பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

29. நாலும் தெரிந்த நாயகன் 

கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி.

“நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையானது. பத்து-னா மலயா மொழியில சுண்ணாம்பு னு சொல்லியிருக்கேன். இந்த சுண்ணாம்புக்குப் பின்னாடி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு தெரியுமா ? அகஸ்தியர்,போகர், கோரக்கர், எல்லாம் ஏன் இங்கே வந்து வாசம் செய்தாங்க னு நினைக்கிறே..? அமைதியா யோக நிலையில இருக்கணும்னா காயம்-ங்கிற உடல் அதற்கு ஒத்துழைக்கணும். சுண்ணாம்பு தட்பவெப்பத்திற்கு ஏற்றாற்போல, தனது தன்மையை மாத்திக்கும். வெய்யில் காலத்துல குளிர்ச்சியாவும், மழைக்காலத்துல சூடா-வும் உடலை வைத்திருக்கும்.  நாமெல்லாம் சிமெண்ட் வச்சு வீடு கட்டறோம். ஆனால் சிமெண்ட் உறுதியா இருக்க அதோடு கம்பிகளை வைக்கிறோம். ஆனால் சுண்ணாம்பு, கம்பிகள் இல்லாமையே உறுதியா இருக்கும். சித்தர்கள் சுண்ணாம்பும், வௌவால் சாணமும் கலந்து தங்களை சுற்றி  வட்டம் வரைஞ்சுப்பாங்க ! ஏன் தெரியுமா..? இந்தக் கலவையின் வாசனைக்கு விஷ ஜந்துக்கள் கிட்டே நெருங்காது.  தேள், பாம்பு, எதுவுமே சுண்ணாம்பு இருக்கிற இடத்துல அண்டாது. சுண்ணாம்பு மன அழுத்தம் ஏற்படாம தடுக்கும். வெத்தலையோட சுண்ணாம்பு போடறது அதுக்குத்தான். அதனாலதான், சித்தர்கள் பத்து மலையில வந்து யோக நிலையில இருந்தாங்க.” –குகன்மணி கூற, வாயைப் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள், மயூரி. 

‘மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி..! பெரிய செல்வந்தன்..! மலேசியாவின் சைனா டவுனில் ஒரு எஸ்டேட் வைத்திருக்கிறான்.  சித்தர்களைப் பற்றியும், பேசுகிறான். சுண்ணாம்புக் கல்லை பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறான். நாலும் தெரிந்தவனாக இருக்கிறானே..! பத்து மலையைப் பற்றிப் பேசும்போது, அவனது முகத்தில் பெருமிதம் பொங்குவதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. 

“எங்க பள்ளங்கி மலைகூடப் பல மர்மங்களைக் கொண்டிருக்கு.  அங்கேயும் குகைகளும், மனுஷன் கால் வைக்க முடியாத இடங்களும் இருக்கு. அங்கேதான் குணா படம் ஷுட் செஞ்சாங்க.” —மயூரி கூறினாள்.

“தெரியும்..! அதுதான் போகர் பாசறை..! பழனியில ஒரு சிலையும், பள்ளங்கில ஒரு சிலையும் பிரதிஷ்டை செஞ்ச போகர், மூணாவது சிலையை இங்கேதான் மறைச்சு வச்சார்.” – என்று கூறிய குகன்மணி சட்டென்று நின்றான்.

“மயூரி..! அதோ பார்..! செங்குத்தா ஒரு பாறை  பின்னால இருந்து தண்னீர் அருவியாக் கொட்டுதே. அந்த அருவியின் பின்னாடிதான் கெலவர் குகை இருக்கு..!” –என்றவன் மீண்டும் அவளை ஆழமாகப் பார்த்தான்.

