வால்பாறை : இன்பச் சுற்றுலா இனிய சிற்றுலா

 வால்பாறை : இன்பச் சுற்றுலா     இனிய சிற்றுலா

சென்னையிலிருந்து 11 பேர் கொண்ட குழுவாக 4 மற்றும் 5-12-2021 என இரண்டு நாட்கள் பயணமாக வால்பாறைக்குச் செல்ல திட்டமிட்டோம்.  தங்கும் இடமும் போகவர வாகனமும் இங்கிருந்தே பதிவு செய்திருந்தோம். அதனால் பெரிய சிரமமின்றி கண்டுகளிக்கமுடிந்தது.

வானவில் குழுவின் சார்பாக திருவாளர்கள் ஸ்டீபன், கதிரவன், செல்வகுமார், குமார், அமிர்தம் சூர்யா, சந்திரசேகர், பொன்மூர்த்தி, ஹரிகிருஷ்ணன், கோதண்டபாணி, தமிழரசு, வனராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கோவைக்குப் பயணமானோம். காலை 4 மணிக்கு கோவையில் இறங்கினோம். அங்கிருந்து 15 பேர் அமரக்கூடிய ஒரு வேன் மூலம் பொள்ளாச்சிக்குப் பறந்தோம். இடையில் ஒரு இடத்தில் காலை உணவு உண்டோம். மறுபடியும் வேன் பயணம் ஆழியாறு அணைக்கு வரும் குரங்கருவியில் ஆசைதீரக் குளித்தோம்.

நீர் வீழ்ச்சி என்று ஏன் அதைச் சொன்னார்கள். அதில் குளித்ததால் நமக்கு எழுச்சிதான் ஏற்படுகிறது. மேலிருந்து கீழே வீழ்வதால் அது வீழ்ச்சி ஆனதோ? கீழே தோல்வியில் வீழ்ந்தால்தான் வீழ்ச்சி. ஆனால் இந்த நீர் ஆற்றலோடுதானே வீழ்கிறது. ஓயாமல் வீழ்ந்துகொண்டிருக்கும் நீரில் குளித்து இல்லை இல்லை ‘உதை’ வாங்கிக்கொண்டு இல்லை இல்லை இயற்கை மசாஜ் செய்துவிட்டது. வீழ்ச்சி. இல்லை நீர் எழுச்சி. சென்னை மெட்ரோ தண்ணீரில் குளோரிங் பவுடர் வாசத்தோடு குளித்தவர்களுக்கு இயற்கை மணத்தோடு நல்ல மசாஜும் கிடைத்தது. புத்தாடைகள் அணிந்து கொண்டு வேனில் ஏறி வேகமாக மலைமேல் புறப்பட்டோம். எங்கும் பச்சைத்தோல் போர்த்திய மலைகள். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் ‘ஒரே வானம் ஒரே பூமி’ படத்தில்,

‘மலை ராணி முந்தானை சரிய சரிய,

மண் மாதா வண்ணமடி விரிய விரிய,

இளங்காற்று மார்பகத்தைத் தழுவ தழுவ,

எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத…

என்று பாடினாரோ?

https://www.youtube.com/watch?v=8jk5bPQd7eA பாடலைக் கேட்டு ரசிக்க.

தேயிலைச் செடியின் வளர்ப்பு தூரத்திலிருந்து பார்க்கும்போது பாறையில் போர்த்திய பச்சை சேலையாகவே தெரிகிறது. கண்கொள்ளா காட்சி. இன்னும் தொலைவில் மேகங்கள் கால்கள் இல்லாமல் ஊர்ந்துசெல்வதைக் காணமுடி கிறது. அந்த நேரத்தில் ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் கண்ணா தாசன் எழுதிய

“மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்”

https://www.youtube.com/watch?v=1N3uLmqkZCE என்ற பாடல் காதில் ஒலிக்கிறது.

மழைப்பொழிவு மற்றும் புல் நிறைந்த மலைகளின் காரணமாக ‘தென்னிந்தியாவின் சிராப்புஞ்சி’ என்று வால்பாறை மலைப்பிரதேசம் அழைக்கப்படுகிறது.  காடுகள், மலைகள், நீர்நிலைகள் என்று வால்பாறையின் அழகை வர்ணிக்கமுடியாது.

