பேய் ரெஸ்டாரெண்ட் – 26 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 26 | முகில் தினகரன்

கும்பல் சென்றதும்,

“உங்க பேரு…குணாவா?” சுமதி கேட்டாள்.

அவன் “ஆமாம்”என்று தலையை ஆட்ட,

“இவங்க கிட்ட எப்படி மாட்டுனீங்க?” சுமதி தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.

அவளை ஏற இறங்கப் பார்த்த குணா, “ம்ஹும்…இவளாய் இருக்காது…ஏன்னா இவள் மஞ்சள் நிறப் புடவையல்லவா கட்டியிருக்காள்” தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு என்னையே பார்த்திட்டிருக்கீங்க?… என்னாச்சு உங்களுக்கு?”

“அது.,..ஒரு பெரிய கதைங்க!…அதைச் சொன்னா நீங்க நம்பவும் மாட்டீங்க…கேட்டு முடிச்சதுக்கப்புறம் நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் போலிருக்கு!ன்னுதான் முடிவு பண்ணுவீங்க!” என்றபடி அடிபட்ட கன்னத்தைத் தேய்த்தான் குணா. வலி இன்னமும் மிச்சமிருந்த்து.

சிரித்தாள் சுமதி, “சரி…விடுங்க!…”என்றவள், அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, “போற வர்ற பொம்பளைக கிட்டேயெல்லாம் சம்மந்தமேயில்லாமல்…என்னென்னவோ கேட்கறீங்களாம்…ஏன்?”

“அது வந்து…”லேசாய்த் தயங்கியவன், பிறகு சொல்ல ஆரம்பித்தான்.

“உண்மையில் நான் இந்த மருதமலைக்கு சாமி கும்பிட வரவில்லை!…ஒருத்தரை…இல்லை…இல்லை…ஒருத்தியைத் தேடித்தான் இங்கே வந்தேன்”

“ஓ…அப்படியா?…அவங்களைப் பார்த்துட்டீங்களா?” சுமதி கேட்க,

“க்கும்…எப்படிப் பார்க்கறது?…அவங்களை நான் முன்னே பின்னே பார்த்ததில்லை… ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை மட்டுமே வெச்சுக்கிட்டுத் தேடினேன்!…அதனாலதான் கிட்டத்தட்ட அந்த அடையாளத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து விசாரிச்சேன்…அதை அந்த ஆளுக தப்பாய் நெனைச்சிட்டானுக” தன் நிலைமையை தெளிவாக விளக்கினான் குணா.

“என்ன அடையாளம்?” சுமதி விடாமல் கேட்டாள்.

“பச்சை நிறத்தில் பட்டுப் புடவை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு வரும்!”ன்னு சொல்லியிருந்தாங்க!…அதான்…அந்தப் பொண்ணைத் தேடிக்கிட்டு….நான்…இங்கே…” சங்கோஜத்தோடு சொன்னான்.

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்த சுமதி, “யாரு?…யாரு சொல்லியிருந்தாங்க?” கேட்டாள்.

“அது…அது…ஒரு நண்பர்ன்னு வெச்சுக்கங்களேன்”

சுமதிக்கு குழப்பமாயிருந்தது. “இவர்தான் லட்சுமி நரசிம்மன் ஆவி சொன்ன நபர்ன்னா இவர் ஏன் பச்சைக்கலர் பட்டுப் புடவைன்னு சொல்றார்?…மஞ்சள் கலர்ன்னுதானே சொல்லணும்?”

“சரி…நண்பர்ன்னு சொல்றீங்களே?….அவர் எந்த ஊரு?” விடாமல் கேட்டாள்.

அவளை சந்தேகமாய்ப் பார்த்த குணா, “அதையெல்லாம் எதுக்கு நீங்க கேட்கறீங்க?” சன்னக் குரலில் கேட்டான்.

“அது…வந்து…ஒரு சின்னக் குழப்பம்…அதான்…கேட்டேன்”

“எனக்குத்தான் குழப்பம்ன்னா…உங்களுக்குமா?” முன் நெற்றியில் லேசாய் அடித்துக் கொண்டு அவன் சொல்ல,

“நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன்…அதுக்கு மட்டும் சரியான பதிலைச் சொல்லுங்க!…நீங்க…ஆவியுலகத் தொடர்பில் ஆர்வமுள்ளவரா?” கேட்டாள்.

