பேய் ரெஸ்டாரெண்ட் – 19 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 19 | முகில் தினகரன்

மரத்தின் பின்னே ஒளிந்திருந்த திருமுருகன் சுறுசுறுப்பானான். அவன் எச்சரிக்கை அணுக்கள் ஒவர் டைம் வேலை செய்தன.

“என்னது…வர்ற உருவம் ரொம்பக் குள்ளமா இருக்கு?…”

அந்த உருவம் அருகில் வர…வர…திருமுருகன் தன் பார்வையைக் கூராக்கிப் பார்த்தான். “அட…இவன் சிவா கூட ஈவெண்ட் பண்ற குள்ள குணாவாச்சே?…இவன் எதுக்கு இந்த நேரத்துல இங்க உலாத்தறான்?”

அப்போதுதான் திருமுருகனின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “ஒரு வேளை இவன்தான் துர்ஆவி தங்கியிருக்கும் விடுதியோ?”

அவன் ஒளிந்திருக்கும் மரத்தை அந்த குள்ள குணா கடந்து செல்லும் போது அவன் முகத்தைத் தெளிவாகப் பார்த்த முருகன் நடுநடுங்கிப் போனான். “அடப்பாவமே…இதென்ன….இவன் வாயோரத்தில் இரண்டு பக்கமும் மேல் நோக்கி வளைந்த பெரிய பல் முளைத்திருக்கு?…சாயந்திரம் இவனை ரெஸ்டாரெண்டில் பார்த்த போது இப்படி இல்லையே?”

அடி மேல் அடி வைத்து அந்த உருவத்தைப் பின் தொடர்ந்தான் திருமுருகன். “என்ன ஆனாலும் சரி…இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்காம போகக் கூடாது”

குள்ள உருவம் நடந்து கொண்டேயிருக்க,

“என்னாச்சு?…எங்க போறான் இந்த குள்ள குணா?”

சில நிமிட நடைக்குப் பின், அந்த உருவம் இடப் புறம் திரும்ப, முருகனும் திரும்பினான்.

“மயானம்”

சிதிலமாகிப் போயிருந்த மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்கள் பாதி அழிந்த நிலையில் தெரிய, “அடக்கருமமே!…இதென்ன சுடுகாட்டுக்குப் போறான் இவன்?…ஆஹா…ஏதோ பெரிசா வில்லங்கம் ஆகும் போலிருக்கே?” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பூனை போல் நிதானமாய் காலடி வைத்து நடந்தான் முருகன்.

மயானத்தின் மத்தியில் அமர்ந்து, பக்கத்திக் கிடந்த மண்டையோட்டை எடுத்து அதனுள் தேங்கியிருந்த மழை நீரை அண்ணாந்து பருகினான் குள்ள குணா.

“த்தூ” திரும்பி தன் முதுகிற்குப் பின்னால் துப்பினான் முருகன்.

கைக்குக் கிடைத்த ஒரு கால் எலும்பை எடுத்து அதை தன் நெற்றியின் மேல் வைத்து, “கட…கட”வென ஏதோ ஒரு மந்திரத்தை அவன் உரத்த குரலில் சொல்ல,

அந்த நிமிடம் வரை பார்வைக்கு மறைந்திருந்த நான்கு துர்ஆவிகள் திடுமெனப் பிரசன்னமாகி,

“உத்ரவ்!…உத்ரவ்” என்று கூவ,

“அடிமை ஆவிகளே…உங்களுக்கு ஒரு பெரிய வேலை வைத்திருக்கிறேன்!…”குள்ள குணா உரத்த குரலில் சொன்னான்.

“சத்தியமா இது குள்ள குணாவோட குரலே இல்லை!…அப்படின்னா….இவனுக்குள்ளார வேறொரு ஆன்மா இருக்கு…அதோட குரல்தான் அது” ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான் திருமுருகன்.

குள்ள குணா ஆணையிட்டான். “அடிமை ஆவிகளே!…இங்கிருந்து அரைக் காத தூரத்தில்….ஒரு சாப்பிடும் விடுதி இருக்கு!…அதுக்குப் பின்னால் வேலையாட்கள் தங்கும் சத்திரமும் இருக்கு!…அங்க போய் நாலு பேர் குரல்வளையைக் கடித்துக் குதறி…தலையைக் கொய்து எனக்குக் கொண்டு வந்து தாங்க”

“உத்ரவ்….உத்ரவ்” ஆவிகள் ஹாஸ்டல் இருக்கும் திசை நோக்கித் திரும்பி, மெல்ல நகர ஆரம்பிக்க,

