பொற்கயல் | 6 | வில்லரசன்

 பொற்கயல் | 6 | வில்லரசன்

6. யார் குற்றம்..?

சூறாவளியாக மதுரைக் கோட்டைக்குள் தனது புரவியை செலுத்தினான் இராவுத்தன். வளர்ந்த உடலும், சிவந்த மேனியுமாய் மீசையின்றி அடர்ந்த பிடரியை வைத்திருந்த இராவுத்தன் தங்களை நோக்கி அதிவேகத்தில் புரவியில் வருவதைக்கண்ட மதுரைவாசிகள் அனைவரும் திடுக்கிட்டு வழி கொடுத்து நகர்ந்தனர்.

மணல் புழுதியை கிளப்பிவிட்டு கடந்து செல்லும் அவனை, “அடேய்! அப்படி என்ன அவசரம் உனக்கு..?” என்று வீதியின் ஓரம் பணியாரம் விற்கும் கிழவி ஒருத்தி கடிந்து கொள்ளவும் செய்தாள்.

கண்மூடித்தனமாகக் கடிவாளம் இருந்தும் இல்லாதது போல் தறிகெட்டுப் புரவியைச் செலுத்தினால் யார்தான் கடிந்து கொள்ளாமல் இருப்பார்கள்? அதனால் குறைந்தது ஒரு வீதியில் ஐம்பது நபர்களாவது இராவுத்தனை குருடன், மூடன், அறிவில்லாதவன் ஆக்கியிருப்பார்கள்.

எதைப்பற்றியும் அவன் கவலைப்படவும் இல்லை, காதில் வாங்கிக் கொள்ளவும் இல்லை. மற்ற நேரங்களில் யாரேனும் முறைத்தாலே போதும்… மல்லுக்கட்ட நிற்பவன் இராவுத்தன். பெரும் முரடன். அவனிடம் வம்பு வளர்க்க பலரும் யோசிப்பார்கள். ஏனென்றால் இராவுத்தன் பலநேரங்களில் வாளால் பேசிவிடும் சுபாவம் கொண்டவன்.

அவன் தலையில் இருக்கும் பச்சைநிறத் தலைப்பாகையும் அரேபிய உடையும் தான் அவனது அடையாளம்.

இத்தனை நேரம் கண்மூடித்தனமாகப் புரவியில் பயணித்தவன் அரண்மனை முன் வந்து நின்றதும் புரவியில் இருந்து குதித்து அரண்மனை வாயிலை அடைந்தான்.

அரண்மனை வாயிலில் புரவியை நிறுத்திவிட்டு வேகவேகமாக தங்களைக் கடந்து செல்வது மின்னவனின் துணைப் படைத்தலைவன் இராவுத்தன் என்பதை அறிந்ததால் அரண்மனைமுன் காவல் நிற்கும் வீரர்கள் கூட அவன் அரண்மனைக் கட்டிடத்திற்குள் நுழைவதைப் பார்த்து தடுக்காமல் அமைதியாக நின்றிருந்தார்கள்.

அரண்மனையை வந்தடைந்த இராவுத்தன், முதலில் அங்கிருக்கும் ஒரு அறையில் சென்று யாரையோ தேடிவிட்டுப் பிறகு அரசவைக்கு வந்தவன் அங்கிருந்த அனைத்து ஆசனங்கள் மீதும் தன் பார்வையை வீசி யாரையோ தேடினான்.

அவன் தேடிய மனிதர் அங்குதான் இருந்தார். இப்பூவுலகில் விலைமதிப்பற்ற கற்களாலும் பலவகையான அழகிய வேலைப்பாடுகளுடனும் மினுமினுத்துக் கொண்டிருக்கும் பாண்டியப் பேரரசனது அரியாசனத்திற்கு வலதுபுறம் உள்ள அவரது ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட ஓலைகளை படித்துச் சோதித்தபடி பணி செய்து கொண்டிருந்தார் அவன் தேடிய முதியவர்.