வியப்போடு அவளைப் பார்த்தவன், “ஆமாம்…அதெப்படி கரெக்டா சொல்றீங்க?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டான்.

“ஹா….ஹா…ஹா…”வென்று வாய் விட்டுச் சிரித்த சுமதி, “அப்ப நான் நெனைச்சது சரியாய்ப் போச்சு” என்று சொல்ல,

“என்ன?…என்ன நெனைச்சிங்க நீங்க?” படபடப்பாய்க் கேட்டான் குணா.

“அதாவது…உங்களை இங்க அனுப்பியது…உங்க நண்பர் இல்லை…ஒரு ஆவி!…அதே மாதிரி நீங்க வந்த நோக்கம்…உங்களுக்கு வரன் பார்க்க!…என்ன நான் சொல்றது சரியா?”

வியப்பின் உச்சிக்கே போனான் குணா, “கடவுளே!…எப்படி…எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க?…நீங்க என்ன ஜோசியக்காரியா?”

“ஜோசியக்காரியும் இல்லை…சூனியக்காரியும் இல்லை!…உங்களை இங்கே அனுப்பிய அதே லட்சுமி நரசிம்மன் ஆவிதான் என்னையும் இங்கே அனுப்பி வெச்சுது!…ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் இன்னும் குளறுபடியாகவே இருக்கு” என்றாள் சுமதி தன் கீழ்த் தாடையை ஆட்காட்டி விரலால் தட்டிக் கொண்டே,

“என்ன?…என்ன குளறுபடி?”

“என் கிட்டே மஞ்சள் நிறப் பட்டுப் புடவைன்னு தகவல் குடுத்த அதே ஆவி…உங்க கிட்டே ஏன் பச்சை நிறப் புடவை!ன்னு சொல்லிச்சு?”

“இல்லையே…என் கிட்டே பச்சைதானே சொல்லிச்சு?” மேலே பார்த்து தீர்க்கமாய் யோசித்து விட்டு, “ஆமாம்…பச்சை நிறப் பட்டுப்புடவை!ன்னுதான் சொல்லிச்சு” என்று உறுதிபடக் கூறினான்.

பேசிக் கொண்டேயிருந்தவர்கள் பஸ் வந்ததும், அதில் ஏறி அருகருகே அமர்ந்தனர்.

ஆண் மகனின் அருகாமை அவளை சுகமாய் இம்சித்தது. அவனும் குறுகுறுப்புடன் அந்த சுகத்தை அனுபவித்தான்.

“நாலஞ்சு ஸ்டாப்பிங் தாண்டினா பொடானிகல் கார்டன் வரும்!…அங்க இறங்கி கொஞ்ச நேரம் பேசிட்டு…அப்புறமா கிளம்பலாமே?” சுமதி சொல்ல, மறுப்பே சொல்லாமல் “சரி”யென்று தலையாட்டினான்.

அந்த மதிய நேரத்திலும் அந்த பொடானிகல் கார்டனில், ஆங்காங்கே சில ஜோடிகள் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.

“ஓ…இது காதலர் தேசமோ?” சிரிப்புடன் கேட்டான் குணா.

“இல்லை…காதலர் சரணாலயம்” என்றாள்.

சற்று ஒதுக்குப்புறமாயிருந்த புல் தரையில் அமர்ந்தனர்.

“ஒரு ஆடவனுடன் பொது இடத்தில் ஜோடியாக அமர்ந்திருப்பது தான்தானா?” என்ற சந்தேகமே எழுந்தது சுமதியின் மனதில். “அடிக்கள்ளி…உனக்கு எப்படிடி இப்படியொரு தைரியம் வந்தது?” உள்மனம் அவளைக் கேட்க,
“ச்சூ…சும்மாயிரு” என்றாள் அவள் சூழ்நிலையை மறந்து.

“ஆஹா…நான் எதுவுமே செய்யலையே” என்றான் குணா அப்பாவியாக.

சட்டென்று சுய நினைவிற்கு வந்த சுமதி, “அது…வந்து…உங்களை இல்லை” என்றாள் திக்கித் திணறி.