“நினைவுல வச்சுக்க, மயூரி..! முருக பக்தி இருக்கிறதாலதான், உனக்கு இதையெல்லாம் பார்க்கிற வாய்ப்புக் கிடைச்சிருக்கு. பார்த்த உடனேயே அதைப் பத்தியெல்லாம் மறந்துடு. எந்தக் காலத்திலேயும் நீ பார்த்ததை யார்கிட்டேயும் சொல்லாதே..!” –என்றபடி செங்குத்தான அந்த பாறையின் பக்கவாட்டில் ஏறத்தொடங்கிய குகன்மணி, அவளை நோக்கித் தனது வலக்கையை நீட்ட, அதனை இறுக்கப் பற்றிக்கொண்டாள், மயூரி. 

சிறு வயதில், ராஜகாந்தம் இவளிடம் கூறியது நினைவுக்கு வந்தது. 

“பாணிக்கிரகணம் ஒரு நல்ல நேரத்துல நடக்கணும். முதன்முதலா கையைப் பிடிக்கிறவன் கடைசி வரைக்கும் விடாம இருப்பான். அதனாலதான் நம்ம சமூகத்துல பெண்கள் கைகுவித்து வணக்கம் சொல்றாங்களே தவிர, மத்த ஆண்களோட கையைக் குலுக்கறது இல்லை. கைவிரல்களின் நுனி வழியாதான் பஞ்சபூத ஆற்றல் உடலுல இருந்து பாயுது. எனவே பெண்கள் முதல்ல பிடிக்கிற கை கணவனோட கையா இருக்கணும். –”

ஆனால் விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் அமர்ந்துவிட்டு, ஆண்களின் கையைக் குலுக்க மாட்டேன் என்று சொல்வது சாத்தியமா..?  கையைக் குலுக்குவது, கன்னத்தோடு கன்னம் தேய்ப்பது, கட்டி அணைப்பது எல்லாமே இப்போது நட்பின் அடையாளம் ஆகிவிட்ட பிறகு, கணவனின் கையைத் தான் முதலில் பிடிப்பேன் என்று எப்படி கூறுவது..?

குகன்மணியின் உறுதியான கரத்தை முதன் முறையாகப் பற்றியதும், மயூரியின் தேகமெங்கும், பரவசமும், சிலிர்ப்பும் ஒருங்கே தோன்ற, முதன்முறையாக ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாள். 

“இவளைப் போன்றே விமானத்தில் பறப்பவன். இவளைப் போன்றே முருகபக்தி கொண்டவன். இவளைப் போன்றே அவனும் பணக்காரன். இவளது அழகுக்கு ஏற்ற கம்பீரம்..! உண்மையிலேயே இவளுக்கும், அவனுக்கும் பொருத்தங்கள் ஏராளம்.  இருப்பினும், அவளுள் ஒருவித அச்சம். 

பொருத்தங்கள் பல இருந்தாலும், அவனுக்கும், இவளுக்கும் இடையே ஒரு பெரிய பிரச்சனையாகத் தனது குடும்பம் விளங்குகிறது என்பதை  உணர்ந்தாள். அவனுக்கும், தனது குடும்பத்துக்கும் இடையே ஒரு சுமூக உறவை ஏற்படுத்திவிட்டால், இவனையே தனது வருங்கால கணவனாக கூட ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால் அவன் எப்படி ஏற்பான்..! தனது குடும்பம் மூன்றாவது சிலையைக் களவாட முயலுவதால், அவர்கள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்று கூறியிருந்தானே… அழிவை நாடிச் செல்லும் குடும்பத்தில் இருந்து எப்படி பெண் எடுப்பான் ?

மயூரியின் கையை இப்போது இடக்கையால் பற்றியபடி, வலக் கையால் அந்த செங்குத்தான பாறையைப் பற்றியபடி சற்று உயரே நடந்து பாறையின் மீதிருந்து விழுந்துகொண்டிருந்த அருவியை அடைந்தனர். 

குகையிலிருந்து நீர் பொங்கி வந்து, பாறையின் மீதிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து சிறிய அருவியாக பொழிந்துகொண்டிருந்தது. 