திரித்த கயிறு போன்ற வெள்ளை நிறப் பிடரியைப் பின்னி அதன் முனையில் அணிகலன் ஒன்றை அணிந்திருந்தார் அவர். மைதீட்டிய கண்களும் அரேபிய உடையும் அவர் ஒரு முகமதியர் என்பதைக் காட்டியது. அந்த வயது முதிர்ந்த முகமதியர்தான் பாண்டியப் பேரரசன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் முதன்மை அமைச்சர் மாலிக் தகியுதீன்*

(மாலிக் தகியுதீன் என்பவர் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் முதன்மை அமைச்சராக பணியாற்றியவர் – The history of india as told by its own historians – elliot and dowson pg.35)

இராவுத்தன் அனுமதிகூடக் கோராமல் விறுவிறுவென அவர் முன் சென்று நிற்க, பாண்டிய நாட்டின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் தகியுதீனோ, இராவுத்தன் வந்து நிற்பதை அறிந்து,

“என்ன வேண்டும் உனக்கு..?” என கண்களைச் சுருக்கி ஓலை ஒன்றை படித்தபடியே வினவினார்.

எரிமலையாய் வந்து நிற்கும் அவன் மேல் குவளைத் தண்ணீர் தெளித்ததைப் போல் இருந்தது அமைச்சர் தகியுதீனின் மென்மையான கேள்வி.

“அங்கு வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது! நீங்கள் இங்கு சிலை போல் உட்கார்ந்துள்ளீர்கள்..?” சரசரவென்றான் இராவுத்தன்.

இராவுத்தன் எப்போதுமே முதன்மை அமைச்சர் தகியுதீனிடம் உரிமையாகப் பேசுவது வழக்கம். அமைச்சரும் அவனிடம் நட்புடன் தான் பழகுவார். தகியுதீனின் சுபாவம் அதுபோன்றது. முதல் முறை பார்ப்பவர்கள்கூட அவரிடம் நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் எவ்வளவு பழக இனிமையானவரோ, அதே அளவு மிகவும் தந்திரமும், திறமையும், நிர்வாக அறிவும் கொண்டவர். அதனால் தான் குலசேகர பாண்டியனின் அமைச்சர்களில் முதன்மையாகவராக பணியாற்றி வருகிறார்.

“என்ன நடந்துவிட்டது..?” மீண்டும் அதே மென்மையான தொனியில் கேட்டார்‌ தகியுதீன்.

அங்காடித் தெருவில் நடந்தவற்றைத் தனக்கே உரிய பாணியில் கோபமும் வேகமும் கலந்த கலவையாகத் தெரிவித்தான் அவன்.

அவன் கூறியவற்றைக் கேட்டதும் நிமிர்ந்து இராவுத்தனை பார்த்தவர் சற்று அதிர்ச்சியடைந்தவராய், “இளையபாண்டியர் மின்னவனைத் தாக்கினாரா..? ஏன்..?” என வினவினார் தகியுதீன்.

“தெரியவில்லை..! ஆனால் என் தலைவர் மீது எந்தத் தவறும் இல்லை..!”

“அதை எப்படி நீ சொல்கிறாய்..?”

“எனக்குத் தெரியும்..! என் தலைவர் தவறு செய்பவர் அல்ல..! ஏன்‌ உங்களுக்கும் அது தெரியும்”

“மின்னவன் எங்கே..?”

“தெரியாது..!”

சில மாத்திரை நேரம் யோசனையில் ஆழ்ந்தவர், இராவுத்தனைப் பார்த்து, “சரி நீ செல்!” எனத் தன் பணியை தொடர்ந்தார். ஆனால் இராவுத்தன் அகலவில்லை.

