பொற்கயல் | 5 | வில்லரசன்
5. வைகை அம்மன்
“தந்தையே, பார்த்து பொறுமையாக வாருங்கள்!” எனத் தன் தந்தையை அணைத்துப் பிடித்து தாங்கிக் கொண்டு மதுரைக் கோட்டையின் புறநகர் தெருவில் நடந்தாள் மாதங்கி.
மாதங்கி ஓர் அழகிய பெண். ஏழ்மையானவள். நேர்மையானவள். இந்த இளம் வயதிலும், உடம்பிற்கு முடியாத தன் தந்தையைக் காப்பாற்ற மதுரைக் கோட்டைக்குள் காய்கனிகளை விற்று, அதில் ஈட்டும் பணத்தில் தந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்கிறாள். மதுரையில் யாரைக் கேட்டாலும் மாதங்கியைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள்.
மதுரைக் கோட்டைக்கு வடக்கே புறநகரில் வசிக்கும் இவர்கள் இருவரும் இப்போது தெற்கு நோக்கிக் குறுகி வளையும் வீதி ஒன்றில் நடந்து கொண்டிருந்தார்கள்.
தன் தோள் மீது தலை சாய்ந்து நடக்க முடியாமல் நடந்து வரும் தந்தை மகேந்திரரை மிகக் கவனமாக பிடித்தபடி கூட்டிச் செல்லும் மாதங்கியின் முகம் சற்றுப் பதட்டமும் பயமும் கலந்தே காணப்பட்டது!
“தந்தையே! சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்” எனத் தன் முந்தானையில் அவர் முகத்தைத் துடைத்து விட்டாள் அவள்.
அப்போது அவர்கள் எதிரே வந்த வயது முதிர்ந்த அம்மா ஒருவர் இருவரையும் பார்த்து விட்டு, “மாதங்கி, என்ன ஆயிற்று..? தந்தை மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறார். இருட்டில் இந்நேரம் எங்கே அழைத்துச் செல்கிறாய்..?” எனக் கேட்க அதற்குச் சற்றுக் கலங்கிய கண்களுடனே பதில் கொடுத்தாள் மாதங்கி.
“தந்தைக்கு உடல் நலம் மிகவும் குன்றி விட்டது அம்மா”
“அதைத்தான் அனைவரும் அறிவோமே… இப்போது எங்கு அழைத்துச் செல்கிறாய் அவரை?”
“இல்லையம்மா! நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. சில நாட்களாகவே இவர் அவதிப்படுகிறார். இருமலும் காய்ச்சலுமாக உடல் கொதிக்கிறது. கோட்டைக்கு உள்ளும் வெளியும் உள்ள மருத்துவர்களிடம் காண்பித்தும் இவருக்கு உடல் நலம் தேறுவதாகத் தெரியவில்லை! மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ இவருக்கு உடம்பில் எந்தத் தீங்கும் இல்லை என்கிறார்கள். ஆனாலும் உடல் நலம் தேறிய பாடில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை அம்மா. அதுதான் வைகை அம்மனிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றாள் பதட்டமும் வருத்தமும் நிறைந்த குரலில்.
“கடவுளே! அப்படியா? நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் உன் தந்தையைக் காற்றோ கருப்போ அடித்திருக்க கூடும்! சீக்கிரம் செல். அந்த அம்மன் கைபட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்றார் மாதங்கியையும் மகேந்திரரையும் வழியில் சந்தித்த அந்த அம்மா.
“சரி வருகிறேன் அம்மா” கூறிவிட்டு மாதங்கி, தந்தை மகேந்திரரை வைகை அம்மன் இருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றாள்.