வால்பாறையில் முதன்முதலில் மனிதன் குடிபுகுந்து 170 ஆண்டுகள் நிறைவு அடைந்த பிறகும், இந்த மலைப்பிரதேசத்தின் கீழ் வரும் பெரும்பான்மையான மலை இடங்கள் இன்னும் மக்கள் வசிப்பதற்கு உகந்ததாக இல்லை. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசை யெழுப்பும் ஓடைகளுடன் தேநீர் மற்றும் காபித் தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.

வேனில் புறப்பட்டு காலை பத்து மணி அளவில் ஒரு காட்டேஜுக்குச் சென்றோம். அங்கு லக்கேஜ் களை வைத்துவிட்டு காலை உணவைச் சுடச்சுட உண்டுவிட்டு வேனில் மீண்டும் புறப்பட்டோம், அருவிகளில் குளிக்க.

முதலில் குரங்கருவி அதாவது கவி அருவி உள்ளது. இங்கு குரங்குகள் அதிகம் இருக்கின்றன. தின்பண்டங்களைக் கண்டால் நாம் அவ்வளவுதான். அதகளப்படுத்த நம் முன்னோர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேன் ஓட்டுநர் “தின்பண்டங்களை வெளியே எடுக்காதீர்கள்” என்று எச்சரிக் கிறார்.

குளித்து முடித்து உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து பாலாஜி கோயிலுக்குச் சென்றோம். அதே வளைவு நெளிவு சாலைகளில் பயணித்தோம். எங்கள் நேரம் பாலாஜி கோயிலில் கடும் மழைப்பொழிவு. கோயிலை அடைந்தும் எங்களால் பாலாஜியைக் காண முடியவில்லை. அங்கிருந்த காவலர், “மழை கடுமையாக வந்துவிட்டால் வாகனம் பயணிக்கமுடியாது. மேலே உள்ள யானைகள் கீழே இறங்கி வந்துவிடும். அப்புறம் நீங்கள் செல்லமுடியாது” என்றார். எங்கள் குழுவில் யானைக் கும், காட்டு மாடுகளுக்கும் பயந்தவர் ஒருவர் இருந்தார். அவர் உடனே வண்டியை எடுங்கள் என்று உஷாவினார். உடனடியாக அங்கிருந்து கிளம்பினோம்.

பாலாஜி கோயில் சுவாமியைக் காணவேண்டும் என்று ஆவலாக வந்த ஒருவர் ஏமாற்றமாக வந்தார். நேரே தங்குவிடுதிக்குச் சென்று அடைக்கலமானோம்.

வால்பாறை மலைமேல் ஏற மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலையில் ஏற்றம் இறக்கம் கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்கும்போது சிலருக்கு வாந்தி வருவதுண்டு. அதனால் அதிகமும் இல்லாமல் வெறும் வயிறாகவும் இல்லாமல் இருப்பது நல்லது. இந்த மாதிரி சமயங்களில் வாந்தி கோளாறு உள்ளவர்கள் மிதமான உணவு உட்கொள்ளவேண்டும்.

நீண்ட நேர வேன் பயணம் உடலை முறுக்கியெடுத்தது. அதனால் செல்லும் வழிகளில் அங்கங்கே வண்டியை நிறுத்தி இறங்கி சில இடங்களில் தேநீர் குடித்து இளைப்பாறி, போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.

வழியில் சிங்கவால் குரங்கு, கருங்குரங்கு, மலை அணில், யானை, சிறுத்தை, வரையாடு, காட்டுக் கோழிகள், காட்டு எருமைகள் உள்ளன என்கிற போர்டை பார்த்தோம். ‘இது யானைகள் நடமாடும் இடம். இது அவற்றின் வழித்தடம். இங்கு நடமாட அவைகளுக்கு உரிமை உண்டு’ என்கிற போர்டையும் காண நேர்ந்தது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 அடி உயரத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சி வால்பாறை. இந்தப் பகுதியின் 1846ஆம் ஆண்டு கே. ராமசாமி முதலியார் என்பவர் இங்கு ஒரு காபித் தோட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். 1864ஆம் ஆண்டில், கர்நாடக காபி நிறுவனம் தங்கள் காபித் தோட்டத்தை இங்கே தொடங்கியது. ஆனால் அதை லாபம் ஈட்ட முடிய வில்லை. எனவே அவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை ஏக்கர் ரூ.5 வீதம் விற்பனை செய்தனர். நிலத்தைச் சிறிது சிறிதாக விற்பனை செய்தது அந்நிறுவனம். 1875ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர், வருங்கால எட்வர்ட் VIIஇன் வருகைக்காக சாலைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் ராணுவப் படையினரால் கட்டப்பட்டது. சிப்பாய்கள் இங்கு பாதுகாப்புக்கு இடப்பட்டனர் மற்றும் குதிரைகள் மற்றும் யானைகள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், எட்வர்ட் VII ன் வருகை இறுதியில் ரத்து செய்யப்பட்டது.

