பயணங்கள் தொடர்வதில்லை | 18 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 18 | சாய்ரேணு

17. ரூபாய்

“கோஷ் டாம் இட்!” என்றாள் தன்யா.

எல்லா கேபின்களும் வெளியே தாழிடப்பட்டிருந்தன.

“டாய்லெட்” என்று பாய்ந்தாள் தன்யா. அங்கே யாருமில்லை. ஆனால்…

திட்டுத் திட்டாக ரத்தம்.

“மை… காட்…” என்று பதறிய தன்யா “டைனிங்-கார்…” என்று அக்கதவைத் தள்ளினாள்.

பாத்ரூமுக்கும் டைனிங்காருக்கும் இடைப்பட்ட சிறிய பகுதியில் தரையில் அமர்ந்து பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கிக் கொண்டிருந்தான் தர்மா.

“என்ன பண்ணிட்டிருக்க இங்கே? இதுதான் காவல் காக்கிற லட்சணம்!” பொரிந்தாள் தன்யா, தன் பதட்டத்தை மறைக்குமுகமாக.

“நம்ம கேபினுக்குப் போய்ப் பேசலாம்” என்றான் தர்மா.

*

ர்மாவின் புஜத்தில் விழுந்திருந்த ஆழமான வெட்டுக் காயத்திற்கு முதலுதவி செய்து மருந்து வைத்துக் கட்டினாள் தர்ஷினி. நெற்றியில் தெரிந்த புடைப்புக்கும் மருந்திட்டாள்.

தன்யா நீட்டிய பாட்டிலிருந்த தண்ணீரை ஒரேமூச்சில் குடித்துவிட்டு அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான் தர்மா.

“இப்போ சொல்லு, என்ன நடந்தது?” என்றாள் தன்யா பதட்டமாக.

“ஸிட் டவுன்” என்றான் தர்மா. இருவரும் ஸீட்டில் அமர்ந்தார்கள்.

“காரிடாரில் நடந்துட்டிருந்தேன். அப்போ எனக்கு வந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கறதுக்காக சுப்பாமணியோட கூப்பேக்குப் போனேன். உள்ளே பணத்தை எடுத்துவெச்சு எண்ணிக்கிட்டு ஒரு உருவம்…

“நான் யாருன்னு பார்க்கறதுக்குள்ள அது சடார்னு கையிலிருந்த ஒரு கட்டையை எறிஞ்சது. நான் அதைத் தடுத்துட்டேன்னாலும் முனை பட்டுடுச்சு. என்னைத் தள்ளிவிட்டுட்டு வெளியே ஓடியது. நான் தடுக்கப் பார்த்தேன்… உதறி ஓடி நான் வரதுக்குள்ள ட்ரெயினிலிருந்து கீழே குதிக்கப் பார்த்தது. அதை இழுத்தேன். அப்போ பின்னாடியிருந்து யாரோ கத்தியால் ஒரு வெட்டு. கொஞ்சம் தடுமாறிட்டேன். உருவம் கீழே இறங்கி ஓடிட்டது. அதை ஃபாலோ பண்ணிப் போகத்தான் நினைச்சேன், சாரி, கொஞ்சம் மயக்கமா வந்துருச்சு…”

எந்த ஹீரோவாவது தன் ஃபைட் சீக்வன்ஸை இவ்வளவு சாதாரணமாக, அடக்கமாகச் சொல்வார்களா என்று எண்ணினாள் தன்யா.

“கொஞ்சம் மயக்கமா வந்ததா? வலி உயிர்போய் தலையைச் சுத்திக்கிட்டு வந்திருக்குமே! பாத்ரூமில் பார்த்தோம், ப்ளட் ரொம்ப வெளியே போன மாதிரித் தெரியுதே” பயத்துடன் கேட்டாள் தர்ஷினி.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, கையைக் கழுவினேன். அதான் பாத்ரூமில் ரத்தம். என்னைக் குத்தியது யாருன்னும் பார்க்க முடியலை” என்றான் தர்மா சாதாரணமாக.

அவன் காரிடாரில் சுருண்டு அமர்ந்திருந்தது மனதில் தோன்ற கவலை தெறித்தது தன்யா, தர்ஷினி முகத்தில்.

“ஹேய், விடுங்க” என்ற தர்மா, “கேஸுக்கு வருவோம். அந்த உருவம் சுப்பாமணியோட அறையில் பணத்தை எடுக்க வந்திருக்கணும்னு நினைக்கறேன்.”

“அங்கே பணம் இருக்கறது அந்த உருவத்துக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் தன்யா.

“அது இருக்கட்டும். சுப்பாமணியோட லாக்கரைப் பார்த்ததில் இருந்தே ஒரு சின்ன கன்ஃப்யூஷன்” என்றான் மெதுவாய்.

