பயணங்கள் தொடர்வதில்லை | 14 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 14 | சாய்ரேணு

13.செருப்பு

ன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்டது போன்ற வலியில் தேவசேனாபதி அயர்ந்து அமர்ந்திருக்க, அதைக் கவனிக்காமல் தர்மா தத்துவம் பேச ஆரம்பித்தான்.

“ஒரு ஆணுக்கு மிக முக்கியமானது அவனுடைய பர்ஸ். அதே போலப் பெண்களுக்கு ஹேண்ட்-பேக். அவர்களுடைய பர்சனாலிட்டியின் ஒரு பாகம் அது. சொல்லப் போனால் ஒருவருடைய அவருடைய பர்ஸ் அல்லது ஹேண்ட்-பேக் அவருடைய குணங்களின் கண்ணாடி என்றே சொல்லலாம்.

“சாதாரணமாக, பர்ஸ் என்பது நம்முடைய பணம் ப்ளஸ் நம்மை அடையாளம் காட்டும் டாக்குமெண்ட்ஸ் இவைகளைத்தான் பிரதானமாகக் கொண்டிருக்கும். நாம் வாங்கிய பொருட்களின் பில்ஸ், நமக்குப் பிரியமானவர்களின் ஃபோட்டோக்கள் இவையும் இடம்பெறும்…”

“கம் டு த பாயிண்ட்” என்றாள் தன்யா எரிச்சலாக.

தர்மா விளையாட்டாகக் குனிந்து நிமிர்ந்தான். “இது சுப்பாமணியின் பர்ஸ்” என்று சொல்லியவாறே மேஜை மீது வைத்தான். சற்றுப் பெரியதாய், புதிதாய்த் தெரிந்தது. சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டதாய்த் தெரியவில்லை. பெண்கள் பயன்படுத்தும் வாலட். நீண்ட கைப்பிடியோடு, மூன்று பக்கத்திலும் ஜிப்பரோடு தெரிந்தது. ஜிப்பரைப் பிரித்தால், ஒரு புத்தகம்போல் விரிந்தது. பணம், காசுகள், க்ரெடிட்-டெபிட் கார்டுகள், விஸிட்டிங் கார்டுகள் என்று பெயர் எழுதப்பட்டு அந்தக் குட்டி தேசத்தில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன.

காசோலைகளுக்கான நீண்ட பாக்கெட்டைப் பிரித்தான் தர்மா. அதில் காசோலைகள் இல்லை, ஆனால் ஏதேதோ பேப்பர்கள் அடைக்கப்பட்டிருந்தன.

“இதில் சுப்பாமணி சம்பந்தப்பட்ட பேப்பர்கள் எதுவும் இல்லை. மற்றவங்க விஷயங்கள்தான் எல்லாம்” என்ற தர்மா ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டிருந்த இரண்டு பேப்பர்களை வெளியே எடுத்துக் கவனமாக மேஜைமீது விரித்து வைத்தான். அதற்குமேல் எதுவும் பேசாமல் பின்னால் நகர்ந்து நின்றுகொண்டான்.

தன்யா அந்தப் பேப்பர்களைக் கையிலெடுத்தாள். “ட்ரான்ஸ்ஃபர் சர்ட்டிஃபிகேட். ஸி பிரபுராம் – ஸெகண்ட் இயர், டி அஸ்வின் – ஃபர்ஸ்ட் இயர். மூன்று வருடத்துக்கு முன்னால் காலேஜிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்காங்க. நேற்றிரவு நாம சந்திச்சப்போ, உங்க சன் ஃபைனல் இயர் படிச்சுட்டிருக்கறதா சொன்னீங்க. பிரபுராம் க்ராஜுவேஷன் முடிச்சுட்டார். இந்த ஆர்டர் எப்படிக் கான்ஸல் ஆச்சு? முக்கியமா, இதில் சுப்பாமணி எப்படிச் சம்பந்தப்படறார்?”

தேவசேனாபதி இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடுதலை செய்தார். தலையைச் சுவற்றில் சாய்த்துக் கண்ணை மூடிக் கொண்டார்.

“பேசுங்க சார். நீங்க சொல்றது எதுவும் இந்த டைனிங் காரைத் தாண்டி வெளியே போகாது. ஒருவேளை சந்திரசேகரும் இருந்தாத்தான் நீங்க பேசுவீங்கன்னா…”

“ப்ளீஸ்” என்று கிட்டத்தட்ட அலறிவிட்டார் தேவசேனாபதி. “நல்லவேளை முதலில் நீங்க என்னைக் கூப்பிட்டுப் பேசினீங்க. சந்திரசேகருக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது!” என்றார் பதட்டமாக.