மதுரை நகரின் வடக்கு புறம்படி தெருவினிலே நீண்ட வரிசையில் மக்கள் பலர் வருத்தம் தோய்ந்த முகத்துடன் வரிசையாக நின்றிருக்க, அந்த வரிசை முன் நோக்கி நகரும் இடத்திலோ ஒரு தென்னங்கீற்றுக் குடில் சற்று பெரிதாக அமைந்திருந்தது. அந்தத் தென்னங்கீற்றுக் குடிலைச் சுற்றி விளக்குகள் பலவும் அதன் நுழைவாயில் முன்பு பல புள்ளிகள் இட்டு போடப்பட்டிருக்கும் அழகிய அரிசிக் கோலத்தின் நடுவே பெரும் குத்து விளக்கு ஒன்றும் அதைச் சுற்றி வேப்பிலைகளும் குவிந்து கிடந்தன.
வரிசையில் வரும் மக்கள் எல்லோரும் முதலில் அந்த விளக்கை வணங்கிவிட்டு குடிலினுள் கூப்பிய கரங்களுடன் நுழைந்தார்கள். பிறகு நெற்றியில் திருநீறு, குங்குமம், கைகளில் கயிறுகள், வேப்பிலை என ஆசி பெற்ற நிறைவோடு வெளியே சென்றார்கள்.
அந்த மக்கள் வரிசையை சீர்படுத்தியபடியும் உள்ளே செல்லும் ஆட்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி நிற்க வைக்கும் பணியை கன்னிப்பெண் ஒருத்தி செய்து கொண்டிருந்தாள்.
மஞ்சள் நிறச் சேலையும் முகம் நிறைய மஞ்சளுமாக பார்ப்பதற்கு பக்தி மிக்கவளாக காணப்பட்டாள் அவள். கனிவான பேச்சும் கருணை நிறைந்த பார்வையையும் கொண்டிருக்கும் அவள். வரிசையில் வரும் மக்களைப் பார்த்து, “தாயே, வாருங்கள்! முன் செல்லுங்கள். சற்றுக் காத்திருங்கள்! வைகை அம்மனின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்! உங்கள் குறைகள் அனைத்தும் தீரும்! பேய், பிசாசு, பில்லி சூனியம் விலகும்” என்று மென்மையாக இன்முகத்தோடு அனைவரிடமும் சொல்லியபடியே வரிசையை சீர்படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது வரிசையின் கடைசியாக வந்து நிற்கும் மாதங்கி மற்றும் அவளது தந்தை மகேந்திரரை வரவேற்று விசாரித்தாள் அந்த வைகை அம்மனின் சீடப்பெண்.
“வாருங்கள்!” என்றவள் மாதங்கி மீது சாய்ந்திருந்த மகேந்திரரைப் பார்த்து “பெரியவருக்கு என்ன ஆயிற்று?” என்று வினவினாள்.
“இவர் என் தந்தை! இவருக்கு மிகவும் சுரம் கொதிக்கிறது! எந்த மருத்துவமும் கை கொடுக்கவில்லை. வைகை அம்மனை நாடி வந்திருக்கிறோம்” என்றாள் மாதங்கி.
அந்த சிஷ்யை இருவரையும் சில நொடிகள் பார்த்து விட்டு, “சரி என்னுடன் வாருங்கள்!” என அவர்களை வரிசையிலிருந்து குடிலை நோக்கி அழைத்துச் சென்றாள். இவர்கள் வரிசையில் பின் இருந்து முன் செல்வதைக் கண்டு வரிசை சத்தமிட… “மிகவும் முதியவர்! முடியாதவர்! உடனே கவனம் கொடுக்க வேண்டும். தயவுகூர்ந்து புரிந்துகொள்ளுங்கள்” கனிவுடன் சொன்னாள் வைகை அம்மனின் சிஷ்யை.
