வசந்த கால நதி | ஆர்னிகா நாசர்
வேளச்சேரி,
விளிம்புநிலை மக்கள்கட்சி தலைவரின் பங்களா.
கட்சித்தலைவர் மகேந்திர வர்மனுக்காக இயக்குநர் ஆனந்த் கேமரூனும் உதவி இயக்குநர் ஆஸ்கார் ராமும் கதைவசனகர்த்தா ஹர்ஷவர்தனும் இசை அமைப்பாளர் கீர்த்திராஜாவும் ஒளிப்பதிவாளர் நாதமுனியும் காத்திருந்தனர்.
கைகூப்பி வணங்கியபடி வெளிப்பட்டார் மகேந்திரவர்மன் வயது 48. கோரைமுடி தலைகேசம் இடுங்கிய கண்கள், கண்களைச் சுற்றி கருவளையங்கள். முறுக்கு மீசை. கட்டை குட்டையான உருவம்.
சினிமா மக்களை கூட்டிவந்திருந்த கட்சியின் துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் அனைவரையும் தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
“தலைவரே! நாம விளிம்புநிலை மக்கள் கட்சியை 2010 ல ஆரம்பிச்சம். தேர்தல்கள்ல எட்டு சதவீதம் வாக்கு வாங்கினோம். முதலில் இணக்கமா இருந்த மத்தியதேசிய கட்சி நம்பளை வேறறுக்க சதி திட்டங்கள் தொடர்ந்து தீட்டிக்கிட்டு இருக்கு. வடநாட்டு சாயாவதி கட்சி பழைய தமிழகம் நாம் திராவிடர் கட்சிகள் நம்ம தலித் மக்கள் ஓட்டுகளை நம்மகிட்டயிருந்து வெகுவா பிரிச்சு எடுத்திருச்சுக. இப்ப நாம வாங்கிற ஓட்டு இரண்டரை சதவீதம்தான். இப்டியே போனா நாம் லெட்டர்பேடு கட்சி ஆகிடுவம்”
மகேந்திரவர்மனின் முகம் மேலும் கறுத்தது.
“‘அரசியல்தலைவர்களின் செல்வாக்கை உயர்த்த பல யோசனைகள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பது. கிஜேபி ஆளுக சாங்கிரஸை இழிவுபடுத்த சன்போகன்சிங் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தாங்க, அதே கிஜேபி ஆளுக விழுந்துகிட்டு இருந்த சோடியின் இமேஜை உயர்த்த ஒரு சினிமா எடுத்தாங்க. ஆந்திராவின் கிகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமா எடுத்து அவரை முதலமைச்சராக்கினாங்க. இப்ப கேரளாவில் கினாராயி அஜயன் வாழ்க்கை வரலாற்றை படமா எடுத்துக்கிட்டு இருக்காங்களாம். அது மாதிரி உங்களின் வாழ்க்கை வரலாற்றையும் படமா எடுத்தா நம்மவாக்கு வங்கி இருபது சதவீதமா உயரும். வரும் 2025 தேர்தல்ல நீங்க துணைமுதல்வராக வாய்ப்பு கிடைக்கும்” கிருஷ்ணகுமார்.
“தமிழ்ல படமெடுக்கனும்னா அதிக செலவாகுமே கிருஷ்ணா?”
“உங்க 48வது பிறந்த நாளுக்கு உங்களுக்கு கட்சி தொண்டர்கள் தங்கத்தை நன்கொடையா செலுத்னாங்க இல்ல… அதுல வந்த 15கிலோ தங்கம் வங்கிலாக்கர்ல பாதுகாப்பா தூங்குது. அதோட இன்றைய மதிப்பு அஞ்சரைகோடி. அதை வச்சு ஜாம்ஜாம்னு படம் எடுத்திரலாம் தலைவரே”
“ஹீரோவா நானே நடிச்சிரலாம்னு சொல்றியா?”
“அந்த விஷப்பரிட்சை வேணாம். யாராவது ஒரு பிரபல நடிகரை உங்க கேரக்டர்ல நடிக்க வைப்பம்”
ஆனந்த் கேமரூன் வாய் திறந்தான். “கிம்மட்டிய போட்டு பிரமாதபடுத்தி விடலாம்”
“சரியா வருமா?”
