அஷ்ட நாகன் – 21| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 21| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

சித்தர்களில் சிவபெருமானை ஆதி சித்தராக கருதி வழிபடுகின்றனர். அதைப்போலவே, சித்தர்களில் அகத்தியர் பெருமானை தலைமை சித்தராக “சித்தர் உலகம்” ஏற்றுக் கொண்டு போற்றி வருகிறது.அகத்தியரை ஆதி முனி,கும்ப முனி,அறிவன் மற்றும் குறு முனி என்று அழைக்கின்றனர். அகத்தியரை “குருமுனி” என முதன் முதலில் விளித்தவர் முருகப்பெருமான் ஆவார்.பின்னர், காலப்போக்கில் குருமுனி என்று பெயர் “குறுமுனி” என்று திரிந்து விட்டது. அகத்தியர் இராம பிரானுக்கு பல மந்திரங்களையும் தெய்வாம்சம் பொருந்திய வில்லையும், அம்பாரத் தூணியையும் கொடுத்து ஆசிர்வதித்துள்ளார். அகத்தியர் திருவனந்தபுரத்தில் உள்ள “அனந்த பத்மநாப சுவாமி” திருக்கோயிலில் ஜீவ சமாதி அடைந்ததாக ஒரு கருத்து உள்ளது.அவர் பொதிகை மலையில் இன்றளவும் அரூபமாக உலா வருவதாக ஆன்மீக அன்பர்கள் நம்புகின்றனர். அகத்தியர் தான் எழுதிய “அகத்தியர் பூரணம்-12000” என்ற நூலில் தியானத்தில் இருந்த ஒரு நாக கன்னியை தான் சந்தித்து மந்திர உபதேசம் பெற்றதை எழுதியுள்ளார். அந்த நாக கன்னி அகத்தியரை ஆசிர்வதித்து எந்த விதமான விஷ அரவமும் அகத்தியரை தீண்டா வண்ணம் “சிறீங் நறீங்” என்ற மந்திரத்தை உபதேசம் செய்தாள்.மேற்கூறிய மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பட்சத்தில் சீறி வரும் விஷ நாகமும் கூட நம்மை தீண்டாது தன் வழியில் சென்றுவிடும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

யோகினியின் அலறல் சப்தம் கொல்லிமலை வனம் முழுவதும் எதிரொலித்தது.

ராஜ நாகத்தைக் கண்டு அச்சமடைந்த அரவிந்தன் கண்முன் தெரியாமல் ஓடினான்.அந்த ராஜ நாகமும் அரவிந்தனை துரத்திக் கொண்ட ஓடியது.சொற்ப நொடிகளில் அரவிந்தனும் அவனை துரத்திச் சென்ற ராஜநாகமும் யோகினியின் விழித்திரையில் இருந்து மறைந்தனர்.

யோகினியின் அலறல் சப்தம் கேட்டு முருகேசன் மற்றும் ஏலக்காய் சித்தர் அதிர்ச்சியோடு கண் விழித்தனர்.அரவிந்தனை ஒரு ராஜ நாகம் துரத்திச் சென்ற செய்தியை அறிந்த இருவரும் பேரதிர்ச்சி அடைந்தனர்‌.

“சாமீ….அரவிந்த்…அரவிந்த்” என அவன் ஓடி மறைந்த திசையை நோக்கி கைக்காட்டிக் கொண்டே யோகினி விம்மி விம்மி அழுதாள்.

“தாயீ…பயப்படாத அரவிந்தனுக்கு ஒண்ணும் ஆகாது.அவனை என் அப்பன் ஈசன் கண்டிப்பா காப்பாத்துவான்” என்று யோகினிக்கு ஏலக்காய் சித்தர் ஆறுதல் கூறினார்.

“யோகினி,நீ கவலைப்படாதே நாம மூணு பேரும் சேர்ந்து அரவிந்தை

தேடி பார்ப்போம்.சீக்கிரமே அரவிந்தை கண்டுபுடிச்சிடலாம்” என்று முருகேசனும் யோகினிக்கு தைரியம் கொடுத்தான்.

யோகினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவள் மருண்டு காணப்பட்டாள்.அழுது அழுது அவள் கண்கள் கோவைப்பழம் மாதிரி சிவந்து போயிருந்தது.

மூவரும் ஆளுக்கொரு திசைக்கு சென்று அரவிந்தனை தேட ஆரம்பித்தனர்.

பெளர்ணமி நிலவில் கொல்லிமலை சற்று வெளிச்சத்துடன் காணப்பட்டது. ஆனால், சில்வண்டுகளின் சப்தம் காதை கிழிப்பது போல இருந்தது.அரவிந்தனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூவரும் ஏமாற்றுத்துடன் சித்தரின் குடில் நோக்கி நடந்தனர்.

‘அரவிந்தன் காணவில்லை என நந்தனிடம் எப்படி கூறுவது?நந்தனுக்கு என்றிருந்த ஒரே உறவு அரவிந்தன் தான்.அரவிந்தன் காணவில்லை என்ற செய்தியை அறிந்தால் நந்தனின் அடுத்தக்கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று ?’ என்று தனக்குள் பல கேள்விகளை கேட்டுக்கொண்டு குழம்பி போயிருந்தாள் யோகினி.

அது அப்பட்டமாக அவள் முகத்தில் பிரதிபலித்தது.

ஒருக்கட்டத்தில், ‘தான் ஏன் கொல்லிமலைக்கு வந்து இப்படி அல்லல் படுகிறேன்?’ என்றுக்கூட யோகினிக்கு தோன்றியது.

ஏலக்காய் சித்தர் குடில் !

ஏலக்காய் சித்தரின் குடிலில் ஸ்படிக லிங்கத்தின் முன் அகல் விளக்கு அணையா விளக்கு போல பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தது.

குடிலுக்குள் நூழைந்தவுடன் ஏலக்காய் சித்தர் பேரதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில்,குடிலில் நாக சாஸ்திர ஏடுகளையும்,அவற்றை காவல் காத்துக் கொண்டிருந்த ராஜ நாகத்தையும் காணவில்லை.

ஏலக்காய் சித்தருக்கு உலகமே இருண்டது போல தோன்றியது.

அங்கு நந்தனையும் காணவில்லை !

“நந்தன்…நந்தன் எங்க இருக்கீங்க?” என்று யோகினி உரக்க கத்தி நந்தனை அழைத்தாள்.

“அய்யய்யோ ! நந்தன் சாரையும் காணுமா?” என்று முருகேசன் புலம்பி தள்ள ஆரம்பித்தான்.

ஏலக்காய் சித்தர் நாக சாஸ்திர ஏடுகளும்,ராஜ நாகமும் காணாததை எண்ணி பேரதிர்ச்சி அடைந்து காணப்பட்டார்.

சுற்றும் முற்றும் தேடியும் நந்தனையும் காணவில்லை.

யோகினி,அரவிந்தன் மற்றும் நந்தன் தொலைந்தது போனதால் தன்னை ஒரு அனாதை போல உணர்ந்தாள்.துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.

“சாமி ! அரவிந்தனையும் காணும் நந்தனையும் காணும் இப்ப என்ன பண்றது ?” என்று முருகேசன் மிக உருக்கமாக ஏலக்காய் சித்தரிடம் கேள்வி எழுப்பினான்.

ஏலக்காய் சித்தர் பேச்சற்று மெளனத்தில் காணப்பட்டார்.

நந்தனுக்கும் அரவிந்தனுக்கும் என்ன ஆயிற்று?

இனி யோகினி நிலை என்ன?

ஏலக்காய் சித்தர் நாக சாஸ்திர ஏடுகளை கண்டுபிடிப்பாரா?

விடை காண காத்திருப்போம்.

– தொடரும்…

< இருபதாம் பாகம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...