வாகினி – 35| மோ. ரவிந்தர்

 வாகினி – 35| மோ. ரவிந்தர்

மவுனா லோவா எரிமலையைப் போல் பெரும் நெருப்புக் கணைகளோடு சின்னப் பொண்ணு வீட்டின் அடுப்பில் சோறு ‘பொங்கி வழியும், பால் பானையைப் போல்’ பொங்கிக் கொண்டிருந்தது.

தனது கையில் வைத்திருந்த ஊதுகோலால் நெருப்பின் ஜுவாலைகள்; இன்னும் வேண்டுமென்று அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள், சின்னப்பொண்ணு. அந்த அடுப்பில் இருந்து வெளியேறிய எண்ணற்ற புகை மூட்டம் அவளைக் விழுங்கி விடுவதைப் போல் சூழ்ந்து, காற்றில் கலைந்து தவழ ஆரம்பித்தது.

“அக்கா… அக்கா…” என்று பெரிதாகக் குரல் கொடுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள், வனிதா.

தனது வேலையைச் செய்து கொண்டே அப்படியே வீட்டு வாசலை திரும்பிப் பார்த்தாள் சின்னப் பொண்ணு. வீட்டு வாசலில் வனிதா கையில் துணியுடன் பார்வையில் தென்பட அவளை “உள்ள வா… வனிதா” என்று குரல் கொடுத்தாள்.

“என்னக்கா, நீ மட்டும் தான் வீட்ல தனியா இருக்க. உங்க வீட்டுக்காரர், மாமியார் எல்லாம் எங்க போய்ட்டாங்க?” என்று சின்னப் பொண்ணுவிடம் நலம் விசாரித்தாள், வனிதா.

“அவர் இன்னும் வேலையிலிருந்து வரலடி, வர்றதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும். அத்தை இப்பத்தான் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர மார்க்கெட் வரைக்கும் போயிருக்காங்க” என்றாள் சின்னப் பொண்ணு.

“சரிக்கா. நீ கொடுத்த ஜாக்கெட், சேலையே எல்லாம் தச்சி கொண்டு வந்துருக்கேன். அளவு எல்லாம் சரியா இருக்கான்னு பாரு. அப்புறம், அது சரியில்லை… இது சரியில்லைன்னு சொல்லக்கூடாது. இந்தாப் பிடி, வீட்டுக்கு நேரம் ஆகுது, நான் கிளம்புறேன்” என்றாள், வனிதா.

“இரு என்ன அவசரம்? அதை அந்தச் சேர் மேல வை. காபி போட்டுக் கொண்டு வரேன். குடிச்சிட்டுப் போகலாம்” என்றாள் சின்னப்பொண்ணு.

“அதெல்லாம் எதுவும் வேண்டாக்கா. ஏற்கெனவே ரொம்ப நேரமாயிடுச்சு” என்றாள் வனிதா.

“ரெண்டே நிமிஷம்டி, இதோ சோற வடிச்சிட்டேன். அப்படி உட்காரு. உன்கிட்ட வாகினியைப் பத்திக் கேட்கணும்” என்று கூறிவிட்டு, வனிதா குடிப்பதற்காக ஏற்கெனவே தயாராக இருந்த காபி பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்தாள், சின்னப்பொண்ணு.

“வீட்டுக்கு வந்து அக்காவா பார்க்காமல், இப்போ வந்து நலம் விசாரிக்கிறியா என்ன?” எனக் கேள்வி கேட்டாள் வனிதா.

“நானே வீட்டுக்கு வந்து வாகினியைப் பாக்கணும்னு தாண்டி ரொம்ப ஆசையில இருந்தேன். ஆனா, எனக்குன்னு சில வேலைகள் இருந்ததால அத மறந்துட்டேன். சரி, வாகினி எப்படி இருக்கா? உங்க கிட்ட எல்லாம் சகஜமாகப் பேசுறாளா, இல்லையா?” என்று வாகினியைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கேட்டாள், சின்னப் பொண்ணு.

“இப்பதானேக்கா ஊருக்குத் திரும்பி வந்து இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் ஆகும், சகஜமாகப் பேச” என்று சின்னப் பொண்ணுக்குப் பதிலளித்தாள் வனிதா.

“நீ சொல்றதும் ஒருவகையில் உண்மைதான், இந்தக் காபியைக் குடி. ஒரு ரெண்டு நாள் ஆகட்டும், நானே கட்டாயம் வாகினியை வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு, காபி டம்ளரை வனிதா கையில் கொடுத்தாள் சின்னப் பொண்ணு.

டம்ளரில் வனிதாவிற்கான காபி பனித்துளியில் அகப்பட்டுத் தவழ்ந்து கொண்டிருக்கும் காற்றைப் போல், ஆவி சுடச்சுட பறந்து கொண்டிருந்தது. அதைக் கையில் வாங்கி மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தாள், வனிதா.

“கொஞ்ச நேரம் இருடி, நீ தச்சுக் கொண்டுவந்த ஜாக்கெட் துணி சரியா இருக்கான்னு போட்டு பார்த்துட்டு வந்துட்றேன்” என்று சேர் மீது இருந்த துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் சென்றாள், சின்னப்பொண்ணு.

சின்னப் பொண்ணு கொடுத்த காபி கோப்பை, வனிதாவின் இதழ்களுக்கு இடையே சுவையோடு ஒரு நளினம் போட்டுக் கொண்டிருந்தது.

வனிதா காபியைக் குடித்து முடிப்பதற்குள் சின்னப் பொண்ணு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

“சரிடி, எல்லாம் சரியா இருக்கு” என்று தன் அணிந்திருந்த ஜாக்கெட்டை அளவு பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள், சின்னப் பொண்ணு.

கையில் வைத்திருந்த டம்ளரைக் கீழே வைத்து விட்டு “சரிக்கா நேரம் ஆகுது. நான் கிளம்புறேன்” என்று கூறிக்கொண்டே சின்னப் பொண்ணுவின் வீட்டை விட்டு மெதுவாக வெளியேறினாள், வனிதா.

தொடரும்…

அடுத்த அத்தியாயத்தில் கதை நிறைவு பெறும்…

< முப்பத்தி நான்காம் பாகம்

கமலகண்ணன்

1 Comment

  • ❤️🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...