அவ(ள்)தாரம் | 2 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 2 | தேவிபாலா

1வது அத்தியாயத்தைத் தவற விட்டவர்களுக்காக….

சிதம்பரம் – கௌசல்யா தம்பதியின் மகள்கள் பாரதி, வாசுகி, மேகலா. பாரதி, பெயருக்கேற்றபடி அழகான, அறிவான, துணிவான பெண். மேகலாவுக்கு அன்று பிறந்ததினம். தன் தோழிகளை அழைத்து பார்ட்டி வைக்க அனுமதி வாங்கி சந்தோஷமாக காலேஜ் போகிறாள். அவளுக்காக அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வரும் பாரதி, தொழிலதிபர் மாத்ருபூதம் செய்யும் தவறைக் கண்டிக்கிறாள். பொதுவில் நடந்ததால் பணிவாக மன்னிப்பு கேட்கும் மிஸ்டர் பூதம், அவளது குடும்ப விவரங்களைச் சேகரிக்க தன் உதவியாளனிடம் உத்தரவிடுகிறார். கல்லூரிக்குச் சென்ற மேகலா கடத்தப்படுகிறாள். இனி…..

(2)

வீடு திரும்பிய மாத்ருபூதம்.. (இவரை இனி பூதம் என்றே அழைக்கலாம்! ). அவரே ஃபோனில் பேசும்போது, “பூதம் ஸ்பீக்கிங்” என்று தான் ஆரம்பிப்பார்! அவருக்கு இந்த உலகில் பிறந்த நோக்கமே பணம் சம்பாதிப்பது மட்டும் தான் என்ற திடமான நம்பிக்கை கொண்டவர்! காரணம் பால்ய பருவத்தில் நிறைய வறுமை அனுபவித்தவர்! காசு தான் உலகம் என பலர் வாழ, அந்த பணம் இல்லா விட்டால் உலகில் மரியாதையே இல்லை என்பதை ரத்தம் சொட்ட அனுபவித்தவர்! அதனால் பணத்துக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்! பணம் வேண்டுமென்றால் பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சக்கூடாது! முதலில் கழட்டி வைக்க வேண்டியது மனசாட்சியை என்று தீர்மானித்து செயலிலும் இறங்கியவர்! அவரது குற்றப் பட்டியல்களை படிக்க தனியாக ஒரு அத்தியாயமே வேண்டும்! யாரையும் அழிக்கத் தயங்காத மனிதர்! பந்த பாசத்துக்கு அவர் வாழ்க்கையில் இடமேயில்லை! ஒரே விதி விலக்கு அவரது மகள் அஞ்சு! யாரும் அவரை எதிர்க்கக்கூடாது! அப்படி எதிர்த்தவர்களை பூதம் விட்டு வைக்க மாட்டார்! அப்படி எதிர்த்தும் அவர் விட்டு வைத்தது ஒரே ஒரு நபரைத்தான்! அவர் யாரென இந்த அத்யாய முடிவில் தெரியும்!

கோயில் சம்பவத்துக்கு பிறகு வீடு திரும்பிய பூதம், கொஞ்சம் பதட்டத்தில் தான் இருந்தார்.

“ அப்பா! நீங்க அவ கிட்ட மன்னிப்பு கேக்கும் போது மீடியாக்காரங்க இருந்தாங்க! அது அசிங்கமில்லையா?”

“ இல்லைம்மா! ராஜ தந்திரம்! நாளைக்கே அந்த செய்தி சோஷல் மீடியால வைரல் ஆகும்! ஆகணும்! இதை வச்சு நான் போட்ட லாபக்கணக்கெல்லாம் உனக்கு புரியாது!”

“ என்னப்பா சொல்றீங்க?”

“ போ செல்லம்மா! போய் வேலையை பாரு!”

அவருக்கு ஃபோன் வர, எடுத்தார்!

“ சொல்லு ஜானி!”

“ நம்ம துபாய் பார்ட்டி, ஒரு அம்சமான காலேஜ் பொண்ணை பார்த்து, அது தான் வேணும்னு கேட்டதை நான் உங்களுக்கு சொன்னேனே!”

“ அதான் அவ ஃபோட்டோ அனுப்பினியே! ஓக்கே தான்!”

