகள் உள்ளனர். பெரும்பாலானோர் புதிதாக திருமணமான ஜோடிகள் தேனிலவு கொண்டாட வந்திருக்கிறார்கள். கத்தி கதறி ஓலமிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள்!”
“அவர்களுக்கு மட்டுமா உயிர்பயம் உனக்கும் எனக்கும் கூடத்தான்…”
கடலின் நீர்மட்டம் 300அடியானது. கடல்நீர் சேறும் சகதியுமாய் கடல் உயிரினங்களின் கொலாஜ் ஓவியமாய் சொதசொதத்தது.
கப்பல் கிடுகிடு பள்ளத்தில்.
ஹிமாத்தி ஆத்விக்கை கட்டிக்கொண்டு அழுதாள். “எனக்கு பயமாயிருக்கிறது. கப்பல் சுக்குநூறாய் உடைந்துவிடுமோ? நீர் இல்லாத கடலின் ஆழத்தில் குழகுழசேறு சமாதி ஆகி விடுவோமோ?”
இப்போது கப்பல் தரைதட்டி உடைந்து நொறுங்கியது. ஹிமாத்தியும் ஆத்விக்கும் தூக்கியெறியபட்டனர். குவிந்துகிடந்த லட்சக்கணக்கான மீன்கள் மீது மெத்தென விழுந்தனர்.
பூமி அதிபர் குழுமியிருந்த மீடியா மக்களின் முன் தோன்றினார்.
“அனைவரும் வணக்கம்!”
“வணக்கத்தை தூக்கி குப்பையில் வீசுங்கள். உலகின் அனைத்து கடல் பகுதிகளும் வற்றிவிட்டன. 71சதவீதம் கடல்பகுதியும் 29சதவீதம் நிலப்பகுதியுமாய் இருந்த பூமி உல்ட்டாவாகி விட்டது. இப்போது 100சதவீதமும் நிலப்பகுதி. பூமியில் 96.5சதவீத கடல் உப்பு நீரும் 3.5 சதவீத நன்னீரும் இருந்தன. இப்போது நன்னீர் மட்டுமே. கப்பலில் பயணம் செய்தோரும் மீனவர்களும் கடல் வற்றி போன நிலங்களில் நின்று உயிருக்கு போராடுகின்றனர்!”
“உங்களின் பரிதவிப்பு எனக்கு புரிகிறது. வற்றி போன கடலில் தத்தளிப்போர் எண்ணிக்கை ஒருகோடியே 28லட்சம் பேர். உலகநாடுகளின் ஹெலிகாப்டர்களும் குறுவிமானங்களும் இதுவரை 48லட்சம் பேரை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்துவிட்டன. தொடர்ந்து மீட்கும் பணி நடந்து வருகிறது. வற்றி போன கடல் பகுதியில் நிற்கும் மக்களுக்கு உணவும் மருத்துவவசதியும் தரப்படுகின்றன”
“உலக உணவு தேவையில் பெரும்சதவீதத்தை கடல் உணவே பூர்த்தி செய்கிறது. கடல் இல்லை என்றால் உணவுக்கு சேர்க்கும் உப்புக்கு மக்கள் எங்கே போவர்? பலநாடுகளின் கப்பல்படை காணாமல் போய்விட்டதே! கப்பல் படை இல்லாததது ஒரு நாட்டின் கை ஒடிந்தது மாதிரியானது தானே? கடல் நீர்தானே மேகங்களாகி மழையாய் பொழிகிறது. இனி மழைக்கு என்ன செய்வோம்? நம்மிடம் இருக்கும் சொற்ப நன்னீர் வெகுசீக்கிரம் தீர்ந்து விடுமே… என்ன செய்யபோகிறது பூமி அரசு?”
“செயற்கை உப்பு தயாரிப்போம். குடிநீருக்கு உலகம் முழுவதும் ரேஷன் கொண்டு வருவோம். செயற்கை மழை பொழிய வைப்போம். நன்னீர் மீன்கள் வளர்ப்பை பெருக்குவோம். தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மீண்டும் பூமியில் கடல் பகுதி உருவாக்குவோம்!”
-தலைக்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் பறந்தது.
ஆத்விக்கும் ஹிமாத்தியும் கையாட்டினார்கள்.
ஏணியை கீழே எடுத்துவிட்டனர்.
ஆத்விக்கும் ஹிமாத்தியும் ஏணியை பிடித்து மேலேறினர். ஏணி இழுக்கப் பட்டது. இருவரும் ஹெலிக்குள் போய் விழுந்தனர்.
