என்னை கவர்ந்த பெண் எழுத்தாளர் | உமாகாந்தன்

 என்னை கவர்ந்த பெண் எழுத்தாளர் | உமாகாந்தன்

நான் எழுபதுகளின் இளைஞன்

என்னோட பசி தமிழ் இலக்கியம் தான்

பள்ளிப்படிப்பின் போதே ஆரம்பித்தது தமிழ் மேல் காதல்

அம்மா வுக்கு கல்கி வார இதழ் பிடிக்கும் என்பதால் வார இதழான அதைத்தான் அப்பா வாங்குவார்

இவர்களால் கல்கி யில் வெளியான கதைகள் நாவல்கள் எல்லாம் படித்தேன்

பிறகு அரசின் லைப்ரரி ,உறுப்பினர் இல்லை, லைப்ரரிக்கே போய் காலை மாலை என தினம் அங்கேயே உட்கார்ந்து வாசிப்பேன்

அந்த காலகட்டத்தில் ஒரு சமயம் தினம் ஒரு புத்தகம் என வருடத்தில் 365புத்தகங்கள் வாசித்தேன்

அந்த வாசிப்புகளின் போதுதான் ஆர் ,சூடாமணி பற்றி அறிந்தேன்

அந்த காலகட்டத்தில் பெண் எமுத்தாளர்களின் பங்களிப்பு குறைவு என்று தான் சொல்ல வேண்டும் ,அவரின் எழுத்துகள் என்னை கவர்ந்து

பின் அந்த சமயத்தில் என்னை கவர்ந்த பெண் எழுத்தாளர் ஆர் ,சூடாமணி அவர்களே

இன்றும் அவரின் எழுத்துகளுக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்வேன்

சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரிக்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத, இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும். அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்கநெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது

இவரின் எழுத்துக்களை படித்தால் நீங்கள் உணர்வது நிச்சயம்

தமிழ் மொழியின் சமகால இலக்கியவரலாற்றில் பெண்ணெழுத்தின் பங்களிப்புபற்றி தனியாக எழுதப்பட்டால், ஆர்.சூடாமணியின் பெயர் அங்கு பிரதானமாகப் பேசப்படும். சூடாமணியைத் தவிர்த்து, பெண்ணெழுத்துபற்றி யாரும் சிறப்பாக எழுதிவிடமுடியாது. அவருடைய கதாபாத்திரங்கள் மனிதரின் அகஉலகை, குறிப்பாகப் பெண்களின் அகவெளியின் உணர்வுநுட்பங்களைப் பேசுகின்றன. குண மாறுதல்களைக் காண்பிக்கின்றன.

1957-லிருந்து அரைநூற்றாண்டு காலகட்டத்தில் சூடாமணி ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தீபம், கணையாழி, கல்கி, அமுதசுரபி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் இவரது கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பில் சூடாமணியின் ‘அந்நியர்கள்’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. சூடாமணி ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது ரொம்பப்பேருக்குத் தெரியாது

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பில் சூடாமணியின் ‘அந்நியர்கள்’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. சூடாமணி ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது ரொம்பப்பேருக்குத் தெரியாத விஷயம். சூடாமணி ராகவன் என்ற பெயரில்

இவர் . முறையாக ஓவியம் பயின்றவர் . இவரது நீர்வண்ண ஓவியங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது ஓவியங்கள் இவரது மறைவுக்குப்பின் 2011-ல் சென்னையில் காட்சிக்கு வந்தபோதுதான் எல்லோரும் அறிய நேர்ந்தது

. ஓவியர் மோனிக்கா என்பவர் ஆர்.சூடாமணியின் வாழ்வியல், அவரது 50 வருடகாலமாக வாழ்ந்த பிரிட்டிஷ் காலத்து சென்னை வீடு, எழுத்து, ஓவியம், படித்த புத்தகங்கள் எனக் கோடிட்டுக்காட்டும் ‘அழகின் எளிமை’ என்கிற 27-நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்து இயக்கியிருக்கிறார். எழுத்தாளரின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட படம் இது.கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய குறும் படம் இது

எழுத்தாளர் பிரபஞ்சன் “அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது” என்றார் .

ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக்கொண்டார்’ என்கிறார். தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திலீப்குமார்

’மிகுந்த உளவியல் கூறுகளுடன் தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர் சூடாமணி. அவருடைய கதைகளின் பிரதான அம்சம் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்’ என்கிறார் கல்கி ஆசிரியர் குழுவில் இருந்த எழுத்தாளர் பா,ராகவன்

சூடாமணியை ஒருமுறை சந்தித்த எழுத்தாளர் திலகவதி கூறுகிறார்: ’அவர் வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்’

குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு எனக் கவலைப்படும் பெற்றோர் குழந்தைகளின் உலகத்தைப் பார்த்ததே இல்லையே எனக் கவலைப்படுகிறார் இவர். இவரது சிறுகதைகளில் சில, குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகிற்குள் தலைநீட்டிப் பார்க்கின்றன. சூடாமணியின் ஒரு கதைப் பாத்திரமான யமுனா என்கிற சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்த தன் சினேகிதனைக் காப்பாற்றிய கடவுளின்மேல் நன்றியும், பிரியமும் கொள்கிறாள். பெருமாளை அன்போடு கேட்கிறாள்: ’உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால் வாயேன்.. உன்னை முதலில் ஆட விடுகிறேன் !’

இன்னொரு பழக்கம். கண்தெரியாத மனிதர்களுக்கு என நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தார்

. அவர்களை உட்காரவைத்துக் கனிவோடு பேசிக்கொண்டிருப்பார். அவர்களால் படிக்கமுடியாதே என விசனப்பட்டு தான் படித்த நல்ல கதைகளை அவர்களுக்குப் பொறுமையாகப் படித்துக் காட்டுவாராம்.