“உருவ ஒற்றுமை சிறிதும் இல்லாத மவேக் ஓபராய் சோடி கேரக்டர்ல நடிக்கலியா? ஹாலிவுட் மேக்கப்மேன் வச்சுதூள் பரத்திரலாம்”
“படத்துக்கு என்ன டைட்டில் வைக்கிறது?” கிருஷ்ணகுமார்
ஹர்ஷவர்தன் யோசித்து சூரியனித்தார். “கொள்கை பிடிப்போட தொடர்ந்து செயல்படும் தலைவரை ஒரு நதிக்கு ஒப்பிடலாம் பேசாம டைட்டிலை மகாநதி ன்னு வச்சிரலாமா?”
ஆஸ்கர் ராம் “நதின்னு வார்த்தை வரணும் ஆனா மகாநதி வேணாம். ‘வசந்தகால நதி’ ன்னு வச்சுபப்மா? வசந்தகால நதில பூக்கள் மிதக்கும் தண்ணி நுங்குநுரையுமா ஓடிவரும்… ‘வசந்தகால நதி தனிலே வைரமணி நீரலைகள்’ பாட்டுல இருந்து டைட்டிலை எடுத்தேன்”
அனைவரும் தலையாட்டினர். “வசநத்கால நதி டைட்டில் ஓகே”
“சூப்பர் டைட்டில் சொன்ன உனக்கு என் பரிசு நூறு ரூபா… இந்தா” ஆனந்த் கேமரூன் நூறு ரூபாய்தாளை ஆஸ்கார் ராமிடம் நீட்டினான்.
‘அல்பம் நூறு ரூபா தருது’ மனத்துக்குள் நினைத்தபடி பணத்தை வாங்கிக் கொண்டான் ஆஸ்கார் ராம்.
“தலைவரே உங்க வாழ்க்கை வரலாறு எனக்கு அத்துப்படி. அதை அப்படியே இந்த சினிமா மக்களிடம் கூறிவிட்டேன். அப்படியே எடுத்தால் மக்கள் காரித்துப்புவார்கள். டோட்டல் வாழ்க்கை வரலாற்றையும் உல்ட்டா பண்ணி திரைக்கதை அமைக்க சொல்லிட்டேன்…”
கிருஷ்ணகுமாரை ஒரு மாதிரி பார்த்தார் மகேந்திரவர்மன். ‘இவன் நம்மை தூக்குகிறானா இல்லை கவிழ்க்கிறானா?”
“சின்ன வயதில நீங்க திருட்டு ரயில் ஏற சென்னை வந்தீங்க இல்லையா? அந்த சீனை வேற மாதிரி மாத்த சொல்விட்டேன்”
“எப்படி?”
“மாத்தினதை சொல்லுங்க ஹர்ஷவர்தன்”
“நீங்களும் உங்க தாயாரும் சென்னைக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயில் ஏறுகிறீர்கள். ரயிலில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் ஒரு வயோதிகரும் டிக்கெட் எடுக்காமல் அமர்ந்திருக்கின்றனர். நீங்கள் அதனை பார்த்துவிட்டு மனம் பொறுக்காமல் இருவரும் சென்னை போவதை கேட்டறிந்து இருவருக்கும் டிக்கெட்டும் சாப்பாடும் வாங்கி வந்து தருகிறீர்கள். உங்கள் கையிலிருந்த பணம் காலி. ஏண்டா இப்டி செஞ்சன்னு உங்கம்மா கேக்ராங்க. விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விடவே நான் பிறந்துள்ளேன் என்கிறீர்கள்”
“கொஞ்சம் நாடகத்தனம்தான்… இருந்தாலும் சீன் மாஸ் அப்பீல் ஆகும்” ஆனந்த் கேமரூன்.
