களை எடுக்கும் கலை – 6 | கோகுல பிரகாஷ்
“கதிர், கொலை செஞ்சது சதாசிவம் இல்லை… ஏன்னா…”
“ஏன் சார்…?”
“ஏன்னா… இப்போ கொலை செய்யப்பட்டதே சதாசிவம்தான்…”.
இவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என்று ஒருவரை முடிவு செய்து, கதிரவன் அவரை கைது செய்ய நினைத்துக் கொண்டு இருக்கையில், இன்ஸ்பெக்டர் ராம்குமார் சொன்ன செய்தி, கதிரவனை அப்படியே அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவர் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியது.
“சார் நீங்க சொன்னது உண்மையா…?” அதிர்ச்சி விலகாமல் கேட்டார் கதிரவன்.
“இது விளையாடுற விஷயம் இல்லை கதிர், உண்மைதான்.”
“ஒகே சார்… அப்போ நான் சம்பவ இடத்துக்கு போய் தகவல்களை சேகரிக்கிறேன்…” என்றவாறு மூன்று கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்தார் கதிரவன்.
எஸ்பி அலுவலகம்.
எஸ்பி அலுவலகத்தின் வளாகத்தில் கவலை, ஆத்திரம், கோபம் என ஏதோ ஒரு உணர்ச்சியை தங்கள் முகத்தில் ஏந்திக்கொண்டு, கையில் மனுவுடன் காத்திருந்த ஜனக் கூட்டத்தை பார்த்தபடியே உள்ளேச் சென்றார் இன்ஸ்பெக்டர் ராம்குமார்.
“வெல்கம் யங் மேன்…!” வரவேற்ற எஸ்பியின் முகத்தில் இருந்த மீசை அவருக்கு தனிக் கம்பீரத்தைக் கொடுத்தது.
அவருக்கு உத்தியோகப் பூர்வமான சல்யூட்டை வழங்கிவிட்டு, விரைப்பான உடலை நார்மலுக்கு கொண்டு வந்தார், ராம்குமார்.
“உட்காருங்க ராம்குமார்… நானே உங்க ஸ்டேஷனை விசிட் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நேரம் கிடைக்கலை… வேலை எப்படி போய்ட்டு இருக்கு…?”
“வழக்கம் போல ஸ்ட்ரெஸ் தான் சார்…”
“உங்க ஸ்டேஷனைப் பத்தி நிறைய கம்ப்ளைண்ட் வருதே ராம்…”
“எங்க ஸ்டேஷனைப் பத்தியா…? என்ன கம்ப்ளைண்ட் சார்…? புகார் குடுக்க வரவங்களைக் கூட ரொம்ப மரியாதையோட தான் ட்ரீட் பண்றோம்…”
“புகார் கொடுக்க வரவங்களை மரியாதையா ட்ரீட் பண்றீங்க சரி… குற்றவாளிகளை எப்படி ட்ரிட் பண்றீங்க…?”
“அவங்களை விசாரிக்க வேண்டிய முறையிலதான் விசாரிச்சிட்டு இருக்கோம்…”
“உங்க ஸ்டேஷன் லாக்கப்ல இருக்குறவங்க அடிக்கடி ஹாஸ்பிடல் போய்ட்டு வராங்களே, என்னக் காரணம்…? அதுவும் கை, கால் முறிஞ்சு கட்டுப் போட்டுட்டு போறாங்கன்னு கேள்விப்பட்டேன்…”
“எல்லாருக்கும் அதுபோல நடக்குறது இல்லை சார். ஒரு சிலர் கவனக்குறைவா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடறாங்க…”
“அடிக்கடி வழுக்கி விழுந்துடுறாங்க போல…”
“பாத்ரூம்ல பாசி கொஞ்சம் அதிகமாகிப் போயிடுச்சி சார்…”
“நல்லாக் கிளீன் பண்ணச் சொல்லுங்க ராம்… அடிக்கடி வழுக்கி விழுந்தா, மனித உரிமைக் கமிஷன் வரைக்கும் விஷயம் போயிடும்… அப்புறம் என்கிட்ட எந்த உதவியும் நீங்க எதிர்ப்பார்க்க முடியாது.”
