அவ(ள்)தாரம் | 19 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 19 | தேவிபாலா

குழந்தையுடன் அத்தனை பேரும் வீட்டுக்கு வந்துசேர, கௌசல்யா ஆரத்தி எடுத்து, குழந்தையை வரவேற்றாள்! கட்டியணைத்துக் கண்ணீர் விட்டாள்! நடந்த சகலமும் வாசுகி சொல்ல, கௌசல்யா நடுங்கிப் போனாள்!

“ எல்லாத்துக்கும் காரணம் அந்த பூதம் தான்! அவர் தான் ஆளை வச்சு குழந்தையை கடத்தியிருக்கார்! பாரதி மேல திருட்டு பழி, மேகலாவை விற்கப் பார்த்ததுனு எல்லாம் அவர் தான் செஞ்சிருக்கார்! இப்ப மாமா வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்ததும், அவரால தாங்கிக்க முடியலை! பாரதி மேல உள்ள பகையும் சேர, பழி வாங்கும் படலம் தீவிரமாகியிருக்கு! பாரதி மீடியா முன்னால உரிச்சிட்டா எல்லாத்தையும்!”

க்ருஷ்ணா சொல்ல, “அது தாங்க எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு! அவர் நம்ம குடும்பத்தை ஏன் குறி வச்சு அடிக்கறார்னு தெரியலை! அவருக்கு பண பலமும், படை பலமும் அதிகம்! இத்தனை அவமானப்பட்ட பிறகு சும்மா இருப்பாரா? நம்மால அவரோட வெறியை தாங்கிக்க முடியுமா?”

வாசுகி கேட்க, அம்மா, பாரதியிடம் வந்தாள்.

“நான் சொல்றேன்னு நீ கோவப்படாதே! இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் நீதான்! அவரை தொடர்ந்து நீ எதிர்க்கறது முதல் காரணம்! உனக்கு பக்கபலமா அவர் மகனே இருக்கறது ரெண்டாவது காரணம்! அவனை நீ விரும்பறது மூணாவது காரணம்! அப்படியும் உன்னை மருமகளா ஏத்துக்க வீடு தேடி வந்தார் அவர்! அப்பவும் நீ அவரை அவமானப்படுத்தியிருக்கே! எப்படி ஒரு பணம் படைச்ச மனுஷனால இதை தாங்கிக்க முடியும்?”

“நீ வாயை மூடு கௌசல்யா!” சிதம்பரம் கூச்சல் போட,

“என்னை நீங்க அடக்கினது போதும்! முப்பது வருஷமா நம்ம குடும்பம் வசதியா வாழ அவர் தானே காரணம்? உங்களைத் தன் வலது கையா வச்சு, அவர் நல்லது செய்யலையா? அந்த நன்றியை, உங்க மகள் மறக்கலாம்! நீங்க மறக்கலாமா? நல்லா இருந்த மனுஷனுக்கு அப்படி என்னங்க நம்ம குடும்பத்து மேல பகை? நீங்க எதுக்காக வேலையை விடணும்? அவர் பங்களாவுக்கு, இவ மருமகளா வாழப்போனா என்ன குறைஞ்சு போகும்?

சிதம்பரம் முகம் சிவந்து போனது!

“அம்மா கேக்கற கேள்விகள்ள நியாயம் இருக்கறதா எனக்கும் தோணுது!” வாசுகி சொல்ல,

“அவருக்கு இன்னொரு முகம் இருக்கு வாசுகி! அதை இங்கே சொல்ல முடியாது!” க்ருஷ்ணா சொல்ல,

“இருந்துட்டு போகட்டும்! அதுல நமக்கென்ன நஷ்டம்?”

வாசுகி கேட்க, க்ருஷ்ணா பொங்கி விட்டான்!

“அப்படீன்னா, உன்னை எதுவும் பாதிக்கலைன்னா, எல்லா தப்புக்களையும் நீ நியாயப்படுத்துவியா? பல இளம் பெண்களோட கண்ணீர்ல கட்டின மாளிகை தான் அவர் பங்களா! அவர் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்கள் எப்படி தெரியுமா? வியாபாரத்துக்காக கன்னிப்பெண்களை கூட்டிக்குடுத்து, கற்பை சூறையாடி அப்பாவி பெண்களை விபச்சாரத்துல ஈடு படுத்தி, அதுல சேர்த்த பணம் இது! பல கோடீஸ்வர காம முதலைகளோட உடல் பசிக்கு தீனி போட்டு, சேர்த்த பணம் இது! இதை புரிஞ்சு தான் அவர் மகனே அவரை விட்டு விலகி வாழறார்! அவ்ளோ ஏன்? நம்ம மேகலாவை யாருக்கோ விற்க நினைச்சவர் இந்த பூதம் தான்! அவர் நியாயமானவரா? இப்ப சொல்லுங்க!”