“வேற யாரை?” கண்களைச் சுருக்கிக் கொண்டு, உதட்டைக் குவித்துக் கொண்டு கேட்டான்.

“என்னையேதான்” என்றாள்.

தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றியொருவர் பேச ஆரம்பித்து நேரம் போவதே தெரியாமல் பேசித் தீர்த்தனர்.

குணா அடித்த அசட்டு ஜோக்குக்கெல்லாம் “கலீர்…கலீர்”ரென சிரித்து மகிழ்ந்தாள் சுமதி.

அவள் அவ்வாறு சிரிக்கும் போதெல்லாம் பக்கத்து மரத்து மரத்தின் ஒரு கிளை மட்டும் “பட…பட”வென்று ஆடி ஓய்ந்தது.

முதலில் அதைக் கவனிக்காதவள், பின்னர் கவனித்து விட்டு, குணாவிடம் சொல்ல,

திரும்பி அந்த மரத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, கண்களை மூடி மனத்தை ஒருமுகப்படுத்தினான். அவன் உதடுகள் மட்டும் சத்தமே வராமல் பேசின.

அவன் செய்கைக்கான காரணம் புரியாமல், அவனையே கண் கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுமதி.

சில நிமிடங்களுக்குப் பிறகு கண் திறந்த குணா, “நம் ஆவி நண்பர்தான் அந்த மரக்கிளையில் அமர்ந்து படபடத்துக் கொண்டிருந்தார்” என்றான்.

“அப்படியா?” என்று கேட்டு விட்டு அந்தக் கிளையையே உற்றுப் பார்த்த சுமதி, “என் கண்களுக்குத் தெரியலையே?” என்றாள்.

“என் கண்களுக்கும் தெரியவில்லைதான்…ஆனால் புலனுணர்வால் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது”

“என்ன சொன்னார் அவர்?”

“சீக்கிரமே வீட்டில் சொல்லி…திருமண ஏற்பாடுகளை ஆரம்பியுங்கள்”ன்னு சொன்னார்”

சில நிமிடங்கள் அந்த மரக்கிளையையும், அதன் பின்னால் தெரிந்த நீல வானத்தையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்த சுமதி, “என்னால் எதையுமே நம்ப முடியவில்லைங்க!…உயிரோட நடமாடிக்கிட்டிருக்கற தரகர்களாலேயே எனக்கொரு வரன் பிடிச்சுத் தர முடியலை!…ஆனா…செத்துப் போய் ஆவியாயிட்ட ஒரு தரகர்…அந்த வேலையைச் செய்து முடித்திருக்கிறார்…என்றால்…இது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்” என்றாள்.

“அதே மாதிரிதான் எனக்கும்…வெட்கம் இல்லாம முப்பது வயசு வரை பொண்ணு தேடினேன்…அதுக்கபுறம்…“கல்யாணம்”இல்லேன்னா வாழ முடியாதா?…என்ன?”ன்னு என்னை நானே ஆறுதல்படுத்திக்கிட்டு வாழ்ந்திட்டிருந்தேன்….திடீர்னு ஆவி நண்பர் வந்து…உன்னைப் பத்திச் சொல்லி…இந்த ஏற்பாட்டை பண்ணிட்டார்” என்று குணா சொல்ல,

“இதுல உங்களுக்கு சந்தோஷம்தானே?” விழிகளைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

“இல்லை”ன்னு சொல்ல நான் என்ன முட்டாளா?”

“அதானே பார்த்தேன்” என்றாள் சுமதி புல்லைக் கிள்ளி அவன் மீதி எறிந்தபடி,

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, “சரி சுமதி!….நாம புறப்படலாம்!…நான் முறைப்படி வந்து உன்னோட அப்பா அம்மாவை சந்திச்சு…பெண் கேட்கறேன்!…சரியா?”

அவன் அவளை “சுமதி”என்று பெயர் சொல்லி அழைத்ததோடு, ஒருமையிலும் பேச,

அவள் உள்ளம் கொள்ளை போனது. உண்மை இன்பத்தில் திளைத்தது. தெள்ளு தமிழில் தெம்மாங்கு பாடியது.

பிரியவே மனமில்லாமல் பிரிந்தனர்.

