தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 6 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 6 | தனுஜா ஜெயராமன்


“தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் எண்ணங்களே நமது செயல்களே நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக வைப்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என யாரிடமோ மொபைலில் பேசி கொண்டே முகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான் ஹரிஷ்.

“வாடா..!” என ஹரிஷை வரவேற்று, “அம்மா காபி குடும்மா..” என உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான் முகேஷ்.

“வாப்பா ஹரிஷ்..! எப்படியிருக்க..?” என்றபடி காபியை நீட்டினாள்.

“நல்லாருக்கேன்ம்மா. இன்னைக்கு கடைசி எக்ஸாம்.  அதான் குரூப் ஸ்டெடி பண்ணலாம்னு…” என இழுத்தான்.

“தாராளமாப் பண்ணுங்களேன்..” என சமையறைக்குள் புகுந்தாள் தனலட்சுமி.

சிறிது நேரத்தில் வெளியே பேச்சுகுரல் கேட்க.. “யார்றா..?” என்ற ஹரிஷிடம்..

‘‘அவதாண்டா..! அந்த அம்ரிதா..! அம்மாட்ட ஏதாவது கேக்க வந்திருப்பா..” என்றான் அலட்சியமாக.

“டேய்..! அவளை எனக்கு அறிமுகபடுத்தி வையேண்டா…”

“ச்சீ… போடா.. நான் வரலை..”

“டேய்..! ப்ளீஸ் டா…” எனக் கெஞ்சியவனை

“நீ வேணா.. வெளியே போய் அவளைப் பாத்துக்கோ..” எனப் படிப்பில் மூழ்கினான்.

தண்ணீர் கேட்கும் சாக்கில் வெளியே வந்தவன்… அம்ரிதாவை பார்த்ததும் அசந்து நின்றான்.

“இவன் நம்ம முகேஷோட ப்ரண்ட் ஹரிஷ்” என தனலட்சுமி அறிமுகப்படுத்த..

ஹரிஷ், அம்ரிதாவை பார்த்துக் காதுவரை இளித்து வைத்தான்.

பதிலுக்கு சிரித்து, திரும்பவும் தனலட்சுமியுடன் பேச்சை தொடர்ந்தாள்.

இளித்தபடியே உள்ளே வந்தவன்… “செம்ம பிகர்டா..! என்னமா இருக்கா..?” என வழிந்தவனை..

“டேய் ஹரிஷ்..! வந்த வேலையைப் பாருடா..! நம்ம பொழப்பை பாக்கலாம்..” என பேச்சை மாற்றினான்.

வெளியே பேச்சுக்கிடையில், “ஆன்ட்டி..! முகேஷ் எங்க இப்பல்லாம் ஆளையே காணோமே… வீட்டுக்குக்கூட வரதில்லையே..” எனக் கவலையுடன் கேட்டாள் அம்ரிதா.

“அவன் எக்ஸாமுக்கு படிக்கிறான்மா. இன்னைக்கு தான் கடைசி எக்ஸாம். நாளையிலிருந்து தான் லீவு. அதான்  பிஸியாக இருக்கான்.”

“ஓஓஓ.. சரிங்க ஆன்ட்டி..!  சமையல் எல்லாம் முடிஞ்சிதா..?”

“மத்தியானத்துக்குச் சமைச்சிட்டேன்ம்மா. நைட் ஒரு கல்யாணத்துக்குப் போறோம் நானும் அவரும்.. வெளியூராச்சே.. வர நேரமாகும். முகேஷ்க்கு மட்டும் நைட்டுக்கு ஏதாவது செஞ்சி வைச்சிட்டுக் கிளம்பணும்.”

“ஏன்..ஆன்ட்டி… நான் செஞ்சி தர மாட்டனா..? நீங்க கிளம்புங்க, நான் பாத்துக்கறேன் முகேஷை.”

“உனக்கெதுக்கும்மா வீண் சிரமம்..?”

“என்னை வெளியாளாவே பாக்கறீங்க பாத்தீங்களா..?” எனப் போலியாகக் கோபித்துக் கொண்டாள்.

“சே… சே… அதெல்லாம் இல்லை. நீயே குழந்தையை வைச்சிகிட்டு சிரமப்படுற.. இதுல…”

“அதெல்லாம் ஒரு சிரமமும் கிடையாது. நான் பாத்துக்கறேன்..நீங்க கவலைப்படாம பொறுமையா வாங்க..” என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் தனலட்சுமியின் குடும்பத்தைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் சூட்சமம் இருப்பதை தனலட்சுமியும் புரிந்து கொள்ளவில்லை.

ருநாட்களுக்குப் பிறகு ஹரிஷைப் பார்க்கப் போயிருந்தான் முகேஷ். அவன் சொல்லிய விஷயம் உடலில் கம்பளிப் பூச்சி ஊறுவதைப் போல இருந்தது முகேஷிற்கு.



“என்னடா சொல்ற…? நிஜமாவாடா ஹரிஷ்..?”