இராணுவ வீரர் ஹிமாத்தியிடம் வினவினார். “என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள் அம்மா?”
சுடிதார் பையிலிருந்து அவற்றை எடுத்தாள் ஹிமாத்தி.ஒரு ஆமைக்குஞ்சும் மூன்று கிலோ எடையுள்ள சிறு கடற்பசுவும்!
“எதற்கும் இவை?”
“கடலின் ஞாபகார்த்தமாய் இவையை வளர்க்கப்போகிறேன்!”
தரையில் போய் ஹெலிகாப்டர் நின்றது. ஆத்விக்கும் ஹிமாத்தியும் ஆமை மற்றும் கடற்பசுவுடன் இறங்கினர். !
நான்கு ஆண்டுகளுக்கு பின்…
ஆத்விக்குக்கும் ஹிமாத்திக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்து குழந்தைக்கு மூன்று வயது ஆகியிருந்தது. மகனுக்கும் நீலக்கடல் என பெயர் சூட்டியிருந்தனர்.
மகன் அம்மாவிடம் ஓடி வந்தான். “அம்மா! எனக்கொரு சந்தேகம்!”
“என்னடா செல்லம்… கேளுகேளு!”
‘கடல் கடல்ன்றாங்களே… அது எப்படி இருக்கும்?”
“கடல் தண்ணி நீலநிறத்ல இருக்கும். கடலலைகள் கரையோடு சடுகுடு ஆடிக்கிட்டே இருக்கும். கடல்ல திமிங்கலம், சுறாமீன், டால்பின் போன்ற உயிரினங்கள் வசிக்கும். நாலு வருஷத்துக்கு முன்னாடி கடல்லயிருந்து நாம கொண்டு வந்த ஆமையும் கடற்பசுவும்தான் நம்ம வீட்ல வளருது. கடல் இல்லாம பூமில மழை இல்லை. தண்ணி இல்லாம பூமி மக்கள் வாடுரோம். மீன் திங்க முடியாம மக்கள் ஆவலாதி படுராங்க மகனே!”
“திரும்ப கடல் வருமா?”
“பூமி அரசாங்கம் பூமியின் மையப்பகுதியில் செயற்கை பூகம்பங்கள் ஏற்படுத்தி மீண்டும் கடல் பூமியில் உருவாக தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுது. எப்படியும் நீ பெரிய பய்யனா வளர்றதுக்கு முன்னாடி கடல் வந்திடும். நாம கப்பலில் உல்லாச பயணம் போகும் நாளும் மீண்டும் வரும்!”
“நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்… காரணம் ஏன் கண்ணே உன் கண்ணும் நீலநிறம்…” மழலைகுரலில் பாடினான் சிறுவன் நீலக்கடல்.
தொலைத்ததை தேடி எடுப்போம் என்கிற நம்பிக்கைதானே மனித வாழ்க்கை!●
1 Comment
#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்
படைப்பு : (சிறுகதை) நீலக்கடல்
திருமணம் முடிந்து ஐம்பது நாட்களே ஆன நாயகன், நாயகி, தேன் நிலவிற்காக அந்தமானை தேர்ந்தெடுத்து, முதல் வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கப்பலில் பயணிக்கிறார்கள்.
கப்பலும் கிளம்புகிறது. மேலே அனைவரின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் களை கட்டுகிறது. அப்போது வயர்லெஸ் மூலம் செய்தி பறந்து வருகிறது. அதாவது கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது . அது இங்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று…
திடீரென்று சுனாமி வருவதற்கு பதிலாக, கடல் நீர் மட்டம் குறைகிறது அதன் பிறகு கடல் நீர் முழுவதுமாக வற்றி விடுகிறது. அதிலிருந்து இவர்கள் எப்படி மீள்கிறார்கள்? கப்பலில் பயணம் செய்தவர்களின் நிலை? கடல் நீர் மறுபடியும் வருகிறதா , அது வர அரசாங்கம் மேற்கொள்வதென்ன போன்ற சில கேள்விகளையும் கொடுத்திருக்காங்க.
கடல், அதில் வாழும் உயிரினங்கள், கடலின் பயன்பாடு, உப்பு, நன்னீர், என்று பல தகவல்களும் கொடுத்து, கடல் இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்றும் சிறுகதையில் சொல்லி இருக்காங்க.
எழுத்தாளரின் கற்பனையில் கதையோட்டம் சிறப்பு. கதை வாசிக்க அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் சார்💐💐💐