“ அவளை கொஞ்சம் முன்னால தூக்கியாச்சு! நம்ம கிழக்கு கடற்கரை சாலை கெஸ்ட் ஹவுசுக்கு கொண்டு போறோம்!”

“ அது தானே நம்ம ராசியான வியாபார கேந்திரம்! நான் சேட் கிட்ட பேசிர்றேன்! நானே சாயங்காலம் ஆறு மணிக்கு சேட்டை அங்கே கூட்டிட்டு வர்றேன்! சாப்பாடெல்லாம் தந்து அந்த பொண்ணை பாதுகாப்பா வச்சுக்குங்க! வேற யாரும் அங்கே வராம பாத்துக்குங்க!”

இதை பேசும் நேரம், அவர் அறை வாசலில் நிழலாடியது! அவர் சட்டென உஷாராகி, வெளியே வந்தார்! யாரும் இல்லை! அந்த காரிடாரின் கோடி வரை சென்று பார்த்தார்! யாரும் இல்லை! அஞ்சு தன்னறையிலிருந்து வெளியே வந்தாள்!

“ உன் அண்ணன் அருள், வீட்டுக்கு வந்தானா?”

“ இல்லைப்பா! வந்ததா தெரியலை!”

அவர் உள்ளே வந்து சேட்டுக்கு ஃபோன் அடித்தார்!

“ மகராஜ்! நீ கேட்ட பொண்ணு தயாரா இருக்கு! நம்ம பாதுகாப்புல வந்தாச்சு! நீ நம்ம ட்ரேடிங் கிளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்துட்டா, லொகேஷனுக்கு நாம போகலாம்! கேட்ட பணம் மூணு மணிக்கே என் அக்கவுன்டுக்கு வரணும்! சரியா?”

திரும்பவும் நிழலாட, அவர் வேகமாக வெளியே வர, யாரும் இல்லை! அவர் ஈ.சி.ஆர். பண்ணை வீட்டுக்கு ஃபோன் போட, செந்தில் எடுத்தான்!

“ முதலாளி! இப்பத்தான் அந்த பொண்ணை கொண்டு வந்தாங்க! நாங்க கவனமா இருக்கோம்!”

மயக்க நிலையில் மேகலாவை தனியறையில் கிடத்தியிருந்தார்கள்!

“ பார்க்க சூப்பரா இருக்கா!”

ஒரு ஆள் சப்பு கொட்டினான்! கூட இருந்தவன் ஓங்கி அறைந்தான்!

“ இது முதலாளி காதுக்கு போனாக்கூட உயிர் உன் உடம்புல இருக்காது! பயத்தோட இரு!”

மாலை ஐந்தரை மணிக்கு பாரதி வீட்டுக்குள் நுழைந்தாள். கையில் இனிப்பு, பழங்கள், ஐஸ்க்ரீம் என பல பொருட்களை வாங்கிக்கொண்டு, நுழைந்தாள்!

“ என்னம்மா? மேகலாவும் அவ தோழிகளும் வரலை?”

“ இல்லைடி! நாலுக்குள்ளே வந்துடுவா. இன்னும் காணலை!”

“ அஞ்சரையாச்சேம்மா! ஏன் லேட்டு? ஆசையா இருந்தாளே! இன்னிக்குனு ஸ்பெஷல் க்ளாஸ்னு எதையாவது வச்சு கழுத்தை அறுத்துட்டாங்களா? எல்லாரும் அவ கூடவா வருவாங்க? தனியா ஒருத்தி கூட வர மாட்டாளா?”

நேரம் ஆறை கடக்க, மூத்தவள் வாசுகி, தன் குழந்தையுடன் உள்ளே வந்தாள்!

“ எங்கே பர்த் டே பேபி? கூப்பிடு அவளை! புடிச்ச ட்ரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்! அம்மா! டின்னர் நான் ரெடி பண்ணட்டுமா? எத்தனை கெஸ்ட்?”

“ இன்னும் மேகலாவே வரலைடி வாசுகி!”

“ என்னம்மா சொல்ற? நேரம் ஆறரை ஆகப்போகுது! அவளோட நெருங்கின யாருக்காவது ஃபோன் பண்ணு பாரதி!”

“ இந்த தெருக்கோடில கீர்த்தி இருக்கா! அவங்க வீட்டு நம்பருக்கு போடறேன்!”