அவளது கனிவான பேச்சு மக்களை அமைதியடையச் செய்தது. பிறகு மூவரும் தென்னங்கீற்றுக் குடிலை அடைந்தனர். முகப்பில் இருக்கும் குத்துவிளக்கை வணங்கிவிட்டு உள்நுழையும் அவர்கள் முன் குடிலுக்கு நடுவே குடிலை இரண்டாகப் பிரித்து மூங்கில் தடுப்பு ஒன்று போடப்பட்டிருந்தது. அந்தத் தடுப்பிற்கு பின் வேறு ஒரு அறை இருந்தது. அந்த அறைக்கான வாயில் வலதுபுற மூலையில் அமைந்திருந்தது. உள் நுழைந்ததும் எதிரே தென்படும் தடுப்பில் பலவகை தெய்வங்களின் ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழ் மஞ்சள் சேலையுடன், உடலெங்கும் மஞ்சள் பூசி, இரண்டு கை மணிக்கட்டுகளில் மந்திரித்த கயிறுகள், கழுத்தில் பலவகைத் தாயத்துகள், முடியெல்லாம் குங்குமமும் மஞ்சளும் படர்ந்து, கண்களில் மை தீட்டி கையில் மந்திரக் கோல் ஒன்றுடன் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தாள் வைகை அம்மன்.
அவளைச் சுற்றி எங்கும் மண் சட்டிகளில் நீரும், திருநீறும், மஞ்சளும், குங்குமமாக இருக்க ஆங்காங்கே மக்கள் காணிக்கையாக அளித்த கோழிகள், நிலக்கடலைகள், அரிசி, பால், காய்கனிகள் போன்றவையும் காணப்பட்டன.
கண்களை மூடி சாந்தமாக அமர்ந்து இருக்கும் இந்த வைகை அம்மன் எனும் பெண் ஏறத்தாழ நாற்பது அகவையைக் கொண்டவள். இப்போது மதுரையில் மிகப் பிரபலமான ஒருத்தி இவள். இவள் மீது அந்த வைகை அம்மனே இறங்கி, குறிசொல்லி, மக்கள் குறை தீர்த்து வருகிறாள் என்பதை மக்கள் பல அதிசய நிகழ்வுகளில் பார்த்திருக்கிறார்கள்.
உள்ளங்கையை அருள் பாலிக்கும்படி சுற்றினால் தானாக கையில் திருநீறு வருவது, சொல்லும் இடத்தில் தெய்வச்சிலை கிடைப்பது, வைகைக்குள் மூழ்கி முத்தெடுப்பது என சமீபகாலமாக வைகை அம்மனின் புகழ் மதுரை எங்கும் பரவிய வண்ணம் இருந்ததால் இவளைக் கண்டு ஆசிபெற மக்கள் குவிவது வழக்கமாயிற்று.
அன்றும் அது போலவே மக்கள் குறை தீர்க்கும் பொருட்டு வைகை அம்மன் இமைகள் மூடி மக்கள் சுமைகள் தீர்க்க அமர்ந்திருந்தாள். அவள் முன் வந்தமர்ந்து குறையை கூறினால் கையில் தோன்றும் திருநீறும் பிரச்சினைக்கான தீர்வும் கிடைக்கும்.
மாதங்கி தன் தந்தையுடன் உள்நுழைய, அவர்களை அழைத்து வந்த சிஷ்யை. “வாருங்கள்! அவர்கள் முன் அமருங்கள்” எனக் கூறிவிட்டு வெளியே சென்று கதவை மூடியவள், எதிரே வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்து, “வைகை அம்மன் அந்தப் பெரியவருக்கு மந்திரம் மூலம் அருட் செய்யப் போகிறார்! அந்த மந்திரத்தின் தாக்கம் வெளியே கசிந்தால் ஆபத்து” எனச் சொன்னாள். அதைக் கேட்ட மக்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.
கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் வைகை அம்மனின் எதிரே மாதங்கியுடன் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த மகேந்திரர், குடிலின் கதவு சாத்தப்பட்டதும் திடமாக நிமிர்ந்து அமர்ந்து கீழை சாளுக்கிய மொழியான தெலுங்கில், “போதும் நடித்தது! கண்களைத் திற” என்றார்.
வைகை அம்மன் கண் திறந்தாள்.