குடும்பமே ஸ்தம்பித்தது! கௌசல்யா குரல் நடுங்கியது!

“என்னங்க! மாப்ளை சொல்றதெல்லாம் நிஜமா? அவர் கூடவே இருக்கற உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? தெரியாதா?”

“அப்பாவுக்கு தெரியும்! எனக்கும் தெரியும்! நீ அப்பாவைக் கேள்வி கேக்காதே! அப்பாவுக்கு தாமதமா தெரிஞ்சிருக்கலாம்! அப்பா அவரோட ஆஃபீஸ்ல நிர்வாகப் பொறுப்புல இருக்கார்! இதுல அப்பாவுக்கு என்ன சம்பந்தம்? மேகலா, சிதம்பரம் மகள்னு தெரியாம தான் பூதம் இதை செஞ்சிருக்கார்! அப்பாவுக்கு இந்த உண்மை இப்பத்தான் தெரிய வந்திருக்கு! நீங்க விலகிடுங்க சார்னு அருள் சொன்னார்!”

“நாம இத்தனை நாள் பாவப்பணத்துலயா குடும்பம் நடத்தியிருக்கோம்?”

“உளறாதேம்மா! பூதம் செய்யற பாவத்துக்கு அப்பா எப்படி பொறுப்பாவார்? ஊழல் பண்ற அரசியல்வாதிகள், சேர்க்கற பாவப்பணத்துல, மக்களுக்கு செய்யும் போது மக்கள் அதை ஏத்துக்கலைனா யாருக்கு நஷ்டம்? நாம பாவம் செய்ய வேண்டாம்! அதுக்காக எது பாவப்பணம்? எது புண்ணிய பணம் தேச்சு பார்த்தா வாழ முடியும்?”

“கரெக்ட் பாரதி! மாமா விவரம் தெரிஞ்சதும் வெளில வந்தாச்சு! குழந்தை நம்ம கைக்கு பத்திரமா வந்தாச்சு! இனி இதைப்பற்றி அளவுக்கு மீறின ஆராய்ச்சி வேண்டாம்! தன் குடும்பம் வாழ, மாமா உழைச்சிருக்கார்! அதை மதிப்போம்! இனி நம்ம அடுத்த மூவ் என்ன?”

இவர்கள் பேசப்பேச சிதம்பரம் பாதி மரித்த நிலையில் இருந்தார்! அவர் முகம் வெளிறி கிடந்தது! பாரதி அருகில் வந்தாள்!

“அப்பா! நீங்க எதை நினைச்சும் கலங்க வேண்டாம்! சிப்பி வயித்துல ஜனிச்ச முத்து மாதிரி அருள்! அவர் தான் நம்ம குடும்பத்துக்கு பாதுகாவலன்! அதனால அவர் நம்ம கூட இருக்கற வரைக்கும் நமக்கு எந்த ஒரு ஆபத்தும் வராதுப்பா! நீங்க தைரியமா இருங்க!”

“நான் போய் கொஞ்சம் படுக்கறேன்மா! எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு!”

“டாக்டர் கிட்ட போகலாம்பா!”

“வேண்டாம் பாரதி! எனக்கு நோய் உடம்புல இல்லை! மனசுல! அதுக்கு மருந்தும் இல்லை!”

அவர் போய் படுத்து விட, பாரதி கலக்கமாக உணர்ந்தாள்!

ங்கே காவல் நிலையத்துக்கு தீனாவை அழைத்து வர, மீடியா கூடி விட்டது!

“எல்லாரும் கலைஞ்சு போங்க! நாங்க இவனை தனியா விசாரிச்சு உண்மையை வாங்கறோம்!”

“எங்களுக்கு நம்பிக்கை இல்லை! இதுல அந்த பெரிய மனுஷன் இருந்தா, இவனை பேச விடாம அவரோட பணம் பேசும்! இவன் வெளில வந்துடுவான்! உண்மை வெளில வரணும்! இவன் உள்ளே இருக்கணும்!”

ஒரு நியாயமான உயர் அதிகாரி வந்தார்!

“இதப்பாருங்க! என்னை நம்புங்க! நான் பணத்துக்கு விலை போக மாட்டேன்!”

அருள் உள்ளே வந்தான்!