“மின்னவருக்கு இது எத்தனை பெரிய இழுக்கு..? அவரை எப்படி இப்படி அவமானப்படுத்தாலாம்..? இளையபாண்டியர் மது போதையில் இருந்திருக்கிறார்! அனைவரது முன்னும் அவமானப்படுத்தியுள்ளார்” இராவுத்தன் ஆதங்கத்தை வார்த்தைகளில் கொட்ட, மீண்டும் அவனைக் கண்ட தகியுதீன்,

“உன் புகார் மன்னர் திரும்பியதும் விசாரிக்கப்படும்..! அவ்வளவு அவசரம் என்றால் நீயே சென்று தீர்ப்பு வழங்கிவிடு.” என பாண்டிய மன்னனின் அரியாசனத்தை சுட்டிக் காட்டிவிட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார் அமைச்சர் தகியுதீன்‌.

இராவுத்தனுக்கு அவர் மீதும் அதீத கோபம் ஏற்படவே செய்தது. மேலும் அங்கு நிற்க விரும்பாதவன் கோபத்துடன் வெளியேறினான்.

அவன் செல்வதை பார்த்த முதன்மை அமைச்சர் தகியுதீன் இதில் பெரிதாக இராவுத்தனிடம் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் நிகழ்வைப் பற்றி அறிய வீரர்கள் சிலரை அனுப்பி வைத்தார்.

துரைக் கோட்டையின் பெரும் நுழைவாயிலைக் கடந்த இராவுத்தன் புரவியை நிறுத்திவிட்டுத் தன் பார்வையை நாற்புறமும் மேய விட்டான்.

அச்சம்பவத்திற்கு பிறகு அங்காடித் தெருவில் இருந்து மின்னவன் எங்கு சென்று இருப்பான் என அவனுக்குப் புலப்படவில்லை. சற்று முன்பு அங்காடி வீதிக் கூடலில் நிகழ்ந்த சம்பவம் அனைத்தையும் கேட்டறிந்தவன் விரைந்து அங்கு சென்று பார்த்தான். எவரையும் காணவில்லை. சமர்க்களம் நிகழ்ந்ததற்கான அடையாளமாய் குருதிக் கறை மாத்திரம் நிலத்தில் ஆங்காங்கே தென்பட்டது.

அங்கு சிலரிடம் விசாரித்தான். கண்டவர்கள் நிகழ்வை முழுவதுமாகச் சொன்னதும் உடனே முதன்மை அமைச்சர் தகியுதீனை சந்திக்க புறப்பட்டான். முதன்மை அமைச்சர் தகியுதீனை சந்தித்துவிட்டு வந்தவன் ஏறத்தாழ அவர்கள் தங்கியிருக்கும் படைவீடு குடில், சரம்புச் சாலை, கள்ளுக் கடை என அனைத்து இடங்களிலும் மின்னவனைத் தேடி விட்டான்.

இப்போது கோட்டைக்கு வெளியே வந்து சற்று சிந்தித்துப் பார்த்தவுடன்தான் நினைவு வந்தது அவனுக்கு. முன்னமே இரவு உணவிற்கு அச்சடா கிழவர் குடிலுக்கு மின்னவன் வரச்சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்தவன் விரைந்து தனது புரவியை அச்சடாக் கிழவரது இருப்பிடம் இருக்கும் திசையை நோக்கிச் செலுத்த, புரவியை ஓங்கி உதைத்தான். உதை வாங்கிய புரவி இருகால்களை தூக்கிக் கனைத்துவிட்டு அத்திசையில் பாய்ந்தது.

இராவுத்தன், அச்சடாக் கிழவர் குடியிருக்கும் வைகைக்கரைக் கானகத்தை வந்தடைந்ததும் தொலைவில் இருந்து குடிலை நன்கு ஆராய்ந்தான். குடிலுக்கு அருகில் மின்னவனின் புரவி நிற்பதைக் கண்ட பிறகுதான் இராவுத்தனுக்கு நிம்மதி மூச்சே வெளிவந்தது‌.