இதை மூவர் அணி எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களுடைய எதிர்வினையிலிருந்து தெரிந்தது. தன்யாவின் கண்கள் பெரிதாக விரிந்தது. விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த தர்ஷினியின் சுறுசுறு கரங்கள் நின்றன. பின்னணியோடு ஒன்றியிருந்த தர்மா அதிர்ச்சியுடன் முன்னே வந்து நின்றுவிட்டான்.

“என்ன சொல்றீங்க? அவரோட பையன் காலேஜ்லேர்ந்து எக்ஸ்பெல் ஆனது அவருக்கே தெரியாதா? ஹவ் கம்?” என்றாள் தன்யா.

தேவசேனாபதி சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு “அவர் அப்போ ஹாலண்ட் போயிருந்தார்…” என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.

“சார், இந்த விவகாரம் என்னன்னு நீங்க சொல்லிடறது பெட்டர். எப்படியும் எங்களுக்குத் தெரியத்தான் போகிறது. முழுசா, மறைக்காம சொல்லிட்டீங்கன்னா, உங்க மேல இருக்கற சந்தேகங்கள் போயிடும், எங்களுக்கும் சவுகரியமா இருக்கும். இல்லேன்னா நாங்க கொஸ்சின்ஸ் கேட்டுட்டே போய்… ஒய் ஹேவ் இட் பீஸ்மீல்?” என்று கேட்டாள் தன்யா.

தன்னை அறியாமல் புன்னகைத்தார் தேவசேனாபதி. “உங்க இங்க்லீஷ் அழகா இருக்கு. இந்தக் கால ‘ஹாய்’, ‘ப்ரோ’ பாஷை மாதிரி இல்லாம, நல்ல க்ளாசிக்கா இருக்கு. எங்கப்பா கேட்டா, ரொம்ப என்ஜாய் பண்ணுவார்” என்றார் தன்யாவிடம்.

“அடப் போங்க சார்! இவ சரியான சீதாப் பாட்டி! நீங்க வேற என்கரேஜ் பண்ணிக்கிட்டு!” என்றான் தர்மா.

தேவசேனாபதி புன்னகைக்க, தன்யா வெட்கப்பட, தர்ஷினி வாய்விட்டுச் சிரிக்க, அங்கே இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.

தேவசேனாபதி மறுபடியும் சீரியஸானார். “அஸ்வின் இஞ்சினியரிங் ஜாயின் பண்ணினபோது, அதே காலேஜில் சந்திரசேகர் பையன் செகண்ட் இயர் படிச்சுண்டிருந்தான். சந்திரசேகர் என்னுடைய டிஸ்டண்ட் ரிலேட்டிவ். அதைவிட, நல்ல ஃப்ரெண்ட். அவர் மனைவி லீலாவோட குரலுக்கு எங்க குடும்பமே ரசிகர்கள். ஸோ அஸ்வினும் பிரபுவும் இயற்கையா நண்பர்களானாங்க.

“ஸெமஸ்டர் எக்ஸாம் வந்தது. அஸ்வினோட க்ளாஸ்மேட் ஒரு பையன் ஹாலிலேயே மயக்கம்போட்டு விழுந்துட்டான். அதைச் சொல்லி ஹெல்ப் கேட்கப் போனாங்க அஸ்வினும் பிரபுவும். அங்கே… அவங்க எக்ஸாமினர் எக்ஸாம் எழுதிட்டிருக்கறதைப் பார்த்துட்ட்டாங்க – காலேஜ் ஃபவுண்டர் பையனுக்காக!”

“ஓ!” புரிந்துகொண்டாள் தன்யா.

“இந்த விஷயம் இவங்க வெளியே சொல்லிடக் கூடாதுங்கறதுக்காக, இவங்க மேல ஒரு ஃபால்ஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப்பட்டது – இவங்க ட்ரக்ஸ் வெச்சிருந்ததா! பசங்களை லாக்கப்பில் வெச்சுட்டாங்க!”