“படத்தில் உங்களுக்கு ஆறு கதாநாயகிகள். பள்ளிக்கூடத்தில் நீங்க படிக்கும் போது ஒரு கதாநாயகி காதலிக்கிறாள். கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு படிக்கும் போது ஒரு கதாநாயகி உங்களை காதலிக்கிறாள். நீங்க சினிமாவில் உதவி டைரக்டராக பணிபுரியும் போது ஒரு கதாநாயகி உங்களை காதலிக்கிறாள்கள். நீங்க அரசியல்வாதி ஆனதும் ஒரு நடிகை உங்களை காதலிக்கிறாள். நீங்க எம்எல்ஏ தேர்தலில் தோற்கும் போது இருபெண் எம்பிகள் உங்களை போட்டி போட்டுக்கொண்டு காதலிக்கிறார்கள். ஆறு கதாநாயகிகள் மூணு டூயட் பாட்டுகள். அதே சமயம் நீங்க மக்கள் நல்னுக்காக இரண்டாம் திருமணமே செய்து கொளள் போவதில்லை என சபதம் எடுத்துள்ளீர்கள். அந்த உண்மையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் தாயிடம் கூறுகிறீர்கள்” ஆஸ்கார் ராம்.
“இந்த சீன்ல ஆடியன்ஸ் அழுதிடுவாங்க” ஆனந்த்கேமரூன்.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி நீங்களும் நானும் விலைமாது வீட்டுக்கு போனோமே ஞாபகமிருக்கா? அதை மாத்தி சீனா வச்சிருக்கம். நீங்க விலைமாது வீட்டுக்கு போய் விலைமாதுகளுக்கு அறிவுரை சொல்லி திருத்தி அவங்களுக்கு மறுவாழ்வு அமைச்சுத்தரீங்க.”
“சபாஷ்”
“நீங்க எடுத்த சினிமா சரியா ஓடலைன்னு உங்களை திரைத்துறை அடிச்சு விரட்டிர்ராங்க இல்லையா? அதை உல்ட்டா பண்றோம். ஒரு சூப்பர் ஹீரோ திட்டம் போட்டு உங்க படத்தை பிளாப் ஆக்கிடுராரு. நீங்க ஹீரோவை எதிர்த்து போராடுறீங்க. ஹீரோ நீ தொடர்ந்து படம் எடுத்தா என் மார்க்கெட் டவுன் ஆய்டும். எனக்காக நீ உன் சினிமா கேரியரை தியாகம் பண்ணுன்னு கால்ல விழுந்து கெஞ்சுராரு. நீங்களும் பிழைச்சு போடான்னு சினி கேரியரை தூக்கி கடாசிட்டு அரசியலுக்கு வந்திடுறீங்க”
“இந்த சீன்ல நெருப்பு பொறி பறக்கும்” ஆனந்த் கேமரூன்.
“உங்களை கரபரகரன் கீழத்துக்கு அரசுமுறை விருந்தாளியா வரசொல்லி வேண்டுரார். போறீங்க. அங்க இருந்த பதினைஞ்சு நாளும் விடுதலை சிங்கங்களிடம் பேசி அவங்களை உற்சாகப்படுத்றீங்க. கரபாகரன் அரசாங்கத்துக்கு எதிரா போராடுறது வீண். தனிகீழம் கோரிக்கையை கைவிடப் போறேன் என்கிறார். நீங்க அவரிடம் கிரானைட் குரலில் பேசி அவரின் விடுதலை வேட்கையை மூட்டி எழுப்புறீங்க… இந்த எடத்ல வர்ற அஞ்சுபக்க பேய்தனமா டயலாக்கை எழுத போராரு ஹர்ஷ்வர்தன்”
“வச்சு செஞ்சிடுரேன்”
‘‘ஏன் திராவிட கட்சிகளை வச்சு செய்றீங்க? உங்களுக்கும் தேசீயகட்சிக்கும் உண்மைல ரகசிய கூட்டு உண்டா? எந்த கட்சியோடயும் கூட்டணி அமைக்காம தனியா நின்னு ஏன் ஒட்டை பிரிக்கிறீங்க? தமிழ் கடவுள் கான்செப்ட்டை பிடிச்சு ஏன் தொங்குறீங்க? இந்துத்துவாவை ஏன் வெறுக்ற மாதிரி நடிக்றீங்க? கீழவிடுதலை பேசுவது கீழ தமிழர்களிடமிருந்து பைசா கறக்கவா? அடிக்கடி மூக்கை இடதுகையால் தேய்த்துக் கொள்கிறீர்களே அதென்ன மேனரிஸம்? கஜலட்சுமி விடியோ எல்லாம் உண்மையா? ஆமைக்கறி மீது ஏன் உங்களுக்கு கொள்ளை பிரியம்? போன்ற பல கேள்விகளுக்கு உருக்கமான ஆணித்தரமான சென்டிமென்ட்டான பதில்களை உங்க கதாபாத்திரம் தருகிறது”
மகேந்திரவர்மன் முழு ஈடுபாட்டுடன் தலையாட்டினார்.
