கிளியோபாட்ரா | ஆர்னிகா நாசர்

 கிளியோபாட்ரா | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 6

கிமு 35ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி இரவு பத்துமணி

எகிப்து பேரரசின் அரண்மனை கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. கோட்டைக் கதவை காவல் காத்தனர் எட்டுக்கும் மேற்பட்ட வீரர்கள்.

தீப்பந்தங்கள் துணையுடன் ஒரு பல்லக்கு வந்து நின்றது.

கோட்டைக்கதவு காவலாளிகளிடம் அரசியின் இலச்சினை பதிக்கப்பட்ட மோதிரத்தை நீட்டினர் பல்லக்கு சுமப்போர்.

கோட்டைக்கதவு திறந்து விடப்பட்டது.

அரண்மனைக்குள்ளே நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

பல்லக்கு அந்தப்புரத்துக்கு குலுங்கிகுலுங்கி நகர்ந்தது. அந்தப்புர உள்வாசலில் பத்துக்கும் மேற்பட்ட சேடியர் பெண்கள் நின்றிருந்தனர். கழுத்திலும் இடுப்பிலும் நகைகள் அணிந்திருந்தனர். அனைத்து பெண்களும் நீக்ரோ இனத்தை சார்ந்தவர்கள்.

பல்லக்கிலிருந்து ஈஸ்வர் இறங்கினான். வயது 35. மீசையுடன் இணைந்த குறும்தாடி வைத்திருந்தான். பியர் தொப்பை.

எகிப்து மொழியில் வரவேற்றனர். “வாருங்கள் அரசி கிளியோபாட்ராவின் புதிய காதலரே!”

“வரவேற்புக்கு நன்றி!”

சேடியர் பெண்களுடன் வராண்டாவில் நடந்தான். உடலை நெளித்தபடி பூனைகள் குறுக்கே போயின.

வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டான்.

“காத்திருங்கள் இளைஞரே! மகாராணி வந்துவிடுவார்!”

காத்திருந்தான். காலடி அரவம் கேட்டது. துள்ளி திரும்பினான்.

எகிப்து பேரரசி கிளியோபாட்ரா உட்பட்டாள். கையில் ஒரு சிறுத்தைக்குட்டி வைத்திருந்தாள். 175செமீ உயரம் இருந்தாள். பளபளக்கும் மினுமினுக்கும் சாம்பல் நிறத்தில் டாலடித்தாள். வெள்ளை பிசினும் ஏலக்காயும் பச்சை ஆலிவ் எண்ணெயும் இலவங்க பட்டையும் கலந்த நறுமணம் பூசியிருந்தாள். சுருள்சுருள் தலைகேசம். நுனிவளைந்த ரோமானிய கழுகு மூக்கு. ரோஜா உதடுகள். காப்பர் கார்பனேட் மை ஈஷிய கண்கள். அகல ஏறு நெற்றி. செயற்கை வர்ணங்கள் பூசப்பட்ட நகங்கள்.

“என்ன பிரமித்து நிற்கிறாய் இளைஞனே?” தமிழில் வினவினாள்.

“சரித்திரத்திலும் கதைகளிலும் சினிமாக்களிலும் படித்தறிந்த பார்த்தறிந்த பேரழகியை இன்று நேரில் சந்திக்கிறேன்… ஜோதியில் விழுந்து சாம்பலாக போகும் விட்டில் பூச்சி நான். யௌவனராணியே இனி நான் உங்கள் அழகுக்கு அடிமை!”

“என்னை ஒருமையிலேயே விளிக்கலாம் நீ!”

“சரி மான்விழி மாதே!”

“ஏராளமான காதல் வசனங்களை கேட்டு சலித்து விட்டேன். என் காதலன் ஜுலியஸ் சீசராகட்டும் என் கணவர்கள் மார்க் ஆன்டனி பதிமூன்றாம் தோலமி பதிநான்காம் தோலமியாகட்டும்… புளித்து போன காதல் வர்ணனைகளை அள்ளி தெளித்து விட்டார்கள்…”

“பதிமூன்றாம் தோலமியும் பதிநான்காம் தோலமியும் உன் உடன்பிறந்த தம்பிகள்தானே?”

“அரசாட்சியை கைப்பற்ற அவர்களை மணந்து கொண்டேன்!”

“உனக்கு எத்தனை குழந்தைகள்?”