என்ன ஒரு மனிதாபிதானம். சேவை. நம்மை நெகிழவைக்கிறது

இவரது இளமை வாழ்க்கை போராட்டம்தான்

பிரிட்டிஷ் காலத்து ஐ.சி.எஸ். அதிகாரியான டி.என்.எஸ்.ராகவனின் மகளான இவர், சிறுவயதில் பெரியஅம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்ததே அதிசயம் என்கிற நிலையில் இருந்தார்

இதனால் இவரின் பள்ளிக்கல்வியோடு படிப்பு நின்றது. தனக்கு அமைந்த வாழ்க்கையின் போதாமையை, குறைபாடுகளை இயல்பாக மனதில் வாங்கிக்கொள்ள சிறுவயதிலேயே கற்றார். தனியாக நிறையப் படித்தார். மகரம் என்கிற பெண் எழுத்தாளர்தான் சூடாமணிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தது. ஆங்கிலத்தையும் ஆசையோடு கற்றார். அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கார்ல் மார்க்ஸிலிருந்து கலைஉலகம்பற்றிய புத்தகங்கள் வரை அவர் நிறையப்படித்திருந்தார். வாசித்த புத்தகங்கள்பற்றி, தன் கருத்தைப் பென்சில் குறிப்புகளாக தனி குறிப்பேடுகளில் பதிதல் இவரது பழக்கம். சூடாமணியின் தன்னம்பிக்கை மற்றும் எழுத்து வளர்ச்சியில் அவரது தாயார் கனகவல்லிக்குப் பெரும்பங்கு உண்டு.

ஒரு வாசிப்பு மனிதனை மாற்றும்

சாதனை செய்ய இயலும் என்பதற்கு இவரை உதாரணமாக சொல்லலாம்

ஆண் ஆதிக்கம் நிறைந்த அந்த கால கட்டத்தில் கடைசி வரை . இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பங்களாவில் தான் உண்டு, தனது அகமுண்டு எனத் தனியாக வாழ்ந்தார். அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நெருங்கிய சிலரைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு விசிட்டர்கள் பெரும்பாலும் இல்லை ஏராளமாக வாசிக்கும் பழக்கம் கொண்டு இவர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தம் உலகை அமைத்துக் கொண்டவர்.

ஆனாலும் இவரின் எழுத்துக்கள் நான்கு சுவர்களை தாண்டி உலம் முழுவதும் விரிந்தது

’ஆர்.சூடாமணி’ என்பது அவரது எழுத்து மட்டும்தான்

சூடாமணி என்கிற பெண்ணில்லை. இவர் ஒரு முக்கிய எழுத்தாளராக அறியப்பட்ட நிலையிலும், இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது, நேர்காணல்கள் கொடுப்பது, டிவி-யில் வருவது போன்ற செயல்களை அறவே தவிர்த்தார்

ஃபோட்டோக்களை அவர் அனுமதித்ததில்லை. தன்னுடைய அகஉலகில் ஆழ்ந்திருந்தார். அதிலேயே அமைதியும், உன்னதமும் கண்டவர். மனித மனத்தின் பிரக்ஞைபூர்வமான எழுத்து என்பதை வாசகர்கள் அவர் படைப்புகளை வாசித்தால் உணரலாம்

சாதனைகள் படைத்தது

பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார்

இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது

1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார்.

இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது.. இரவுச்சுடர் என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

‘சூடாமணியின் கதைகள்’ என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது. “உள்ளக் கடல்’ என்ற நாவலையும், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

விருதுகள் இவரைத் தேடி வந்ததது

கலைமகள் வெள்ளி விழா விருதும் பரிசும் மனத்துக்கினியவள் நாவலுக்காக (1957

• இலக்கியச் சிந்தனை ஆண்டு விருது “நான்காவது ஆசிரமம்’ என்ற சிறுகதைக்காகப் பெற்றார்.

• ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில், “இருவர் கண்டனர்’ என்ற நாடகத்துக்காக 2-ம் பரிசைப் பெற்றுள்ளார்.

• “பபாசி’ அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு 2009 ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

• பரிசை ஏற்றுக்கொண்ட அவர், பல்வேறு சேவை நிறுவனங்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்து வழங்கினார்.

இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதப் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்

இவரின் தன்னலமில்லாத அரிய செயல்கள்தான் என்னை மேலும் அவரின் பால் ஈர்த்தது

எழுத்தாற்றல் தவிர்த்து , மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர்

2010-ல் தன் 79-ஆவது வயதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது பங்களா மற்றும் சொத்துக்களை ஏழை மருத்துவமாணவர்களின் உயர்கல்வி, நோயாளிகளின் மருத்துவ உதவி என அறச்செயல்களுக்காக வழங்கிவிட்டு மறைந்தார்

இறக்கும் தருவாயில் தர்ம காரியத்துக்காக தன் சொத்து முழுவதையும், முறையாக உயிலெழுதி அளித்துவிட்டு மறைந்த ஒரே எழுத்தாளர் நாட்டில் அனேகமாக இவராகத்தான் இருக்கும்.

சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் இன்றும் யன்படுகின்றது

நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான் என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார்.

இந்த மகளிர் தின நாளில் இவரை நான் விரும்பிய ஒரு சிறந்த மகளிர் எழுத்தாளர் இவரே என மனம் திறந்து சொல்கிறேன்

இக்கட்டுரை எழுத வாய்ப்பளித்த தங்களுக்கு எனது நன்றி

உமாகாந்தன்
கௌரவ ஆசிரியர் /பீப்பிள் டுடே மாத இதழ்
ஆசிரியர் /பீப்பிள் டுடே பேஜ்.இணைய இதழ்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.