“உடனே பாத்ரூமை கிளீன் பண்ணச் சொல்லிடுறேன் சார். ஆனா குற்றவாளிகளை பிடிக்கப் போகும்போது அவங்க தவறி விழுந்து அடிபட்டா என்ன செய்ய முடியும் சார்…?”
“அது பரவாயில்லை… ஸ்டேஷன் பாத்ரூம்ல அவங்க விழ வேண்டாம்னு தான் சொல்றேன். புரியுதா…? இல்லை இன்னும் விளக்கமா சொல்லணுமா…?”
“புரியுது சார்…ரெண்டு வாரம் முன்னாடி பொண்ணுங்க கிட்ட இருந்து செயின் பறிச்சிட்டு போனக் கும்பலை கைது பண்ணோம். ஆனா, அவனுங்க உள்ளூர் அரசியல்வாதிகளை வச்சிட்டு அமர்க்களம் பண்ணிட்டு இருந்தானுங்க… அதனால தான்…”
“ஓகே ஓகே… இனிமே எனக்கு கம்ப்ளைண்ட் வராத மாதிரி பார்த்துக்கோங்க…”
“ஓகே சார்…”
“ராம்… நான் ஒரு எஸ்பியா மட்டும் உன்கிட்ட பேசலை… இறந்துபோன என் நண்பனோட பையன் நீ. உன்மேல எனக்கு அக்கறை இருக்கு. நம்ம வேலைல இதெல்லாம் தவிர்க்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீ இந்த போலீஸ் வேலையை எவ்வளவு நேசிக்குறேன்னும் எனக்குத் தெரியும்… அதனால தான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்…”
“தேங்க்ஸ் அங்கிள்… சாரி, தேங்க்ஸ் சார்…”
“சரி, ரீசண்டா துர்கா காலனியில நடந்த கொலை வழக்குல எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு…?”
“இதுவரைக்கும் எதுவும் தடயம் கிடைக்கலை சார்…”
“யார் மேலயும் சந்தேகம் இல்லையா…?”
“எந்த முடிவும் எடுக்க முடியலை சார்… இடியாப்பச் சிக்கலா இருக்கு…”
“கொலைக்கான மோடிவ்…?”
“அது தெரிஞ்சிருந்தா இந்நேரம் வழக்கே முடிஞ்சிருக்கும்…”
“என்ன ராம் சொல்லிட்டு இருக்க… பல கொலை வழக்குகள்ல ஒரே வாரத்துக்குள்ள குற்றவாளிகளை கைது பண்ணியிருக்க நீ… என்னதான் பிரச்சனை இப்போ…?”
“சார் நீங்க சொல்லுற வழக்கு எல்லாம் ஏதோ திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு செய்த கொலைகள்… பல நேரங்கள்ல முதல்கட்ட விசாரணையிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்க முடிஞ்சது… ஆனா, இது பக்காவா திட்டம் போட்டு செஞ்ச கொலை…”
“புரியுது ராம்… ஆனா, இதுல சின்னத் தடயம் கூட கிடைக்கலைன்னு சொல்லுறது தான் நம்ப முடியலை… எவ்ளோ திட்டம் போட்டுப் பண்ணாலும், நமக்காக ஒரு சின்னத் தடயமாவது அங்கே காத்துகிட்டு இருக்கும். ஏதோ இடியாப்பச் சிக்கலா இருக்குன்னு சொன்னியே… அப்படி என்ன சிக்கல்…?”
“இப்போ துர்கா காலனியில, அதே அப்பார்ட்மெண்ட்ல இன்னொரு கொலை விழுந்துருக்கு சார்… முதல் கொலைக்கே இன்னும் துப்புக் கிடைக்கல…”
“இரண்டாவது கொலையா…? கொலை செய்யப்பட்டது யாரு…?”
“ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பரந்தாமனோட பக்கத்து வீட்டுக்காரர், சதாசிவம். ஓய்வுப் பெற்ற போஸ்ட் மாஸ்டர்…”
“ஒரே வாரத்துல, ஒரே அப்பார்ட்மெண்ட்ல ரெண்டு கொலைகள்… ரெண்டு பேருமே வயசானவங்க… இன்னும் நீங்க பல கோணங்கள்ல யோசிச்சு விசாரணையை துரிதப்படுத்தணும்…”
“கண்டிப்பா சார்… கதிரவன் சம்பவ இடத்துக்கு போயிருக்கார்… பரந்தாமன் கொலை செய்யப்பட்ட அதே விதத்துல தான் சதாசிவமும் கொலை செய்யப்பட்டு இருக்கார்…”
“ஓகே… இன்னும் முழுசா தகவல்களை சேகரிச்சுட்டு எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க…”
“ஷ்யூர் சார்…”
“நீங்களே வழக்கை பார்த்துக்குறீங்களா… இல்லை… தனிப்படை அமைச்சிடலாமா…?”
“இதை நான் ஒரு சவாலா எடுத்துக்கிட்டு நானே விசாரிக்குறேன் சார்…”
“குட் ஸ்ப்ரிட்… ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த வழக்குல நீங்க பல கோணங்கள்ல யோசிக்க வேண்டியிருக்கும்… என்ன உதவி வேண்டும் என்றாலும் உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்க…”
“கண்டிப்பா சார்…”
“உங்க எஸ்ஐ கதிரவன் எப்படி…?”
“ரொம்பத் திறமையானவர் சார்… எப்பவும் வழக்குகள் பற்றிய சிந்தனை தான். படிக்குறது கூட ராஜேஷ்குமார் எழுதுன கிரைம் நாவல்கள் மட்டும்தான்… நான் கூட ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி படிக்க ஆரம்பிச்சிட்டேன்.”
“ஓ! இண்டரெஸ்டிங்… உங்களுக்கு ஒரு நல்லத் துணை கிடைச்சிருக்குன்னு நினைக்குறேன்…”
“உண்மைதான் சார்…”
“ஆனா, ராஜேஷ்குமார் நாவல்களைப் படிச்சிட்டு, அந்த அளவுக்கெல்லாம் யோசிச்சிட்டு இருக்காதீங்க… அவர், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இராணுவம்னு ரொம்ப அட்வான்ஸ்டா எழுதி இருப்பார்… அந்த அளவுக்குகெல்லாம் இந்தக் வழக்கு இருக்காதுன்னு நம்புறேன்.”
“நம்ம வழக்குலயும் தகவல் தொழில்நுட்பம், இராணுவம்லாம் சம்பந்தப்பட்டு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு சார்…”
“பார்த்தீங்களா… இப்போதானே சொன்னேன். அவர் நாவல்களை மனசுல வச்சிட்டு அந்த அளவுக்கெல்லாம் யோசிக்க வேண்டாம்னு…”
“இல்லை சார்… உண்மையிலே இந்தக் கொலை வழக்குல தகவல் தொழில்நுட்பம், இராணுவம்லாம் சம்பந்தப்பட்டு இருக்கு…” என்று ஆரம்பித்த ராம்குமார், ஆரம்பம் முதல் முழுமையாக சொல்லி முடித்தார்.
சற்றுநேரம் கண்மூடி யோசித்தவர், “இந்தக் கேஸ்ல இவ்ளோ விஷயம் இருக்கா…? அப்போ சதாசிவம் ஏன் கொலை செய்யப்பட்டார்… அவருக்கும் இராணுவத்துக்கும் என்ன சம்பந்தம்…?”
“அது தான் சார் குழப்பமா இருக்கு… இராணுவம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்னு நினைக்குறதும் ஒரு யூகம் தான் சார்.”
“பேசாம இந்தக் கேஸை கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் கிட்ட கொண்டுபோய் ஆலோசனைக் கேட்கலாமா…?”
“சார், எதுக்கு முன்னாடிக் கூட அப்படி நடந்திருக்கு… ஒரு போலீஸ் ஆபிசர், கேஸ் சம்பந்தமா ராஜேஷ்குமார் சாரை போய்ப் பார்த்திருக்கார்…”
“இண்டரெஸ்டிங்… அவர் என்ன சொன்னாராம்…?