“ஏதோ மெய்யான அம்மன் போல அல்லவா நாடகம் காட்டுகிறாய்!” என்றார் தெலுங்குச் சோட அரசன் இளைய கண்டகோபாலனான மனும சித்தியின் ஒற்றர் மகேந்திரர்.
“ஆம் தலைவரே! போசள நாட்டு ஒற்றுக்காரி என்பதை மறந்துவிட்டு வைகை அம்மனாகவே மாறிவிட்டார்கள் போலிருக்கிறது” என்றாள் மகேந்திரரின் அருகில் இருக்கும் சோடநாட்டு ஒற்றுக்காரி மாதங்கி.
“பரிகாசம் போதும்! இவ்வாறு அடிக்கடி சந்திக்க வரவேண்டாம் என கூறியிருந்தேனே! யாரேனும் சந்தேகித்தால் ஆபத்தாகிவிடும். நம் வேடம் கலைந்துவிடும்.”
“அதற்காகத்தானே இந்த வலிமை மிகுந்த உடலை நோயுற்றதாக காட்டி நடித்துக் கொண்டிருக்கிறேன். எவனும் கண்டறிய முடியாது” மகேந்திரர் சொல்ல…
“தங்களிடம் கலந்தோசிக்காமல் எந்தவித முடிவையும் எடுக்கக் கூடாது என எங்கள் சோட மன்னர் இளைய கண்டகோபாலர் சொல்லியிருக்கிறார். இல்லையென்றால் நாங்கள் ஏன் தங்களை காண வரப்போகிறோம்?” என்றாள் மாதங்கி.
“சரி, என்ன செய்தி?” கேட்டாள் வைகை அம்மன்.
“அதற்கு முன் உன் மாணவியை உள் அழை! நாம் நால்வரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளன” என்றார் மகேந்திரர்.
வைகை அம்மன் குரலை சற்று கரகரக்க விட்டு, “ஓம் க்ரீம் ஓம் க்ரீம் ஓம் க்ரீம்” என மந்திரத்தை சத்தமாக உச்சரித்து “காமினி” என்று கொடூரக் குரலில் அழைத்தாள்.
அதைக் கேட்டதும் “யாரும் குடிலை நெருங்க வேண்டாம்! சற்று விலகுங்கள். அம்மன் உக்கிரமாக இருக்கிறார்!” என பயந்த முகத்துடன் காமினி சொல்ல, வரிசையில் நின்ற மக்கள் சரசரவென பின் நகர்ந்தனர்.
பிறகு காமினி உள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டு மூவரிடமும் வந்தமர்ந்தாள்.
“என்னவாம் அவர்களுக்கு? ஒரே தொல்லையாக போயிற்று! ஒற்றுப் பார்க்க வந்த இடத்தில் இந்த வேடம் தலைவலியாக அல்லவா இருக்கிறது..? வருவோரிடம் செய்தி ஏதும் கிடைக்கும் என்று பார்த்தால் அங்கு வலிக்கிறது இங்கு வலிக்கிறது! இது செய்கிறது அது செய்கிறது குழந்தைகளுக்கு சுரம் என அனைத்திற்கும் திருநீறும் கயிறுகளும் கொடுத்து சலித்து விட்டது” வந்தமரும் காமினியைப் பார்த்துச் சொன்னாள் வைகை அம்மன்.
“ஏன், நாங்கள் மட்டும் என்ன..? நான் பகல் பொழுதெல்லாம் மதுரை கோட்டை அங்காடியில் கடும் வெய்யிலில் காய்கனி விற்று ஒற்றுப் பார்க்கிறேன். இதோ என் தந்தை எங்கள் சோட நாட்டு ஒற்றர் படைத்தலைவர் பகலெல்லாம் நோய்வாய்ப்பட்டதுபோல் ஊரைச் சுற்றுகிறார். இரவிலும் உறக்கம் இன்றி ஒற்றுப் பார்க்கிறார்” எனத் தங்களது பங்கையும் தெரியப்படுத்தினாள் மாதங்கி.