கீர்த்தி வீட்டு நம்பர் அடிக்க, அதை கீர்த்தியே எடுக்க,

“ நான் பாரதி பேசறேன்!”

“ அக்கா! மேகலாவை கூப்பிடுங்க! பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லணும்! எங்கக்காவை கேட்டுட்டு உங்க எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிடறேன்னு சொன்னா! கடைசில காலேஜ்க்கு கட் அடிச்சிட்டாளே!”

“ என்னடீ சொல்ற? மேகலா காலேஜூக்கு வரலியா?”

“ ஆமாம்கா! அவ வரலியே! க்ளாஸ் ரூம்ல அவளுக்கு வாழ்த்து சொல்ல எல்லாரும் காத்திருந்தோமே!”

பாரதிக்கு திக்கென்றது! அம்மா, வாசுகி வந்து கேட்க, பாரதி விவரம் சொல்ல, அம்மா கதற ஆரம்பித்து விட்டாள்!

“ அய்யோ! இருட்டத்தொடங்கியாச்சே! படிக்கப்போன பொண்ணு வீடு திரும்பலையே! அவரும் ஊர்ல இல்லை! நான் என்ன செய்வேன்! பிறந்த நாளும் அதுவுமா இப்படி ஆகணுமா?”

“ அம்மா! கொஞ்சம் வாயை மூடு! அவளுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது! வளர்ந்த பொண்ணு தான்! வந்துடுவா!”

“ காலேஜூக்கே அவ வரலைனு சொல்றாங்களே! அது தாண்டி பயம்மா இருக்கு! காலைல போன பொண்ணு! எங்கே போயிருப்பா?”

பாரதியை இழுத்துக்கொண்டு வாசுகி உள்ளே வந்தாள்!

“ ஏண்டீ பாரதி? ஏதாவது லவ் விவகாரம் இருக்குமா? பிறந்த நாள் ட்ரீட்டுனு குடுக்கப்போயிருக்காளா?”

“ நிச்சயமா இல்லைக்கா! அவ எதுவா இருந்தாலும் எங்கிட்ட நிச்சயமா சொல்லுவா!”

இதைக்கேட்டுக்கொண்டே வந்த அம்மா,

“அப்படி எதுவும் இருக்காதுடி! நாங்க உங்க யாரையும் அப்படி வளர்க்கலை! பொண்ணுகளை வளர்த்தா சிதம்பரம் மாதிரி வளர்க்கணும்னு ஊரே பேசும்! ஒரு தப்பு தண்டா தெரிஞ்சா, உங்கப்பா உயிரை விட்ருவார்! அவர் மானஸ்தன்!”

“ நீயேன்மா பெரிய பெரிய வார்த்தைகளா பேசற? இன்னும் அவளுக்கு நெருங்கின தோழிகளை விசாரிக்கறேன்!”

“ மாப்ளை கிட்ட சொல்லுடி வாசுகி!”

“ அவர் டெல்லி போயிருக்கார்மா!”

“ அப்பாவும் ஊர்ல இல்லை! ஆம்பளை இல்லாம அவலமா நிக்கறோமே!”

“ இந்த மாதிரி பேசாதேம்மா! ரெண்டு அக்காக்கள் நாங்க இருக்கோம்! பார்த்துப்போம்! நீ புலம்பறதை நிறுத்து!”

சகோதரிகள் கூடி, என்ன செய்யலாம் என பேசத்தொடங்கினார்கள்! நேரம் ஏழு மணி!

ங்கே பண்ணை வீட்டில் கண் விழித்தாள் மேகலா! முதலில் ஒன்றும் புரியவில்லை! பிறகு தான் அம்மா விழுந்து விட்டதாக தன்னை காரில் ஏற்றியதும், கைக்குட்டை கொண்டு மூக்கை மூடியதும் நினைவுக்கு வந்தது! தான் கடத்தப்பட்டது தெரிய, உடம்பில் ஒரு பதட்டம் உருவாகி விட்டது! அந்த அறைக்கதவை திறந்து கொண்டு இரண்டு ஆட்கள் வந்தார்கள்! மேகலா ஓட முயற்சிக்க,

“ உன்னை கட்டிப்போட வேண்டாம்னு முதலாளி உத்தரவு! அதுக்காக தப்பிச்செல்லாம் நீ போக முடியாது!”