சப்த நாடியும் ஒடுங்கிப் போனது திருமுருகனுக்கு. “இவன் சாப்பிடும் விடுதி!ன்னு சொன்னது…நம்ம ரெஸ்டாரெண்டைத்தான்!…சத்திரம்!னு சொன்னது நம்ம பணியாட்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலைத்தான்!…அப்படின்னா…நம்ம ஆளுகளைக் கொல்லத்தான் இவன் அந்த ஆவிகளை அனுப்பறான்…விடக் கூடாது!…உடனே அந்த ஆவிகளைத் தடுத்தாகணும்” அவனையும் மீறி அவனுக்குள் ஒரு ஆவேசம் பிரவாகமெடுக்க, மறைவிலிருந்து வெளியே வந்தான்.
அந்த ஆவிகளைப் பின் தொடர்ந்து சென்றான்.

சிறிது தூரம் சென்றதும், தன் கையிலிருந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்த நீரை உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு, அந்த ஆவிகளை நெருங்கி, பின் புறமிருந்து தெளித்தான்.

தீப்பிடித்தாற் போல் “உய்ய்ய்ய்ங்ங்ங்……”என்று அலறியபடி அந்த ஆவிகள் நான்கும் அங்கிருந்த கிணற்றினுள் அடைக்கலம் புக,

“அப்படியே உள்ளாரவே இருங்க…உங்க தலைவனையும் பின்னாடியே அனுப்பி வைக்கறேன்” சொல்லியபடி மீண்டும் மயானத்திற்கு வந்து, கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் இருந்த குள்ள குணா மீது அம்மன் தீர்த்தத்தை மொத்தமாய்க் கொட்டினான்.

யாரோ தீக்கங்குகளைத் தன் மீது கொட்டியது போல் கத்திக் கொண்டு எழுந்தான் குணா. அந்த விநாடியில் அவனுக்குள்ளிருந்து “உய்ய்ய்ய்ய்ங்ங்ங்…”என்ற ஓசையோரு அந்த துர்ஆவி வெளியேறி, தன் அடிமைகள் அடைக்கலம் புகுந்துள்ள அதே கிணற்றுக்குள் நுழைந்து விட,

தலையைச் சிலுப்பிக் கொண்டு சுயநினைவிற்கு வந்த குள்ள குணா, எதிரே நிற்கும் திருமுருகனைப் பார்த்து, “சார்…இது எந்த இடம்?…நீங்க எப்படி இங்கே?” சுற்றும்முற்றும் மிரட்சிப் பார்வை பார்த்தபடியே கேட்டான்.

“அதையெல்லாம் நாளைக்குக் காலைல விளக்கமா சொல்றேன்!…அதுக்கு முன்னாடி அந்தக் கிணற்றை உடனடியா மூடணும்!…என் கூட வந்து கொஞ்சம் உதவி செய்!” சொல்லியவாறே கிணற்றை நோக்கி ஓடினான் திருமுருகன்.

ஆறடி விட்டத்தில் வட்ட வடிவிலிருந்த அந்தக்கால சேந்து கிணறு அது.

அதனருகிலேயே அதை மூடக் கூடிய அளவில் ஒரு சதுரக் கல்லும் கிடந்தது.

“ரொம்ப நல்லதாப் போச்சு” என்றெண்ணிக் கொண்ட திருமுருகன், குள்ள குணா உதவியுடன் அந்தக் கல்லை சிரமப்பட்டுத் தூக்கி அந்தக் கிணற்றை மூடினான்.

சில நிமிடங்கள் கிணற்றினுள்ளிருந்து “உய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்”… “உய்ய்ய்ய்ய்ங்ங்ங்” என்ற சத்தம் உச்சஸ்தாயில் ஒலித்து விட்டு பின்னர் அதுவாகவே அடங்கியது.

“அப்பாடா” என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு சொன்ன திருமுருகனின் காதருகில் சங்கீதா குரல் ஒலித்தது. “கச்சிதமாக…வெற்றிகரமாக….காரியத்தை முடித்து விட்டாய்…”

— — — — — — –

மறுநாள் காலை, வழக்கத்தை விட சற்று முன்னதாகவே ரெஸ்டாரெண்டுக்கு வந்து விட்ட ஆனந்தராஜும், விஜயசந்தரும் முதல் வேலையாக திருமுருகனை அழைத்துப் பேசினர்.

முந்தைய தினம் இரவில் நடந்தவைகளை அப்படியே விலாவாரியாக நண்பர்களிடம் சொன்னான் திருமுருகன்.

