அஷ்ட நாகன் – 14| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 14| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி அம்மன் கோயில்” நாகர்களுக்கான அதி சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.இந்த கோயில் எவ்வளவு பழமையானது என்று யாராலும் வரையறுத்து சரியாக கூற முடியவில்லை.ஆனால், இக்கோயில் நாகர்களுக்கான மிக முக்கியமான கோயிலாக கருதி வழிபட்டு வரப்படுகிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இக்கோயிலை பாதாள லோகத்தில் உள்ள நாகர்களே கட்டியதாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்தால், நாகதோஷம் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிலைத்து நீடிக்குமென உறுதியான நம்பிக்கை உள்ளது.பலர் தங்களுக்குள்ள தோல் நோய்கள் நீங்கவும் இக்கோயிலுக்கு வருகை புரிகின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் இக்கோயிலுக்கு சென்று நாகர்களின் பரிபூரண அருளாசிகளை பெற்று வாருங்கள்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

விடியற்காலை நேரம் !

முருகேசன்,அரவிந்தன், நந்தன் மற்றும் யோகினி என நால்வரும் ஆகாய கங்கை அருவிக்கு மேல் இருக்கும் ஏலக்காய் சித்தரின் குடிசை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

விடியற் காலை நேரம் என்பதால் குளிர் கொஞ்சம் குறைந்திருந்தது.கதிரவன் கொல்லிமலையை எட்டி பார்ப்பதற்குள்,மலை மேல் ஏறிவிட்டால் நன்றாக இருக்கும் என்று முருகேசன் அவர்களுக்கு யோசனை கூறியிருந்தான்.அதன் காரணமாக இப்போது அவர்கள் நால்வரும் வேகவேகமாக ஏலக்காய் சித்தரை பார்க்கும் ஆவலோடு அவரின் குடிசை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

“முருகேசன்,நம்மளால நாக சாஸ்திர ஏடுகளை பார்க்க முடியுமா?” என்று யோகினி கேட்டாள்.

யோகினி அப்படி கேட்கவும் அவளை ஏற இறங்க பார்த்து விட்டு, “பார்க்கலாம்..பார்க்கலாம்” என்று பொத்தாம் பொதுவாக கூறினான்.

“இந்த காடு ரொம்ப அழகாக இருக்கு.பேசாம இங்கையே தங்கிடலாம்ணு தோணுது” என்ற இயற்கையை ரசித்துக் கொண்டே யோகினி கூறினாள்.

“தாயி…இது அழகான காடு மட்டுமில்ல ! ரொம்ப அமானுஷ்யமும் மர்மமும் நிறைஞ்ச காடு.”

“இந்த காட்டுல மர்மம் இருக்கோ?இல்லையோ? ஆனால்,உங்க பேச்சுத் நிறைய மர்மம் இருக்கு” என்று இயல்பாக யோகினி பதிலளித்தாள்.

ஆங்காங்கே, பல வண்ண பட்சிகள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தன.

சில குரங்குகளும் கண்ணில் பட்டன.

சிறிது நேரத்திலே அவர்கள் ஏலக்காய் சித்தரின் குடிசையை அடைந்தனர்.

ஏலக்காய் சித்தர் தன்னை மறந்த நிலையில் வேப்பங் குச்சியை கொண்டு பல் துலக்கிக் கொண்டிருந்தார்.

அவரை பார்க்கவும் தன் இரு கரங்களை கூப்பி “வணக்கம் சாமி !” என்று கூறினான்.

ஆனால்,அவரோ காதில் எதுவும் விழாதவராக ஒரு எந்திர மனிதனைப் போல உலா வந்து கொண்டிருந்தார்.

“சாமீ…” என்று முருகேசன் சத்தமாக அழைக்கவும், ஏலக்காய் சித்தர் அவனை ஏறிட்டு பார்த்தார்.

“வாலே முருகேசா ! நான் ‘சஞ்சார சமாதி’யில இருந்தேன்.அதேன் நீ கூப்டது‌ என் காதுக்கு கேக்காம போச்சு.என்னலே சங்கதி?”

ஏலக்காய் சித்தர் அவ்வப் போது சஞ்சார சமாதியில் கொல்லிமலை காட்டை வலம் வருவார்.சஞ்சார சமாதியில் இருக்கும் அவர் நடந்துக் கொண்டே இருப்பார்;கண்கள் பாரா;காதுகள் கேளா;மூச்சும் மிக லேசாக மட்டுமே இயங்கும்.இது இயங்கிக் கொண்ட சமாதியில் இருக்கும் அபூர்வ நிலை.எல்லாம் கடந்த நிலையில் சித்தி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு இயங்க முடியும்.

சில நூறு வருடங்களுக்கு முன்பு ஸ்தூல தேகத்துடன் இருந்த ‘நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்’ இந்த சஞ்சார சமாதியில் தான் எப்போதும் திளைத்திருப்பார்.

முருகேசன், ஏலக்காய் சித்தரின் காலில் விழுந்து வணங்கினான்.அவரும் அவனை மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்தார்.

“எலேய் முருகேசா ! நல்ல இருலே.இவுக தான் பட்டணத்து காரகளா?” என்றார் ஏலக்காய் சித்தர்.

“ஆமா சாமி.”

“வணக்கம் சாமி.எங்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறிவிட்டு அரவிந்தனும் யோகினியும், ஏலக்காய் சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.

“நீங்க,அந்த சிவன் புண்ணியத்துல நல்லா இருப்பீக” என்று வாழ்த்திவிட்டு அவரும் அவர்களை அன்போடு ஆசீர்வதித்தார்.