“என் கதைகளில் யார் குற்றவாளின்னு முடிவு பண்ணிட்டுத் தான், நான் கதையே எழுதுறேன்… ஆனா, அதை யூகிக்க முடியாதபடி, கதையைக் கொண்டுபோய், கடைசியில குற்றவாளியை அடையாளம் காண்பிக்குறேன்… ஆனா, உண்மையான வழக்குல குற்றவாளி யாருன்னு தெரியாது… நீங்கதான் கண்டுபிடிக்கணும்னு சொல்லி அனுப்பிட்டார்…”
இதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவர், “உண்மைதானே… அவர் கதைகள் மூலம், இப்படியெல்லாம் நடக்குமான்னு யோசிச்சிட்டு, விதவிதமான கோணங்கள்ல யோசிக்கணும்னு ஒரு ஐடியாவை எடுத்துக்கலாமே தவிர, அவர்கிட்டயே போய் ஐடியா கேட்குறதெல்லாம் ஓவர்.”
“சார், இப்போ நீங்கதானே சொன்னீங்க… அவர்கிட்ட ஐடியா கேட்கலாம்னு…”
“நான் சும்மா சொன்னேன். அதனால தானே, ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் தெரிஞ்சிருக்கு…”
“ஓகே சார்… நான் போய் சதாசிவம் கேஸைக் கவனிக்குறேன்…”
“ஓகே ராம்… நீங்க போகலாம்… அப்பப்போ கேசோட நிலவரத்தை எனக்கு இன்பார்ம் பண்ணிட்டே இருங்க…”
“ஷ்யூர் சார்…” என்றவாறு, மீண்டும் ஒரு சல்யூட்டை வழங்கிவிட்டு விறுவிறுவென வெளியேறினார் ராம்குமார்.
நள்ளிரவு நேரம்.
அந்த ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் கதிரவனும், ராம்குமாரும் சென்றுக் கொண்டிருந்த கார் சற்று மெதுவான வேகத்திலேயே சென்றுக் கொண்டிருக்க, அதிநவீன பைக்குகள் மின்னல் வேகத்தில் அவர்களை முந்திச் சென்றன.
“சிட்டில மட்டும் இருந்த பைக் ரேஸ் இன்னைக்கு நம்ம ஊருக்கும் வந்துடுச்சி பார்த்தீங்களா கதிர்…”
“ஆமா சார், கொஞ்ச நாளாவே நமக்கும் கம்ப்ளைண்ட்ஸ் வந்துட்டு இருக்கு…”
“கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு கடிவாளம் போட்டுடலாம்…”
பேசிக்கொண்டிருக்கும்போதே கார், நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் பிரவேசித்தது.
“இன்னைக்கு சாயங்காலம் ஏதோ அடிதடி கேஸ் வந்ததா சொன்னீங்களே, என்ன விஷயம், கதிர்…?”
“நிலத்தகராறு சார்… பேசிட்டு இருக்கும்போதே அடிதடியாகிடுச்சி… அடி வாங்குனவன் எப்ஐஆர் போட்டே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னுட்டு இருந்தான்.”
“ஏன் ஒத்தக் கால்ல நின்னுட்டு இருந்தான்…?” ராம்குமார் குதர்க்கமாக கேட்க,
“அவனுக்கு அடிபட்டதே இன்னொரு கால்ல தான் சார்…” என்றார் கதிரவன்.
“அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களா…?”
“இல்லை சார்… அண்ணன் தம்பிங்க…”
“அண்ணன் தம்பிங்களா…? ஒரு வயிற்றுப் பிள்ளைங்களே அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகலைன்னா… அப்புறம் எப்படி…? கடைசிவரைக்கும் எப்ஐஆர் போடாம அலைகழிச்சிட்டே இருங்க… கடைசியா அலுத்துப்போய் அவங்களே சமாதானம் ஆகிடணும்…”
“ஓகே சார்…”
திடீரென சாலையைக் கவனித்த ராம்குமார், “கதிர், அந்தத் தெருமுனைல பாருங்க…” என சொன்னதும், அவர் சொன்ன திசையில் பார்வையைப் போட்டார் கதிரவன்.