“நான்கு… சிசேரியன், தோலமி, பிலடெல்பஸ், அலெக்ஸான்டர் ஹிலியோஸ்… வெளியுலகத்துக்கு தெரியாத குழந்தைகள் எத்தனையோ…”

“உன் தந்தை பெயர்?”

“பனிரெண்டாம் தோலமி! நீ என்னுடன் காதல் செய்ய வந்தாயா, அல்லது என்னை பற்றிய தகவல்களை கேட்டறிய வந்தாயா?”

“இரண்டும் தான்!”

“ஓவ்!”

“நீ பேரழகி மட்டுமல்ல… நீ ஒன்பது மொழியில் பேசக்கூடிய வித்தகி… கணித ரசாயன தத்துவ மேதை நீ… தோலமைக் பேரரசின் கடைசி பேரரசி நீ.. உன்னை பெண் கடவுள் ஐஸிஸ்ஸின் வாரிசு என்பார்கள்!”

“போதுமடா என் பெருமை பேசியது… இரவு உணவை உண்டு விட்டு காதல் களியாட்டத்தில் ஈடுபடுவோம்!”

இழுத்து அணைத்தாள்.

அதன்பின் இருவரும் விடுபட்டு உணவு மேஜைக்கு நடந்தனர். உணவு மேஜையில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பதார்த்தங்கள்.

முள்ளம்பன்றி, காடை, மான், ஆடு, எருது மாமிசங்கள்.

முத்துக்களை ஒயினில் கரைத்து ஒரு கோப்பையை தான் எடுத்துக் கொண்டு இன்னொரு கோப்பையை ஈஸ்வரிடம் நீட்டினாள் கிளியோபாட்ரா.

உறிஞ்சினான் ஈஸ்வர் ஒயின் துவர்த்து இனித்தது.

தனது இருக்கையிலிருந்து ஒருமலைப்பாம்பு குட்டியை எடுத்து தன்னுடலில் ஊர விட்டாள். உணவை ஈஸ்வருக்கு ஊட்டிவிட்டாள். ஈஸ்வரின் தாடியை வருடி விட்டாள்.

“என்னை பற்றி கேட்டாயே… உன்னை பற்றி சொல்!”

“என் முழுப்பெயர் ஈஸ்வர்குமார். கணினி பொறியியலும் மேலாண்மை நிர்வாகமும் படித்துள்ளேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அணி தலைவனாக பணிபுரிகிறேன். என் மனைவி பெயர் ஸ்னேகா. எங்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவள் விவசாய அதிகாரியாக பணிபுரிகிறாள். எங்களுக்கு குழந்தைகள் இல்லை…” விவாகரத்து ஆனதை மறைத்தான்.

“என்னை நம்பி உன் மனைவியை உதறிவிட்டு வராதே. எனக்கு தினம்தினம் புதுபுது காதலர்கள் தேவை.”

“என்னுடனான இன்றைய நாளை நீ என்றைக்கும் மறக்கமாட்டாய். இனி நானே உன் நிரந்தரகாதலன்!”

இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

நான்கைந்து பெண்கள் ஓடிவந்தனர். இருவரின் உடலிலும் வாசனை திரவியங்களை பூசினர்.

மிகப்பெரிய குளியல்தொட்டியில் சிவப்புநிற ஒயின் நிரப்பப்பட்டிருந்தது. ஒயினின் மீது நூற்றுக்கணக்கான வர்ணவாசனை மலர்களின் இதழ்கள் மிதந்தன.

ஒயின் குளியல் தொட்டிக்குள் ஈஸ்வரும் கிளியோபாட்ராவும் இறங்கினர். சலப்சலப்!

தொட்டிக்குள் மலைப்பாம்பு குட்டியும் நீந்தியது.

“ஈஸ்வர்! ஜலகிரீடை பற்றி கேள்விபட்டிருக்கிறாயா?”

“ஏராளமான சாண்டில்யன் கதைகளில் ஜலக்கிரீடை பற்றி படித்து கிறுகிறுத்திருக்கிறேன்”

முட்டையின் வெள்ளைக்கருக்களை எடுத்து தலைகேசத்தில் ஈஷிக்கொண்டாள்.

குளியல் தொட்டியை சுற்றி இசை மகளிர் கூடினர். இசைபாடல்களை பாட ஆரம்பித்தனர்.

“இசை-காதல்-உணவு-புகழ்-ஆட்சி அதிகாரம் இவையெல்லாம் எனக்கு திகட்டதிகட்ட தேவை. எகிப்தை ஆண்ட மன்னர்களிலே மிகவும் புகழ் பெற்ற ‘பரோ’ வாக நான்தான் இருக்கவேண்டும்!”

