அவ(ள்)தாரம் | 18 | தேவிபாலா
வீட்டுக்குள் வாசுகி, அம்மா கதறிக்கொண்டிருக்க, வெளியே பாரதியுடன் வந்த அருள், தன் தேடும் வேலையை வேகமாகத் தொடங்கி விட்டான்! அப்பாவின் அடியாட்களை கண்காணிக்கும் வேலையில் சமீப காலமாக தன் விசுவாசிகளை, அதுவும் அப்பாவால் பாதிக்கப்பட்டிருந்த சிலரை நியமித்திருந்தான்! அவர்கள் அத்தனை பேருக்கும் தகவல் தந்து, குழந்தை நிஷா படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு இருவரும் வந்து முதல்வர் வரை புகார் போக, பிரச்னை தீவிரமாக தீப்பற்றிக்கொண்டது! செக்யூரிட்டியை பிடித்து, பள்ளித் தலைமை விளாசி, விசாரணை நடத்த, குழந்தையை காரில் சித்தப்பா என்று சொன்ன நபர் ஏற்றிய நேரத்தை விசாரிக்க, அந்த பிரதேசத்தில் ஒரு சிசிடீவி இருப்பதை பார்த்து விட்டாள் பாரதி!
உடனே அதை அருளுக்கு சொல்ல, அருள், பாரதி பள்ளித்தலைமையை பிடிக்க, நாலு கட்டிடம் தாண்டி ஒரு நிதி நிறுவனம் இருக்க, அவர்களது சிசிடீவி காமிரா அது! உள்ளே போய் நிலைமையை விளக்கி ஃபுட்டேஜ் காட்டச் சொல்ல, அருள், பாரதி அந்த காவலாளியை கூட்டி வந்து காட்ட, சரியாக மூன்று இருபதுக்கு நிஷாவை காரில் ஏற்றும் காட்சி வர, முன்னும் பின்னும் பார்க்க, புறப்படும் காரின் நம்பர் தெளிவாக, தெரிய, அருள் பரபரப்பானான்! மளமளவென ஃபோன் கால்களை போட்டு வேகமாகத் தன் வேலையை துவக்க, பாரதி ஒத்துழைக்க, இருவரும் புயல் வேகத்தில் செயல்பட,
இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கும் வர்ஷா, க்ருஷ்ணாவுக்கு ஃபோன் அடித்து விட்டாள்!
“க்ருஷ்ணா! உங்க பொண்ணு நிஷா பத்திரமா இருக்கா! நான் அவ பக்கத்துல தான் இருக்கேன்! ஆனா அவ கடத்தப்பட்டிருக்கா! போதுமான போலீஸ் பாதுகாப்போட வரணும்! அவளைக் கடத்தினது யாருன்னு தெரியலை! இதை கவனமா கையாளணும்! நான் லொகேஷன் ஷேர் பண்றேன்! நீங்க சீக்கிரம் வாங்க!”
“பத்திரமா பார்த்துக்கோ வர்ஷா! நான் இப்பவே வர்றேன்!”
க்ருஷ்ணா, விவரத்தை வீட்டில் சொல்ல, வாசுகி பரபரத்தாள்!
“வாங்க! இப்பவே போய் குழந்தையை கூட்டிட்டு வரலாம்! இனிமே என்னால ஒரு நிமிஷம் கூட காத்திருக்க முடியாது! வாங்க!”
“இரு வாசுகி! நம்ம குழந்தை கடத்தப்பட்டிருக்கு!”
“அவளை எதுக்காக ஆஸ்பத்திரில வச்சிருக்காங்க? ஏதாவது பண்ணப்போறாங்க!”
“அது எந்த ஆஸ்பத்திரினு சொன்னாங்களா மாப்ளே?”
சிதம்பரம் கேட்க, க்ருஷ்ணா பேரை சொல்ல,
“இது எங்க முதலாளிக்கு ஏறத்தாழ சொந்தமான ஆஸ்பத்திரிதான்! குழந்தை கடத்தலுக்கு காரணம் அவர்தான்!”
