வரலாற்றில் இன்று – 13.12.2021 லட்சுமி சந்த் ஜெயின்
சமூகப் பொருளாதார வளர்ச்சி நிபுணருமான லட்சுமி சந்த் ஜெயின் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார்.
இவர் வெள்ளையனே வெளியேறு போன்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மேலும் இந்தியத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திய கூட்டுறவு யூனியன் நிறுவப்படுவதற்கும் அதன் கொள்கைகளை கைவினைப் பொருள்கள் தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கும் உதவினார்.
1966ஆம் ஆண்டு நுகர்வோர் சங்கிலித் தொடர் கூட்டுறவு விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நகரங்களில் பொருள்கள் நியாய விலையில் கிடைக்க வழிவகுத்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளருமான இவர் பாவர்ட்டி, என்விரான்மென்ட் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை பாடுபட்டு வந்த லட்சுமி சந்த் ஜெயின் தனது 84வது வயதில் (2010) மறைந்தார்.
இலாசந்திர ஜோஷி
இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களை எழுதிய இலாசந்திர ஜோஷி 1903ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் அல்மோடாவில் பிறந்தார்.
இவருடைய முதல் கதை வெளிவந்தபோது இவருக்கு வயது 12. 1929ஆம் ஆண்டு வெளிவந்த “கிருணாமயீ நாவல் இவருக்கு இலக்கிய உலகில் ஓரளவு அறிமுகத்தை பெற்றுத் தந்தது. 1940ஆம் ஆண்டு. 1940ஆம் ஆண்டு வெளியான “சன்யாசி” நாவலால் இவர் பெரும் புகழை பெற்றார்.
லஜ்ஜா, பர்தே கீ ராணி, முக்திபத், ஜிப்ஸி, சுபஹ், நிர்வாசித், பிரேத் அவுர் சாயா உள்ளிட்ட இவரது நாவல்கள் மிகவும் பிரபலமாகும்.
இவர் தாகூரின் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இந்தி இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட இலாசந்திர ஜோஷி 79வது வயதில் (1982) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1987ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி மறைந்தார்.
1784ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் மறைந்தார்.