களேபர முகத்துடன் கேட்டு முடித்த ஆனந்தராஜ், “டேய்…முருகா!…சத்தியமா உன்னால மட்டும்தாண்டா…இதை செய்ய முடியும்!…நானெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது!…” என்றான்.

“அது செரி…அந்த குள்ள குணா கூட காலைல பேசினியா?” விஜயசந்தர் கேட்க,

“இன்னும் இல்லை…வரச் சொல்லியிருக்கேன்!…பேசிடலாம்” என்றான் திருமுருகன்.

“என்ன சொல்லப் போறே?” ஆனந்தராஜ் கேட்டான்.

“என்ன சொல்றது?…இந்த மாதிரி அவனுக்குள்ளார ஒரு துர்ஆவி புகுந்துக்கிட்டு….அதுதான் எல்லா வேலைகளையும் செஞ்சிருக்கு!”ன்னு சொல்ல வேண்டியதுதான்”

“அப்ப அந்த செக்யூரிட்டி கொலை?” விஜயசந்தர் கேட்டான்.

“அதுவும் அந்த துர்ஆவியோட கைங்கர்யம்தான்!…குள்ள குணாவை குற்றம் சொல்ல முடியாது” என்றான் திருமுருகன்.

“நம்ம நல்ல நேரம்…அந்த செக்யூரிட்டி சைடிலிருந்து யாரும் போலீஸை பிரஷ்ஷர் குடுக்கலை!…” ஆனந்தராஜ் சொன்னான்.

அப்போது அறைக்கு வெளியே அந்த குள்ள குணாவின் உருவம் தெரிய, “முருகா…அந்த குணா வந்திட்டான் போலிருக்கு…அவனை கான்ஃப்ரென்ஸ் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் பேசு…” என்றான் ஆனந்தராஜ்.

“ஓ.கே.டா” எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்த திருமுருகன், கதவருகே நின்று கொண்டிருந்த குள்ள குணாவைக் கைகாட்டி அழைத்துக் கொண்டு கான்ஃப்ரென்ஸ் ரூமை நோக்கி நடந்தான்.

அங்கே, குணாவுடன் பேசும் போது அவனை எந்த விதத்திலும் பயமுறுத்தி விடாதபடி நாசூக்காய், அவனுக்குள் துர்ஆவி புகுந்த விஷயத்தையும், அதை தான் விரட்டியடித்த கதையையும் சொல்லி முடித்தான்.

சில நிமிடங்கள் மேலே பார்த்து யோசித்த குணா, “சார்…இத்தனை நாளு… என் உடம்பு ரொம்ப வெயிட்டா இருந்திச்சு சார்!…சாதாரணமா என்னோட வெயிட் ஐம்பது கிலோ…ஆனா கடந்த மூணு மாசமா என் வெயிட் நூறு கிலோ!…எனக்கு காரணமே புரியாமலிருந்தது.!…இப்ப நீங்க சொன்னதுக்குப் பின்னாடிதான் எல்லாம் புரியுது!…எனக்குள்ளார இன்னொரு ஆன்மா இருந்ததினால்தான் என் உடம்பு டபிள் வெயிட் காட்டியிருக்கு” என்றான்.

“அது செரி குணா…உன் வயசு என்ன?” திருமுருகன் தோழமையோடு கேட்டான்.

“முப்பது சார்”

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

திருமுருகன் அப்படிக் கேட்டதும், “ஹா…ஹா…ஹா…”வென்று வாய் விட்டுச் சிரித்த குணா, “சார்…இந்தக் காலத்துல ஆறடி இருக்கற அமிதாப் பச்சன்களுக்கே பொண்ணு கிடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு…வெறும் மூணடியே இருக்கற மூஞ்சுறு நான் எனக்கு யார் சார் பொண்ணு குடுப்பாங்க?…அப்படியே பெத்தவங்க முன் வந்தாலும்…எந்தப் பெண் சார் இந்தக் குள்ளப்பாண்டியைக் கட்டிக்க முன் வருவா?…அதான் முயற்சி பண்ணிப் பார்த்திட்டு…நிறைய மூக்குடைஞ்சிட்டு…அந்த நெனப்பையே மறந்திட்டேன்” என்றான். சொல்லும் போது அவன் வார்த்தைகளில் அவனுடைய மன வலி தெரிந்தது.

“சரி…உயரமான பொண்ணுகதானே உன்னைய வேண்டாம்!னு சொல்லும்க?… உன்னைய மாதிரியே ஒரு குள்ளப் பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே?” என்று திருமுருகன் சொல்ல,

“அதுல எனக்கு இஷ்டமில்லை சார்”

“அடேங்கப்பா…அய்யாவுக்கு உயரமான பொண்ணுதான் வேணுமோ?” தமாஷாய்ச் சொன்னான் முருகன்.