தன்யாவும் தர்ஷினியும் அவனையே பார்த்தார்கள்.

“இந்தப் பணம். அவரோட லக்கேஜில் இருந்தது. ஸர்ச் பண்ணினப்போ பார்த்தோம். அப்போ நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. இப்போ… இந்தப் பணம் ஏன் லாக்கரில் வைக்கப்படலை? ஏன் லக்கேஜில் இருக்கு?” தர்மா யோசித்தான்.

“ஸிம்ப்பிள். லாக்கரில் இருந்தது சங்கரின் பொருள். இது சுப்பாமணியோட சொந்தப் பொருள்” என்றாள் தன்யா.

“தன்யா டியரெஸ்ட், நீ ரொம்ப கெட்டிக்காரி. ஷார்ப் மைண்ட். ஆனா சில சமயம் லாஜிக் கோட்டை விட்டுடற” என்றான் தர்மா.

தன்யா அவனை முறைக்க, தர்ஷினி அவனுடைய எண்ணத்தை அறிந்து தொடர்ந்தாள். “இப்போ நீ என்ன சொல்ல வர? லாக்கரை மற்றவங்க யாரும் பயன்படுத்தல. ப்ராக்டிக்கலி ஒரே நாள் பிரயாணம்தானேன்னு விட்டுட்டாங்க. ஆனா சுப்பாமணி பயன்படுத்தியிருக்கார்… ஓ! இவ்வளவு நிறையப் பணம் வெச்சிருக்கறவர், சேஃப்டிக்காக நகைகளை லாக்கரில் வைக்கிறவர், நிச்சயமா பணத்தையும் சேர்த்துத்தான் வைப்பார். அப்படி அவர் வைக்கலைன்னா அதுக்கு ஸ்பெஷல் காரணம் இருக்குன்னு சொல்ற…” என்றாள்.

“எதுக்கு ஸ்பெஷல் காரணம்னெல்லாம் நீட்டி முழக்கற? ஸிம்ப்பிள்” என்றாள் தன்யா.

தன்யாவுக்கு எல்லாமே ஸிம்ப்பிள்தான் என்று தர்மாவுக்கும் தர்ஷினிக்கும் தோன்றியது.

“இதை அவர் லாக்கரில் வைக்காததற்குக் காரணம், இதை அவர் யாருக்கோ கொடுக்க வெச்சிருந்ததுதான். கரெக்டா?” என்றாள் தன்யா.

“யாருக்கோ என்ன? எனக்கு” என்றான் தர்மா.

“வாட்?” என்று உண்மையிலேயே அதிர்ச்சியுடன் கேட்டாள் தன்யா.

ரூபாய் நோட்டுகளோடு சொருகி வைக்கப்பட்டிருந்த ஒரு பேப்பரை நீட்டினான் தர்மா

எழுத்துகள் தாறுமாறாக எழுதப்பட்டிருந்தது. அவசரத்தில் எழுதப்பட்டிருக்கலாம், அல்லது கையெழுத்தை மறைப்பதற்காக…

தர்மா!!

இது நீ எண்ணியே பார்க்க முடியாத பணம். ஒன்றல்ல, ஆயிரம் கேஸ் துப்பறிந்தாலும் கிடைக்காத பணம். எடுத்துக் கொள். கேஸை மறந்துவிடு. உன் தங்கைகள் முட்டாள்கள். நீ பிழைக்கத் தெரிந்தவன். சரியாக முடிவெடு. இல்லை, பிழைக்க மாட்டாய்!

கையெழுத்து இல்லாத அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் தன்யாவுக்குச் சிரிப்பு வந்தது. “எங்களோட நெகோஷியேட் பண்ண நீயா? உன்னைப் பற்றித் தெரியலை அவங்களுக்கு” என்றாள். “ஆனால் இது உனக்காகச் சுப்பாமணி எடுத்து வெச்சது இல்லையே?”

“அப்போ நான் இதை எடுத்துக்கக் கூடாதா?” என்றான் தர்மா, போலி சோகம் காட்டி.

“ஷட் அப்” என்றாள் தன்யா. “இது விளையாடற நேரம் இல்லை. யோசிக்க வேண்டிய நேரம். இப்போ நான் சொல்றதை ரெண்டு பேரும் கவனமா கேளுங்க. இந்த ட்ரெயினில் ஏறியதிலிருந்தே, அதாவது ஒரு கொலை நடக்கக் கூடும்னு நாம நினைச்சும் பார்க்காத நேரத்திலிருந்தே நம்ம மனத்தில் ஏற்பட்ட இம்ப்ரெஷன் என்ன?”

தர்ஷினியும் தர்மாவும் யோசித்தார்கள்.