மின்னவன் அங்கு இருப்பதை அறிந்ததும் வேகவேகமாய் குடிலின் முன் சென்று புரவியை நிறுத்தியவன் அதிலிருந்து கீழே குதித்து குடிலின் உள் நுழைந்தான்.

குடிலுக்குள் நுழைந்தவன் அங்கு அச்சடாக் கிழவரும் மங்கம்மாளும் உணவருந்தி கொண்டிருக்கும் கயல்விழிக்கு இருபுறம் அமர்ந்து விசிறிக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

இராவுத்தன் தடபுடலாக உள்நுழைந்ததும் வாயிடம் கொண்டு சென்ற மான் இறைச்சியுடன் நிமிர்ந்த கயல்விழி அவனைக் கண்டாள்.

அவளைத் தொடர்ந்து அச்சடாக் கிழவரும் இராவுத்தனைப் பார்த்தார். இரவுப் பொழுதில் கண் பார்வை பெரிதும் மங்கிவிடும் என்பதால் சப்தத்தை வைத்து “யார் வந்துள்ளது?” என அச்சடாக் கிழவரின் மனைவி மங்கம்மாள் வினவ,

“அச்சடா! கொட்டகைக்குள் குதிரை புகுந்தது போல் சத்தத்துடன் வேறு யார் நுழைவார்கள்..? எல்லாம் நம் இராவுத்தன் தான்..!” கூறிவிட்டு “வா இராவுத்தா, ஏன் தாமதம்..?” என அவனை அழைத்தார் அச்சடாக் கிழவர்.

இராவுத்தன், கயல்விழி மாத்திரம் அங்கு இருப்பதை அறிந்து மின்னவனை சுற்றுமுற்றும் தேடினான். அவர்களைத் தவிர்த்து அக்குடிலினுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

“அடேய்.! உன்னைத்தான்..! ஏன் சிலைபோல் அங்கேயே நிற்கிறாய்..? உனக்கு பிடித்த இறைச்சியைத்தான் சமைத்து வைத்துள்ளேன். வந்தமர்” என்ற அச்சடாக் கிழவரின் பேச்சை காதில் வாங்காத இராவுத்தன், “தவைவர் எங்கே..?” என வினவினான்.

“அச்சடா..! மின்னவரும் தேவி பொற்கயலும் இப்போது தான் உணவருந்தி முடித்து காற்று வாங்கக் கரை வரை சென்றிருக்கிறார்கள். ஏன் அவரைக் காண இத்தனை பரபரப்பு..? ஏதேனும் அவசரச் செய்தியா இராவுத்தா..?”

அவர் வினவும் தோரணையில் இருந்தே கோட்டைக்குள் நிகழ்ந்ததை இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து கயல்விழியை நோக்கினான் அவன். அவளோ கண்களாலேயே இவர்களுக்கு தெரியாது என சைகை காட்டினாள். பிறகு இராவுத்தன் அங்கிருந்து சட்டென வெளியேறினான்.

“அச்சடா..! அடேய்..! பசியாறி விட்டுச் செல்!” என அச்சடாக் கிழவர் அழைக்க அவரைத் தொடர்ந்து, “இராவுத்தன் எங்கு செல்கிறான்..?” என மங்கம்மாளும் வினவினார்.

“இல்லை. அவர் மின்னவரை எக்காரணம் கொண்டோ சந்திக்கச் செல்கிறார்! இப்போது வந்து விடுவார்” என்றாள் கயல்விழி.

“அவன் எங்கு போவான்..? இறைச்சி முழுவதையும் முடிக்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டான். தாங்கள் பசியாறுங்கள் தேவி..!” என மங்கம்மாள் விசிறிக் கொண்டே “கிழவரே, தேவிக்கு வேண்டியதை எடுத்து வை” என்றார்.