அன்று இரவு,

“மஞ்சள் நிற பட்டுப் புடவை”ன்னு என் கிட்டேயும், “பச்சை நிறப் பட்டுப் புடவை”ன்னு அவர் கிட்டேயும் சொல்லி ஒரு பெரிய களேபரத்தையே அங்கு உண்டாக்கி விட்ட என் ஆவித் தோழா…உன்னை ஒரு கை பார்க்கிறேன்” என்று ஆவேசத்தோடு ஒய்ஜா போர்டை எடுத்துப் பரப்பினாள் சுமதி.

கண்களை மூடியபடி காத்திருந்தாள்.

அவளைப் போலவே அவளருகில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாளும், பேனாவும் ஆவி தரப் போகும் தகவலை எழுதக் காத்திருந்தன.

அரை மணி நேரமாகியும் ஆவி வரவில்லை.

சலிப்புற்றாள்.

“இந்த ஆவி…ஏதோ தகிடுதத்தம் செய்யுது போலிருக்கு!…அதான் இன்னிக்கு நான் கோபமாயிருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டு வர மாட்டேங்குது!…நான் விட மாட்டேன்…எத்தனை நேரமானலும் சரி…இன்னிக்கு கேட்காம விட மாட்டேன்”

மீண்டும் கண்களை மூடி அமர்ந்தாள்.

சரேலென்று வந்திறங்கிய லட்சுமி நரசிம்மன் ஆவி “பட…பட”வென்று தன் பதிலைக் கிறுக்கி விட்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றது.

அது சென்றவுடன் அவசர அவசரமாக அந்த பதிலை எடுத்துப் படித்தாள் சுமதி.

“தோழி…என்னைப் புரிந்து கொள்…உங்கள் இருவரிடமுமே நான் பச்சை நிறப் புடவையென்றுதான் சொல்லியிருந்தேன்…ஆனால், இடையில் புகுந்த ஒரு துஷ்ட ஆவிதான் உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து பெரும் குழப்பத்தை உண்டாக்கி விட்டது. அன்றே சொன்னேன் அல்லவா?…தொலைபேசியில் கிராஸ் டாக்குகள் வருவது போல் இங்கும் மோசமான ஆவிகள் இடையில் புகும் என்று…அதுதான் நடந்திருக்கின்றது…நான் சென்ற பிறகு அந்த துஷ்ட ஆவி வந்து பச்சைப் புடவையை மஞ்சளென்று மாற்றி எழுதி விட்டுச் சென்றிருக்கின்றது…பரவாயில்லை…இனிமேல் நீங்கள் என்னை அழைக்கும் போது ஊடகப் பலகையின் நேர் மேலாக உயரத்தில் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வையுங்கள்..துஷ்ட ஆவிகள் அந்த நெருப்பு வேலியைத் தாண்டி கீழே இறங்க முடியாது…எப்படியோ நீங்களும் அவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசி விட்டீர்கள்…மிக்க மகிழ்ச்சி…நீக்கிரமே நல்ல முடிவெடுங்கள்…எனக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது”

அந்தக் கடைசி வரியான, “எனக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்ற விஷயம் அவளுக்குள் பெரும் நெருடலை உண்டாக்க, “அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?”

யோசித்தாள். புரியவில்லை.

“இரண்டு உள்ளங்கள் இணைவதற்கு பாலமாக இருந்து விட்டோம்…எப்படியாவது இந்த இணைப்பு திருமணத்தில் முடிந்து விட்டால் பரவாயில்லை” என்கிற பிரயாசையோடு ஆவியுலகம் நோக்கி “ஜிவ்”வென்று பறந்தது லட்சுமி நரசிம்மன் ஆவி.

மதியம் 1.30.

அன்றைய தினத்தந்தியை ஒரு எழுத்து பாக்கியில்லாமல் படித்துத் தீர்த்து விட்டு, ஏதாவது எழுத்து மிச்சமிருக்கின்றதா?…என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார் சுமதியின் அப்பா வேணுகோபால்.

வாசலில் ஏதோ வாகனம் வந்து நிற்பது போல் சத்தம் கேட்க,

“ராஜேஸ்வரி…ஏதோ வண்டி வந்து நிற்குது…யாரு?ன்னு போய்ப் பார்” உள் அறையை நோக்கிக் கத்தினார்.