“ஆமாம் சார்!..ஆனா அதுக்கு ஒரு காரணமும் இருக்கு சார்”
“என்ன காரணம்?”

“சார்..நான் குள்ளம்…எனக்கு வரப் போற மனைவியும் குள்ளமாயிருந்தா….எங்களுக்குப் பொறக்கப் போற மகனோ…மகளோ…நிச்சயம் குள்ளமாய்த்தான் இருப்பாங்க!”

“ம்…உண்மை!…” என்றான் திருமுருகன்.

“அதே மாதிரி நாளைக்கு அந்த மகனோ…மகளோ…அதே மாதிரி குள்ள ஜோடியைக் கட்டிக்கிட்டா…அதுகளுக்குப் பொறக்கறது இன்னும் குள்லமாய்த்தான் இருக்கும்!…இப்படி என் வருங்கால வம்சமே குள்ள வம்சமாகி…கடைசில…விரல் அளவுலதான் என் சந்ததிக திரியும்”

“சரி…அதுக்காக…?”

“ஊர் உலகத்தோட கேலியையும்…கிண்டலையும் கண்டுக்காம நான் என்னை விட உயரமான பொண்ணைக் கட்டிக்கிட்டா..எங்களுக்குப் பொறக்கப் போற குழந்தை ஒரு வேளை அவளை மாதிரி உயரமா பொறக்கலாம் அல்லவா?…அதற்குப் பின்னால் வர்ற என் சந்ததிகளும் அதே மாதிரி உயரமாய் இருக்கலாமல்லவா?” நம்பிக்கையோடு சொன்னவன் முதுகில் தட்டிக் கொடுத்த திருமுருகன்,

“குணா…நீ கவலைப் படாதே…எப்பாடு பட்டாவது…நான் உனக்கு உயரமான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்று உறுதிபடச் சொல்ல,

“க்கும்…எல்லோரும் முயற்சி பண்ணித் தோத்தாச்சு…நீங்க ஒருத்தர்தான் பாக்கி இருந்தீங்க!…இப்ப நீங்களும் அந்த அஸைன்மெண்டைக் கையில் எடுத்துட்டீங்க!.…ஓ.கே…ஓ.கே…உங்க ராசில…எனக்கு நல்லது நடந்தா சரி” என்றான் குள்ள குணா.

இரவு.

ரெஸ்டாரெண்டின் இரண்டாவது தளத்தில், தன்னுடைய படுக்கையறையில் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான் திருமுருகன். நேற்றிரவு முழுமையாய்த் தூங்காத காரணத்தால் அசதி அவனை மொத்தமாய்ச் சாய்த்து விட்டிருந்தது.

கனவுலகம் அவனுக்காக கதவைத் திறந்து வைத்திருக்க,

அவன் கனவில், குள்ள குணாவும் இன்னொரு உயரமான பெண்ணும் மணக்கோலத்தில் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவன் காதோரம், “கண்ணாளா?…என் கண்ணாளா!…கண் திறந்து என்னைப் பாருமய்யா” என்ற சங்கீதாவின் குரல் கேட்க,

கனவு கலைந்து எழுந்தான்.

“என்னப்பா…நல்ல தூக்கமா?”சங்கீதாவின் ஆவி கேட்டது.

“பின்னே?…நேத்திக்கு ஃபுல் நைட் தூங்கலையே?” என்றான் திருமுருகன் கொட்டாவி விட்டபடியே.

“அதுக்காக…என்னை மறந்து இப்படித்தான் தூங்குவியா?….நானும் ராத்திரி பத்து மணியிலிருந்து உன் தலைமாட்டிலேயே உன் கண் விழிப்பிற்காக ஏங்கி உட்கார்ந்திட்டிருக்கேன்!” என்றது ஆவி.

“அடடே…அப்ப எழுப்பி விட்டிருக்கலாமே?” படுக்கையில் எழுந்து அமர்ந்தான்.

“சரி…அசதியா தூங்கறவரை ஏன் எழுப்பணும்?னு விட்டுட்டேன்”

“கல்யாணக் கனவு சங்கீதா” என்று திருமுருகன் சொன்னதும், “கனவிலாவது நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகட்டும்” என்று சோகமாய்ச் சொன்னது சங்கீதாவின் ஆவி.

“கனவுல நடந்த கல்யாணம் நமக்கல்ல….அந்த குள்ள குணாவுக்கு” என்றான் முருகன்.