“ எதுக்காக என்னை கடத்தினீங்க? நான் கோடீஸ்வரி கிடையாது!”

“ இதப்பாரம்மா! நாங்க கூலிக்காரங்க! எங்க முதலாளி உத்தரவை நாங்க நிறைவேத்தறோம்! நீ அவங்க கிட்ட பேசிக்கோ!”

தனியாக போய் அவர்கள் பேசியது காதில் விழுந்தது! தன்னை எங்கோ விற்கப் போகிறார்கள் என்பது தெரிய மேகலாவுக்கு மயக்கமே வந்து விட்டது! நேரம் இரவு எட்டு மணியை நெருங்க, தாமதமாக வந்த சேட்டுடன் பூதம் காரில் புறப்பட்டார்.

“ தொழில் தப்பானதா இருந்தாலும் நேரத்தை பராமரிக்கணும் சேட்!”

“ வேற ஒரு அவசர வேலை வந்துட்ட காரணமா லேட்டு! இன்னிக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு ஃப்ளைட்! நாளைக்கு அந்த பொண்ணோட மும்பைல இருக்கணும் சாப்!”

இவர்களது கார் ஓட, அங்கே மேகலா பதட்டமும் பயமும் கலந்து அடைந்து கிடக்க, இங்கே சகோதரிகள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் தேடத்தொடங்க, அம்மா தெய்வத்தை நம்பி பூஜை அறையில் கதறிக்கொண்டிருக்க, சரியாக எட்டே காலுக்கு பண்ணை வீட்டுக்குள் அந்த பைக் வந்து நின்றது! ஆட்கள் பார்த்து விட்டார்கள்!

“ டேய்! சின்னவர் வர்றார்டா! இங்கே அவர் வரவே மாட்டாரே! எதுக்காக இந்த நேரத்துல இங்கே வர்றார்? முதலாளிக்கு ஃபோனை போடு!”

அதற்குள் அருள் உள்ளே வந்து விட்டான்!

“ எங்கேடா நீங்க கடத்திக்கொண்டு வந்த பொண்ணு?”

“ அப்படி எதுவும் இல்லை சார்!”

சொன்னவன் வாய், உடனே வெற்றிலை போடாமலே சிவக்க, அடுத்தவன் தெறித்து சுவரில் மோதி விழ, அருள் வேகமாக உள்ளே போக, ஆட்கள் வெளியே வந்து விட்டார்கள்! முதலாளி மகன் என்பதால் எதிர்க்கலாமா என்ற தயக்கம் வருவதற்குள், அருள் மின்னல் வேகத்தில் உள்ளே புகுந்து விட்டான்! காவல் நின்ற ஆட்களை கண நேரத்தில் பந்தாடி, அறைக்குள் பிரவேசித்து விட்டான்! பயத்துடன் மேகலா நிற்க,

“ சீக்கிரம் வா! இங்கே நீ இருக்கக்கூடாது!”

“ அய்யோ! நான் வர மாட்டேன்!”

“ முட்டாள்! உன்னை காப்பாற்றத்தான் நான் வந்திருக்கேன்! நீ இங்கே நீடிச்சா உன்னை மும்பை கொண்டு போயிடுவாங்க! சீக்கிரம் வா!”

அவளை இழுத்துக்கொண்டு அருள் வெளியே வருவதற்குள், முதலாளிக்கு செய்தி போய் விட,

“ என் மகனா இருந்தாலும் விடாதீங்க! அடிச்சு தூக்குங்க!”

அடியாட்கள் பாய, அருள் அவளையும் வைத்துக்கொண்டு அவர்களை பந்தாடினான்! ஒரு சூறாவளியாக சுழன்றான்! பதினைந்து நிமிஷ போராட்டம்! அத்தனை பேரையும் அடித்து சாய்த்து விட்டு, அவளை இழுத்துக்கொண்டு பைக்கை அடைந்தான்! ஸ்டார்ட் செய்தான்! முதலில் இடக்கு செய்தது! அதற்குள் பண்ணை வீட்டுக்குள் பூதத்தின் கார் நுழைய, பைக் ஸ்டார்ட் ஆகி விட்டது!

“ நல்லா ஒக்காரு! என்னை கெட்டியா புடிச்சுக்கோ!”