“என்னங்க! பேசிட்டு நிக்க இப்ப நேரமில்லை! புறப்படுங்க!”
“இரு வாசுகி! நீ போனதும், உன் மகளை தூக்கி யாரும் உன் கையில தரப்போறதில்லை! இதுக்கு நாம போலீஸ் துணையை நாடினாலும் எடு படாது! மாப்ளே! அருளுக்கு ஃபோன் பண்ணி விவரம் சொல்லுங்க! அருள் இதுல இறங்கினாத்தான் குழந்தை உருப்படியா நம்ம கைக்கு வரும்”
“நானும் இதைத்தான் நெனச்சேன் மாமா!”
க்ருஷ்ணா, அருளுக்கு டயல் செய்ய, அங்கே ஆட்களை வைத்து அருள் தகவலை சேகரித்து விட்டான்!
“சின்னவரே! கார்ல வந்து புள்ளையை தூக்கிட்டு போனது தீனா தான்! ஏதோ ஒரு ஆஸ்பத்திரில புள்ளை இருக்கறதா தகவல்!”
அருளின் நம்பரை முயற்சித்து கிடைக்காமல், க்ருஷ்ணா பாரதி நம்பரை முயல, பாரதி எடுக்க, க்ருஷ்ணா விவரம் சொல்ல, அருள் வாங்கி பேச,
“நீங்க அங்கே வந்துடுங்க க்ருஷ்ணா! பாரதி! மீடியாவை கூப்பிடு! மாப்ளே! நீ தீனாவை மடக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வா! நான் அங்கே இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல இருப்பேன்! க்ருஷ்ணா! நீங்களும் வாசுகியும் மட்டும் வாங்க! தைரியமா இருங்க!”
செயல்பாடுகள் வேகமாக தொடங்க, ஆஸ்பத்திரியில் குழந்தை நிஷா கண் மூடி படுத்திருக்க, வர்ஷாவின் அம்மாவுக்கு சர்க்கரை பரிசோதனை முடிய,
“போகலாமா வர்ஷா?”
“அம்மா! நீ இங்கியே இரு! மருந்துகள் வாங்கணும்! ஒரு மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்! உன்னால உக்கார முடியலைனா, படுத்துக்கோ!”
இந்த பக்கம் வந்து வர்ஷா எட்டிப்பார்க்க, நிஷா மெல்ல கண்களை திறந்து ஜாடை காட்டியது! அவளுக்கு காவலுக்கு வைத்திருந்த நர்ஸ் தொடர்ந்து ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்! வர்ஷாவுக்கு பீப்பி எகிறி கொண்டிருந்தது! ஒரு நிலை கொள்ளாமல் இருந்தாள்! பத்து நிமிஷங்களில் தலைமை டாக்டரே வர, அத்தனை பேரும் எழுந்து நிற்க, குழந்தை இருந்த வார்டுக்குள் டாக்டர் வந்தார்! குழந்தை கண் மூடியிருந்தது! டாக்டர் பரிசோதித்தார்! அழைத்தார்! அது பதிலே பேசவில்லை! அசைவும் இல்லை!
“நினைவு திரும்பியாச்சுனு யார் சொன்னது? அது அசையாம இருக்கு? ஆனா பல்ஸ் எல்லாம் சரியா இருக்கே! சரி! குழந்தையை இங்கே வச்சுக்க வேண்டாம்! மினி ஆம்புலன்ஸ் கொண்டு வாங்க! ஷிஃப்ட் பண்ணிடலாம்!”
இதைக்கேட்டதும் வர்ஷாவுக்கு திக்கென்றது! குழந்தை காதிலும் அது விழுந்தது!
“அய்யோ! அப்பா அதுக்குள்ள வர மாட்டாரா? என்னை எங்கே கொண்டு போறாங்க?”