நந்தன் மட்டும் தன் கைகளைக் கட்டிக் கொண்டு மிடுக்காக ஏலக்காய் சித்தரை பார்த்தான்.

முருகேசன் மூவரையும், ஏலக்காய் சித்தரிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

நந்தன் இயந்திரத்தனமாக ஏலக்காய் சித்தருக்கு தன் இரு கரங்களை கூப்பி வணக்கம் கூறினான்.

அவரும் நந்தனைப் பார்த்து, அர்த்த புஸ்டியோடு ஒரு மர்ம புன்னகை புரிந்தார்.

“வேப்பங் குச்சில பல்லு துலக்குறிங்களே ! ஏன் உங்கக்கிட்ட டூத் பிரஷ் இல்லையா? என்று சிரிக்காமல் நந்தன் ஏலக்காய் சித்தரை வம்புக்கு இழுத்தான்.

“நல்லா கேட்டிக.வாரம் ஒரு நாளோ இல்லாட்டி ரெண்டு நாளா வேப்பங்குச்சில பல்லு துலக்குனாக்க எந்த நோயும் உடம்பை தாக்காது.வேம்பு ஒரு அதிசயமான மரம்.வேப்ப மரத்தோட வேர்,பூ மரப்பட்டை,இலைக ‘சுரம்’ வராமல் தடுக்கும்‌.அதோட விதை எண்ணெய் சிரசுல உள்ள பேன்களை ஒழிக்கும்.இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.”

“இதுவெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது?” என்று நந்தன் மீண்டும் தன் கேள்வி கணைகளை தொடுத்தான்‌.

நந்தன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான்? என்று அரவிந்தனும் யோகினியும் குழப்பம் அடைந்தனர்‌.

முருகேசனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான்.

“இதுவெல்லாம் நானாக சொல்லல ! எல்லாம் ‘கருவூரார் சித்தர்’ ஏட்டுல எழுதி வச்சிருக்கார். சொல்றேன் கேளுங்க. கார்த்திகை மாதம் மிருகசிரீடம் அல்லது பூச நட்சத்திர நாள் முதல் 27 நாட்கள் வேம்பின் கொழுந்தை தின்று வந்தால், அவரை பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது.ஒரு மாதம் தின்று வந்தால் குஷ்ட நோய்கள் பறந்தோடும். வேப்பங் கொழுந்தை உலர்த்திப் பொடி செய்து வெருகடி அளவு தின்று வந்தால் நரை,திரை,மூப்பு அண்டாது.முன்னூறு வயது வரை வாழலாம்” என்று ஒரு போடு போட்டார்.

நாம் ‘நாக சாஸ்திரம்’ பற்றிய செய்திகளை அறிய வந்தால், விஷயம் வேறு எங்கோ திசை மாறி செல்கிறதே என்று யோகினி கவலை அடைந்தாள்‌.

“நீங்க சொல்றதை என்னால நம்ப முடியல.எப்படி ஒருத்தரு ஒரு இலையை மட்டும் சாப்டுக்கிட்டு 300 வருஷம் வாழ முடியும்?இது இம்பாசிபிள். இதுவெல்லாம் சாத்தியமே இல்ல” என்று நந்தன்.

“நான் உங்களை நம்ப சொல்லல.ஏடுகள்ல இருந்த தகவலை தான் சொன்னான்.ஒரு நிமிஷம்…” என்று கூறிவிட்டு ஏலக்காய் சித்தர், தன் குடிசைக்கு அருகிலிருந்த ஒரு முற்றிய மாம்பழ விதையை கையில் எடுத்துக் கொண்டார்.

நன்கு முற்றிய நிலையில் இருந்த அந்த மாம்பழத்தின் விதையை ஏதோ சில மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்ட, தன் கைகளால் ஒரு சின்ன குழி பறித்து அதில் அந்த மா விதை வைத்து மூடினார்.

சுமார் அரை மணி நேரத்தில் அவர் மண்ணுக்குள் விதைத்த அந்த ‘மா’ விதை அவர்கள் கண் முன்னே ஒரு ‘மா’ மரக்கன்றாக வளர்ந்து அவர்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சியை அளித்தது.

நந்தனுக்கு எல்லாம் புரியாத புதிராக இருந்தது.

“ஹவ் இஸ் இட் பாசிபிள்?” என்று யோகினி மிகுந்த ஆச்சர்யத்தோடு கேட்டாள்.

வானை நோக்கி கைகாட்டி,”காட் கிரேஸ்” என்றார் ஏலக்காய் சித்தர்.

அவரின் ஆங்கில புலமையையும்,தன்னடக்கத்தையும் மற்றும் அவர் செய்த அதிசயங்களையும் பார்த்து முருகேசன் உட்பட நால்வரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ‘நாக சாஸ்திர ஏடுகளை’ பாதுகாத்துக் கொண்டிருந்த ‘ராஜ நாகம்’ வேக வேகமாக மூங்கில் பரணிலிருந்து இறங்கி அவர்கள் முன் நான்கு அடி உயரத்திற்கு படமெடுத்த நிலையில் ‘புஸ்…புஸ்’ மூச்சு விட்டுக் கொண்டே சீற்றத்துடன் காணப்பட்டது.

ஏலக்காய் சித்தரைத் தவிர மற்ற அனைவரும் அச்சத்தில் உறைந்து காணப்பட்டனர்.

– தொடரும்…

< பதிமூன்றாம் பாகம் | பதினைந்தாம் பாகம் >

கமலகண்ணன்

2 Comments

  • அருமை. தொடரட்டும்.

  • தினமும் தேடுகிறேன் அஷ்ட நாகன் அடுத்த பகுதியை! விரைந்து வெளியிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...