“சும்மாதானே உட்கார்ந்திட்டிருக்கீங்க?…எந்திருச்சுப் போய்ப் பார்க்க வேண்டியதுதானே?…படிச்ச பேப்பரையே திரும்பத் திரும்ப படிச்சுக்கிட்டு…” திட்டிக் கொண்டே வந்தாள் ராஜேஸ்வரி.

“ஏய்…பதில் பேசாம போ…”உட்கார்ந்தபடியே அதட்டினார்.

அதைக் கண்டு கொள்ளாமல் வாசலுக்குச் சென்று, காத்திருந்த கூரியர் சர்வீஸ் ஆள் கொடுத்த கவரை கையெழுத்துப் போட்டு வாங்கினாள்.

உள்ளே வந்தவள், “இந்தாங்க…உங்க பேருக்குத்தான் வந்திருக்கு…” என்று சொல்லி அதை வேணுகோபாலின் மடி மீது எறிந்து விட்டு உள் அறையை நோக்கி நடந்தாள்.

“எனக்கா?” புருவங்களை நெரித்துக் கொண்டு, அந்தக் கவரைப் பிரித்து உள்ளிருந்த கடிதத்தை எடுத்து வாசித்தார்.

வாசிக்க வாசிக்க அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமானது. “ஏய்…ராஜேஸ்வரி…ராஜேஸ்வரி” உற்சாகமாய்க் கூவினார்.

“அய்யோ…ஒரு அஞ்சு நிமிஷம் என்னைக் கூப்பிடாம இருக்க மாட்டீங்களா?… எப்பப்பாரு… “ராஜேஸ்வரி…. ராஜேஸ்வரி” ன்னு கூப்பாடு போடறதே பொழப்பாப் போச்சு உங்களுக்கு” திட்டிக் கொண்டே வந்தவள், “என்ன…என்ன குடுக்கப் போறீங்க ராஜேஸ்வரிக்கு?” கோபமாய்க் கேட்டாள்.

“ம்…ஒரு நல்ல சேதி குடுக்கப் போறேன்” என்றார் வேணுகோபால் வாயெல்லாம் பல்லாக.

அவர் கையிலிருந்த கடிதத்தையும் அவர் முகத்திலிருந்த சந்தோஷத்தையும் வைத்து ஓரளவுக்கு விஷயத்தை யூகித்து விட்ட ராஜேஸ்வரி, “என்ன…என்ன நல்ல சேதி?…சீக்கிரம் சொல்லுங்க” கேட்டாள்.

“யாரோ “குணா”ன்னு ஒருத்தர் எழுதியிருக்கார்…. நம்ம சுமதியை எங்கியோ பார்த்திருக்காராம்… ரொம்பப் பிடிச்சுப் போச்சாம்… முறைப்படி பேச உறவுக்காரங்களைக் கூட்டிட்டு எப்ப வரலாம்?ன்னு கேட்டிருக்கார்” அவர் பேச்சில் ஆனந்தம் கொப்பளித்தது.

ஆனால் ராஜேஸ்வரியின் முகத்தில் அந்த சந்தோஷம் எதிரொலிக்கவில்லை. “எப்படிங்க?… யாரு… எவரு? ன்னு தெரியாம எப்படி?…” தயங்கினாள்.

“பையன் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது நல்ல மரியாதைப்பட்ட குடும்பம்!ன்னுதான் தெரியுது!…நாம என்னிக்கு வரச் சொல்றோமோ…அன்னிக்கு தன் சகோதரிகளைக் கூட்டிட்டு வர்றதா எழுதியிருக்கார்!…வரச் சொல்லித்தான் பார்ப்போமே?” கடைசி கடைசியாய் ஆண்டவன் அனுப்பிய ஒரு சந்தர்ப்பமாய் அவருக்குப் பட்டது.

“ம்…ம்…”என்று இழுத்த ராஜேஸ்வரி, கணவரின் கெஞ்சல் முகத்தைப் பார்த்து, “சரி…வரச் சொல்லிடுங்க…” என்றாள்.

அன்று மாலையே சுமதியிடம் பேசினார்.

– தொடரும்…

< இருபத்தி ஐந்ததாம் பாகம் | இருபத்தி ஏழாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...