“மயூரி..! இந்த  குகையில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடுது. அதைக் கடந்து அந்தப்பக்கம் போனா ஒரு மேட்டுல வௌவால் குகை இருக்கு. அது வெளியில உட்கார்ந்துதான், நான் தென்மேற்கா  பள்ளங்கி மலை இருக்கிற திசையிலே பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பேன்.” — என்றபடி குகையில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் நடக்க தொடங்கினான்.

முருகனை தரிசிக்கப் போகிறோம் என்பதால் சேலையை கட்டிக்கொண்டு வந்திருந்தாள், மயூரி. சேலையுடன் தண்ணீரில் நடப்பது சிரமமாகத்தான் இருந்தது. இருப்பினும், அந்த குகையின் அமைதியும்,குளிர்ந்த மலைக் காற்றும், மனதுக்கு இதமளிக்க, உடன் கம்பீரமான  குகன் மணி நடந்து வர, ‘எஞ்சியிருக்கும் காலத்தை இங்கேயே, இப்படியே கழித்து விட்டால் என்ன..?’ –என்று கூட மனதினுள் நினைத்தாள் .

“இங்கே வந்தா எனக்குத் திரும்பிப் போகணும்ங்கிற எண்ணமே வராது..!” –என்ற குகன்மணி, குகையின் மறுபக்கம் புறப்பட்ட வெளிச்சத்தை நோக்கி நடந்தான். 

குகையின் இருளில் இருந்து மறுபக்கம் வெளிச்சத்திற்கு வந்திருந்ததால், மயூரியின் கண்கள் கூசின. 

“இதோ அந்த மேட்டுல இருக்கிறதுதான் வௌவால் குகை என்கிற கெலவர் குகை..!  அதுலதான் நீ ஒரு ஆச்சரியத்தை பார்க்க போறே..!” –என்றபடி அந்த மேட்டில் ஏறியதும், அவளது கையை விட்டான்.

“என் பின்னாடியே வா.” –என்றவன், கெலவர் குகையை நோக்கி நடந்தான்.

கெலவர் குகையினுள் நுழைவதற்கு முன்னால், அங்கே சிதறிக்கிடந்த சருகுகளையும் சுள்ளிகளையும் திரட்டியவன், தனது பாக்கெட்டில் இருந்து லைட்டர் ஒன்றை எடுத்து, சருகுகளைக் கொளுத்தினான்.

“என்னடா இவன் லைட்டர் வச்சிருக்கான்னு நினைக்காதே. எனக்கு ஸ்மோக்கிங் பழக்கம் இல்லே. ஆனா மலைக் குகைகளுக்கு போச்சே நிச்சயமா என் பாக்கெட்ல லைட்டர் இருக்கும்..!” –என்று சிரித்தபடி, சருகுகளை மேலும் எரிய வைக்க, கெலவர் குகையில் வெளிச்சம் பரவியது 

“மயூரி..! அதோ எங்கே பாரு..!” –குகன் சுட்டிக்காட்டிய திக்கில் நோக்கியவள், அதிர்ந்து போய் நின்றாள்.

இவளுடைய பள்ளங்கி மாளிகையின் நுழைவாயிலில் சிறு ஆலயத்தில் நின்ற நீலி வேலைப் போலவே ஒரு நீலி வேல் அங்கே நின்றிருந்தது.  உடனேயே தாத்தா கூறியது நினைவுக்கு வந்தது. 

“அறுபத்தி நாலு பாஷாணத்துல, ஒன்பது பாஷாணங்களை சேர்த்துக் கட்டி, முருகன் சிலையை வடிச்சாரு, போகர். ஆனா அந்தத் 64 பாஷாணங்கள்ல, நீலி பாஷாணம் மட்டுமே மத்த எல்லா பாஷாணங்களையும் கட்டுபடுத்தக் கூடியது. அதனால்தான் மூணு நவபாஷாணச் சிலைகள் இருக்கிற இடத்துல எல்லாம் நீலி பாஷாணத்துல வேல் செஞ்சு  வச்சாரு. மூணாவது நவ பாஷாணச் சிலை எங்கே இருக்குனு தேடவே வேண்டாம். மூணாவது நீலி வேல் எங்கே இருக்குனு பாருங்க. அங்கேதான் மூணாவது நவபாஷாணச் சிலை இருக்கும்..!” – என்றாரே…

‘இதோ இருக்கே மூன்றாவது நீலி வேல்..! அப்படியென்றால், மூன்றாவது சிலை இங்கே எங்கேயேதான் இருக்கிறதா..?’