இரவு தங்கும் விடுதியில் குளிரில் கை கால்கள் தந்தி அடித்தன. காரணம் வால்பாறையில் மாலை நேரம் ஆகிவிட்டால் மேகங்கள் கண்ணுக்கெதிரிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் நம் காலடியிலேயே தவழ்கின்றன. மாலையில் கண்டிப்பாக மழைப்பொழிவு நிகழ்கிறது. அதனால் வானவில் நண்பர்கள் தீ மூட்டாமல் இரவைக் கழிக்க முடியாது என்று கூறியதால் அறைக் காப்பாளரிடம் சொல்லி கட்டைகளை வாங்கிவரச் செய்தோம். கட்டையில் விலை 500 ரூபாய், போய்வர பெட்ரோல் செலவுக்கு 500 ரூபாய் செலவானது. ஆனால் தீ மூட்டியதில் கடும் குளிர் இதமான குளிராக மாறியது. இரவு பன்னிரண்டு மணி வரை பனியை விரட்ட நெருப்புக்குக் காவல் காத்தோம். எங்கள் குழுவில் இனிமையான குரல் வளம் கொண்டு நபர் இருந்தார் அவர் அப்போது இதமான குளிருக்கு ஒரு பாடலைப் பாடினார். ‘டூயட்’ படத்தில் ரஹ்மான் இசையில் ‘காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?’ என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடினார்.

இதைக் கேட்டதும் எங்களில் ஒருவர் ‘காதல் என்பது காமம்தான்’ என தொடங்கினார். இன்னொருவர் ‘அன்புதான் காதலாக மலர்கிறது’ என்றார். இன்னொருவர் ‘அன்பு பொதுவானது. அது ஐந்தறிவு ஆரறிவுக்கும் வரலாம். காதலுக்கு அன்பு ஒரு தொடக்கம். காதலில் காமம்தான்முன்னிலை வகிக்கிறது’ என்றார். இந்த விவாதத்தில் மூவர் அன்பு பக்கமும், மூவர் காமம் பக்கமும் நின்று கிட்டத்தட்டஒன்றரை மணி நேரம் விவாதம் நடந்தது. இரவு பன்னிரண்டரை ஆனது. படுக்கச் சென்றோம். செருப்பும் தணியவில்லை. காதல் காமம் நெருப்பும் தணியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க https://www.youtube.com/watch?v=u0CtfXRibAw

1890ஆம் ஆண்டில், டபிள்யூ விண்டில் மற்றும் நோர்டன் ஆகியோர் வால்பாறையில் ஒரு பெரிய நிலத்தை மெட்ராஸ் மாநில அரசிடமிருந்து பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வாங்கினர். விண்டில் அப்பகுதியில் உள்ள காடழித்து விட்டு தேநீர் மற்றும் காபி பயிரிட்டார்.

ஆங்கிலேயன் காலத்தில்  கார்வார் மார்ஷல் என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதைக் கண்டுபிடித்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக, மரங்களின் அற்புத வனமாக மலைச்சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும், பனித்துளி கள் சில்லிட, புலிகளும் யானைகளும், பளிங்குப் பாறைகள் துள்ளிட, நதிகளும், ஓடைகளும், வான் நிறத்தில் வெள்ளியிட, ஆகா ஆகா அற்புத வானம் விரிந்தது. இந்த மலைப்பாதையை உருவாக்கும் காலகட்டத்தில் ஏகப்பட்ட உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது என்கிறது வாய்வழி வரலாறு.

கண்டுகளிக்க வேண்டிய வால்பாறையில் உள்ள வெள்ளைமலை சுரங்கப்பாதை அருவி Video

இங்கு எந்தப் பொருள் வேண்டுமென்றாலும் பல கிலோமீட்ர்கள் கீழே பயணித்து கொண்டுவர வேண்டும். ஒரே ஒரு மருத்துவமனை எங்கள் தங்கும் விடுதிக்கு அருகில் இருந்தது. இரவில் அங்கும் ஆம்புலன்ஸ் வந்தது.