ஸ்ட்ரெச்சர் வந்து விட்டது! குழந்தையை அதில் கிடத்தினார்கள்! வர்ஷா துடித்து விட்டாள்! க்ருஷ்ணாவுக்கு ஃபோன் போட, பிசி என வந்தது! வேறு யாரை அழைப்பது என்பதும் தெரியவில்லை! குழந்தையை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அறையை விட்டு வெளியே கொண்டு வர ஆயத்தமாக, வர்ஷா முயல, க்ருஷ்ணா தொடர்ந்து பிசி! அந்த வார்டை விட்டு ஸ்ட்ரெச்சர் வெளியே வர, வர்ஷா எதுவும் செய்ய முடியாத நிலையில், புழுவாக துடிக்க, ஸ்ட்ரெச்சர் ஏறத்தாழ வாசலுக்கு வந்து விட்டது! மினி ஆம்புலன்ஸ் வாசலில் தயாராக நின்றது! குழந்தையை அவர்கள் எடுக்க வந்த நேரம், எதிர்பாராத அது நிகழ்ந்தது! குழந்தை ஸ்ட்ரெச்சரை விட்டு படக்கென எழுந்து, ஸ்ட்ரெச்சரை விட்டு கீழே குதித்தது! அதை ஏற்றும் வரை கண்காணித்து பூதத்துக்கு ரிப்போர்ட் தர தலைமை டாக்டரும் அங்கேயே இருக்க, குழந்தையின் இந்த செயல் அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்க, குழந்தை இறங்கி ஓடத்தொடங்க, மற்ற புற நோயாளிகள் கவனிக்க,
“ஒடம்பு சரியில்லாத குழந்தைனு ஸ்ட்ரெச்சர்ல கொண்டு போற குழந்தை, திடீர்னு இறங்கி ஓடுது! எப்படீ? என்னவோ தப்பா இருக்கே?”
“அதை பிடிங்க! விடாதீங்க!”
குழந்தை விடுபட்ட அம்பு போல வாசலை நோக்கிப் பாய்ந்து விட்டது! ஒரு காவலாளி அதை மடக்கிப் பிடிக்க,
“என்னை கடத்தி கொண்டு வந்து வச்சிருக்காங்க!”
குழந்தை அலற, நாலைந்து பேர்கள் வந்து அதை கவ்வி பிடித்தார்கள்.
“அது மனநிலை சரியில்லாத குழந்தை! புடிச்சு உள்ளே போடுங்க!”
தலைமை டாக்டர் உத்தரவிட, வாசலில் கார் வந்து நிற்க, அருள், பாரதி, க்ருஷ்ணா, வாசுகி வந்து இறங்க, குழந்தை ஓடிப்போய் க்ருஷ்ணாவை கட்டிக்கொண்டு அழ, தலைமை டாக்டர் பதட்டமானார்! பூதத்தின் மகன் அருள் என்பது அவருக்கு தெரியும்! இங்கே அடுத்து வீசப்போகும் புயலையும் கணித்து விட்டார்! அதற்குள் மீடியா, காமிரா சகிதம் உள்ளே புகுந்து விட்டது! பாரதியை வணங்கி,
“எதுக்கு மேடம் வரச்சொன்னீங்க?”
“அந்த குழந்தை கிட்ட பேசுங்க! அவளே விவரமா சொல்லுவா!”
சில நொடிகளில், பள்ளியில் வந்து ஆட்கள் காரில் அழைத்து போனதையும், மயக்க மருந்து தந்ததையும் குழந்தை நிஷா புட்டுப் புட்டு வைத்தது!
“எனக்கு நினைவு திரும்பினதும் வர்ஷா ஆன்ட்டி இங்கே இருந்த காரணமாத்தான் எங்கப்பாவை கூப்பிட முடிஞ்சது!”
வர்ஷா வெளியில் வர, அவள் மேல் மீடியா வெளிச்சம் சரமாரியாக விழ, “ நீ வீடு தேடிப்போய் அசிங்கப்படுத்தினியே, அந்த வர்ஷா தான், இன்னிக்கு நம்ம நிஷாவை மீட்டிருக்கா!”
க்ருஷ்ணா, வாசுகியிடம் சொல்ல, மீடியா தன் பணிகளை வேகமாகச் செய்ய,
“இதோட பின்னணில இருக்கறது யாரு? ஆஸ்பத்திரி தலைமை எங்கே? கூப்பிடுங்க!”
