பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா

33. பயணம் போனார்கள்..! பணயம் ஆனார்கள்..!

பாத்டப்பின் ஹாண்ட் ஷவரில் இருந்து தண்ணீர் ‘சள சள’ என்று வெளியேறிக் கொண்டிருக்க, அதனை உணராமல் கண்ணாடியைப் பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள் கனிஷ்கா. இவள் குளித்துக் கொண்டிருப்பது அபிக்கு எப்படித் தெரிய வந்தது..? பாத்ரூமில் கேமரா எதாவது வைத்திருக்கிறார்களா..? மருட்சியுடன் கண்களைச் சுற்றிலும் மேய விட்டாள். டெலிபோன் இணைப்பு எண்ணை வைத்து அபி இவள் பாத்ரூமில் இருப்பதை யூகித்திருக்கலாம்.

அப்பா சரவணப்பெருமாள், அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சொல்லித்தான் அனுப்பியிருநதார் என்றாலும், வந்த முதல் நாளே தங்களது சொரூபத்தைக் காட்டுவார்கள் என்று சற்றும் இவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கே உரிய துணிச்சல் சட்டென்று விழித்துக் கொண்டது.

அமீரையும், அபியையும் ஏமாற்றுவதற்கு இவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்ன..? அவர்கள் கைகளாலேயே அவர்கள் கண்களைக் குத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்..? அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களைச் சிக்க வைக்க வேண்டியதுதான்.

தேஜஸ்-சை எதற்குப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..? அபிக்குத் தேவையானது என்ன..?

யோசித்தபடி பாத்ரூமை விட்டு வெளியேறி, வெள்ளை லெக்கிங்ஸ், மேலே கருப்பு வண்ண டாப்ஸ் அணிந்து கொண்டாள். தனது கொண்டையை அவிழ்த்து, முடியைப் பரவ விட்டு ஹெட் பாண்ட் ஒன்றை பொருத்தியப்டி, தனது காட்டேஜை விட்டு, நீங்கி, தேஜஸ் தங்கியிருந்த காட்டேஜ் 333ஐ நோக்கி நடந்தாள்.

இடையே இருந்த மரப்பாலத்தில் அவள் நடக்கும்போது, அவளது ஹீல்ஸ் செருப்பு ‘டக் டக்’ என்று ஒலிக்க, அபி டீப்பாயின் மீது வைக்கப்பட்டிருந்த தனது கருப்புக்கண்ணாடியை அணிந்து கொண்டான்.

தனது அக்கா கனிஷ்கா வருவதை உணர்ந்து, சற்றே நம்பிக்கையுடன் அறை வாயிலைக் கவனித்தான் தேஜஸ். கனிஷ்கா கெட்டிக்காரி..! ஏதாவது செய்து அபியை ஏமாற்றி விடுவாள்.

தனது சுட்டு விரலைத் திருப்பி, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள், கனிஷ்கா.

“பார்பரி..! செம்ம perfume..! பெண்களோட அத்தனை perfume-ம் எனக்கு அத்துப்படி,” –மூக்கை உறிஞ்சியபடி கூறினான் அபி.

“எதற்கு என் பிரதரைக் கட்டிப்போட்டிருக்கே..? விருந்தினர்களை இப்படித்தான் உங்க மலேசியாவுல நடத்துவீங்களா..?” –கோபத்துடன் கேட்டாள், கனிஷ்கா.

“விருந்தினர்கள் விருந்தினர்களா இருக்கிற வரைக்கும் உபசரிப்பு உண்டு..! விருந்தினர் என்கிற பெயரோட வந்து, மலேசியாவுக்கு தகிடுதத்தங்களையும், திருட்டுத்தனங்களையும் செய்ய நினைச்சா, இப்படித்தான் உபசரிப்போம். எதுக்காக மயூரியைக் கொலை செய்யச் சொன்னீங்க..? நீங்க தேடற அந்த விலை மதிப்பில்லாத பொக்கிஷம் என்ன..?” –அபி கேட்டான்.

கனிஷ்கா எச்சரிக்கை அடைந்தாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றி எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனிடம் சொல்லக் கூடாது..!

“அது என் குடும்ப ரகசியம். இந்துக் கடவுளோட சிலை. அதை எடுத்து பூஜை செய்யப் போறோம். உனக்கும் அமீருக்கும் உப்யோகப்படறா மாதிரி ஒண்ணும் இல்லை..!” –கனிஷ்கா, கூறினாள்.

“உன் தம்பி அப்படிச் சொல்லலியே..! ஏதோ மூலிகைச் சிலை..! ரொம்பவும் அபூர்வமானது..! விலை மதிக்க முடியாததுன்னு சொன்னான். பழனி, பள்ளங்கி, இங்கேன்னு மூணு சிலை இருக்காம். அதைத் தேடத்தான் வந்திருக்கீங்கன்னு சொன்னான்.” -அபி சொல்ல, ஆத்திரத்துடன் தம்பியைப் பார்த்தாள், கனிஷ்கா..!

