உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்
தாய் தந்தை இறந்து விட, நிர்க்கதியாய் நின்ற 14 வயது மனோஜுக்கும், 13 வயது ஜோதிக்கும் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்த பள்ளிக்கூட சக மாணவர்களும், ஆசிரியர்களும்!
தமிழக-கேரள எல்லையோரத்தில் மீனச்சல் என்ற ஊரை அடுத்து இருக்கும் ஊர் தான் மேலவீட்டுவிளை. இந்த ஊரில் கம்பீரமாக சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் புத்தம்புது வீட்டிலிருந்து பள்ளிப்பையைத் தோளில் போட்டபடி கைகோர்த்து கிளம்புகிறார்கள் 14 வயது மனோஜும் 13 வயது ஜோதியும். இவர்களில் மனோஜ் ஒன்பதாம் வகுப்பும், ஜோதி எட்டாம் வகுப்பும் கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்… இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்தது அதே பள்ளியில் பயிலும் மாணவர்களும், தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் என்றால் ஆச்சரியமாக இருக்கிற தல்லவா? ஆனால் அதுதான் உண்மை!
கிராமத்தில் சிறு சிறு வேலைகளை செய்து சொற்ப சம்பளம் ஈட்டி வந்த இந்த இரு சிறு குழந்தைகளின் அப்பா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அதன்பிறகு இவர்களின் அம்மா சுலோச்சனா ஓராண் டில் புற்றுநோய்க்குப் பலியானார். அதன் பின்னர் இந்த இருவரும் தனித்து விடப்பட்டனர்.
தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையிலும் இருவருக்கும் தாத்தா பாட்டியின் அன்பு கிடைத்து வந்தது கொஞ்ச காலம் வரை. இந்தச் சிறுவர்களுக்கு ஒரு சித்தப்பா இருந்தார். அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. சித்தி வந்தால் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்று எண்ணி வந்த சிறுவர்களுக்கு அதற்கு மாறாக மிகுந்த இன்னல்களே தொடர ஆரம்பித்தன. தாத்தா பாட்டி வீட்டில் மனோஜும் ஜோதியும் தங்கக்கூடாது என்று சொல்லப் பட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் காவல்துறையில் பணிபுரியும் ஒருவர் தத்தெடுக்க முன் வந்திருக்கிறார். தங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்ற ஆவலில் அந்தக் காவல்துறை அதிகாரி வீட்டிற்கு இருவரும் சென்று சேர்ந்தார்கள். தேங்காய்ப்பட்டினம் கிராமத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றார் காவல்துறை அதிகாரி அதன்பின் அங்குள்ள அரசுப் பள்ளியில் இருவரையும் சேர்த்து விட்டார்.
ஆரம்பத்தில் அன்பாகப் பழகுவது போல் காட்சி தந்த அந்த காவல்துறை அதிகாரி பின்னர் கடுமையைக் காட்ட ஆரம்பித்தார். காலையில் பள்ளிக்குப் போவதற்கு முன்பும், பள்ளிக்குப் போய் வந்த பிறகும் அவருடைய பண்ணையில் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்று இருவரையும் பணித்தார்.
100க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்த பெரும் பண்ணை அது.ஆகவே அவை எல்லாவற்றையும் மேய்க்க இருவரும் சிரமப்பட்டார்கள். அவரிடம், “ஆடு மேய்க்க கஷ்டமாயிருக்கு” என்று அழுது புலம்பினார்கள். அவர் விடுவதா யில்லை; மிரட்ட ஆரம்பித்தார். கண்ணீர் மல்க, “எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் எங்கள் வீட்டுக்கே போய் விடுகிறோம்” என்று அவரிடம் கெஞ்சினார்கள் இருவரும். அதட்டியும், மிரட்டியும் பார்த்தும் இரு சிறுவர்களும் அதற்குப் பணியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கவே, வேறு வழியில்லாமல் ஒரு வாரத்தில் மீண்டும் தாத்தா பாட்டியிடமே கொண்டு போய் விட்டு விட்டார் காவல் அதிகாரி.
மீண்டும் திருத்துவபுரம் புனித ஜோசப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர் இருவரும். தாத்தா பாட்டியுடன் இருந்த இவர்களை இவர்களின் சித்தப்பா அந்த வீட்டில் வைத்து இருக்க விரும்பவில்லை. சித்தப்பா இவர்களை மிகக் கடுமை காட்டி நெருக்கடி கொடுக்கவே, இருவரும் மீண்டும் அழுதுகொண்டே இருந் திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் சேவியர் ஆண்டனி இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கராஜிடம் குழந்தைகளின் நிலைமையை எடுத்துச் சொன்னார் சேவியர் ஆண்டனி.