“இப்படி நாங்களும் பதிலுக்கு பேசிக்கொண்டே போனாள் விடிந்துவிடும்! சோடநாட்டு ஒற்றர்களே, வந்த செய்தியை கூறுங்கள்” என்றாள் காமினி.
“இன்று நீங்கள் என்ன ஒற்று பார்த்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்!” என்றார் மகேந்திரர்.
“போசள நாட்டு ஒற்றர்களை சோட நாட்டு ஒற்றர்கள் எளிதாக எடைபோட வேண்டாம்! சோட மன்னர் இளைய கண்டகோபாலரும் எங்கள் போசள மன்னர் இராமநாதரும் கை கோர்த்து ஒரு காரியத்தை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள். அப்படிப்பட்ட காரியத்திற்கு நம் இரு நாடும் கூட்டு சேர்வது போல் இங்கு நாமும் கூட்டுச் சேர்ந்து காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டுமே தவிர ஒருவரையொருவர் அதிகாரம் செய்யக் கூடாது. உங்கள் பேச்சில் தெறிக்கும் எச்சில் போல் அவ்வப்போது ஏளனமும் அதிகாரமும் தெறிக்கிறது மகேந்திரரே!” என்றாள் வைகை அம்மன்.
“சரி தாயே, மன்னித்துவிடு!” கரம் கூப்பிய மகேந்திரர் “சமாதானம் சமாதானம்” என்றார்.
“நமக்குள்ளே சமாதானம் என்பது எப்பொழுதும் இருக்க வேண்டும்! நமக்கு எதிரிகளாக இருக்கும் இவர்களுக்குள் அந்த சமாதானம் இருக்கக் கூடாது”. வைகை அம்மன் சொன்னதும் ஆமோதிப்பதாக தலையசைத்த மகேந்திரர் எதிரே சட்டியில் இருக்கும் நீரை எடுத்துப் பருகினார்.
“அது மந்திரித்த நீர்!” என்றாள் காமினி.
அருந்தி முடித்து சட்டியை கீழே வைத்தவர் காமினியைப் பார்த்து “உங்கள் மந்திரம் எல்லாம் எனக்குத் தெரியும்!” என்றவர் “இன்று ஏதேனும் கிட்டியதா?” எனக் கேட்டார்.
வைகை அம்மன், காமினியை பார்க்க, காமினி பேசத் தொடங்கினாள்.
“இன்று நான் பாண்டியர்களின் தலைசிறந்த படைத் தலைவனான மின்னவனை ஒற்றுப் பார்த்தேன்”.
“என்ன நடந்தது? என்ன கண்டாய்? சொல்!” கேட்டார் மகேந்திரர்.
“பெரிதாக ஒன்றும் இல்லை! வேட்டையாடினான். அவ்வளவுதான்”
“மானைத் தானே?” ஏளனமாக கேட்டார் மகேந்திரர்.
“ஆம் மானைத்தான்! ஆனால் அதற்கு முன்பு அந்த மானுக்காக போட்டி போட்ட புலி ஒன்றை வளரி கொண்டு கொன்றுவிட்டு அதன் பின்பு மானை வேட்டையாடினான்”.
காமினி செப்பியதைக் கேட்ட மகேந்திரர் சற்று வியந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
காமினி தொடர்ந்தாள், “அதன்பிறகு மானுடன் அந்த வைகைக்கரையில் வாழும் கிழ சோடியை சந்தித்தான்”.
“அதன் பிறகு என்ன நடந்தது?” வினவினார் மகேந்திரர் .
“இங்கு அம்மனை காண மக்கள் திரள தொடங்கும் நேரம் வந்ததும் திரும்பி விட்டேன்” என்றாள் காமினி.