“Dumb Ass..!” –என்று அவனை நோக்கி இரைந்துவிட்டு, அபியைப் பார்த்தாள்..! “இப்ப உனக்கு என்ன வேணும்..?”

“உனக்காக மயூரியைக் கொலை செய்யறோம். அவகிட்டே இருக்கிற ரகசியத்தை வாங்கித் தர்றோம். நீ அதை வச்சு சிலையைக் கண்டுபிடிச்சு என்கிட்டே கொடுக்கணும். சிலையோட மதிப்பை நாங்க பார்த்து, விலை நிர்ணயம் செய்வோம். அந்தத விலையை உன்னால கொடுக்க முடியும்னா, அந்தச் சிலையை அதற்கு உரிய விலையைக் கொடுத்திட்டு நீயே எடுத்துக்க. சினிமா நடிகைதான். உன்னால கொடுக்க முடியும்..! ஓகே..! அமீருக்கு ஒரு அமௌன்ட், எனக்கு ஒரு அமௌன்ட். கொடுத்துட்டு, உன் சிலையை நீ எடுத்துக்கிட்டுப் போய் பூஜை செய்யலாம்.” –அபி தனது கையில் இருந்த ரிவால்வரால் முகவாயைச் சொரிந்து கொண்டான்.

‘உட்கார்ந்த இடத்துலேர்ந்து சம்பாதிக்கப் பார்க்கிறான்..! இவனைக் கவனிக்கிற விதத்தில் கவனித்து, முகவாயைச் சொரியும் அந்த ரிவால்வரை இன்னும் சற்று உயர்த்தி, அவனது வாய்க்குள் சொருகி, அவனே தன்னை சுட்டுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்..!

மனதினுள் நினைத்தபடி அவனையே வெறித்துப் பார்த்தாள்.

“ஓகே, டீல்..! மயூரியைக் கூட நீ கொல்ல வேண்டாம். அவளையும் நானே கவனிச்சுக்கறேன். சிலையைத் தேடணும்னா உதவிக்கு என் தம்பி வேணும். அவனை விட்டுடு..!” –கனிஷ்கா கேட்டாள்.

“அந்தக் கதையே வேண்டாம்..! என்னோட பணயக் கைதி உன் தம்பி..! நீ எல்லா வேலையையும் முடிச்சுட்டு வர்றவரைக்கும், அவன் என் கஸ்டடியில் தான் இருப்பான். உன்னோட புத்திசாலித்தனத்தை காட்ட நினைச்சே, தேஜஸ் அடுத்த நிமிஷமே பிணமா, இந்த ஏரியில மிதப்பான். அஃப்கோர்ஸ்… கைகளைக் கட்டி உயிரோடதான் தண்ணியில எறிவோம். மிச்ச வேலையை, பாலி கவனிச்சுக்கும். பாலி, இந்தச் செயற்கை ஏரியில் நாங்க வளர்கிற செல்ல முதலை..!” –அபி சொல்ல, தேஜஸ் நடுக்கத்துடன் கனிஷ்காவைப் பார்த்தான்.

“சரி..! அவனை ஒண்ணும் செய்யாதீங்க. என்னால் முடிஞ்ச வரைக்கும் சிலையைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்..!” –மனதினுள் எழுந்த பதற்றத்தை மறைத்துக்கொண்டு, கனிஷ்கா, அந்தக் காட்டேஜை விட்டு வெளியேறினாள்..!

‘முதலில் மயூரியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்..! அவளை எங்கே பிடிப்பது..? அவள் வழக்கமாகத் தங்கும் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலில் ஆரம்பித்தால் என்ன..?’

மில்லினியம் ஹோட்டல் சென்றவள், ரிசப்ஷனில் இருந்தவளிடம், மன்றாடத் தொடங்கினாள்.

”ப்ளீஸ்..! நான் ஏர்ஹோஸ்டஸ் மயூரியோட அக்கா..! பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்டு இருக்கேன். என்னோட பிரதரை கிட்னாப் செஞ்சுட்டாங்க. மயூரியாலதான் எங்களை காப்பாத்த முடியும். தயவுசெய்து, அவள் எங்கே இருக்கான்னு சொல்லுங்க..!” –பரிதாபத்துடன் அவள் சொல்ல, தற்செயலாக அங்கே வந்த விமானி எரிக் காதில் அவள் மன்றாடுவது விழுந்தது.

“நீங்க எப்போ வந்தீங்க..?” –போதினி மற்றும் சுபாகரைப் பார்த்துக் கேட்டாள், மயூரி.

“நேற்று நடுராத்திரியில் வந்தோம்..! நீங்க தூங்கப் போயிட்டதா அம்மா சொன்னாங்க..!” –போதினி கூறியதும், குமுதினியைத் திரும்பிப் பார்த்தாள், மயூரி.

‘தூங்கப் போகவில்லை..! தூங்க வைக்கப்பட்டேன்..!’ –மனதிற்குள் கூறிக்கொண்டாள் மயூரி..!