“இதுக்கு நடுவில் சந்திரசேகர் ஐ எஸ் ஓ ட்ரெயினிங்குக்காக ஹாலண்ட் போயிருந்தார். லீலா எங்க வீட்டுக்கு வந்து அழுதா. இந்த விஷயம் சந்திரசேகருக்குத் தெரிஞ்சா உயிரை விட்டுடுவார்னு சொன்னா. அது உண்மைதான்! ரொம்ப நேர்மையானவர் சந்திரசேகர். அவருக்குக் கம்பெனியை விட்டா எதுவுமே தெரியாது. லஞ்சம் வாங்கறது, கொடுக்கறது ரெண்டும் நினைச்சுக்கூடப் பார்க்க மாட்டார்!”

“அப்புறம் என்னதான் பண்ணினீங்க?” என்று தன்யா கேட்டாள்.

“அப்போதான் சுப்பாமணி என்னை வந்து பார்த்தார்…”

சுப்பாமணி என்று ஒரு ஜீவன் இருந்ததையே இத்தனை நேரம் மறந்து போய்விட்டார்கள் தன்யாவும் தர்ஷினியும்.

“சுப்பாமணி என்ன மாயம் செய்தார்னு எனக்குத் தெரியாது. காலேஜ் நிர்வாகிகளிடம் பேசினார். அவங்க சங்கரோட நிலம் ஒண்ணைக் காலேஜுக்காக வாங்க ட்ரை பண்ணிட்டிருந்தாங்க. அதைப் பேசி வாங்கித்தர பொறுப்பு என் தலையில் கட்டினார் சுப்பாமணி. ஒரு ஆளை அந்த இடத்தும்பேரில் ஒரு லிட்டிகேஷன் போட வெச்சு சங்கரைப் பயமுறுத்தி, காலேஜ்காரங்க கேட்ட அடிமாட்டு விலைக்கே அந்த இடத்தை முடிச்சுக் கொடுத்தேன்… தெரிஞ்சே சங்கருக்கு நான் பண்ணின துரோகம் அது! ஆனா டிஸ்மிஸ் ஆர்டர் கேன்சலாயுடுத்து.”

“இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, இல்லையா?”

“தெரிஞ்சா ரெண்டு குடும்பம் அழிய வேண்டியதுதான், மிஸ் தன்யா! எனக்கும் சந்திரசேகருக்கும் பெண் குழந்தை இருக்கு. அவங்க வாழ்க்கை என்னாகிறது? ட்ரக்ஸ் சார்ஜ்ல மாட்டினவங்கன்னு தெரிஞ்சா, இந்தப் பசங்க வாழ்க்கைதான் என்னாகிறது? முதலில் சுப்பாமணி எங்களுக்கு இந்த உதவியைச் செய்யவே மாட்டேன்னுட்டார். என்… மனைவியை… பழிவாங்கப் போறதா சொல்லிண்டு… அது ஒரு பழைய கதை…”

“அந்தக் கதையை விட்டுடுவோம். சுப்பாமணி அப்போ உங்களைத் தேடி வந்தது… கேலி, கிண்டல் பண்ணவா? உங்க மகன்களோட நிலைமையைப் பாருங்கன்னு சொல்லவா?” என்று கேட்டாள் தர்ஷினி, மிகக் கவனமாக வார்த்தைகளைப் பிரயோகித்தவளாய்.

தேவசேனாபதி கண்ணில் லேசாகக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“உங்களுக்குச் சொன்னா புரியாது… பார்க்காம யாராலுமே புரிஞ்சுக்க முடியாது… ஒரு… பலவீனமான மனிதனுடைய பலத்தின் நிமிஷத்தை… வாழ்வில் வெற்றியைப் பார்க்காத ஒருத்தன், முக்கியத்துவம் இல்லாமல் ஸைட்லைன்ஸ்லயே வாழ்ந்துட்ட ஒருத்தன்… அவனுடைய விசுவரூபம் பயங்கரமானது…”

தர்மா, தன்யா, தர்ஷினிக்கு அவர் பேசியதன் ஆழம் புரிந்து மெய்சிலிர்த்தது.

“அப்புறம் எங்க குடும்பமே, அம்மா தவிர, அவ அப்போ ஆஸ்பத்திரியில் இருந்தா – அவளுக்கு விஷயம் தெரியாது…”

காமுப் பாட்டிக்குத் தெரியாத விஷயம் என்று ஒன்று இருக்கவே வழியில்லை என்று நினைத்துக் கொண்டாள் தன்யா. இதற்குள் சரஸ்வதி மூலம் அவளுக்கு விஷயம் போயிருக்கும் என்று நினைத்தாள் தர்ஷினி.