“அதற்குப் பிறகு அவனும் மாவலிவாணராயனும் கோட்டை அங்காடித் தெருவில் அடித்து மல்லுக் கட்டிக்கொண்டனர். அதன் பின்னர் மின்னவனை இளையபாண்டியன் அனைவரது முன்னும் அடித்து அவமானப்படுத்தி அனுப்பினான்” ஒற்றுப் பார்த்த நிகழ்வை பெருமிதத்தோடு சொன்னாள் மாதங்கி.
“இது நமக்கு நல்ல செய்திதான்! ஆனால் நாம் பல காலமாக அரச குடும்பத்தினரை நெருங்க முடியாமல் இங்கு புறம்படியில் உட்கார்ந்து இருக்கிறோமே! இந்த நிகழ்வில் நமக்கு கிட்டப் போவது ஒரு மண்ணும் இல்லை! இந்நேரம் நாம் ஏதேனும் அரச பதவியிலோ அரச குடும்பத்திலேயே இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்! இதோ இந்த இரண்டு பெண்களை அரச குடும்ப ஆண்களோடு பழக விட்டிருந்தால் இந்த சண்டையில் ஒரு பெரும் லாபம் ஈட்டி இருக்கலாம்!” என்றாள் வைகை அம்மன்.
“அனைத்து முயற்சியும்தான் தோற்று விட்டதே! இப்பொழுது பாண்டியர்கள் அதீத கவனமாக இருக்கிறார்கள்! வெளியாட்களை அரசியலிலும் அந்தரங்க செயல்களிலும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்! அரசாங்கக் காரியத்தில் ஒருவன் பணி செய்கிறான் என்றால் கூட அவனது பின்புலம் ஆராயப்படுகிறது! மீன்கள் மிகக் கவனமாக நீந்துகின்றன!” ஏமாற்றத்துடன் சொன்னார் மகேந்திரர்.
“வரலாற்றிலிருந்து பாடம் படித்துக் கொண்டார்கள் போல!” என்றாள் வைகை அம்மன்.
“இவர்களுக்கு என்ன வரலாறு இருக்கிறது? பெரிய வரலாறு!”
“இவர்கள் வரலாறை மறந்து விட்டீர்களா மகேந்திரரே! அந்த வரலாறுதான் போசளர்கள், தெலுங்கு சோடர்கள், சோழர்கள், காகதியர்கள் போன்ற எல்லார் மனதிலும் அணையா நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தந்தை சடையவர்மன் சுந்தரபாண்டியன் நமக்கு செய்ததை மறந்து விட்டீர்களா? சேரலத்தின் மலை நாட்டை ஆண்ட வீரரவி உதய மார்த்தாண்டவர்மனை வென்று கொன்றுவிட்டு மலை நாட்டை சூறையாடினான்! போர்வன்மை மிக்க சோழ மன்னர் மூன்றாம் இராசேந்திரரை ஒரு வழி செய்து கப்பம் கட்டப் பணித்தான்! சிங்களத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த அரசனை தோற்கடித்து பல யானைகளையும் ஏராளமான முத்துக்களையும் திறையாகப் பெற்றான். அதோடு விட்டானா? போசளர்கள் ஆகிய எங்களை தாக்கினான்! எங்களுக்கு உட்பட்டிருந்த சோழநாட்டு பகுதிகளை தன் வயப்படுத்த பெரும்படையுடன் காவிரி பாயும் இடத்தில் இருக்கும் கண்ணனூர் கொப்பத்தை* (தற்கால சமயபுரம்) முற்றுகையிட்டு அந்தப் போரில் பல தளபதிகளுடன் எங்கள் போசள தண்டநாயகனான சிங்கணனை அழித்து ஒழித்தான். அதுமட்டுமின்றி பின்வாங்கி பிறகு மீண்டும் படையெடுத்த எங்கள் போசள அரசர் சோமேசுவரரை களத்தில் கொன்று சினம் தணிந்து ஒரு நடனமாடினானே! அதை ஒரு காலமும் எங்களால் மறக்க முடியாது! போசள மன்னர் சோமேசுவரர் போரில் மடியும் முன்பே போசள இராஜ்ஜியத்தின் வட பகுதியை ஒரு மகன் நரசிம்மருக்கும் தென் பகுதியை மற்றொரு மகன் இராமநாதருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். கண்ணனூர் கொப்பத்தை இழந்து அடங்கி வருடம் தோறும் கப்பம் செலுத்தும் எங்கள் போசள மன்னர் இராமநாதன் இன்றும் தமிழக அரசியலில் பெரிதாகத் தலைநீட்ட முடியாமல் காத்திருக்கிறார்”*