என மீடியாக்காரர்கள் ரகளை செய்ய, உள்ளே இருந்த டாக்டர் வேறு வழியில்லாமல் வெளியே வர, அவரை கிளற,
“மயக்கமான குழந்தையை இங்கே கொண்டு வந்தாங்க! உயிருக்கு ஆபத்தான நிலைல இருந்த குழந்தையை எழுந்து ஓடற அளவுக்கு நாங்க தான் மீட்டிருக்கோம்! இது கடத்தல்னெல்லாம் எப்படி எங்களுக்கு தெரியும்?”
“ஒரு குழந்தை அட்மிட் ஆகும் போது, அதோட பின் விவரங்களை கேக்க மாட்டீங்களா? பணத்தை நிறைய தந்தா வாங்கி உள்ளே போட்டுப்பீங்களா? அப்புறம் ஏன் அது மனநிலை சரியில்லாத குழந்தைனு கூவினீங்க? நீங்க யாரோட கைக்கூலி டாக்டர்?”
“இந்த குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு மேடம்?”
“நிஷா என் அக்கா குழந்தை தான்!”
“அதான் கடத்தலா? அருள் சாரும் வந்திருக்காரு! இது பூதம் சாரோட ஆசீர்வாதத்துல செயல்படற ஆஸ்பத்திரி! ஏற்கனவே உங்க கூட அவருக்கு உரசல் தொடருது! இது அடுத்த பழி வாங்கற செயலா மேடம்?”
“அவசரப்பட்டு ஆதாரமில்லாம யார் மேலயும் பழி சுமத்த வேண்டாமே!”
பாரதி கூச்சமான குரலில் பேச, அருளை ஒரு பக்கம் மீடியா சுற்றி வளைக்க, டாக்டரை மடக்க, குழந்தையின் பெற்றோரை மடக்க, ஆஸ்பத்திரி ரணகளமாகி விட்டது! பெரும் பரபரப்பு சூழ, அந்த தீனாவை அருளின் ஆட்கள் மடக்கி இழுத்து வர,
“இவன் தான் குழந்தையை கடத்தினவன்! சிசிடீவி ஆதாரங்கள் இருக்கு!”
போலீஸ் வந்து விட, பிரச்னை இன்னும் பெரிதானது!.
அருள் அருகே வர, போலீஸ் அதிகாரி அவனிடம் வந்து, குரலை இறக்கி, “இவனை நாங்க பாத்துக்கறோம்! நீங்க பிரச்னையை பெரிசு பண்ணாம குழந்தையை கூட்டிட்டு போங்க சார்!”
பாரதி அருகில் வந்து, அருள் காதோடு என்னவோ சொன்னாள்!
“நீயே பேசு பாரதி! அந்த உரிமை உனக்குண்டு!”
பாரதி பேச வாய் திறந்ததும், ஊடக புகைப்படக் கருவிகள் அத்தனையும் வெளிச்சம் வீசி காத்திருக்க,
“இந்த நிஷா என் அக்கா குழந்தை! பிஞ்சு குழந்தை, இவளை கடத்தினது யாருன்னு எனக்கு தெரியும்! அதுக்கான காரணமும் தெரியும்! இந்த தீனா வெறும் அம்பு தான்! இவனை தூண்டி விட்டது யாருன்னு நான் இப்ப ஆதாரம் இல்லாம சொல்ல முடியாது! நான் சிதம்பரம் மகள்! எனக்கு, என் தங்கச்சி மேகலாவுக்கு, இப்ப என் அக்கா மகள் நிஷாவுக்கு பிரச்னை! எங்கப்பா சிதம்பரம் பெற்ற மூன்று பெண்களும் குறி வச்சு தாக்கப்படறது யாரால? இந்த கேள்வியை நான் இனி விடாம கேக்க போறேன்! பதில் கிடைக்கற வரைக்கும் விட மாட்டேன்! இந்த தீனாவை ஏவி விட்டது யாருங்கற உண்மை மறைக்கப்பட்டா, நான் விட மாட்டேன்! எந்த எல்லைக்கும் போக வேண்டி வரும்! இவனை கொண்டு போய் உண்மையை வாங்குங்க!”