“எங்க குடும்பமே சுப்பாமணி காலில் விழுந்தோம். எங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சினோம். சரி, பேசிப் பார்க்கறேன்னு ஒத்துக்கிட்டார்… மறுநாள் இந்த ப்ரபோஸலோடு வந்தார். நான் செய்த பாவம்தான் அது… என் பிள்ளைக்காகத்தான்… பாவம் லீலா… இப்படி ஒரு விஷயம் நடந்தது சந்திரசேகருக்குத் தெரிஞ்சா…”

“சார், பிரபுராமைப் பொறுத்தவரை, மிஸஸ் சந்திரசேகர்தானே சுப்பாமணியோடு பேசியிருப்பாங்க? அவங்களை என்ன சொல்லி மிரட்டினார்?”

தேவா “அது… வந்து…” என்று தடுமாறினார்.

“சொல்லிடுங்க சார், மிஸ்டர் சந்திரசேகரை வெச்சுக்கிட்டு நாங்க அவர் மிஸஸை விசாரிக்கறது நல்லதில்லைன்னு எங்களுக்குத் தோணுது…”

“ப்ளீஸ்! நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை! வந்து, சந்திரசேகருடைய கம்ப்யூட்டர்லேர்ந்து ஒரு ஃபைல் – அதை டெலிட் பண்ணிடணும்னு கேட்டார் சுப்பாமணி…”

“வேறு போட்டிக் கம்பெனிக்காகவா?”

“இல்லை, அதே கம்பெனியில் இருந்த ஒருத்தருக்காக! சந்திரசேகரோட ப்ராஜக்டைக் காப்பி எடுத்துக்கிட்டு, அவரோடதை டெலிட் பண்ணிட்டாங்க! அந்த முறை சந்திரசேகருக்குக் கிடைக்க வேண்டிய புரோமோஷன் போச்சு! அதுக்குப் பதிலா சுப்பாமணியைத் தூண்டிவிட்டவருக்கு ஜி எம் போஸ்ட் கிடைச்சது! சந்திரசேகர் பாவம், அவர் ஃபைல் டெலிட் ஆனது ஆக்ஸிடெண்ட்ன்னு நினைச்சுண்டிருக்கார்! பாவம், லீலாவும் பிரபுவும் ஹரிணியும் சேர்ந்து செய்த வேலை இதுன்னு தெரிஞ்சா…”

“ஹரிணி? அந்தச் சின்னப் பெண் இதில் எப்படிச் சம்பந்தப்படறா?”

“பாஸ்வர்ட்” என்றார் தேவா. “அவளுக்குத்தான் அவ அப்பாவோட பாஸ்வர்ட் தெரியும்! தன் அப்பாவுக்குத் துரோகம் பண்ணிட்டோம்ங்கற எண்ணம் அவளுக்கு டிப்ரெஷன் வந்துடுச்சு! ப்ளஸ் டூ எக்ஸாம் சரியாகவே எழுதலை. அவ நினைச்சபடி அவளுக்கு மெடிகல் கிடைக்கவும் இல்லை. லா கிடைக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார் சந்திரசேகர்.”

தர்மாவின் உடல் நடுங்கியது. இப்படி… இப்படியா? தங்கள் பெற்றோருக்கு எதிராக, வேண்டாம், எனக்கு எதிராக ஏதேனும் செய்யச் சொல்லி ப்ளாக்மெயில் செய்யப்பட்டால் இந்தத் தன்யாவும் தர்ஷினியும் என்ன செய்வார்கள்? இவர்களால் தாங்க முடியுமா? எங்கள் தொழிலில் சுப்பாமணி போல் எத்தனை வில்லன்களைச் சந்திக்க வேண்டும்?

ஆழ்ந்த இருட்டுச் சிந்தனைகளிலிருந்து தர்மா முறித்துக் கொண்டு எழுந்தபோது, தேவசேனாபதி அறையைவிட்டு வெளியேறியிருந்தார்.

தன்யாவும் தர்ஷினியும் வழக்கை விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

“ஸோ, சுப்பாமணி ஒரு இரகசியங்களின் சுரங்கம்!” என்றாள் தர்ஷினி.