“என் மேல உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கா? நான் உண்மையை உலகத்துக்கு சொல்றேன்! கலைஞ்சு போங்க!”

டுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் அடி தாங்காமல் அந்த தீனா, “இது பூதத்தின் வேலை தான்” என்பதைச் சொல்லிவிட, ஊடகத்துக்கு உடனே தகவல் போக, பரபரவென ஊடகம் செயல்பட தொடங்கி விட்டது. ஆஸ்பத்திரியில் பாரதி அளித்த பேட்டி, அருள் பேசியது, வர்ஷாவின் வாக்குமூலம், குழந்தை பேசியது என சகலமும், செய்தி மற்றும் பல சேனல்களில் பரபரப்பான செய்தியாக, மாலைநேர நாளிதழ்கள் வரிந்து கட்டிக்கொண்டு சுடச்சுடச் செய்திகளை பரிமாற, எங்கே திரும்பினாலும் பாரதி முகம், அருளின் ஆவேசப்பேச்சு..

பூதம் வீட்டுக்குள் முடங்கி கிடந்தார்! ஃபோனுக்கு மேல் அவருக்கு ஃபோன் வர, பலர் அவரை துளைக்க, அவர் வீட்டு வாசலில் ஊடகங்கள் வரிசைகட்டி நிற்க, பூதம் இந்த அளவுக்கு பிரச்னை பெரிதாகும் என நினைக்கவில்லை! ஆத்திரம் கரை புரண்டது! அஞ்சு அவரை நெருங்கி,

“என்னப்பா இதெல்லாம்? அண்ணனும் அந்த பாரதியும் உங்களை உரிச்சு ஊறுகாய் போடறாங்களேப்பா?”

“ஸ்டாப் இட்! எதுவும் பேசாதே! நீ வீட்டை விட்டு வெளில போகாதே! உன்னை சும்மா விட மாட்டாங்க!”

உடனே தன் வக்கீலுக்கு ஃபோனை போட்டார்!

“சார்! உங்களுக்கு முன் ஜாமீன் எடுத்தாச்சு! கவலைப்பட வேண்டாம்!”

“நான் எதுக்கு கவலைப்படப்போறேன்? உச்ச நீதிமன்ற அட்வகேட், நான் கூப்பிட்டா ஓடி வருவார்! சட்டம் என் பக்கத்துல வராது தெரியுமா? என் பணம் பாதாளம் தாண்டியும் பாயும்யா! நீ வேலையை கவனி!”

இதைச்சொன்னாலும் பதட்டத்தில் இருந்தார்! அடுத்த ஃபோனை போட்டார்!

“பத்ரி! இன்னும் 48 மணி நேரத்துல என் பையன் அருள் எனக்கு பிணமா வேணும்!”

“சார்! என்ன சொல்றீங்க? அருள் உங்க மகன்!”

“அதை நீ சொல்லி நான் தெரிஞ்சுகணுமா? போனா போகட்டும்னு இத்தனை நாள் அவனை நான் உயிரோட விட்டு வச்சது தப்பு! அவனால தான் எனக்கு இத்தனை அவமானங்கள்! அரசியல்ல, பொது வாழ்க்கைல அப்பா, மகன் சென்டிமென்டுக்கெல்லாம் அர்த்தமே இல்லை! நம்மை எது தீண்டினாலும், அதை அழிக்கறது தான் இங்கே பால பாடம்!”

“சார்! அருளை இந்த அளவுக்கு உங்களுக்கு எதிரியா மாற்றி வச்சிருக்கறது அந்த பாரதி தான்! முதல்ல நீங்க அவ கதையைத்தான் முடிக்கணும்!”

“இரு பத்ரி! நடுவுல நிறைய வேலை இருக்கு! இந்த வாரத்துல கோயில்ல வச்சு அருள்… பாரதி கல்யாணம்னு சிதம்பரம் சொல்லியிருக்கான்!”

“அதை நடக்க விடப்போறீங்களா சார்?”

“கண்டிப்பா! அருள் தாலி, அவ கழுத்துல ஏறணும்! அப்புறமா அருளை கொன்னாத்தானே பாரதி விதவையாவா? அதை நான் பார்க்க வேண்டாமா? சிதம்பரம் மகள் முதல்ல கன்னிப்பெண்! அப்புறமா விதவை! மூணாவது என்ன தெரியுமா?”

அதை அவர் சொன்னதும், அந்த பத்ரியே ஆடிப்போனான்!

