பொற்கயல் | 2 | வில்லரசன்

 பொற்கயல் | 2 | வில்லரசன்

2. மலர் கொய்த வளரி

ரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம்.

சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர் சிறிய குளம். அந்தக் குளத்தின் நடுவே பெண்ணொருத்தி அமர்ந்தபடி யாழ் மீட்டும் சிற்பம் ஒன்று மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்க, அதைச்சுற்றியும் உள்ள நன்னீரில் தாமரைப் பூக்களின் நடுவே பல வகை வண்ண மீன்களும் கோழிகளும் கூட்டம் கூட்டமாக காதல் செய்த வண்ணம் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.

குளக்கரையைச் சுற்றிப் பலவகை மலர்கள் பூத்துக் குலுங்கியும் கொடிகள் அடர்ந்து படர்ந்தும் வளர்ந்து கிடந்ததால், குளக்கரையின் பெரும்பான்மையும் அவற்றால் சூழ்ந்து கிடந்தது.

அவ்வாறு குவிந்து கிடக்கும் கொடிகளில் சிறு சிறு இடைவெளிகளில் எல்லாம் களங்கனின் வெளிச்சம் எவ்வளவு ஊடுருவி, சல்லடையிட்டுத் தேடியும் அவனால் பொற்கயலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நிலவிடமிருந்து தப்பித்தாலும் குளத்தின் மீது விழும் அதன் எதிரொளி பொற்கயலைத் தீண்டவே செய்தது.

அந்தச் சிறிய பொலிவில்கூடப் பெயருக்கேற்ப தங்கத்தைப் போல் மினுமினுத்தாள் பொற்கயல்.

அங்கங்களைப் புலப்படுத்துமளவு மெல்லிய பட்டு அணிந்திருந்த அவள் மேனியெங்கும் பலவகை அணிகலன்களை உடுத்தியிருந்தாள். பாலாடை போன்ற மேனி, மெல்லிய இடை, மருதாணி இட்ட கைகள் என பொற்கயலின் மேனி சிறப்புடன் விளங்க, அவளது முகமோ ஆயிரம் நட்சத்திரங்களின் பொலிவைக் கொண்டது போல் வட்ட வடிவில் இருந்தது. செவ்விதழ், கயல் கண்கள், கூரிய நாசியைக் கொண்டவள் செவியழகை மாத்திரம் மறைக்கும் வண்ணம் கூந்தலை அதன் மேல் பின்னியிருந்தாள். அக்கூந்தலையும் செவிகளையும் இணைக்கும் பாலங்களாக வைரக்கற்கள் பதித்த அணிகலன்களை இருபுறமும் சூடியிருந்தாள்.

இத்தனை பேரழகியாக விளங்கும் பொற்கயல் பொங்கி வழியும் தன் அழகு அனைத்தையும் யாருக்கும் வெளிக்காட்டாமல் மறைவாக அந்த நந்தவனக் கொடிகளுக்குள் பாண்டிய நாட்டின் படைத் தலைவன் மின்னவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

காதலனை எண்ணிக் காத்திருக்கும் கன்னிகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை எள்ளளவும் அவளது முகத்தில் காணமுடியவில்லை.

மகிழ்ச்சிக்கு மாறாக, வாட்டமும் கவலையும் கொண்டு சிவந்துகிடக்கும் அவளது முகம் ‘நெடுநேரம் இந்த நந்தவனத்தில் நான் என் தலைவனுக்காக காத்திருந்து வாடியுள்ளேன்’ என்கிற கொந்தளிப்பைக் கக்கியதைக் கண்டு அவள் முகத்தை மலரென நினைத்து நெடுநேரம் அவளைச் சுற்றித் திரிந்த பல வண்டுகளும் அஞ்சி விலகின.

மின்னவனின் வருகைக்காக காத்திருந்தவளுக்கு அவன் கூறிய நேரத்தில் வரவில்லை என்பது ஒருபுறம் கோபமூட்டினாலும் மறுபுறம் சந்தித்துப் பேசி ஓர் கிழமை கழிந்து விட்டது என அனைத்தையும் எண்ணி அவன் மீது கடும் சினம் கொண்டிருந்தாள். அந்தக் கோபத்தைத் தணித்துக் கொள்ளத்தான் கால்கள் இரண்டையும் குளத்திற்குள் நுழைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள் போலும்.

விரல்களை ‘கடக் முடக்’ என அழுத்தியவள், பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுத் தன் பார்வையைச் சுற்றும்முற்றும் திருப்பினாள். மின்னவன் வருவதாகத் தெரியவில்லை.