ஜனநெருக்கடி இல்லை. மனிதர்களைப் பார்ப்பது அதிசயமாக உள்ள வால்பாறையில். பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக்கொண்ட மக்கள் பழனியிலிருந்து, கோவையிலிருந்து, மைசூரிலிருந்து, தர்மபுரியிலிருந்து, இலங்கையிலிருந்து என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன.

சிலி நாட்டைப் போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான  வால்பாறைஸோ என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ வால்பாறையாக  மாறி இருக்கிறது.

இறுதி நாள்… சென்னைக்குப் பயணமாகவேண்டும். அதனால் மழையால் தரிசிக்க முடியாத பாலாஜி கோயில் உள்ள கருமலை இடத்தில் காலையில் சென்றோம். வால்பாறை நகரத்தைத் தொடும் முன்பாகவே பிரிந்து செல்லும் சாலை மார்க்கத்தில் 10 கி.மீ. பயணித்தால் வரும் அழகிய இடம் கருமலை எஸ்டேட். இங்குள்ள ஒரு உயரமான இடத்தில் பிர்லா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஸ்தலம் பாலாஜி கோயில். கோயிலில் மிகவும் கட்டுப்பாடு. செல்போனில் படம் பிடிக்கக்கூடாது. மாஸ்க் அணிந்துவரவேண்டும். இது தனியார் கட்டப்பாட்டில் உள்ளதால் காவலர்களின் கெடுபிடி அதிகம். உள்ளே கொரோனாவுக்கு ஐயர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அர்ச்சனைத் தட்டை ஓரிடத் தில் வைத்துவிட்டு அவர்கள் ஓரிடத்தில் போய் நின்றுவிடுகிறார்கள். ஏன் போனோம் என்றாகிவிட்டது. பாலாஜி கோயிலுக்குப் போகும் இடம் ஏற்றமாகவும் செடிகள், மலர்கள் நிறைந்த இடமாகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது.

பாலாஜி கோயிலிலிருந்த கீழே இறங்கி வந்தோம். அங்கு ஒரு இடத்தில் 11 பேரும் தேநீர் அருந்தி விட்டு கிளம்பினோம். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேசினோம். அவர்கள் 40 வருட கான்ட்ராக்டில் அங்கு வேலை பார்ப்பதாகவும் ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 350 ரூபாயும் பெண்களுக்கு 250 ரூபாயும் சம்பளம் தருவதாகவும் வேலைக்குப் போகவில்லை என்றால் கூலி இல்லை என்றும் கூறினார்கள். ஆனாலும் எங்களுக்கு இதுபோதும் என்றார்கள் மகிழ்ச்சியாக. இந்தப் பகுதி தேயிலைத் தோட்டத்தை கல்கத்தாகாரர் ஒருவர் அரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்ததாகவும் கூறினார்கள். அவர்கள் அங்கேயே சிறு டீக்கடை வைத்து வேலை நேரம் போக வியாபாரம் செய்துகொள்கிறார்கள்.

அடுத்து கூழாங்கல் அருவி உள்ளது. கூழாங்கல் அருவியில் குளிக்க விடவில்லை என்று சகப் பயணிகள் தெரிவித்ததால் கூழாங்கல் அருவிக்குச் செல்லும் வழியில் சிறிய ஓடை உள்ளது. அதில் அனைவரும் ஆடைகளைக் களைந்து குளித்தோம். அங்கு எங்களைத் தவிர யாருமே இல்லை. எங்களுக்காகவே அந்த ஓடை ஓடியதாகவே உணர்ந்தோம். ஒரு மணிநேரம் அல்ல, இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

வால்பாறையைச் சுற்றிலும் மொத்தம் எட்டு அணைகள் உள்ளன. ஆழியாறு செக்போஸ்ட. இதன் அருகில்தான் உலகப் புகழ்பெற்ற வேதாத்திரி மகரிஷி அமைத்த அறிவுத்திருக்கோயில் பல ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. அமைதி தவழும் மலைச்சாரலில் அமைந்திருக்கும் இந்தத் தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருந்தால் போதும். மனம் துடைத்த கண்ணாடி யைப் போல மாறிவிடும்.