குடிலுக்குள் இருந்து வெளிவந்த இராவுத்தன் எதிர்ப்படும் வைகைக் கரையை ஆராய்ந்தான். அப்போது மின்னவனும் பொற்கயலும் ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி விரைந்தோடினான்.

குளிர்ந்த நீரைக் கொண்ட வைகையின் சாரல் எட்ட முடியா இடத்தில் கால்களை நீட்டி, கைகளைப் பின்னே ஊன்றியபடி அமர்ந்திருந்தான் மின்னவன். அவனருகே கால்களை ஒரு பக்கம் மடக்கியவாறு அவன் மார்பில் தலைசாய்ந்து அமர்ந்திருந்த பொற்கயலின் விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றிருந்தது. எந்நேரமும் அந்த இமையணை தேக்கி வைத்திருக்கும் கண்ணீர் நதியைக் கசியவிடத் தயாராக இருந்தது.

இருவரும் நீண்ட நேரம் அங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.

‘என்னால் தானே இவருக்கு இந்த அவமானம்?’ எனத் தன் மீது அனைத்து குற்றத்தையும் சுமத்தி குற்ற உணர்வுடன் பொற்கயல் அமர்ந்திருக்க… ‘இளையபாண்டியர் தன்னை அவமானப்படுத்தியது மட்டும் இல்லாமல் தன் காதலியான பொற்கயலையும் அவமதித்தும் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே’ என மின்னவனும் குற்ற உணர்வில்தான் அமர்ந்திருந்தான். அப்போது அவர்கள் பின் வந்து நின்ற இராவுத்தன், “தலைவரே..!” என அழைத்தான்.

பொற்கயல், மின்னவனின் மார்பில் இருந்து எழுந்தமர்ந்து பின் திரும்பிப் பார்த்தாள்.

மின்னவன் மாத்திரம் அசையாமல் “வா இராவுத்தா..!” என்றான்.

“தலைவரே, உங்களை இளையபாண்டியர்…” எனச் சற்றுத் தழுதழுத்த குரலில் பேசினான் இராவுத்தன்.

“அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை இராவுத்தா!.. சென்று பசியாறு..! இன்று உனக்கு பிடித்த மான் இறைச்சியை வேட்டையாடி வந்துள்ளேன்”.

“தலைவரே..! இதை இப்படியே விடுவதா..? நான் இப்போதே நெல்லைக்கு புறப்பட்டு மன்னரைச் சந்தித்…”

“வேண்டாம்..!” சட்டென உரைத்தான் மின்னவன்.

“தலைவரே, என் குருதியெல்லாம் கொதிக்கிறது..! என்னை ஏன் இப்படி அடக்கி வைக்கிறீர்கள்..? உங்களுக்கு நடந்த அவமானத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

“சென்று பசியாறு..! இது என் கட்டளை.” என மின்னவன் இட்ட கட்டளைக்குப் பதில் பேச முடியாமல் மின்னவனின் புறமுதுகைப் பார்த்து வணங்கி விட்டு வெறுப்புடன் அங்கிருந்து புறப்பட்டான் இராவுத்தன்.

அவன் அவ்வாறு செல்வதைப் பார்த்துவிட்டு மின்னவனைக் கண்ட பொற்கயல் அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள். அதில் இளைய பாண்டியனின் விரல்கள் பதிந்த தடையம் தெரிய அதைக்கண்டு விம்மத் தொடங்கினாள் அவள்.