“ஓ…அவனைப் பார்த்த பொடியனாட்டம் இருக்கான் அவனுக்குக் கல்யாணமா?” சொல்லியவாறே சங்கீதாவின் ஆவி சிரிக்க,

“ஏய்…அவனுக்கு முப்பது வயசு!…கல்யாணத்துக்குப் பொண்ணுப் பார்த்துப் பார்த்து எதுவுமே சக்சஸ் ஆகாததினால….வெறுத்துப் போய்…கல்யாணமே வேண்டாம்!னு வாழ்ந்திட்டிருக்கான்”

“அடப்பாவமே”

“அவனுக்கு நான் ஒரு வாக்குக் குடுத்திட்டு வந்திருக்கேன்!… “ஒரு நல்ல உயரமான பொண்ணா பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறேன்”னு…எந்த தைரியத்துல குடுத்தேன்னு எனக்கே தெரியலை!”

“ம்ம்ம்…நான் ஒரு வழி சொல்லட்டுமா?” சங்கீதாவின் ஆவி சொல்ல,

“ம்…சொல்லு”

“அன்னிக்கு அந்த துர்ஆவியை விரட்ட ஒரு பெரியவரோட ஆவி வந்திட்டுப் போச்சல்ல?….”

“ஆமாம்…பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருந்தாரே?”

“அவரோட உண்மையான பேரு லட்சுமி நரசிம்மன்!…உயிரோட இருந்த காலத்துல நல்ல கைராசியான கல்யாண புரோக்கர்!…அவர்கிட்டே சொன்னா இந்த குணாவுக்கு நல்ல வரன் பார்த்துத் தருவார்” என்று சங்கீதாவின் ஆவி சொல்ல,

அதைக் கேட்டு “ஹா….ஹா….ஹா”வென்று சத்தமாய்ச் சிரித்தான் திருமுருகன்.

“யோவ்…ஏன்யா சிரிக்கறே?”

“பின்னே?…உயிரோட இருக்கற தரகர்களாலேயே முடியலை!…செத்துப் போய் ஆவியாய் உலாத்திக்கிட்டிருக்கற தரகர் வரன் பார்த்துக் குடுப்பாரா?” இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகையோடு திருமுருகன் சொல்ல,

“நாளைக்கே அந்த லட்சுமி நரசிம்மன் அய்யா கூடப் பேசிட்டு…வந்து சொல்றேன்” என்றபடி சங்கீதாவின் ஆவி காற்றில் கரைந்து மறைந்து விட,

தன் உறக்கத்தைத் தொடர்ந்தான் திருமுருகன்.

அதே நேரம்,

ஆவியுலகில் லட்சுமி நரசிம்மன் ஆவியிடம் குள்ள குணாவின் வரன் விஷயமாய்ப் பேசியது சங்கீதாவின் ஆவி.

“ம்ம்ம்…ஆவியாய் இருக்கும் நான் ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்!ன்னு நீ எதிர்பார்க்கறது உண்மையிலேயே ரொம்ப ஓவர்” என்று சொன்னது பெரியவர் ஆவி.

“அய்யா…நீங்க நெனச்சா நிச்சயம் முடியும்….”

“ம்ம்…அந்த ரெண்டு பேரும் ஆவியுலகத் தொடர்புக்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு அதன்படி செஞ்சாங்கன்னா…நான் அவங்களுக்கு உதவ முடியும்” என்றது லட்சுமி நரசிம்மன் ஆவி.

“வழி முறைகள்ன்னா…..இந்த ஒய்ஜா போர்டு…அதுஇதுன்னு சொல்லுவாங்களே?…அதுவா?” சங்கீதா ஆவி கேட்க,

“அதேதான்!…ம்ம்ம்…நீ ஒண்ணு செய் சங்கீதா…திருமுருகன் கிட்டே சொல்லி…அந்த குணாவை ஒய்ஜா போர்டு பழகச் சொல்லு!…பெண் சைடுல ஏற்கனவே நிறைய பெண்கள் என்னோட ஒய்ஜா போர்டு முறைல ஆவியுலகத் தொடர்புல இருக்காங்க!…அவங்கள்ல ஒரு நல்ல பெண்ணைத் தேடிப் பிடிச்சு…இந்த குணாவோட இணைய வைப்போம்!”

“அய்யா…இது சாத்தியமா?” சங்கீதாவின் ஆவி சந்தேகமாய்க் கேட்க,

“தெரியாது…நானே இப்பத்தான் முயற்சி பண்றேன்!…அது வெற்றியா மாறுமா?…இல்லை தோல்வியா முடியுமா?ன்னு இப்பச் சொல்ல முடியாது!…”

– தொடரும்…

< பதினெட்டாம் பாகம் | இருபதாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...