“இப்போ கேட்ட கதையிலிருந்து நாம டெவலப் பண்ணினா…” என்று ஆரம்பித்த தன்யாவை “தேவா சார் தான் முழுமையா சொல்லிட்டாரே? இன்னும் என்ன டெவலப் பண்ண இருக்கு?” என்று கேட்டான் தர்மா.

“அவர் உண்மைகளைச் சொல்லிட்டார். இதிலிருந்து நாம ஊகங்களுக்குப் போகலாமே” என்றாள் தன்யா. “என் நம்பர் ஒன் ஊகம், இந்தப் பசங்க மேல ட்ரக்ஸ் சார்ஜ் போடும்படி காலேஜ் நிர்வாகத்தைத் தூண்டியதே அவர்தான்! காலெஜ் ஃபவுண்டர் பையன் விவகாரமும் வெளியே போகாம, அவங்களுக்குத் தேவையான நிலமும் கிடைக்கறதுக்குச் சுப்பாமணியோட மாஸ்டர் ஸ்ட்ரோக் இது!”

“ஹேய்…” என்று எதிர்க்க ஆரம்பித்த தர்மாவுக்கு, காமுப் பாட்டியின் பேச்சு நினைவுக்கு வந்தது. “பாஸிபிள்” என்றான் யோசனையாய்.

“கொயட் பாஸிபிள். சந்திரசேகர் விஷயம் அவருக்கு ஒரு போனஸ். நல்ல கனமான போனஸ் கிடைச்சிருக்கும்னு நம்பலாம்” என்றாள் தர்ஷினி.

சிறிதுநேரம் மௌனமாக யோசனையில் ஆழ்ந்தார்கள் மூவரும்.

தர்மா திடீரென்று தூக்கிவாரிப் போட்டவனாக நிமிர்ந்தான். “தேவா, கலிவரதன் சார், சரஸ்வதி, லீலா சந்துரு, ஏன், காமுப் பாட்டி, பிரபுராம், அஸ்வின்! எத்தனை பேர் சந்தேக லிஸ்டில் சேர்ந்துட்டாங்க, அரைமணி நேரத்துக்குள்! இவங்க எல்லோரும், சுப்பாமணி வாயைச் சாத்தணும்ங்கறதில் ஆர்வம் உள்ளவங்க, இல்லையா? இதுவரை சுப்பாமணி பேசாம இருந்திருக்கலாம். ஆனா அவர் எரிமலை மாதிரி! எந்த நேரமும் வெடிக்கலாம், இன்னொரு ப்ளாக்மெயில் விவகாரத்தைக் கிளப்பலாம்…”

“தாராளமாகக் கிளப்பலாம். ப்ரூஃப் வேற பத்திரமா வெச்சிருக்காரே!” என்றாள் தர்ஷினி.

தன்யா இல்லை என்பதுபோல் தலையை ஆட்டினாள். “அதை அவர் ப்ரூஃப்க்காக வெச்சிருக்கற மாதிரித் தெரியலை எனக்கு. அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சுப்பாமணியின் வெற்றியின் அடையாளங்கள் – ட்ராஃபீஸ்!” என்றாள்.

தர்மாவின் உடல் மறுபடி நடுங்கியது. சுப்பாமணியா அவன்? சூரபத்மன். இராக்ஷஸன்.

“யார்? இவங்களில் யார் சுப்பாமணியை…”

“வதம் செய்ததுன்னு கேட்கறியா?” தன்யா புன்னகைத்தாள்.

சண்டாளி! என் மனதை அப்படியே படித்துவிட்டாளே!

“யாருக்குச் சுப்பாமணியால் அதிகம் ஆபத்தோ, யார் சுப்பாமணி பேசிடக் கூடாதுன்னு அதிகமா பயப்படறாங்களோ, யாரால் சுப்பாமணி கிளப்பும் வதந்திப் புயலையெல்லாம் தாங்கவே முடியாதோ அவங்க செய்த வேலைதான் இது.”

“அவங்க, அவங்கன்னா? யாரு? எல்லாருமே நீ சொல்ற வர்ணனைக்குப் பொருந்தி போறாங்களே!”

“நாட் ரியலி, நல்லா யோசிச்சுப் பார்த்தால் இந்த வர்ணனை…”

வெளியே டாக், டாக் என்று செருப்புச் சத்தம் கேட்கவே, தன்யா பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

டைனிங் கார்க் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் சந்திரசேகர்.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...