எடுத்தான் ஒரு வேகம்! கார் வந்து நிற்க, அந்த பெண்ணோடு புயல் வேகத்தில் தன் மகன் அருள் பைக்கில் போவதை பார்த்து பூதம் அதிர்ந்தார்! அதற்குள் அருள் பிரதான சாலைக்கு வந்து விட்டான்!

“ ஸ்பீடு அதிகமா இருக்கும்! தைரியமா இரு!”

பத்தே நிமிஷத்தில் திருவான்மியூர் கடந்து அடையாறுக்குள் நுழைந்து விட்டான்! பைக்கை நிறுத்தினான்!

“ இப்ப சொல்லு! எங்கே உன் வீடு? விலாசம் சொல்றியா?”

மடிப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டு விலாசம் சொல்ல,

“ அய்யப்பன் கோயிலுக்கு பக்கத்துலயா?”

வேகத்தை குறைத்து ஓட்ட தொடங்கினான்! இரவு பத்து மணியை நெருங்க, அவள் சொன்ன வீட்டு வாசலில் பைக் நின்றது! இறங்கி, உள்ளே ஓடினாள் மேகலா! செய்வதறியாது கலங்கி நின்ற குடும்பம் மகளை பார்த்ததும் கதறி விட்டது! அம்மா அவளை கட்டியணைத்து கதற, அக்காக்கள் நிம்மதி பெருமூச்சு விட,

“ உனக்கு வேற எந்த ஆபத்தும் இல்லையே மேகலா? எப்படி வந்தே?”

“ சினிமா ஹீரோ மாதிரி ஒருத்தர் வந்து தடாலடியா எல்லாரையும் அடிச்சு துவைச்சு என்னை மீட்டு கொண்டு வந்திருக்கார்!”

“ அவர் எங்கேடீ?”

“ வாசல்ல பைக்ல நிக்கறார்!”

பாரதி ஓடி வாசலுக்கு வந்தாள்! அருள் பைக்கில் சாய்ந்து நின்றான்! பாரதிக்கு ஆச்சர்யம்! காலையில் அவள் பேச்சுக்கு கோயிலில் கை தட்டி, பிறகு அவளை எச்சரித்து போன அதே இளைஞன்!

“ சார்! நீங்களா என் தங்கச்சியை மீட்டு கொண்டு வந்தீங்க?”

“ அந்த பொண்ணு உங்க தங்கச்சியா?”

“ உள்ள வாங்க சார், ப்ளீஸ்!”

அருள் தயங்கி உள்ளே வந்தான்! அவனை உட்கார வைத்து குடும்பமே கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்ல, தான் இந்த மாதிரி அம்மா உயிருக்கு ஆபத்து என பொய் சொல்லி காரில் கடத்தப்பட்டதை அழுது கொண்டே மேகலா சொல்லி,

“ என்னை விற்க பார்த்தாங்க அக்கா!”

“ என்னடீ சொல்ற?”

அம்மா கதற,

“ சார்! இவளை கடத்தினது யாரு? எதுக்கு? அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? காலைல கோயில்ல என்னை நீங்க எச்சரிச்சதுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு உண்டா?”

“ அதுக்கும், இந்த கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை! ஆனா ரெண்டுலேயும் உள்ளது ஒரே நபர் தான்! பெரிய தப்புக்களை செய்யற பெரிய மனுஷங்க! ஒரு வார்த்தைல சொல்லி உங்களுக்கு விளங்க வைக்கவும் முடியாது! இந்த ராத்திரி நேரத்துல நான் இங்கே இருக்கறது முறையில்லை! நான் புறப்படறேன்! வேற எதையும் இப்ப நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம்! நான் வர்றேன்!”

கதவு வரை போனவன் திரும்பி பார்த்தான்!

“ பாரதி! நீங்க புத்திசாலி! அழகை விட அறிவுக்கு ஆபத்து அதிகம்! ஜாக்ரதையா இருங்க! குட் நைட்!”

பைக் புறப்பட்டு போனது! பாரதி ஒரு லயிப்புடன் நின்றாள்!

-தொடரும்…

1 வது அத்தியாயம் | 3 வது அத்தியாயம் >

ganesh

2 Comments

  • Interesting

  • Fast one sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...