தெருவே இருளில் மூழ்கியிருக்க, அந்தத் தெருமுனையில் மட்டும் ஒரு இடத்தில் வெளிச்சம் தெரிய, அதேநேரம், போலீஸ் வாகனத்தைப் பார்த்துவிட்டு மெல்ல ஓட்டமெடுக்கத் தொடங்கியது ஒரு உருவம்.
“டிரைவர், அவனை விரட்டிப் பிடிங்க…” என்று ராம்குமார் சொன்னதும், கார் சீறியது. அந்தத் தெருமுனையை அடைந்ததும், அங்கிருந்த குறுக்குச் சந்தில் அந்த உருவம் ஓடிக்கொண்டிருக்கும் அரவம் கேட்டது. கும்மிருட்டாய் இருக்க, அந்தத் தெருமுனையில் இருந்த ஏடிஎம்-லிருந்து மட்டும் சிறிது வெளிச்சம் வந்துக் கொண்டிருந்தது.
“கதிர், அந்த டார்ச்சை எடுத்துட்டு என்னைத் தொடர்ந்து வாங்க…” என்றவாறே, அந்த சந்திற்குள் ஓடினார் ராம்குமார்.
இருபது வினாடிகளில் அந்த சந்தின் எல்லைக்கு வந்து சேர, அங்கே முட்டுச் சந்து.
அருகில் இருந்த சுவரில் ஏறி மறுபக்கம் குதித்ததும், “அம்மா” என்று ஒரு அலறல் சத்தம்.
சுவரை ஒட்டிப் படுத்திருந்த அந்த உருவத்தின் மேலேயே குதித்திருந்தார் ராம்குமார்.
அதற்குள் கதிரவனும் வந்து விடவே, இருவரும் சேர்ந்து அந்த உருவத்தை தூக்கி, அந்த சுவற்றின் மறுபக்கம் கொண்டு வந்தனர்.
கதிரவன் அந்த உருவத்தின் மேல் வெளிச்சத்தை பாய்ச்ச, பதிமூன்று, பதினான்கு வயது மதிக்கத்தக்க வகையில் ஒரு சிறுவன் நின்றுக் கொண்டிருந்தான்.
“யாருடா நீ…? இந்த நேரத்துல ஏடிஎம்ல என்னப் பண்ணிட்டு இருந்த…?”
“அப்பா காசு எடுத்துட்டு வரச் சொன்னார் சார்…”
“எங்கே காசை எடு…?”
அவன் தயங்கிக் கொண்டு நிற்க, ராம்குமார் அவன் பாக்கெட்டில் கை வைத்து பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எண்பது ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.
“எதுக்குடா இவ்வளவு பணம்… அதுவும் இந்த நேரத்துல வந்து எடுத்துட்டு இருக்க…?”
“அப்பா தான் சார் எடுத்துட்டு வரச் சொன்னார்…”
“நம்புற மாதிரி இல்லையே…? கதிர், இவனை கம்ப்ளீட்டா செக் பண்ணுங்க…”
கதிரவன் முன்னே வர “வேண்டாம் சார்…” என்றவாறு பின்னோக்கி நகரத் தொடங்கினான்.
அவனை இழுத்துப் பிடித்து அவன் சட்டைப்பையில் துழாவ, கையோடு வந்தது ஒரு ஏடிஎம் கார்ட்.
ஏடிஎம் கார்டில் இருந்த பெயரைப் பார்த்ததும், அவனை இழுத்து வண்டியில் போட்ட கதிரவன், “சார் இந்தப் பெயரைப் பாருங்க…” என்றவாறு கார்டை ராம்குமாரிடம் நீட்டினார்.
கார்டில் இருந்தப் பெயரைப் பார்த்த ராம்குமாரின் கண்கள் அப்படியே உறைந்து போய் நின்றன…
களை கலைவது தொடரும்