இருகைகளையும் விரித்து நீட்டினாள்.

விடியவிடிய இருவருக்கும் இடையே ஆன தாம்பத்யம் தொடர்ந்தது.

சூரியோதயத்துக்கு ஒரு நாழிகை மீதம் இருந்தது.

“என் பெண்மை பூரிதம் அடைந்தது ஈஸ்வர்” ஒரு குறும் கத்தி எடுத்தாள் கிளியோபாட்ரா. தன் நடுநெஞ்சில் செருகி பிணமாய் தொமீரினாள்.

-கிர்ரக்!

தொடர்பு அறுந்தது. ஈஸ்வரின் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் தலையிலிருந்தும் மாயஉண்மை காட்சி இணைப்புகளை அகற்றினான் மாயஉண்மைகாட்சி நிலைய உரிமையாளன் பைரவன்.

“கிளியோபாட்ராவுடன் தாம்பத்யம் செய்தது போல் மாயஉண்மைகாட்சி அனுபவம் ஒருமணிநேரம் அளித்தேன். ஒருலட்சம் பிளாஸ்டிக் பணம் எடு!”

கொடுத்தான் ஈஸ்வர்.

“அடுத்தவாரம் மர்லின் மன்றோவுடன் நான் மாயஉண்மைகாட்சி மூலம் காதல் புரிய வேண்டும்!”

“செய்து விடலாம்!”

திடீரென்று ஈஸ்வரின் கண்களில் கண்ணீர் பொங்கியது. “எனக்கு அந்தரங்க உறுப்பில் புற்றுநோய். அறுவை சிகிட்சை செய்து அகற்றி விட்டார்கள். அதன்பின் தேவையில்லாமல் திருமணம் செய்து கொண்டேன். என்னை ஆண்மையில்லாதவன் என நீதிமன்றத்தில் கூறி விவாகரத்து செய்து விட்டாள் என் மனைவி. அவளுடன் காதல் சரசம் செய்வது போல மாயஉண்மைகாட்சி அனுபவம் எனக்கு வேண்டும். செய்து தருவீர்களா பைரவன்?”

“உங்கள் முன்னாள் மனைவியின் புகைப்படம் விடியோகிளிப்பிங் குரல் பதிவு எல்லாம் கொண்டு வாருங்கள்… விஆர்பி மூலம் அசத்திவிடலாம்..” பைரவனின் கணினியில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

‘முன்னாள் மனைவி ஸ்னேகாவின் விடியோபதிவுகளை துஷ்பிரயோகம் செய்து ஈஸ்வர் மாயஉண்மைகாட்சி தாம்பத்ய அனுபவம் பெறுவதை இந்த நீதிமன்றம் தடை செய்கிறது. மீறி செயல்பட்டால் ஈஸ்வருக்கும் ஈஸ்வருக்கு உதவுபவருக்கும் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்தநீதிமன்றம் எச்சரிக்கிறது!’

நடுமண்டையில் இடிவிழுந்தது போல வெலவெலத்துப் போனான் ஈஸ்வர்.

கமலகண்ணன்

2 Comments

  • Wow… visual realism த்தை சம்பந்தப்படுத்தி உலகின் ஒப்பற்ற அழகி கிளியோபாட்ரா வையே கதாநாயகியாக்கி ஒரு சிறுகதையை சிற்பமாக்கியிருக்கிறீர்கள். அறிவியல் சிறுகதைகளில் மிக முக்கியமான கதையும் ஆவணப்படுத்தவைண்டிய கதையும் இது. வாழ்த்துகள் 💐🎉

  • அருமை சார்,

    ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. நானும் கூட அந்நாளில் நடந்த கதையை தான் நீவிர் சிறுகதை மூலம் வடிவமைத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால்… உலக அழகி யுடன காதல் கொண்டது போல மாயஜால நிகழ்வையா அத்தனை நேரம் அனுபவித்தான்.

    பாவம் பெண்களுக்கு குழந்தை பெற முடியவில்லை என்று விவகாரத்து செய்து வேறு மணம் புரிந்து வாழ்வது போல, ஆண்களுக்கு இது போன்ற குறைபாடு வருகின்ற பட்சத்தில் ஒரு சில பெண்களும் விலகி சென்று விடுகின்றனர்.

    எத்தனை வருட தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாலும் இதற்கு மட்டும் தீர்வு என்பது வரவே இல்லை.

    வாழ்த்துகள் சார்💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...