“சரி..! ராத்திரி தூங்காம பயணிச்சிருப்பீங்க. போய்த் தூங்குங்க..!” –கண்டிப்பான குரலில் கூறிய குகன்மணி, குமுதினியைப் பார்த்தான்.

“குமுதினி..! இன்னும் ஒரு வாரத்துல நானும், மயூரியும், குணாங் தகோன் மலைக்குப் போறோம்..! மயூரிக்கு மூன்றாவது சிலையைக் காட்டப் போறேன். பயணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்.” –குகன்மணி கூற, படியேறிக்கொண்டிருந்த போதினியும், சுபாகரும் நின்றனர்.

“அங்கிள்.! நாங்களும் வரோம்..! இங்கே சும்மாதானே இருக்கோம்..!” –போதினி கூற, குகன்மணி யோசித்துவிட்டுத் தலையசைத்தான்.

“சரி..! எல்லோருமே போவோம்..! என்னோட பிரைவேட் விமானத்துல குணாங் தகோன் போகலாம்.” –குகன்மணி கூற, போதினியும், சுபாகரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

அப்போது சரியாக, மயூரியின் செல் அடித்தது. ஜாடையாகக் காலர் ஐடியைப் பார்க்க, ‘எரிக்’ என்று பெயர் தெரிந்தது.

போனில் பேசுவதற்காக மயூரி தோட்டத்தை நோக்கி நடக்க, குகன்மணியின் குரல் அவளைத் தடுத்தது.

“எச்சரிக்கை மயூரி..! எந்தக் காரணத்தை முன்னிட்டும், நீ இந்த எஸ்டேட்டை விட்டு வெளியே போகக்கூடாது.” –கண்டிப்பான குரலில் கூறிவிட்டு நகர்ந்தான், குகன்மணி.

தோட்டத்திற்குள் நுழைந்த மயூரி, போனை எடுத்து, “ஹலோ எரிக்..!” என்றவுடன், எரிக் பேசினான்.

“மயூரி..! உன் சிஸ்டர் கனிஷ்கா இங்கே மில்லினியம் ஹோட்டல் ரிசப்ஷன்ல அழுதுட்டு நிற்கிறா..! அவள் பெரிய ஆபத்துல இருக்காளாம். அவ பிரதரை யாரோ கிட்னாப் செஞ்சுட்டாங்களாம்..! உன்னைப் பார்க்கணும்னு துடிக்கிறா..!” –எரிக் கூறியதும், மயூரியின் நெஞ்சு படபடத்தது.

“போனை அவகிட்டே கொடு எரிக்..!” –மயூரி சொல்ல, எரிக் சென்று போனை கனிஷ்காவிடம் நீட்டினான்.

“யுவர் சிஸ்டர் ஆன் தி லைன்..!” –என்றதும் போனைக் களிப்புடன் வாங்கினாள், கனிஷ்கா.

‘மயில்பட்சி வலையில் சிக்கிவிட்டது..!’

“கனிஷ்கா… என்னாச்சு..?” –மயூரி கேட்டதுதான் தாமதம்… கிளிசரின் இல்லாமலேயே கதறி அழத்தொடங்கினாள்.

“அபி, தேஜஸைக் கடத்திட்டுப் போயிட்டான். என்னையும் கொலை செய்யத் தேடிட்டு இருக்கான்..! எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. அவன் ஆட்கள் என்னை விரட்டிக்கிட்டே இருக்காங்க. என்னை நீதான் காப்பாத்தணும் மயூரி..!” –கதறினாள் கனிஷ்கா.

தன்னைக் கொல்வதற்குதானே, கனிஷ்காவின் குடும்பம் அமீர் மற்றும் அபி ஆகியோரின் உதவியை நாடியிருந்தது. அந்த நினைவை மறக்கச் செய்யும் அளவுக்கு கனிஷ்காவின் மாய்மாலம் இருந்தது.

“கனிஷ்கா..! நீ எரிக் ரூம்ல போய் இரு..! நான் வந்து உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்..!” –என்றாள் மயூரி..!

குகன்மணியின் எச்சரிக்கைக்கியை மீறி கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலுக்கு புறப்பட்டாள். எஸ்டேட்டைக் கடந்து சைனா டவுனில் மலைச் சாலைக்கு சென்றால் கேப் கிடைக்கும்..! அவசரமாக தனது அறைக்குச் சென்று ஹாண்ட்பாகை எடுத்து கொண்டு புறப்பட்டாள், மயூரி.

‘பாவம் கனிஷ்கா..! கோபக்காரி என்றாலும், இவளுக்கு அக்கா அல்லவா..! அவளை அழைத்துக் கொண்டு, வந்து குகன்மணி மாளிகையிலேயே அடைக்கலம் தருவோம்..!” –என்று நினைத்தபடி, கேப் ஒன்றை கைகாட்டி நிறுத்தினாள், மயூரி..!

–தொடரும்…

ganesh

2 Comments

  • விறுவிறுப்பு !

  • Wow.. Great going

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...