“இந்த பூதம் கிட்ட மோதினா அவங்க கதி என்னானு இந்த உலகம் தெரிஞ்சுக வேண்டாமா? அவளோட அப்பன் சிதம்பரம் எங்கிட்ட என்னவா இருந்தான்? இனி என்னவா இருக்கப்போறான்? அவன் மகள் பாரதி என்னவா ஆகப்போறானு இந்த ஊரும் உலகமும் பார்க்க வேண்டாமா பத்ரி?”

“சார்! நானே ரௌடி! நீங்க பேசறதை கேட்டா எனக்கே நடுங்குது!”

“இதையெல்லாம் செய்யப்போறது நீதான்! பெரும் தொகை உன் கணக்குல ஏறும்! சந்தோஷமா இரு!”

அடுத்த அழைப்பு அவருக்கு வர, எடுத்தார்!

“சார்! அந்த பொண்ணு பேரு வர்ஷா! எல்லா தகவல்களையும் சேகரிச்சாச்சு!”

“அழகா இருக்காளே, நம்ம வர்த்தகத்துக்கு பயன்படுவானு மார்க் பண்ணினேன்! அவ தான் என்னோட இன்னிய அவமானத்துக்கு வேர்! மீடியால அவ பேச்சும் வந்துக்கிட்டே இருக்கே! அந்த குழந்தையை மீட்க இவதான் முக்கிய காரணம்! க்ருஷ்ணாவோட செயலாளர்! அவளை ஸ்பெஷலா அசிங்கப்படுத்தணும்! எதை எப்படி செய்யணும்னு நான் சொல்றேன்! அவளை தொடர்ந்து ஃபாலோ பண்ணு!”

அவமானத்தின் உச்சத்தில் இருந்தாலும் தன் ஆட்களுக்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தார் பூதம்! மீடியாவில் தொடர்ந்து செய்தி வெளியாக,

“பிரபல தொழிலதிபர் பூதம், பல சமூகவிரோதச் செயல்களை செய்து வருவதை அவரது மகன் அருளும், பாரதி என்ற பெண்ணும் வெளிச்சம் போட்டு வருகிறார்கள்! அதனால் ஆத்திரமடைந்த பூதம், பாரதியை, அவர் குடும்பத்தை தொடர்ந்து பழி வாங்கி வருகிறார்! அதன் உச்சக்கட்டமாக, பாரதி குடும்ப குழந்தையை தன் அடியாள் மூலம் கடத்தி, கொல்ல பூதம் முயல, அந்த உண்மையை அவரது பிடிபட்ட அடியாள் தீனா ஒப்புக்கொண்டு விட்டார்! பூதம் கைதாவாரா? இவர் அரசியல் செல்வாக்குள்ளவர் என்பது பரவலாக தெரிந்த உண்மை!”

ருள் நேராக பாரதி வீட்டுக்கு மாலை வந்த போது, பாரதி வீடு பரபரப்பாக இருந்தது! சிதம்பரம் உள்ளே போய்ப் படுத்தவர் வெளியே வரவேயில்லை! அவரை சற்று முன் சாப்பிட அழைக்க அம்மா போக, பல முறை அழைத்தும் அவரிடம் பதில் இல்லை! நாடித்துடிப்பு மெலிதாக இருக்க, ஆக்சிஜன் அளவும் குறைந்திருக்க, குடும்பம் பரபரப்பானது! இந்த நேரம் அருள் உள்ளே வர, பாரதி விவரம் சொல்ல,

“எனக்கு தெரிஞ்ச நியாயமான நல்ல ஆஸ்பத்திரி ஒண்ணு இருக்கு! அங்கே சாரை உடனே சேர்த்துடலாம் பாரதி!”

சிதம்பரம் கண்களை திறந்தார்! அவரால் பேசக்கூட முடியவில்லை! ஆனாலும் திணறித்திணறி பேசினார்!

“வேண்டாம் பாரதி! இந்த நிலைமைல நான் ஆஸ்பத்திரிக்கு போக விரும்பலை! நாளைக்கு நான் குறிச்ச நல்ல முகூர்த்தம்! அதுல அம்மன் கோயில்ல வச்சு பாரதி, அருள் கல்யாணம் உடனே நடக்கணும்!”

“அப்பா! இந்த நேரத்துல கல்யாணம் தேவை தானா? நீங்க குணமாகி வந்த பின்னால அது நடக்கட்டும்பா!”

“இல்மை்மா! உங்க கல்யாணம் உடனே நடக்கணும்! நான் அதை பார்க்கணும்! நம்ம குடும்பத்தலைவன் இனி நானில்லை! அருள் தான்! அருளால மட்டும் தான் உங்க எல்லாரையும் காப்பாற்ற முடியும் பாரதி! நான் சொல்றதை தயவு செஞ்சு கேளும்மா!”