“படத்தின் க்ளைமேக்ஸ் என்ன?”
“மாநிலகட்சி மூன்று வில்லன்களுடன் செமபைட். சண்டையின் கடைசியில் மூன்று வில்லன்களும் வீழ்த்தப்படுகின்றனர். நீங்க கேமிராவை பாத்து வசனம் பேசுறீங்க. ‘நான் கட்சி தொடங்கினது எம்எல்ஏவாகவோ எம்பியாகவோ முதலமைச்சராகவோ அல்ல. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தீண்டாமையை போக்க சாதிய வேறுபாடுகளை நீக்க. என் வாழ்நாளுக்குள் ஒரு மெய்யான தமிழனை முதலமைச்சராக்கி விட்டுதான் சாவேன். இது என் தாயின் மீது ஆணை’ என சூளுரைக்கிறீங்க”
“பிரமாதம்”
“படத்தின் டைட்டிலில் கொள்கைப்பாடல் நான்கு நிமிடம் ஓடும். இசை அமைப்பாளர் கீர்த்தி ராஜாவும் பாடலாசிரியர் ஜெகபாரதியும் அதகளப் படுத்திருவாங்க”
“நம்ம கட்சி ஆளுக கட்டை பஞ்சாயத்து பண்ராங்கன்னு ஒரு அவப்பேரு இருக்கே,,, என்ன பண்ணலாம்?”
“நாட்டின் எல்லா நீதிமன்றங்களும் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றன… இந்த நிலையில் ஏழைமக்களுக்கு நீதி கிடைக்க நம்ம கட்சி ஆளுக நிஜமாவே பாடுபடுராங்கன்றதை காட்ட ஒரு சீன் வைப்போம்”
“இந்த படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவோம்?”
“இரண்டாயிரத்து இருபத்தி அஞ்சு சட்டசபைதேர்தல் நடக்கிறதுக்கு ரெண்டுமாதம் முன்னாடி இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவோம்.. படமும் வெற்றியடையும் தேர்தல்ல நீங்களும் வெற்றி பெறுவீங்க”
“வசந்தகால நதி’ ஒரு வெள்ளிக்கிழமை ரிலீசானது. சாமக நிறுவனர் நீண்ட அறிக்கை கொடுத்திருந்தார். ‘இந்த படம் மகேந்திர வர்மனின் வரலாறு அல்ல. முழுக்க முழுக்க புளுகு மூட்டை. மகேந்திரவர்மனைப் போலவே படமும் தோற்கும் சினிமா எனக்கு அறவே ஆகாது இருந்தாலும் கட்சி மக்கள் விருப்பப்படி என் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாய் வெளியாகும். எனது மகன் 2031ல் ஹைடெக் முதலமைச்சர் ஆவான்”
‘வசந்தகால நதி’ அட்டர் பிளாப் ஆனது. ‘உயர்ஜாதி இந்துகள் தலித்துகளை நசுக்கிய காலம் போய் இப்போது தமிழர் அல்லாதோர் தமிழர்களை நசுக்குகின்றனர். அதற்கான சாட்சி ‘வசந்தகால நதி’ தோல்வியடைந்ததே. இப்பட தோல்விக்கும் புளுகுணி கஜலட்சுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை’-என பேட்டியளித்தார் மகேந்திரவர்மன்.