தாய் தந்தை இறப்புக்குப் பின் மனோஜ், ஜோதிக்கு தாத்தா, பாட்டி தான் சற்று ஆறுதலாக இருந்தார்கள். பாட்டி சமைத்துக் கொடுப்பதை இருவரும் சாப்பிடு வார்கள். தாத்தா ஆரம்பத்தில் கூலி வேலைக்குப் போய் பணம் கொண்டு வருவார். கொஞ்ச காலங்களில் அவருக்கும் வயதாகி விடவே, அவரால் கூலி வேலைக்குப் போக முடியவில்லை. இதனால் தாத்தா, பாட்டி இருவருமே இவர்களது இரண்டாவது பையனை நம்பித்தான் இருந்தார்கள். அந்தப் பையன் -அதாவது இந்த சிறுவர்களின் சித்தப்பா- திருமணத்துக்குப் பிறகு குழந்தைகள் வீட்டில் இருக்கக் கூடாது என்பதாகக் கடுமை காட்ட ஆரம்பித்தார்.
தலைமையாசிரியர் தங்கராஜ் மிகவும் சிரமப்பட்ட குடும்பத்தில் இருந்து தான் வாழ்க்கையைத் தொடங்கியவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கூலி வேலைக்கும் போயிருக்கிறார். அதனால் பெற்றோர்கள் இல்லாத இந்தக் குழந்தைகளுடைய வலியையும், வேதனையையும் அவரால் நன்கு உணர முடிந்தது. சிறுவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் தாத்தா, பாட்டியிடம் பேசினார். தாத்தாவுக்கு நாலு சென்ட் காலி மனை இருப்பதை அப்போது தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து விடாப்பிடியான முயற்சியின் விளைவாக தாத்தாவிடம் குழந்தை களின் பெயரில் இரண்டு சென்ட் இடத்தை உயில் எழுதி வாங்கினார்கள். அந்த இடத்தில்தான் இப்போது வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
பிள்ளைகளின் வறிய நிலையைப் பார்த்து பள்ளிக்கூட ஆசிரிய, ஆசிரியைகள் அவ்வப்போது சாக்லெட், பேனா, பென்சில், தின்பண்டம், புத்தகப்பை, புத்தகங்கள் என்று ஏதாவது வாங்கிக் கொடுத்து விட்டு வருவார்கள்.”அது மட்டும் அவர்களுக் குப் போதாது அல்லவா? அதனால்தான் இந்த வீட்டைக் கட்டிக்கொடுக்க முடிவு செய்தோம்” என்கிறார் தலைமையாசிரியர் தங்கராஜ்.
பள்ளிக்கூடத்தில் 54 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் அலுவலகப் பணி யாளர்கள் நிறைய பேர் பணிபுரிகிறார்கள். ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயைத் திரட்டினார்கள். மாணவர்களிடம் பெற்றோர்கள் மூலம் உதவி கோரப்பட்டது. அதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. ஆக மொத்தம் முதல் கட்டமாக மூன்று லட்சம் ரூபாய் சேர்ந்தது. தலைமையாசிரியர் தங்கராஜ் முயற்சி செய்து கோட்டாறு பாதிரியார் ஜெரோமி தாஸ் மூலம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொடுத்தார்.
இப்படி எல்லோர் மூலமும் திரட்டப்பட்ட 5 லட்ச ரூபாயில் அழகான இந்த வீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அபிநயா சேமிப்பு உண்டியலைத் திறந்து, அதிலிருந்த 1900 ரூபாயை அப்படியே கொட்டிக் கொடுத்தது காண்போரை நெகிழச் செய்தது.
430 சதுர அடியில் இந்த வீடு உருவாகியிருக்கிறது. இரண்டு படுக்கையறை, கூடம், மேற்கத்திய பாணியிலான கழிவறை வசதி என அசத்தலாக எழும்பி இருக்கிறது இந்த அழகான வீடு. இப்போது இந்த வீட்டுக்கு மின் இணைப்புப் பெற முயற்சி செய்து வருகிறது பள்ளி நிர்வாகம். மனோஜும் ஜோதியும் இந்தப் புதிய வீட்டில் இருந்துதான் இப்போது பள்ளிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
படித்து விட்டு பிற்காலத்தில் என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், மனோஜ் டக்கென்று சொல்லுகிறான், “ராணுவத்தில் சேர வேண்டும்; நம் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும்!” ஜோதியோ ஒரு படி மேலே போய், “பாவப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். பிச்சை எடுப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் என்னோட ஆசை. அதுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு வேலைக்குப் போவேன்” என்கிறார்.
“கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது” என்பார் அவ்வையார். திருத் துவபுரம் புனித ஜோசப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற மனித நேயம் மிக்கவர்கள் இந்த உலகில் இருக்கும் வரை இந்தக் கொடுமையும், வறுமையும் தவிடு பொடியாகித் தூள் தூளாகி விடும் என்பதில் என்ன சந்தேகம்?