——————————————————————-
• (பாண்டியர் வரலாறு – சதாசிவ பண்டாரத்தார் / தென்னிந்திய வரலாறு. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை – கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி / பாண்டியர் வரலாறு – கே.வி.இராமன்)
——————————————————————-
“மறக்கவில்லை! மன்னிக்கவில்லை!” மகேந்திரரின் குரல் கொடூரமாக ஒலித்தது. “எங்கள் முன்னால் தெலுங்குச் சோட நாட்டு மன்னர் மாவீரர் விஜயகண்ட கோபாலனைக் கொன்றான் அந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன்! தெலுங்குச் சோடர்களுக்கு உட்பட்டிருந்த காஞ்சியைக் கைப்பற்றினான்! அதோடு நிறுத்தினானா அந்த பாண்டியப் பதர்? வடக்கே காகதிய மன்னனாகிய கணபதி என்பவரையும் வென்று எல்லோர் உறக்கத்தையும் கெடுத்தான்! அவனிடமிருந்து எங்கள் தற்போதைய சோட மன்னர் இளைய கண்டகோபாலர் பிச்சை வாங்குவது போல் புலவரின் பாடல் மூலம் காஞ்சியை மீட்டார்.**
——————————————————————-
(சடையவர்மன் சுந்தரபாண்டியன் நெல்லூர், கடப்பை வரை மீன் கொடியைப் பறக்க விட்டு எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் எனும் பெயரைப் பெற்றான். அந்த படையெடுப்பில் விஜய கண்டகோபாலனான திக்கன் எனும் சோட அரசன் கொல்லப்பட்டான். அதன் பிறகு விஜய கண்டகோபாலனின் மகன் / தமையன் காஞ்சியை ஆண்டதாகவும் அவனை புலவர் ஒருவரது பாடலுக்கு மனம் இறங்கி காகதிய மன்னன் கணபதி உள்ளூர் குழப்பத்தை நீக்கி அரியணையில் அமர்த்தினான் என நீலகண்ட சாஸ்திரி தன் நூலான தென்னிந்திய வரலாற்றில் கூறுகிறார். ஆனால் பிற பாண்டிய வரலாற்று நூல்களில் குறிப்பாக சதாசிவ பண்டாரத்தார், விஜய கண்டகோபாலனின் சகோதரனுக்கு காஞ்சியை மனம் இரங்கி சடையவர்மனே அளித்ததாக கூறுகின்றார். நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கூற்றும் சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் கூற்றும் பெருமளவில் முரண்படுகின்றன. பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காகதிய அரசன் கணபதியையும் வென்று நெல்லூரில் வீராபிடேகம் செய்துள்ளான். அதன்படி பார்த்தால் சடையவர்மன் சுந்தரபாண்டியனே மனம் இரங்கி காஞ்சியை இளைய கண்டகோபாலனுக்கு கொடுத்துக் கப்பம் செலுத்த பணித்திருக்க வேண்டும். பிற நாடுகளிலும் அதேபோல் தான் சுந்தரபாண்டியன் செய்துள்ளான்.)
——————————————————————-
அந்த வடு அவர் மனதிலும் ஆறவில்லை எங்கள் மனதிலும் ஆறவில்லை! வஞ்சம் தீர்க்காமல் சோடர்கள் ஓய மாட்டார்கள்!”