“என்னங்க! நீங்க என்னவோ மாதிரி பேசறீங்க! எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு! இந்த மாதிரி பேசாதீங்க!”

“இல்லை கௌசல்யா! நான் ஏன் இதை சொல்றேன்? எதுக்கு சொல்றேன்னு அருள் தம்பிக்கு புரியும்! க்ருஷ்ணா மாப்ளைக்கும் ஓரளவு புரிஞ்சிருக்கும்! மீடியா மூச்சு விடாம முதலாளி பண்ணின தப்புக்களை கூவி கூவி ஏலம் போடறாங்க! அவரால இந்த நேத்துல வெளில தலை காட்ட முடியாது! அதுக்கு காரணம் சரியோ, தப்போ நம்ம குடும்பம் தான்! அதனால அவர் கொலை வெறில இருப்பார்! அவர் என்னல்லாம் செய்வார்னு அருளுக்கு மட்டும் தான் தெரியும்! அதனால உடனே கல்யாணம் நடந்தாகணும்!”

“அப்பா! என்னை மன்னிச்சிடுங்க! அவர் மகனை, இந்த நேரத்துல நம்ம பாரதி கல்யாணம் செஞ்சுகிட்டா, அவரோட வெறி அதிகப்படாதா? அதை குறைக்க வழி தெரியாத நாம அதை அதிகப்படுத்தலாமா?”

வாசுகி கேட்க, அருள் குறுக்கே வந்தான்!

“அவர் சொல்றது தான் நியாயம் வாசுகி! இந்த கல்யாணம் அவர் விரும்பினபடி உடனே நடக்கட்டும்!”

“அவர் நாளைக்கு அதை நடக்க விடுவாரா அருள்?” க்ருஷ்ணா கேட்க,

“அதை நான் பாத்துக்கறேன்! சார், இப்ப வெளில போக வேண்டாம்! பாரதி! நான் தர்ற நம்பருக்கு நீ போடு! ஒரு நர்ஸ் எடுப்பா! நான் பேசறேன்!”

பாரதி பேசி அருளுக்கு தர, அருள் சில உத்தரவுகளை பிறப்பிக்க, அடுத்த அரை மணியில் ஒரு மத்ய வயதை கடந்த நர்ஸ், சில பல மருத்துவ உபகரணங்களோடு காரில் வந்து இறங்கினாள்! அருளை வணங்கினாள்! சிதம்பரத்தை பரிசோதித்து, ஆக்சிஜன் வைத்து , ட்ரிப்ஸ் போட்டு, சில ஊசி மருந்துகளையும் அதில் செலுத்தினாள்! அவரது அறை ஒரு மருத்துவமனை போல ஆகி விட, அம்மா மிரள,

“பயப்பட வேண்டாம்! சாருக்கு எந்த ஆபத்தும் இல்லை! நாளைக்கு நடக்கற கல்யாணத்துல சார் அம்சமா கலந்துப்பார்! தைரியமா இருங்க!”

கல்யாணம் தொடர்பான உத்தரவுகளை சிதம்பரம், க்ருஷ்ணாவிடம் ஒப்படைக்க, க்ருஷ்ணா செயல்படத்தொடங்க, இரவு எட்டு மணிக்கு க்ருஷ்ணாவுக்கு வர்ஷாவின் அம்மா சுப்புலஷ்மி ஃபோன் செய்தார்! குரல் அழுகையில் தெறித்தது!

“என் மகள் வர்ஷாவை, நாலு ஆட்கள் கார்ல வந்து, வீடு புகுந்து, தூக்கிட்டு போறாங்க தம்பி! என் பொண்ணை காப்பாத்துங்க!”

க்ருஷ்ணா பதட்டமாக அருளிடம் இதை சொல்லும் நேரம், அந்த ஓட்டல் வாசலில் கார் நிற்க, வர்ஷாவை அதன் பினபக்க வழியாக பூதத்தின் ஆட்கள் உள்ளே கொண்டு போனார்கள்! அந்த ஏசி அறைக்குள் வர்ஷாவை கிடத்தினார்கள்! பான் பீடா போட்ட அந்த வடக்கத்தி ஆசாமி, உயர் ரக மது வாசனையுடன் மட்டமான சென்ட்டும் அடித்துக்கொண்டு குமட்டும் பார்வையுடன் வர்ஷாவை நெருங்கினான்!

–அடுத்த வாரம் க்ளைமாக்ஸ்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...