“குகன்..! நீலி வேல் இங்கே இருக்குன்னா, அப்ப மூன்றாவது சிலையும் இங்கேதான் இருக்கா..?” –மயூரி நெஞ்சம் படபடக்கக் கேட்டாள்.

“எஸ்..! அதனாலதான் உன்னை இங்கே அழைச்சுக்கிட்டு வந்தேன். நீ பழனி மலை பாஷாணச் சிலை, பள்ளங்கி மலை பாஷாணச் சிலை இரண்டையும்  தரிசனம் செஞ்சுட்டே. உனக்கு மூணாவது சிலையும் தரிசிக்கிற பாக்யம் இருக்கிறதாலதான், அதைத் தரிசிக்க வைக்க உன்னை அழைச்சுக்கிட்டு வந்தேன்..” –என்றபடி புன்னகைத்தான் குகன்மணி.

மயூரிக்கு மெய்சிலிர்த்தது. உண்மையிலேயே மூன்று நவபாஷாண சிலைகளையும் தரிசிக்கும் வாய்ப்பு இவளுக்கு இருக்கிறதா..? ஆஹா ! அது மட்டும் உண்மையானால், பிறவி பயனை அடைந்துவிடுவாளே. 

“ஆர் யு ஜோக்கிங்..? நிஜமாவே எனக்கு மூன்றாவது சிலையைக் காட்டப் போறீங்களா..?” –மயூரி கேட்டாள்.

“அப்ஃகோர்ஸ் எஸ்..! என்னோட வா..!” –என்றபடி மீண்டும் குகையின் வாயிலை நோக்கி அவன் நடக்க, “கொஞ்சம் இருங்க..!” –என்று மயூரி கூற, வியப்புடன் திரும்பினான், குகன். 

மயூரி நீலி வேலை நோக்கி நடந்து அதனைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். குறுநகையுடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான், குகன். 

“எண்ணெய் இருந்தால் ஒரு விளக்கேற்றலாம்..!” — மயூரி கூற, சிரித்தான் குகன். 

“உன்னோட கண்களே ஏத்தி வச்ச ரெண்டு ஜோடி விளக்கு மாதிரி ஜொலிக்குது. இன்னொரு விளக்கு எதுக்கு..?” –என்று கூறியபடி தொடர்ந்து நடக்க, சற்றே திரும்பி பார்த்திருந்தால், மயூரியின் முகம் குப்பென்று சிவப்பதைக் கண்டிருப்பான் குகன். 

இருவரும் வெளியே வந்ததும், சட்டென்று நின்றான், குகன். 

“மயூரி..! அந்த இரண்டாவது சுவடிக் குறிப்பைச் சொல்லு..!” –குகன் திடீரென்று கூற, வியப்புடன் அதைக் கூற தொடங்கினாள். 

‘மூல தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு..!’ –மயூரி கூறியதும்,தென்மேற்காகத் தனது கையைச் சுட்டிக் காட்டினான். “இந்தக் குறிப்பு பழனியைக் குறிக்குது.” –என்றான் குகன். 

“ஜால இடைச்சன் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு..!” –மயூரி அடுத்த குறிப்பை சொல்ல, தனது கையை மேற்கே காட்டிய குகன், “இந்த குறிப்பு போகர் பாசறையை குறிக்குது.” என்றான். 

“கோல கடைச்சன் வித்தனுக்கு  சுண்ணக்  கல்லே காப்பு” –மயூரி கூறினாள்.

“இந்தக் குறிப்பு பத்து மலையைச் சொல்லுது..!” –என்ற குகன் மிகுதிக் குறிப்புகளைத் தானே கூறினான். 