வால்பறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோலையாறு அணை. வால்பறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இங்கு அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கத்தின் உறுமலைப்போலவே கேட்கும். பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகத் தொடங்கப்பட்ட அணை நீராறு அணை. வால்பாறையி லிருந்து 15 கி.மீ. தொலைவில் அடத்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டத்தாகும். இங்கு எண்ணற்ற திரைப்படங்கள் படமாக்கப்பட் டுள்ளன. அவற்றில் முத்துராமன், ரவிச்சந்திரன் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படம் மிகவும் பிரபலம்.

வால்பாறை பகுதியைச் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். அங்கு தனியார் காட்டேஜ்கள் நிறைய உள்ளது. பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வனத்துறையின் ஓய்வு விடுதிகளும் உண்டு.

பாலாஜி கோயிலைத் தரிசித்துவிட்டு கடைத்தெருவுக்கு வந்தோம். விதவிதமான சாக்லெட், விதவிதமான அல்வாக்கள், வர்க்கிகள்,  டீத்தூள்கள், தேன் என்று மூன்று மணிநேரம் வாங்கினோம். அதற்குள் மணி நான்கைக் கடந்துவிட்டது. மறுபடியும் வண்டியில் மேலேறி அறைக்கு வந்தோம். சற்று இளைப்பாறினோம். உண்டுகளித்தோம் கணக்கு வழக்கைப் பார்த்து தங்கும்விடுதி வாடகை, இரண்டு நாள் உணவு உபசரிப்புக்குப் பணம் பட்டவாடா செய்தோம். அறைக் காப்பாளர், சமையல் காரம்மாக்கள், உணவு உபசரிப்பாளருக்கு விடைகூறி வெளியேறினோம். ஆனால் உடல்தான் மலையிலிருந்து இறங்கியதே தவிர மனம் (இயற்கை மணம்) அங்கேயேதான் இருந்தது. அரை மனதோடு வண்டியிலேறி அமர்ந்தோம்.

வால்பாறையிலிருந்து 26 கி.மீ. தொலைவில் சின்னக்கல்லார் பகுதி அமைந்திருக்கிறது. நாட்டி லேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவு காணப்படும் இடம் இது. சின்னக்கல்லார் அருவிக்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும் தொங்குபாலப் பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கும். மேலும் எப்போதுமே மேகங்களினாலும், பனியினாலும் மூடப்பட்டு காட்சியளிக்கும் சின்னக்கல்லா ருக்குப் பயணம் செய்வது மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.

வால்பாறை மலைப்பிரதேசம் பல்வேறு வியூ பாயிண்ட்டுகளைக் கொண்ட இடம். பொள்ளாச்சியி லிருந்து வால்பாறைக்குச் செல்லும் மலைப் பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள லோம்ஸ் வியூ பாயிண்ட் மிகவும் பிரபலமானது. அதேபோல வால்பாறையின் சங்கிலி சாலை அருகேயுள்ள நல்லமுடி பூஞ்சோலை, கடம்பாறை அணை, நம்பர் பாறை ஆகியவை வால்பாறையிலும் அதைச் சுற்றிலும் அமையப்பெற்றுள்ள மற்ற வியூ பாயிண்ட்டுகள். இந்த இடங்கள் அனைத்துமே மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் ஆகியவற்றைக் காண சிறந்த காட்சி அமைப்பைத் தருகின்றன.

வால்பாறை அடுத்து வாட்டர்பால்ஸ் என்கிற இடம் அதையும் கீழே இறங்கினால் பொள்ளாச்சி. தொடர்வண்டி நிலையத்துக்கு வந்ததும் நம்மை அனல் கவ்விக்கொண்டது. ஜனநெருக்கம், சத்தம் காதைக் கிழித்தது. பெட்ரோல் வாசம் மூக்கைத் துளைத்தது. சொக்க லோகத்திலிருந்து  நரக லோகத்துக்கு வந்ததைப்போல உணர்வு ஏற்பட்டதை மறுக்கமுடியாது.

கோயம்புத்தூர் விமான நிலையம், ஆழியார் அணையிலிருந்து 102 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆழியார் அணைவிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி ரயில் நிலையம். வால்பாறைக்குச் சென்றுவர மாநில அரசுப் பேருந்துகளும் உள்ளன.

குறைந்த செலவில் நண்பர்களோடும் குடும்பத்தோடும் சுற்றுலா போக ஏற்ற இடம் வால்பாறை. உங்கள் டைரியில் குறித்துக்கொள்ளுங்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...