“பரிசுப் பொருட்கள் பாதுகாப்புத் தவிர, நமக்கு வேறு ஏதோ கேஸ் கொடுக்க நினைக்கறார் சுப்பாமணின்னு எனக்குத் தோன்றியது” என்றாள் தர்ஷினி. “அந்தக் கேஸ், இந்தக் குடும்பம் சம்பந்தப்பட்டது.”

“எக்ஸாக்ட்லி! அந்தக் கேஸ்… சுப்பாமணி தெரிஞ்சுக்க விரும்பிய ரகசியம். ரகசியங்களின் லாக்கரான சுப்பாமணிக்கே தெரியாத ரகசியம்” என்றான் தர்மா.

“எக்ஸாக்ட்லி!” என்றாள் தன்யாவும். “இந்தப் பயணம் சுப்பாமணியால் ஏற்பாடு செய்யப்பட்டதே, அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கத்தான். இந்தப் பணத்தை வெச்சுப் பார்த்தா, அவர் அதைத் தெரிஞ்சுக்க நம்மைத் தவிர இன்னொரு திசையிலும் முயற்சி பண்ண நினைச்சிருக்கார், கரெக்டா?”

“மேக்ஸ் சென்ஸ்” என்றாள் தர்ஷினி. “இப்போ இந்தப் பணத்துக்கு மத்தியில் லெட்டரை வெச்ச ஆளும், தர்மாவைத் தாக்க வந்தவங்களும் ஒருத்தர்தானா, இல்லை வேறு வேறு நபர்களா?”

“யோசிக்கணும். உன்னைத் தாக்கிய ஆளுடைய அடையாளம் சொல்லு தர்மா” என்றாள் தன்யா.

“என்ன அடையாளம் சொல்றது இந்தக் கொரோனா காலத்தில்? மீடியம் ஹைட். பெண்ணாக இருக்கலாம். அதோட… அட்டெண்டரோட ட்ரெஸ் போட்டிருந்த மாதிரி இருந்தது” என்றான் தர்மா.

*

வர்கள் டைனிங் காரில் நுழைந்தபோது கப்பென்று சப்தம் அடங்கியது. எல்லோரும் எழுந்தார்கள்.

“ப்ளீஸ், உட்காருங்க” என்றாள் தன்யா.

“மேடம், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் தேவா.

“நாங்களே இப்போ உங்க கேபினுக்கு வரதா இருந்தோம்” என்றார் சந்திரசேகர்.

“வெல்?” என்றாள் தன்யா.

“நாளைக்கு வெதர் க்ளியர் ஆனதும் வண்டி கிளம்பிடும். கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் போலீஸ் விசாரணையைச் சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திச்சுக்கறோம். நீங்க உங்க இன்வெஸ்டிகேஷனை நிறுத்திடுங்க. இராணி கந்தசாமி மரணத்துக்கு அப்புறம் எங்களுக்குப் பயமா இருக்கு. உங்க ஃபீஸ் என்னவோ அதைப் பே பண்ணிடறோம்” என்று கூறிய ஸ்ரீஜா கைப்பையிலிருந்து சில ரூபாய் நோட்டுகளை மேஜைமீது எறிந்தாள்.

அவற்றை ஒரு விநாடி பார்த்த தன்யா “நாங்க இன்வெஸ்டிகேஷனை நிறுத்த இதெல்லாம் எதுக்கு? கொலையாளியைக் கண்டுபிடிச்சதும் நாங்களே நிறுத்திடுவோம்” என்றாள் புன்சிரிப்புடன்.

“புல்ஷிட், உங்க கண்டுபிடிப்பும் நீங்களும்!” என்று கத்தினாள் ஸ்ரீஜா. “எங்களைப் பேச வெச்சுச் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டீங்க! வேறென்ன கண்டுபிடிச்சுக் கிழிச்சீங்க?” என்றாள்.

“எவ்வளவோ கண்டுபிடிச்சிருக்கோம். ஒண்ணு சொல்லவா? உங்க துப்பாக்கியை எங்க கேபினில் ஒளிச்சு வெச்சது நீங்கதானே?” என்று கேட்டாள் தன்யா.

ஸ்ரீஜா அரண்டு நாற்காலியில் அமர்ந்தாள்.

“நெக்ஸ்ட்… சுப்பாமணி அறைக்குள் இப்போ வந்தது யார், தர்மாவைத் தாக்கினது யார்னு சொல்லவா?” என்றாள் தன்யா.

“வாட்? தர்மா… தாக்கப்பட்டாரா?” என்றாள் ஸ்ரீஜா வியப்பாக.

“ப்ளீஸ்! இதுவரை நீங்க எல்லோரும் நல்லா நடிச்சாச்சு. இனி முகமூடிகள் கலைகிற நேரம்” என்றாள் தன்யா.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...