“பாண்டியர்களை அழித்தொழிக்காமல் போசளர்களும் ஓய மாட்டார்கள்!” இதில் அவர்கள் நால்வரும் ஒற்றுமையாக காணப்பட்டார்கள்.
“கூடிய விரைவில் நிச்சயம் எண்ணம் ஈடேறும்! இப்போதைக்கு நாம் அதிகமாக இங்கு நேரம் கழிப்பது நல்லதல்ல! நீண்ட நேரம் கடந்தால் வெளியே இருக்கும் மக்கள் சந்தேகிக்க வாய்ப்பு இருக்கிறது!” என்றாள் காமினி.
“மக்களோடு மக்களாகப் பாண்டிய ஒற்றர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!” என்றாள் மாதங்கி.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மகேந்திரர் “காத்திருப்போம்! நெல்லையப்பரைத் தரிசித்துவிட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் மதுரை திரும்பட்டும்! அதற்குள் நமக்கான கட்டளைகள் வடக்கே இருந்து வரும்! இதைச் சொல்லவே இங்கு வந்தோம். நீங்களும் அடிக்கடி எங்களைத் தொடர்புகொள்ள முயலுங்கள். நாங்களே வந்தவண்ணம் இருந்தால் பிறர் சந்தேகப் பார்வையில் விழ வேண்டியிருக்கும்” சொல்லிவிட்டு மகேந்திரர் எழ, மாதங்கியும் அவருடன் எழுந்து நின்றாள்.
கதவைத் திறந்துகொண்டு முதலில் வெளிவந்த காமினி “மக்களே! பாருங்கள்! வைகை அம்மனின் அதிசயத்தைப் பாருங்கள்! சாகக் கிடந்த முதியவரை உயிர்பிழைக்க வைத்துவிட்டார்” என பெரும் பரவசத்தில் கத்தினாள்.
“வைகை அம்மன் வாழ்க! வைகை அம்மன் வாழ்க! வைகை அம்மன் வாழ்க!” கத்தியபடியே வெளிநடந்து வந்தார் மகேந்திரர்.
“என்னைக் காப்பாற்றி விட்டார்! வைகை அம்மன் என்னைக் காப்பாற்றிவிட்டார்!” உற்சாகமாக சொன்ன மகேந்திரர் அப்படியே மாதங்கியுடன் நடந்து போகலானார்.
மக்கள் அனைவரும் குலவை போட்டு வைகை அம்மனைத் தலைக்குமேல் கரம் கூப்பி வணங்கி வாழ்த்தினார்கள். சிலர் பரவசமடைந்து சாமி வந்தும் ஆடினார்கள்.
வெளியே நடக்கும் அனைத்தையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் வைகை அம்மன்.
தங்கள் குடிலை வந்தடைந்த பிறகு மகேந்திரர் குடிலுக்கு மேலிருக்கும் புறாக்கூடு ஒன்றை பார்த்தார். பார்த்தவுடன் “மாதங்கி, கதவை அடை” என்றார்.
மாதங்கி வேகவேகமாக கதவை அடைத்துவிட்டு பின் திரும்பி மேலே பார்த்தாள்.
அங்கு கூட்டில் அவர்களது தூது புறா திரும்பியிருந்தது.
மேலே ஏறி கூட்டில் அமர்ந்திருக்கும் புறாவைக் கையில் எடுத்தவர், அதன் உடலில் இரகசியமாக கட்டப்பட்டிருக்கும் சுருள் ஓலையை எடுத்த பிறகு கீழே இறங்கி நின்று படிக்கத் தொடங்கினார்.
அந்த ஓலையில் வந்திருந்த செய்தி மகேந்திரருக்குக் கை நடுக்கத்தை உண்டாக்கியது.
“என்ன செய்தி தந்தையே?” என்றாள் மாதங்கி. அவளிடம் ஓலையைக் கொடுத்தார். படித்தபிறகு மாதங்கியும் நடுநடுங்கிப் போனாள்.