அவ்விடத்தில் நெடுநேரம் உட்கார்ந்து இருந்ததால் அவளது மெல்லிய இடையில் வலி எடுக்க சற்று இடையாற்ற பின்பக்கம் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

படுத்த பிறகும் அவளது நினைவில் அவனே தலை நீட்டினான். மின்னவன் மேல் கொண்ட காதலால் கண்களில் தேங்கிய கண்ணீர் மெல்ல அவளது காது வரை வழிந்தோடி நிலத்தில் சிந்த, அங்கு எங்கும் சோக மலர்கள் பூக்க, படைத்தலைவனின் நினைவு அவளை வாட்டி வதைத்தது.

நந்தவனச் சுவரின் மேல் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்த மின்னவனின் கண்முன்னே அரண்மனை நந்தவனம் பரந்து விரிந்து காட்சியளிக்க, அதனுள் தன் கூர்விழிகளால் பொற்கயலைச் சல்லடை போட்டுத் தேடினான் அவன்.

அப்போது அவனது புரவி சற்று அசைய, அதன்மேல் நின்றிருந்தவன் புரவியை “அடேய்… அமைதி!” என அதட்டினான். புரவி அசையாமல் நின்றது.

மின்னவனின் பார்வை மீண்டும் நந்தவனத்தை நோக்கித் திரும்பியது. சில பல நொடிகள் ஆராய்ந்த பிறகு சிரமப்பட்டு பொற்கயலைக் கண்டறிந்தான் அவன்.

அவளைக் கண்ட மாத்திரமே அவனது முகத்தில் புன்னகையும் மகிழ்ச்சியும் பூத்தாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. நேரத் தாமதமாக வருவது அவளுக்குப் பிடிக்காத ஒன்று என்பதை நன்கு அறிந்தும் தாமதம் செய்து விட்டதை எண்ணித் தயங்கவே செய்தான் மின்னவன்.

‘படுத்துக் கிடக்கிறாள். அப்படி என்றால் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறாள் போல! எப்படிச் சமாதானம் செய்வது? இப்போது சென்றால் காதல் சந்திப்பு சண்டையில் அல்லவா சென்று முடியும்? ஐயகோ ஈசனே!’ என சில நொடிகள் யோசித்தவனுக்கு மின்னல் கீற்றாய் ஓர் யோசனை வந்தது. அதைச் செய்துவிட எண்ணியவன், நின்றிருந்த புரவியிலிருந்து சுவற்றின் மேல் தாவி மதில் மேல் நன்றாக அமர்ந்து கொண்டான். பிறகு பொற்கயல் படுத்திருக்கும் இடத்தை நன்கு நோட்டமிட்டான். அவளுக்கு மேல் பலவகை மலர்க் கொடிகளில் பல நாட்டு வண்ணப் பூக்கள் பூத்துக் கிடக்க,

அவற்றைக்கொண்டு அவளைச் சமாதானப்படுத்த வேண்டும் என முதுகில் உறையில் கிடக்கும் நான்கு வளரிகளில் இரண்டு மர வளரிகளை எடுத்து மின்னல் வேகத்தில் எறிந்தான் மின்னவன்.

காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்த இரு வளரிகளும் பொற்கயல் படுத்திருக்கும் இடத்திற்கு மேல் உள்ள கொடிகளை தாக்கி தொலைத்துச் சென்றன. திட்டமிட்டபடி வளரிகள் மலர்களை கொய்ய, அவை பொற்கயலின் மேனியெங்கும் ஆயிரம் முத்தங்கள் பதித்தன.

கண்ணீருடன் படுத்துக்கிடக்கும் பொற்கயல் மின்னல் வேகத்தில் கடந்து சென்ற வளரிகளை கவனிக்கவில்லை என்றாலும் அவை ஏற்படுத்திய சலசலப்புச் சத்தம் அவளுக்கு கேட்காமல் இல்லை. அடுத்த நொடியே அவள் மேல் படர்ந்த பூக்களை எல்லாம் உணர்ந்ததும் இதைத் தன் தலைவன்தான் செய்திருக்கிறான் என்பதைக் கண நேரத்தில் அறிந்து கொண்டாள்.

மேனி எங்கும் பூக்கள் பூத்தாற் போல் படுத்து கிடக்கும் பொற்கயலுக்கு அவனது வருகை இதழோரம் புன்னகை தந்தாலும், மனதில் காதல் கிளர்ந்தெழுந்தாலும், இன்னும் மின்னவனின் மேலிருக்கும் சினம் அவளுக்குத் தணியவில்லை. தன் அழகை எங்கிருந்தோ ரசித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அதை உணர்த்துவதற்காக சட்டென எழுந்து அமர்ந்து தன் மேல் இருக்கும் பூக்களை எல்லாம் உதறி எறிந்தாள்.