“தகையோன் வந்து நிற்க, மெய்யே காப்பு! 

ஒவ்வா மேட்டில் ஏழும் அடக்கினால் 

பாலர் மூவரின் அருளும் கிட்டுமப்பா”

“அதாவது தகையோன்னா, தகுதி உடையவன்னு அர்த்தம்.  தகுதி உடையவர்கள் மட்டும், இங்கே வௌவால் குகைக்கு வந்து, ஏழு நாடிச்சக்கரங்களையும் அடக்கி, யோக நிலையில இருந்தா, மூன்று நவபாஷாண முருகனின் அருளையும் ஒரே இடத்துல பெறலாம்னு அர்த்தம். அதுக்குதான் நான் இங்கே அடிக்கடி வந்து தனிமையில தியானம் பண்ணுவேன்.” –குகன் கூற, ஆச்சரியத்தால்  மயூரியின் கண்கள் விரிந்தன. 

“முதல் சிலை பழனி மலையில, ரெண்டாவது சிலை, பள்ளங்கி மலையில, மூணாவது சிலை எங்கே இருக்கு..?” –ஆவலைக் கட்டுப்படுத்த மாட்டாமல், மயூரி கேட்டாள்.

“எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அசால்ட்டா கேட்கறே..? சொல்றேன்.” –என்றவன் தன்னை சுற்றி ஒருமுறை நோக்கினான். 

பிறகு மெல்லிய குரலில் பேசத்தொடங்கினான, குகன்.

“மயூரி ! மலேசியா மர்மங்கள் நிறைஞ்ச நாடு. இங்கே பத்து மலையை தவிர, இன்னும் 239 மலைகள் இருக்கு. சபா மாகாணத்துல, 4095 அடி உயரமுள்ள கினபாலு மலையில தொடங்கி, பகாங் மாகாணத்துல 339 அடி உயரமுள்ள புக்கிட் காயோங் மலை வரையில விதம்விதமா மலைகள் இருக்கு. எல்லா மலைகளும் சித்தர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவைதான். அகத்தியரின் ககனக் குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு பறந்த போகர், இந்த மலைகளில் ஒன்றைத்தான் தனது வாசஸ்தலமாக வைத்திருந்தார்..

இங்கிருந்த மலைகள்ல ஒன்றில்தான் விண்வெளியில் பயணிக்க கோரக்கரும் ஒரு மார்க்கத்தை கண்டுபிடிச்சார். இப்ப Worm Hole Theory-னு சொல்றாங்களே. அதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா..?” –குகன் கேட்டான்.

“ம் ! நான் சயன்ஸ் மானிடர்-ல படிச்சிருக்கேன். A wormhole or Einstein–Rosen bridge or Einstein–Rosen wormhole–is a speculative structure linking disparate points in spacetime, னு ஒரு கட்டுரையில் படிச்சேன்.” –மயூரி கூறினாள்.

“எஸ்..! இந்த தியரி க்கு முன்னாடியே நம்ம கோரக்கர் ஒரு மார்கத்தை கண்டுபிடிச்சார். இந்த மார்கத்தில்தான் கோரக்கர் விண்வெளியில பயணிச்சார் னு நூல்கள் சொல்லுது. இந்த மர்மங்கள் நிறைந்த 239 மலைகளில் ஒண்ணுலதான், போகர் உருவாக்கிய முருகனின் மூன்றாவது நவபாஷாண சிலை உள்ளது.” –குகன் மணி கூறினான்.

”அது எந்த மலை..?” –மயூரியின் ஆவல் அதிகரித்தது.

“தகுதி உடையவன் மலை. தகையோன் மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” — குகன் கேட்க, மயூரியால் அந்த சஸ்பென்ஸைத் தாங்க இயலவில்லை. சீக்கிரம் சொல்லுங்க என்பது போன்று குகனின் வாயையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

-தொடரும்…

ganesh

2 Comments

  • Super

  • super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...