“அட ஆமாடா… இவளே தான்.”

“நல்லா பாத்தியா..?”

“டேய்… எனக்கு இவளைத் தெரியாதா..? பைக்ல நெருக்கமாக  ஒருத்தனை கட்டிப் பிடிச்சிகிட்டுப் போனதை என் இரண்டு கண்ணால பாத்தேன்டா..”

“ஒருவேளை அவ அண்ணனா, தம்பியா இருக்குமோ..?”

“போடா லூசு..! அண்ணன் தம்பி கிட்ட யாராவது ஒரசிக்கிட்டே கெடப்பாங்களா..? அன்னைக்கு நம்ம மணிகூட இவளைப் பத்தி அரசல்புரசலா சொன்னான்.. நான் தான் நம்பல. இப்ப நேர்லயே பாத்துட்டேன்டா…சரியான ஜாலக்காரியா இருப்பா போல.”

முகேஷின் முகம் மாறியதை உணராமல் பேசிக்கொண்டே போனான் ஹரிஷ்..

“எதுக்கும் இவகிட்ட ஜாக்கிரதையா இருடா மச்சி..! இவ கேரக்டரே சரியில்லை.. எதுக்கும் இரண்டு அடி தள்ளியே இரு.”

“ம்…” என்றான் சுரத்தேயில்லாமல்.

ஹரிஷ் இப்படி ஒரு குண்டைப் போட்டு விட்டுக் கிளம்பிப் போயேவிட்டான்.

முகேஷின் மனதும் உடலும் தகித்தது. அவளை நினைத்தாலே அருவருப்பாக இருந்தது. நயவஞ்சகி . காலைச் சுற்றிய பாம்பு. இவளை எப்படி விலக்கப்போகிறோம் என்ற கவலை முகேஷைப் பீடித்துக் கொண்டது.

ன்று ….

நினைவிலிருந்து கலைந்தவனாக, திடுக்கிட்டு விழிக்கிறான் முகேஷ்

“வர்ஷினி..!” என்ற வார்த்தையில் நெருப்பில் குளித்தவன் போல் பதறினான்.

அந்த அம்ரிதா தான் இன்று போனில்… உடலெங்கும் உதறியது.

“நெருக்கமானவங்களுக்கு நான் வ..ர்..ஷி..னி” எனக் காதில் வந்து கிசுகிசுத்தது நினைவில் வந்தது. உடலெங்கும் பயரேகை ஓடியது. சட்டை முழுவதும் நனைந்து போனது.

தன்னைப் பீடித்த சனி தொலைந்தது என்று நிம்மதியாக இருந்தவனை… மறுபடியும் ஏழரைச் சனி பீடித்து விடுமோ? என அஞ்சி நடுங்கியபடி காரைச் செலுத்தினான்.

வீட்டிற்குள் நுழைந்தவனை… “ஏங்க ஒரு மாதிரியா இருக்கீங்க..?” என்று கவலையுடன் கேட்டாள் சுதா.

“லேசா.. தலைவலிம்மா…”

“சூடாக் காபி தரட்டா.. சாரிடான் போடுறீங்களா..?” எனப் பதறியவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘எவ்வளவு பாசமாக இருக்கிறாள்? தான் அதற்குத் தகுதியானவன் தானா..?’ என்று மனது உறுத்தியதும் தலைகுனிந்து கொண்டான். “வேணாம் சுதா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாடும்..” என்று கட்டிலில் சரிந்தான்.

நல்லவேளை அப்பாவும் அம்மாவும் தூங்க போய் விட்டார்கள்.. இல்லையெனில் “ஏண்டா டல்லாயிருக்கே ..உடம்பு சரியில்லையா..?” எனத் துளைத்து எடுத்து விடுவார்கள்.

அதற்குள் சுதா… சூடான காபியுடன் மாத்திரையை எடுத்து வந்து நீட்ட.. குடித்ததும் சற்று தேவலாம் போல இருந்தது.

சுதாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்… எந்த சலனமும் இல்லாமல் துணிகளை மடித்து கொண்டிருந்தாள். தங்க விக்ரகம் போன்ற குணவதியான இவளை இழந்து விடுவோமோ என்ற கலக்கம் நெஞ்சில் பரவியது. உண்மை தெரியவரும் பட்சத்தில் இவர்கள் முகத்திலெல்லாம் எப்படி விழிக்கப் போகிறேன்..என யோசித்தவனுக்கு இரவெல்லாம் உறக்கமே வரவில்லை.

உப்பைத் தின்றவன்…தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்… விதியை வெல்ல யாராலும் முடியாது. வரப்போகும் விபரீதத்தை உணராமல் சுதா மகிழ்ச்சியாக குழந்தையுடன் விளையாடி கொண்டிருக்கிறாள். விதி அவள் வாழ்க்கையில் விளையாடப் போவதை சற்றுமே உணராமல்.

–தொடரும்…

ganesh

1 Comment

  • Intersting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...