“பாரதி! நான் காவல் நிலையத்துக்கு இவங்க கூட போறேன்! நீ தகுந்த போலீஸ் காவலோட குழந்தையை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போ! க்ருஷ்ணா! நீங்க கவலைப்பட வேண்டாம்! இதை நான் சும்மா விட மாட்டேன்!”
வாசுகி, அருளிடம் வந்தாள்!
“அருள்! குழந்தை தான் முழுசா நமக்கு கிடைச்சிட்டாளே! அதனால இதை விட்ருங்க! பெரிய இடத்து பகை நமக்கு வேண்டாமே!”
“அதை நாங்க பாத்துக்கறோம் வாசுகி! நீங்க புறப்படுங்க!”
ஒரு ஓரமாக நின்ற வர்ஷாவிடம் பாரதி வந்தாள்!
“ரொம்ப நன்றி வர்ஷா! நீங்க மட்டும் இங்கே வந்திருக்கலைனா, எங்களுக்கு நிஷா கிடைச்சிருக்க மாட்டா! உங்களுக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு!”
“என்ன பாரதி இது? அந்த குழந்தை பயங்கர புத்திசாலி! என்னை சரியா அடையாளம் தெரிஞ்சிட்டு, எங்கப்பாவுக்கு தகவல் குடுங்கனு தைரியமா சொன்னாளே! தான் கடத்தப்பட்டிருக்கோம்னு அவ புரிஞ்சுகிட்டாளே!”
“உங்களையும், உங்கம்மாவையும் நாங்க ட்ராப் பண்றோம் வர்ஷா!”
“வேண்டாம் பாரதி! நாங்க போயிடுவோம்! குழந்தையை ஜாக்ரதையா பார்த்துக்குங்க!”
வாசுகி வந்து வர்ஷாவின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டு, “எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடு வர்ஷா!”
அத்தனை பேரும் காரில் ஏற, மீடியா ஆட்கள் இன்னமும் டாக்டரை விடாமல் குடைந்து கொண்டிருந்தார்கள்!
“இது மிஸ்டர் பூதத்தோட ஆஸ்பத்திரினு ஊருக்கே தெரியும்! நிச்சயமா குழந்தை கடத்தல்ல அவருக்கு பங்கு இருக்கா இல்லையா? பாரதியை பணிய வைக்க, பூதம் எடுத்த அடுத்த ஆயுதம் தானே இந்த குழந்தை?”
டாக்டர் எதற்கும் பதில் சொல்லவில்லை! அவர்கள் கலைந்து போனதும், டாக்டர் வியர்வையை துடைத்து கொண்டு உள்ளே வந்தார் பெருமூச்சுடன் தன் நாற்காலியில் சாய, ஃபோன் அடித்தது! பூதம் தான்! டாக்டர் எடுத்தார்!
“சார்! என் மேல எந்த தப்பும் இல்லை!”
“நீ ஏதாவது உளறினியா?”
“வாயைத் திறக்கலை சார்!”
“இனிமேலும் திறக்காதே! நீ உடனே புறப்பட்டு மும்பை போ! நாளைக்கு நீ லண்டன் போக எல்லா ஏற்பாடுகளும் நான் பண்றேன்! நீ சென்னைல இருக்கக்கூடாது!”
“சரி, ஆனா அந்த பாரதி உங்களை ஒரு கை பார்க்காம ஓய மாட்டா சார்!”
“அப்படியா? இந்த பூதத்தோட நிஜமான முகத்தை அவ இது வரைக்கும் பாக்கலை! உடனடியா அதை அவ பாக்கற நேரம் வந்தாச்சு! நீ ஃபோனை வை!”
பூதத்தின் குரலில் கொலை வெறி கூத்தாடியது! அதற்கான அதி பயங்கர விளைவு, அடுத்த சில மணி நேரங்களில் பாரதியை நோக்கி, அதி தீவிர காற்றழுத்த மண்டலமாக வேகமாக நகர தொடங்கியது! சூறைக் காற்று ஆரம்பமானது!