தன்னிடம் திரும்பி வரும் வளரிகள் இரண்டையும் சட்டென்று பிடித்து உறையில் செலுத்திய மின்னவன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கிடக்கும் பொற்கயலை மகிழ்ச்சியுடன் கண்டான். ஆனால் அடுத்த கணமே அவள் எழுந்து அமர்ந்து மலர்களை நிராகரித்தது அவனுக்கு வருத்தத்தையே தந்தது.

இதற்கு மேல் அவளைக் காக்க வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவன், அமர்ந்திருந்த மதில் சுவற்றிலிருந்து நந்தவனத்திற்குள் குதித்து அவளை நோக்கி நடந்தான்.

எழுந்து அமர்ந்த பொற்கயல், அவனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் பார்வையைக் குளத்தை நோக்கி மேய விட்டுவிட்டு தனதருகே வந்து நிற்கும் மின்னவனை எள்ளளவும் கண்டு கொள்ளாமல் சிலையென அமர்ந்திருந்தாள்.

எப்பேர்ப்பட்ட வீரர்களையும் சமரிட்டு வெல்பவன்! கொலைகார மிருகங்களை எல்லாம் வேட்டைக் களத்தில் சந்தித்து வேட்டையாடிக் வெல்லும் அந்த பாண்டிய நாட்டின் படைத் தலைவனுக்கு இந்த பெண் மானை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பெம்மானை மனதில் வேண்டியபடி நின்றிருந்தான்.

பிறகு மெல்ல “முத்தே!” என ஆசையாக அழைத்தான் மின்னவன்

அதற்கு அவள் அவனைச் சற்றும் ஏறிட்டுப் பாராமல் தனது அருகே புல் தரையில் படர்ந்து கிடக்கும் மலர்களை விலக்கி சுத்தம் செய்துவிட்டு முன்பு போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அவளது கோபத்தையும் தன்னை சொல்லாமல் அமரச்சொல்லும் செயலையும் ரசித்தவன் அவளருகே அவளைப் போலவே குளத்தினுள் இரு கால்களையும் நுழைத்த வண்ணம் அமர்ந்தான்.

மின்னவன், பொற்கயலிடம் என்ன கூறுவதென்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் “ஏன் தாமதம்..?” என்று யாழ் குரலில் வெடுக்கென ஒலித்தாள் பொற்கயல்.

“வேட்டையாடச் சென்றுவிட்டேன்… பிறகு அச்சடாக் கிழவரை சந்தித்தேன் அதனால் மறந்துவிட்டேன்!”

“வேட்டை என்றால்தான் உங்களுக்கு அனைத்தும் மறந்து விடுமே! பிறகெப்படிக் காதலியின் நினைவு வரும்? அவளைச் சந்திக்க ஓலை அனுப்பியது எல்லாம் மறந்து விடும் அல்லவா!”

“முத்தே! என்னை மன்னித்துவிடு..!” என அவளது கையைப் பற்றினான் மின்னவன்.

“ஈசனே..! நான் உங்களை மன்னிப்பதா? நீங்கள் மாமன்னரின் நண்பர், பாண்டியத்தின் படைத்தலைவர். நானோ எளிய சிற்றரசர் காலிங்கராயரின் மகள். நான் எப்படி உங்களை மன்னிப்பது?” என பொற்கயல் மொழிந்ததைக் கேட்டு, பற்றிய அவள் கரத்தை வெடுக்கென விடுவித்தான் மின்னவன்.

இம்முறை பொற்கயல் பதறிப் போனாள்! மின்னவனுக்கு கோபம் வந்தால் எவராலும் அவனை சமாதானமோ, கட்டுப்படுத்தவோ முடியாதென்பதை பொற்கயல் நன்கறிந்தவள் என்பதால் வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவள் அவனது கையை மெல்ல பற்றினாள். அதற்கு எதிர்வினையாக மின்னவன் பதில் பேசாமல் அருகே இருக்கும் சிறு சிறு கற்களை எடுத்து குளத்திற்குள் எறிந்துக் கொண்டிருந்தான்

“ஒரு வார்த்தை கூறி விடக்கூடாது கோபம் மூக்கின் மேல் ஏறி நிற்குமே!” என அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள் அவள்.

“நான் ஒருபோதும் என்னை பெரியவனாக நினைத்தது இல்லை நான் எப்போதும் பாண்டிய நாட்டிற்கு களத்தில் வீரமரணம் அடையக்கூடிய படைத்தலைவன் மற்றும் உனது காதலன். அவ்வளவு தான்… நினைவில் கொள் முத்தே!”

“அப்பப்பா! வேண்டாம் மின்னவரே! வேண்டாம்! இவ்விடத்தில் அவச்சொல் வேண்டாம். நான் தெரியாமல் பேசிவிட்டேன்! தயவுகூர்ந்து வந்த வேலையைப் பாருங்கள்” என்றாள் அவள்.