“உன் அழுகை என்னை மேலும் பலவீனப்படுத்தி விடும் முத்தே..! இக்காயத்திற்கு நான் வருந்தவில்லை..! அத்தனை பெரும் கூட்டத்தில் என்னை அவமானப்படுத்தியதற்கு வருந்தவில்லை..! இதோ இந்நொடி உன் கண்ணீரை காண்பதற்கு மிகவும் வருந்துகிறேன். இதுபோன்று ஏவல் நாயை காதலித்ததால் தானே உனக்கு இந்நிலை..?” என அவன் கூறி முடித்ததும் சட்டென அவன் வாயை கைகளால் அடைத்தவள்,

“வேண்டாம் மின்னவரே..! வேண்டாம்..! நான் அழவில்லை. தயவுகூர்ந்து இதுபோன்று என்னிடம் பேசாதீர்கள். நீங்கள் படைத்தலைவர் என்பதால் தங்களை ஒருபோதும் நான் காதலிக்க நினைக்கவில்லை. உணர்வுபூர்வமாக பூத்த காதல் நம் காதல். உள்ளத்தை மட்டுமே நேசித்து வாழும் காதல் நம் இருவரது காதல். மறவாதீர்கள்! என் வாழ்க்கையின் அர்த்தமுள்ள துணை நீங்கள்! அரசனாலும் ஆண்டியானலும் இனி நீங்கள் தான் என்னுடைய துணை” எனக் கண்களை துடைத்துக் கொண்டு “இன்று என்னால்தான் உங்களுக்கு இந்நிலை ஏற்பட்டது. என் முன்கோபம்தான் இதற்குக் காரணம். என்னை மன்னித்து விடுங்கள்!” என அவனைக் கட்டியணைத்து மார்பில் முகம் புதைத்து விம்மினாள் பொற்கயல்.

அவள் தலையை வருடிவிட்ட மின்னவன், “அதுபோன்று எண்ணாதே முத்தே..! நடக்கவிருப்பவை நடந்தே தீரும்..! உன்னால் எதுவும் நடந்துவிடவில்லை” என அவளைச் சமாதானம் செய்ய முயன்றான். பிறகு வானில் உள்ள பிறையைப் பார்த்து மனதில் அவனது விருப்ப தெய்வமான பிறைச் சூடிய பித்தனான ஈசனை நினைத்துக் கொண்டான்.

ச்சடாக் கிழவரின் குடிலுக்குள் நுழைந்து இராவுத்தன் குடிலின் மத்தியில் சென்று அமர்ந்தான். அவனைக் கண்ட அச்சடாக் கிழவர் “வந்துவிட்டாயா இராவுத்தா..! இரு வருகிறேன்” என சமையலறைக்கு சென்று இலை ஒன்றை எடுத்து வந்து அவன்முன் போட்டு உணவைப் பரிமாறத் தொடங்கினார்.

கயல்விழியும், மங்கம்மாளும் கட்டிலின் மேல் அமர்ந்திருந்தார்கள். மங்கம்மாள் கிழவி கயல்விழிக்கு தங்கள் பாண்டிய நாட்டின் அருமை பெருமைகளையெல்லாம் வரலாறாக கூறிக்கொண்டிருந்தார்.

வந்தமர்ந்த இராவுத்தனை திரும்பிப் பார்த்த கயல்விழி அவன் அச்சடாக் கிழவர் பரிமாறும் இறைச்சியை வெறிபிடித்தவன் போல் உண்ணுவதைக் கண்டு இராவுத்தனுக்குள் இருக்கும் கோபத்தை கண்டுகொண்டாள்.

அச்சடாக் கிழவரோ இராவுத்தன் உண்ணும் வேகத்தைக் கண்டு, “அச்சடா..! அடேய்..! உணவுக்குழாயில் சிக்கிக்கொள்ளப் போகிறது..! மெல்ல மெல்ல” என நீர்க்குவளையை எடுத்து அவன் அருகில் வைத்தார்.

இராவுத்தனின் கோப தாகத்திற்கு அந்தக் குவளை நீர் போதவில்லை. நெல்லையில் இருந்து மாமன்னர் எப்போது மதுரை திரும்புவார் என்றிருந்தது இராவுத்தனுக்கு. திரும்பிய பிறகு அவர் எடுத்த நடவடிக்கைகள் யாரும் எதிர்பாராத விதத்தில் இருந்தது.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...