“வந்த வேலையா? நான் எந்த வேலைக்கும் வரவில்லையே” எனச் சோம்பல் முறுவலுடன் அப்படியே பின்சாய்ந்து படுத்தவன் “அசதியாக உள்ளது முத்தே. வேட்டைக்கு வேறு சென்று திரும்பினேன் அல்லவா? அதுதான் உடம்பெல்லாம் வலிக்கிறது. சற்றுக் கால் பிடித்து விடேன்” என்று குளத்திற்குள் இருந்து ஓர் காலை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவனை முறைத்துவிட்டு, காலைப் பிடித்து முரட்டுத்தனமாக அழுத்தத் தொடங்கினாள் பொற்கயல்.

“ஈசனே! ஈசனே! காலை உடைக்கப் பார்க்கிறாளே இவள். இதுவே பணிப் பெண்களாக இருந்தால் எவ்வளவு இதமாக அழுத்தி இருப்பார்கள்” என வார்த்தைகளால் அவளைச் சீண்டி விட்டு கடைக்கண்களால் ஏறிட்டான். பொற்கயல் அவன் காலை விடுவித்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.

“முத்தே!” என காலை அவளருகே கொண்டு சென்று விளையாடினான் அவன்

“நகருங்கள் அப்படி” என அவன் காலைத் தள்ளிவிட்டாள் அவள்.

“மாட்டாயா? சரிதான் போ! உறக்கம் கண்களைக் கட்டுகிறது. சற்று உறங்குகிறேன். வழக்கம் போல் ஏதேனும் பேசிக் கொண்டு இரு! கதைக கேட்பதை போல் கேட்டுக்கொண்டே உறங்கி விடுகிறேன்!” எனக் கண்களை மூடினான்.

“மின்னவரே!” என அவனை உலுக்கிய பொற்கயல் “காதலியைச் சந்திக்க வந்துவிட்டு உறக்கமா? யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி இங்கு வந்து நான் காத்திருப்பது நீங்கள் ஓய்வெடுப்பதைக் காணவா?” என்றாள்.

“நீதான் முத்தமிடக்கூட அனுமதிக்க மாட்டாயே… நான் வேறு என்ன செய்வது? உன் தந்தையைப் போல் கண்டிப்பானவள் நீ!” எனப் பெருமூச்சு விட்டவன் “எப்போதும் போல் பேசிக் கொண்டே இரு, எனக்கு உறக்கம் வருகிறது” என்றான்.

அவனிடம் மீண்டும் கோபித்துக் கொண்டு திரும்பிய பொற்கயல், புருவம் சுளித்து முணுமுணுக்கத் தொடங்கினாள்

“நீங்கள் இருக்கிறீர்களே! பொல்லாதவர்..! உங்களை..!” என மீண்டும் திரும்பியவள் மின்னவன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மேல்மூச்சும் கீழ்மூச்சுமாக வாங்கினாள்.

“ஈசனே! இந்தப் பெண் மனது ஆண் பிள்ளைகளுக்கு ஒருபோதும் புரியாதா? ஏனய்யா ஆண் இனத்தை இப்படி அறிவில்லாமல் படைத்தாய்..?” என முணுமுணுத்துவிட்டு தன் கால்களைச் சுற்றி நீந்தும் மீன்களை எல்லாம் கோபத்தில் கால்களை உதறி விரட்டினாள்.

அப்போது அவள் இடையைச் சுற்றி மின்னவனின் கரம் நுழைந்து அவளை கட்டியணைத்து இழுத்தது. அவனது வலுவான பிடியில் சிக்கி இழுக்கப்பட்ட பொற்கயலின் அணிகலன்களில் முத்துமாலை ஒன்று அறுந்து நந்தவனத்தில் சிதற, அதை பொருட்படுத்தாமல் மின்னவன் அவளை தன் மார்பில் கிடத்தி ஆசைப் பார்வை பார்த்தான்.

“கோபம் தணிந்ததா?” இளநகையுடன் கேட்டான் அவன்

“இல்லை!”

“அப்படியா?” எனப் பிடியை மேலும் இறுக்கி அவளை முத்தமிட்டான். அதன் பின்னர் பொற்கயல் அவன் மீது இருந்த கோபத்தைப் போல் தன்னையும் மறந்தே போனாள். அப்போது நந்தவனத்தில் ஓர் கரகரத்த ஆண் குரல் எழுந்தது.

“பொற்கயல்! பொற்கயல்!” என எழுந்த அக்குரலைக் கேட்டு, தலைதூக்கிப் பார்த்தாள் பொற்கயல்

அந்த குரலுக்குச் சொந்தக்காரர் கொடிகளை விலக்கிக் கொண்டு அங்கு வந்து நின்றார்.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...